செவ்வாய், 30 செப்டம்பர், 2008

டக்ளஸ், கருணா, பிள்ளையான் சந்திப்பு!



நேற்று முந்தினம் கொழும்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது ஈபிடிபி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.வி.சிவாவும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.கந்தையா அருமைலிங்கமும் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு நட்புரீதியானது எனக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து அரசியல் கால் நகத்துதல் செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

2008.09.05 ஆம் திகதி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்த முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது அங்கு வருகை தந்த திரு.டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தனும் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

திங்கள், 29 செப்டம்பர், 2008

இரு ஒட்டிய முகத்தினையுடைய அதிசயக் குழந்தை!


இந்திய தென் கஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் எனுமிடத்தில் உள்ள வைத்தியசாலையில் கடந்த 25 ஆம் திகதி ஒட்டிய இரண்டு முகங்களுடன் நான்கு கண்கள், இரு வாய்கள், இரு மூக்குகள் கொண்டதான குழந்தையொன்று பிறந்துள்ளது.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

வவுனியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!


வவுனியா தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தெருவால் சென்று கொண்டிருந்த பொது மகனொருவரும், தற்கொலையாளியும் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா காவற்துறையைச் சேர்ந்தவர்களும் இதில் காயப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது, இதில் 3 பொது மக்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்கொலைக் குண்டுதாரியில் இலக்குத் தவறியதால் இவ் விபரீதம் நடந்திருக்கலாமென அறிய முடிகின்றது.

சனி, 27 செப்டம்பர், 2008

தியாகி திலீபனின் கடைசி உரை!


கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் கால் பதித்திருந்த வேளை யாழ். நல்லூரில் நீராகாரம் எதுவும் அருந்தாமல் உண்ணா விரதமிருந்தார் தியாகி திலீபன்.


உயிர்த் தியாகம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேணல் தியாகி திலீபனின் 21 ஆவது வருட நினைவாஞ்சலி வேளையில் அவரின் கடைசி உரையினை "களத்துமேடு" பதிவு செய்கின்றது.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

நீங்களும் ஊடகவியலாளராகுங்கள்!

ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளருக்கான 2009 ஆம் கல்வியாண்டுக்கான ஓராண்டு கால டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள க.பொ.த.உயர்தரத்தில் சித்தி பெற்றவர்கள் இலங்கை ஊடகவியல் கல்லூரியில் சேர்ந்து செய்தி சேகரிப்பது, செய்தி வாசிப்பது, எழுதுவது போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கற்று நடுநிலை ஊடகவியலாளராகலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய விலாசம்: இல 96, கிருல வீதி, கொழும்பு - 05.
மின்னஞ்சல் - info@slcj.lk
மேலதிக விபரங்களுக்கு: பிரார்த்தனா/ ரேணுகா - 011 5353635

ஊடகத்தினூடாக ஊடகத்துறையை மேம்படுத்துவோம்.


நன்றி: வீரகேசரி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உப தலைவர் பிள்ளையானுக்குப் பதிலாக ஜெயம் ?

கருணா அம்மான் தலைமையில் செயற்பட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் மீண்டும் உட்பூசல் தலை தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கிலங்கை மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையின் தோன்றிய முறுகல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கட்சித் தலைவர் கருணாவின் கருத்துக்களை உப தலைவர் பிள்ளையான் ஏற்றுக் கொள்ள தவறுகின்றார் எனும் காரணத்தினால் நேற்றிரவில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உப தலைவராக திரு.ஜெயமும், பேச்சாளராக இருந்த திரு.அஸாத் மௌலானாவுக்குப் பதிலாக வேறு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பிள்ளையானின் செயலாளர் செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் பிள்ளையானின் மெய்ப் பாதுகாவலர்கள் போராளிகளற்றவர்களெனவும், இது கட்சி விதிக்கு முரணானதெனவும் திரு.கருணா அண்மையில் சிங்கள பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்தார்.

அண்மையில் சர்வதேச வானொலியொன்று கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானிடம் கட்சித் தலைமைக்கும் உங்களுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தலைவரைச் சந்தித்து, கருத்துப் பரிமாற்றம் செய்வதில்லையென கருத்து நிலவுவதாகவும் அது பற்றிய கருத்து என்னவெனக் கேட்டபோது அதற்குப் பதிலளித்த திரு.பிள்ளையான் அப்படிக்கூற முடியாது நான் மாகாண சபை வேலைகளில் ஈடுபடுவதால் அவரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன், ஆனாலும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வருகின்றோம், சில கருத்துப் பிரச்சினைகள் உள்ளன, ஆயுதப் போராளிகளை குறைப்பது சம்பந்தமாக சில பிரச்சினைகள் இருந்தாலும் அதைக் காலவோட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 25 செப்டம்பர், 2008

ஐ.நா. சபையில் தமிழில் உரையாற்றிய மஹிந்த !

ஐக்கிய நாடுகள் சபையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியிலும் உரையாற்றினார். கடந்த தடவை தனிச் சிங்கள மொழியில் உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தமிழையும் தனது உரையில் சேர்த்துக் கொண்டார்.

அவர் தனதுரையில் எனது தாய்மொழி சிங்களம் ஆனாலும், சில எண்ணங்களை சகோதர தமிழ் மொழியில் சொல்ல விரும்புகின்றேன். சிங்களமும் தமிழும் இலங்கை மக்களின் இரண்டு மொழிகள். பல நூறு ஆண்டுகளாக பாவனையில் உள்ள இந்த இரண்டு மொழிகளும் இலக்கிய வளம் செறிந்தவை, இம்மொழிகள், அரசகரும மொழிகளாக அங்கீகாரம் பெற்று நம்நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜனநாயகம் மேலும் வியாபிக்கப்படுவதைத் தொடர்ந்து இலங்கையின் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையிலான உறவு பலமடையும். எதிர்கால அபிவிருத்திக்கு அது பாரிய சக்தியாக அமையும் ஒரு தேசம் என்ற வகையில் எமக்காகக் காத்திருக்கும் அர்த்தமுள்ள சுதந்திரம் நீடித்த ஐக்கியம் ஆகியவற்றை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம், என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியில் உரையாற்றினார்.

63 வருட பாரம்பரியத்தைக் கொண்ட ஐ.நா.சபையில் தமிழ் மொழியில் உரையாற்றிய முதலாவது அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முக்கியஸ்தர்களுடனான செவ்வி !

ஸ்ரீலங்காவின் கிழக்கிலங்கை மாகாணசபையின் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் திரு. துரையப்பா நவரெத்தினராஜா, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான திரு. இனியபாரதி அவர்களை டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சிக்காக அண்மையில் செவ்வி கண்டு ஒளிபரப்பி இருந்தது.

செவ்வியின் பாகங்கள்:
பாகம் - ஒன்று
பாகம் - இரண்டு

புதன், 24 செப்டம்பர், 2008

வவுனியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசங்கரி!


வவுனியா வைரவபுளியங்குளத்தில் வைத்து கடந்த 2008.09.22 ஆம் திகதி ஆயுததாரிகளினால் சுட்டு கொல்லப்பட்ட யாழ்.காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்ட வவுனியா இலங்கை வங்கியில் பணியாளராக இருந்த செந்தில்நாதன் சிவசங்கரி.

மட்டக்களப்பில் ஹர்த்தால்!

மட்டக்களப்பின் ஆரையம்பதியில் இருந்து காத்தான்குடிக்கு கடந்த 2008.09.18 ஆம் திகதி சென்ற 24 வயதுடைய சுகந்தன் மற்றும் 16 வயதுடைய ருபேசன் ஆகிய இரு இளைஞர்களும் இன்று வரை வீடு திரும்பாததால் இவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு பாதுகாப்புத் தரப்புக்கு வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாததால் இதனைக் கண்டித்து இன்று மட்டக்களப்புப் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது, இதனால் வியாபார ஸ்தலங்கள், பாடசாலைகள் மூடப்பட்டு வீதி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

இவ் இளைஞர்களை காத்தான்குடி முஸ்லிம் வன்முறையாளர்கள் கடத்தியிருக்கலாமெனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. இதனால் வன்முறை ஏற்படலாம் என்பதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதி ரோந்து நடவடிக்கையில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் எவராவது காத்தான்குடிக்கு வந்து காணாமல் போனதாக தகவல் ஏதுமில்லையென முஸ்லிம் பள்ளிவாயல் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலும் சுற்றுப் புறத்திலும் கைதான, காணாமல் போனவர்களில் அனேகர் இளம் பராயத்தினர்!

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் கைதாகியவர்கள், காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இளம் பராயத்தினரே ஆகும், ஏன் இந்த நிலைமையென வலைப் பதிவரொருவர் தொடுத்த வினாவிற்கான மீளாய்வு.

1. இளைஞர்களின் வடிவத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

2. மக்களே விடுதலைப் புலிகளென கூறப்பட்டு இளையவர் கரங்களில் துப்பாக்கி கொடுக்கப்பட்டு பயிற்சிக் களங்களில் நிறுத்தப்பட்டு புகைப்படமும் எடுத்து மலிவு விளம்பரப் படுத்தியமையின் விளைச்சல்.

3. சில இராணுவ தாக்குதல் சம்பங்களை விடுதலைப் புலிகள் உரிமை கோராமல் மக்கள் படை தான் செய்துள்ளது என சாட்டுக் கூறியமை.

இப்படியான இன்னோரன்ன விடயங்களே எம்மை ஆதிக்கவாதிகளின் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

எந்த நேரத்தில் எங்கு குண்டுத் தாக்குதல் நடக்கின்றதோவென எவ்வேளைலும் பயந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா படை தரப்பு "மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பது போல தமிழ் இளைஞர்களைக் கண்டதும் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளாக இருப்பார்களோ எம்மீது இராணுவத் தாக்குதல் செய்ய வந்திருப்பார்களோவென பயந்து கொண்டிருப்பதனால் எம்மீதான கைதும், காணாமல் போதலும் அதிகரிப்பதற்கான மற்றைய காரணமாகும்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

மாத்தறை வெலிகமவில் சிங்கள முஸ்லிம்களிடையே மோதல்! (படங்களுடன்)

மாத்தறை வெலிகமவில் உள்ள முஸ்லிம் குளிர்பானக் கடையில் ஞாயிறு நள்ளிரவு சிங்கள, முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பாகியதால் அப்பகுதி பதட்டமாக உள்ளது.

நிலைமை மோசமாகியதால் ஆறு வியாபார நிறுவனங்களும், ஒரு எரிபொருள் நிரப்பு நிலையமும், பழைய தெரு ஜும்மா பள்ளிவாயலும் தாக்குதலுக்கு உள்ளாகியது.


வவுனியாவில் பெண்களிருவர் சுட்டுக் கொலை!

வவுனியா வைரவபுளியங்குளம், வைரவர்கோவில் வீதியில் அருகருகே உள்ள இரு வீட்டில் வசித்து வந்த பெண்கள் இருவர் 2008.09.22 (நேற்று) இரவு 8 மணியளவில் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை வங்கி வவுனியா கிளையில் பணி புரிந்த காரைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தில்நாதன் சிவசங்கரி மற்றவர் வவுனியா தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய நெடுங்கேணி சின்ன அடம்பன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய முத்துலிங்கம் தேவிகா இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் ஆகும்.

தீவக கடலோரத்தில் ஒதுங்கிய சடலங்கள் அடையாளம் காணப்பட்டன!

தீவகக் கடலோரத்தில் ஒதுங்கி வரும் பெண்களின் சடலங்கள் தொடர்பான செய்தியை "களத்துமேடு" கடந்த வாரம் பதிவு செய்திருந்தது தெரிந்ததே!

இராமேஸ்வரத்தில் இருந்து 2008.09.11 ஆம் திகதி இலங்கை திரும்பிய அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் பெண்கள் நால்வரும், ஆண் ஒருவரும், குழந்தைகள் இருவரும் உயிரிழந்தர் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

வவுனியாவைச் சேர்ந்த முருகையா சந்திரமோகன் தெரிவித்த தகவலின் அடிப்படையில் கரை ஒதுங்கிய சடலங்களில் மேலும் ஐந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவை தாய், தந்தை, பிள்ளைகள் மற்றும் மைத்துனி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதென ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகாதேவன் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்டவர்களின் விபரம்:

ரங்கன் முருகையா - வயது 52
இந்திராணி முருகையா - வயது 42
சந்திரமோகன் செந்தூரன் - வயது 06
சந்திரமோகன் கோபிகா - வயது 05
திவ்வியா - வயது 22

கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் காணாமற் போனோர் விபரம்!

ஸ்ரீலங்காவில் 2008 ஜனவரி முதல் காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினரின் மக்கள் பணியகத்திலும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு 2 - 144 இலக்க காரியாலயத்திலும் நேற்று வரை சுமார் 239 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 152 பேர் பற்றிய தகவல்கள் எதுவுமில்லாததால் இவர்கள் பற்றிய தகவல்களை அக்டோபர் 20 ஆம் திகதிக்கு முன்னர் தருமாறு நேற்றுக் காலை செத்சிறிபாய இயந்திரவியல்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இடம்பெற்ற காணாமல் போதல் தொடர்பான விசாரணைகளை மேற்பார்வை செய்யும் குழுவினர் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ணவிடம் கேட்டுள்ளனர்.

இக் கூட்டத் தில் குழுவின் அங்கத்தவர்களான பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன், வாசுதேவ நாணயக்கார, இணைப்பு அதிகாரிகளான ஆர். திவ்வியராஜன், லால் வெடிக்கார, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, பயங்கரவாத தடுப்புப் பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அசோகா கல்கமுவ, கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு இயக்குநர் வாக்கிஸ்டர், இரகசிய பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் போனவர்களில் தகவல் எதுவும் கிடைக்காத 152 பேர் பெயர் விபரங்கள்:

1. அன்ரனிப்பிள்ளை தனபாலன், யாழ்ப் பாணம் 36 வயது
2. சிதம்பரப்பிள்ளை நித்தியலக்ஷ்மி, புத் தளம், 30 வயது
3. குணசெல்வம் மஹிந்தன், கிராண்ட்பாஸ், 37 வயது
4. சிதம்பரபிள்ளை சிரோன் சிவபாதம் புத்தளம், 28 வயது
5. டீ. கமலகாந்தன், மட்டக்குளிய, 26 வயது
6. சுப்பிரமணியம் இராமச்சந்திரன், துன்னாலை,யாழ்ப்பாணம், 37 வயது
7. திலகராஜா செல்வகுமார், கொழும்பு, 26 வயது
8. தங்கரட்ணம் பாலசுப்பிரமணியம், உடப்பு, 35 வயது
9. டீ. சிவராசா ஜெயகாந், தெஹிவளை, 28 வயது
10. டுலிப் அரிகுமார் கல்கிசை, 21 வயது
11. சுப்பிரமணியம் மயூரன், கொழும்பு, 25 வயது
12. மொஹமட் நசீர், நீர்கொழும்பு, 26 வயது
13. ஆசீர்வாதம் சூரியகுமரன் கிராண்ட்பாஸ், 22 வயது
14. அசன் மொஹமட் நசீர் கொழும்பு, 27வயது
15. சூரியகுமார் கொழும்பு, 25 வயது
16. சூசைப்பிள்ளை அன்டன், வவுனியா
17. தர்மகுலசிங்கம் மயூரன் கொள்ளுப்பிட்டி, 22 வயது
18. திஸ்ஸ வீரசிங்கம் பெனடிக் மட்டக் குளிய, 39 வயது
19. வீரபத்திரன் வைரமுத்து களுவாஞ் சிக்குடி, 51 வயது
20. செல்வமுத்து ஜெயகாந்தன் மொனராகலை, 27 வயது
21. கே. இராசதுரை, புத்தள, 32 வயது
22.நல்லதம்பி தம்பிமுத்து கல்முனை, 34 வயது
23. முத்துலிங்கம் உதயகுமார், கொட் டாஞ்சேனை, 37 வயது
24. ஜெயராம் ஜெசுதன், வவுனியா, 23 வயது
25. அழகப்பன் நடராஜா வவுனியா, 22 வயது
26. எம். தர்மராஜா மொனராகலை, 22 வயது
27. எம். தினேஷ்குமார் மொனராகலை, 26 வயது
28. வேலுசாமி புண்ணியமூர்த்தி மொனராகலை, 26 வயது
29. சடாச்சரம் திருவருள் பண்டாரவளை, 22 வயது
30. ஆர். ஜெயகாந்தன் மொனராகலை, 25 வயது
31. சிவராசா ஜெயந்தன் தெஹிவளை, 27 வயது
32. பீ.ஏ.எம். ரபீக் கொழும்பு, 40 வயது
33. குமாரரட்ணம் கிருஷ்ணராஜ், கொழும்பு, 30 வயது
34. வி.எஸ். குங்ஜா, புத்தளம், 38 வயது
35. கே.என். நாகேஸ்வரன், கொச்சிக்கடை, 41 வயது
36. செபஸ்டியன் என்டனிராஜ், மன்னார், 30 வயது
37. தேவபிரகாசம் ஜோன், தம்புள்ள, 57 வயது
38. கோவிந்தன் நாகராஜ், புத்தளம், 27 வயது
39. இமானுவேல் அன்டனிதாஸ் கொட்டாஞ்சேனை, 57 வயது
40. யு.எல். நிசார் திருகோணமலை, 31 வயது
41. நாகலிங்கம் நதிகுமார் மொனராகலை, 28 வயது
42. ரவீந்திரன் ரஞ்சித் கொழும்பு, 25 வயது
43. முத்துவேல் ஸ்ரீவினோதரன், மொனராகலை
44. தம்பிராஜா கார்தீபன், கொழும்பு, 26 வயது
45. சடாசரம் அருள், பண்டாரவளை, 28 வயது
46. எம். சனுன் முனீர்,மாதம்பிட்டி, 42 வயது
47.கருணேந்திரன் கருணாகரன், மட்டக்குளி, 29 வயது
48. செல்வச்சந்திரன் நிசான், மட்டக்குளி, 22 வயது
49. நடுவிலான் சரஸ்வதி, கதிரேசன் வீதி, 31 வயது
50. நாகேந்திரன் ஜெயபிரபா, கொழும்பு, 26 வயது
51. செல்லையா தர்மலிங்கம், மட்டக்களப்பு, 26 வயது
52. கனகசூரியம் ராஜா, மட்டக்களப்பு, 27 வயது
53. பரமானந்தன் துஷ்யந்தன், கதிரேசன் வீதி, 24 வயது
54. கே. வசீகரன், கதிரேசன் வீதி, 26 வயது
55. செல்லத்துரை கண்ணன், கதிரேசன் வீதி, 24 வயது
56. வரதராஜன், வெள்ளவத்தை
57. ஸ்ரீதரன் வெள்ளவத்தை, 28 வயது
58. தங்கவேல் உதயகுமார், வத்தளை, 31 வயது
59. பரமலிங்கம் சந்திரகாந்தன், கொழும்பு, 47 வயது
60. வீரகுட்டி சதாரலிங்கம், பம்பலப்பிட்டி, 40 வயது
61. எஸ்.ஜீ. பிரதீபன், மட்டக்களப்பு, 22 வயது
62. தில்லையம்படி முரளிதரன், மட்டக்களப்பு, 36 வயது
63. யஸ்பன் கிரிபர்ட், ஜெம்பட்டா வீதி, 43 வயது
64. ஸ்ரீகாந்தன் சசிதரன், கதிரேசன் வீதி, 30 வயது
65.மகாராஜா குகதாசன், நீர்கொழும்பு, 26 வயது
66.விநாயகம் வாகீசன், கதிரேசன் வீதி, 24 வயது
67.பேரின்பன் நிசாந்தன், புத்தளம், 26 வயது
68. கதிரேசன் சிவபாலன், தெஹிவளை, 38 வயது
69. சிவஞானரட்ணம் ,முகுந்தன், வெள்ளவத்தை, 32 வெள்ளவத்தை
70. எம். புகாரி எம். நிஸ்தார்,புத்தளம், 32 வயது
71. விவேகானந்த ராஜா, வெள்ளவத்தை, 29 வயது
72. வேலாயுதம் மதுரகுலசிங்கம், கொழும்பு, 29 வயது
73. நடேசமூர்த்தி கோணேஸ்வரன், கொட்டாஞ்சேனை
74. டாசன் ரொபின்சன், கொழும்பு
75. சுதர்சனா கொழம்பகே, பிலியந்தல, 36 வயது
76. சுலான் சஞ்சன, பிலியந்தல, 05 வயது
77. செல்வரட்ணம் கௌசிகா, கொச்சிக்கடை, 22 வயது
78. நடராஜா சுகுமாரன், யாழ்ப்பாணம்
79. புஸ்பராசா புஸ்பநாதன், யாழ்ப்பாணம், 29 வயது
80. புஸ்பராசா கிருஷ்ணகுமார், கொட்டாஞ்சேனை, 36 வயது
81. வீரையா பத்மநாதன், கொட்டாஞ்சேனை, 45 வயது
82. செல்லையா சுப்பிரமணியம், கொட்டாஞ்சேனை, 28 வயது
83. சுப்பிரமணியம் பிரதீபன், யாழ்ப்பாணம், 24 வயது
84. கே.டீ. சிவதாசன், யாழ்ப்பாணம், 35 வயது
85. விவேகானந்தன் கிருஷ்ணகுமார், வத்தளை, 33 வயது
86. விவேகானந்தன் ரஜனிகுமார், வத்தளை, 27 வயது
87. வெள்ளைசாமி சாரூன், அக்கரப்பத்தனை, 31 வயது
88. புஷ்பராஜா கிருஷ்ணகுமார், கொழும்பு
89. கேசவன் கருணாகரன், திருகோணமலை, 37 வயது
90.தங்கராசா ராஜு, திருகோணமலை, 32 வயது
91. மூக்கையா ரஞ்சன், மகாபாகே, 29 வயது
92. பரமசாமி கணேசமூர்த்தி, தெஹிவளை, 39 வயது
93. வில்வரட்ணம் ஜெயவதன், தெஹிவளை, 23 வயது
94. ஏ. நிசாந்த மதுரபெருமா, வரலபன, 42 வயது
95. ஏ.என்.எம்.கைனு, வரலபன, 05 வயது
96. அப்துல் சபிதுல்லா, புத்தளம், 30 வயது
97. நாராயணசிங்கம் லோகநாதன், தெஹிவளை, 30 வயது
98. முருகையா சதாசிவம், தெஹிவளை, 31 வயது
99. முருகையா சுதெவன், களுபோவில, 31 வயது
100. மயில்வாகனம் பிரதிவிராஜ், வெள்ளவத்தை, 37 வயது
101. நடராஜா சுகுமாரன், புறக்கோட்டை, 60 வயது
102. ராஜேந்திரன் வின்சன்ட் விமல்ராஜ், கொழும்பு, 26 வயது
103. செல்வராசா சுதன், வவுனியா, 25 வயது
104. அப்துல் முதலிப் மொஹமட், புத்தளம், 35 வயது
105. ஜபீர் ரிசாட் முகமட், புத்தளம், 30 வயது
106. சுப்பிரமணியம் உதயகுமார், வவுனியா, 34 வயது
107. நடராசா பேரின்பராசா, வவுனியா, 33 வயது
108. பழனியாண்டி சண்முகராசா, தெஹிவளை, 34 வயது
109. முத்துக்குமார் செல்வகுமார், தெஹிவளை, 28 வயது
110. அருணாசலம் சந்திரகலா, லுணுகல, 28 வயது
111. குப்பமுத்து பேரின்பநாயகம், லுணுகல, 33 வயது
112. அமத்தன் சண்டீப், கடவத்தை, 04 வயது
113. நிரோசா செல்வதுரை, கடவத்தை, 24 வயது
114. டீ.எஸ். ஜலில் ஜுமாட், வத்தளை, 71 வயது
115. சின்னையா தேவநாயகம், தெஹிவளை, 38 வயது
116. பதிநாதர் பிரசன்னா, யாழ்ப்பாணம், 26 வயது
117. ஆரண் பிரபானந்த், யாழ்ப்பாணம், 21 வயது
118. ரட்ணசபாபதி இளமாறன், தெஹிவளை, 28 வயது
119. சண்முகம் காளிதாஸ், வட்டவளை, 28 வயது
120. நாகேந்திரன் பிரதீபன், திருகோணமலை, 25 வயது
121. திருச்செல்வம் தவனேசன், கிராண்ட்பாஸ், 38 வயது
122. பீ. காராளசிங்கம், வவுனியா, 55 வயது
123. சிவஞானம் அன்பழகன், வவுனியா
124. மகேந்திரராஜா சாரங்கன், வவுனியா, 23 வயது
125. பரமநாதன் சிவகுமார், மட்டக்குளி, 23 வயது
126. செல்வராஜா பாலகுமரன், கொழும்பு, 34 வயது
127. பாலசுப்பிரமணியம் சந்திரசேகரன், கொழும்பு
128. முருகப்பிள்ளை சிவகுருநாதன், வவுனியா, 30 வயது
129. கந்தையா கேதாரன், வவுனியா, 30 வயது
130. மு. சிவகுருநாதன், திருகோணமலை, 28 வயது
131. வி. ராசநாயகன், தம்பலகாமம்
132. கணகபிள்ளை யோகராஜா, மட்டக்களப்பு, 32 வயது
133. வைரமுத்து யோகநாதன், மட்டக்களப்பு, 32 வயது
134. அன்டனி ஜோன் ரீட், வத்தளை, 24 வயது
135. ஸ்டென்லி லியோன், கொச்சிக்கடை, 51 வயது
136. ஸ்டென்லி ரொசான் லியோன், கொச்சிக்கடை, 21 வயது
137. பிரபாத் சக்கரவர்த்தி, யாழ்ப்பாணம், 26 வயது
138. கணபதி ரஜிகுமார், வவுனியா, 22 வயது
139. கெட்ளின் ஸ்டேனிஸ் வின்சன், வத்தளை, 39 வயது
140. அரியரட்ணம் கோபிநாத், வவுனியா, 32 வயது
141. சகாதேவன் உதயகுமார், செட்டித்தெரு, 39 வயது
142. ராஜநாயகம் ஜெயநேசன், மன்னார், 32 வயது
143. பிரான்சிஸ் திருராஜா, மன்னார், 34 வயது
144. எம்.ஜே.எம். பாயிஸ், வெல்லம்பிட்டி, 37 வயது
145. தேவசேனாதிபதி சுகந்தன், யாழ்ப்பாணம், 27 வயது
146. பரமநாதன் முருகானந்தன், யாழ்ப்பாணம், 34 வயது
147. தியாகராஜா ஜெகன், திருகோணமலை, 29 வயது
148. நாகநாதன் ரஜீவ், கொழும்பு, 21 வயது
149. விஸ்வநாதன் பிரதீப், கொழும்பு, 17 வயது
150. இராமலிங்கம் திலகேஸ், கொழும்பு, 17 வயது
151. மொஹமட் டிலான், கொழும்பு, 24 வயது
152. மொஹமட் சஜீத், கொழும்பு, 24 வயது

திங்கள், 22 செப்டம்பர், 2008

ஸ்ரீலங்கா மேலகத்தில் வட பகுதி தமிழர்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்! (படங்களுடன்)







ஸ்ரீலங்காவின் மேல் மாகாணத்தில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வாழும் வட பகுதி மக்கள் அனைவரும் நேற்று அதற்கென அமைக்கப்பட்ட பிரத்தியேக இடங்களிலும் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் தங்களின் பெயர் விபரங்களைப் பதிவு செய்தார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பதிவுக்கென 108 நிலையங்கள் அமைக்கப்பட்டு பதிவு நடவடிக்கை நேற்று காலை முதல் மாலை வரை இடம் பெற்றது, 10820 குடும்பங்களைச் சேர்ந்த 36370 பேர் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களின் 2241 பேர் புதிதாக தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளவர்கள் ஆகும்.

எப்படியாவது தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் முதியோர்கள், குழந்தைகளை ஏந்திய தாய்மார்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.

திருக்கோணேச்சர பிரதம அர்ச்சகர் சுட்டுக்கொலை!

திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய பிரதம அர்ச்சகரான சிவகுகராஜக் குருக்கள் நேற்று 2008.09.21 ஆம் திகதி மாலை 6 மணியளவில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2008

ஸ்ரீலங்கா ஐந்தாம் தர புலமைப் பரிசில் திட்டமும் வெட்டுப் புள்ளியும் !

ஸ்ரீலங்காவில் ஐந்தாம் தரம் கல்வி கற்கும் சிங்களம், தமிழ் மொழிமூலமான மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்கென அரசினால் புலமைப் பரிசில் திட்டம் பரீட்சை வடிவில் நாடளாவியரீதியில் நடாத்தப்படுவதுண்டு.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கென நாடளாவியரீதியில் தோற்றிய பரீட்சார்த்திகளில் 183 புள்ளிகள் பெற்று சிங்கள மாணவிகள் மூவர் முதலிடத்தில் உள்ளனர்.

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலை மாணவி மஹிந்தினி அமாசா ஹப்புவாராச்சி.
பம்பலப்பிட்டி லிண்ட்யே மகளிர் பாடசாலை மாணவி சஜினி அஞ்சனா சேனாதீர.
புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலய மாணவி அபேசிங்ககே தோனா மனீசா.

தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகள் வரிசையில் 176 புள்ளிகள் பெற்று யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அகில இலங்கைரீதியில் பரீட்சைக்குத் தோற்றிய தமிழ்மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம்:

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, மாத்தளை, காலி, கேகாலை - 116 புள்ளிகள்.

நுவரேலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை - 113 புள்ளிகள்.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, பொலநறுவை - 114 புள்ளிகள்.

அம்பாந்தோட்டை, இரத்தினபுரி - 108 புள்ளிகள்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய ஐந்தாம் தர மாணவர்களில் 519 பேர் எவ்வித புள்ளிகளையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின்
இணையத்தின் மூலம் பெறுபேறுகளை சுட்டிலக்கத்தைக் கொடுத்துப் பார்வையிடலாம்.

விம்பம் வலைப்பூவின் பதிவாளர் தோழர் அப்புச்சி மேலதிக விபரம் கேட்டதற்கிணங்க பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வட பகுதி தமிழர்களுக்கு இன்று பதிவு !

இலங்கையின் வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தலைநகரில் கடந்த ஐந்து வருடங்களாக வாழும் தமிழர்கள் அனைவரும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று தங்களின் விபரங்களைப் பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த அனைவரையும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யக் கோருவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும், ஒரு ஜனநாயக நாட்டில் குடிமகனுக்கு உரிய கௌரவம் மறுக்கப்படுவது விசனத்துக்குரியதாகும்.

சனி, 20 செப்டம்பர், 2008

யாழ்.மீசாலை வீரசிங்கம் ம.வி. மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்!

இலங்கையின் கல்வித் திட்டத்துக்கு அமைய நடாத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ்மொழி மூல பரீட்சார்த்தியாகத் 2008.08.17 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் தோற்றிய எழுதுமட்டுவாழ் வடக்கு, மாங்குளம் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் 176 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

தந்தை தர்மலிங்கம் மிருசுவில் அரச தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகவும், தாய் செல்வராணி தர்மலிங்கம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாகவும் கடமை புரிகின்றார்கள்.

தர்மலிங்கம் பாசுபதனுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.

வன்னியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இடம் பெயருகின்றது !

போர்கால சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செய்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வன்னியில் இரணைமடு சந்தியில் செயலகத்தைக் கொண்டு செயற்பட்டு வந்தது, ஆனால் இன்றைய யுத்த சூழல் மக்களை இடம்பெயர வைத்துள்ளதால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் புதுக்குடியிருப்பு பகுதிக்கு இடம்பெயருகின்றது.

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கிளிநொச்சியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு இடம் பெயரும் மக்கள் !

கிளிநொச்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படைதரப்பு தொடர்ச்சியாக நடாத்தி வரும் எறிகணை வீச்சு, விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் தரை மார்க்கமான தாக்குதலில் தாக்கத்துக்கு உள்ளாவது வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களே ஆகும்.

இக் கொடூரத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

வியாழன், 18 செப்டம்பர், 2008

இரசாயன விஷ வாயு தாக்குதலும் மூச்சுத் திணறலும்!

வன்னி கிளிநொச்சியின் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் தொடரும் ஸ்ரீலங்கா படைத்தரப்பினருடனான மூர்க்கத் தனமான சண்டையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிஎஸ் இரசாயன விஷ வாயு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அக்கராயன் மோதலில் பங்குபற்றிய 6 இராணுவத்தினர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இரசாயன விஷ வாயுக்களைப் போரில் பாவிப்பது ஐ.நா. சட்ட போரியல் விதிகளுக்கு முரணானது என்பதால் இதனை முறியடிப்பதற்கு தேவையான சகல வழி முறைகளையும் பின்பற்ற ஸ்ரீலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவ தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறிய கருத்துக்களை எடுத்து நோக்கினால், விஷ வாயு தாக்குதலை முறியடிக்கக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா படை தரப்பும் விஷ வாயுத் தாக்குதலை நடத்த தயாராகி விட்டது என்பது புலனாகின்றது.

சாட்சியமே இருக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களை வன்னியில் இருந்து அகற்றிய நிலையில் ஸ்ரீலங்கா படைதரப்பு இரசாயன விஷ வாயு தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி விட்டோமென கூறுவது சிந்திக்கத் தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் இரசாயன விஷ வாயு ஆயுதத் தாக்குதலை நடாத்தினார்களா இல்லையா என்பது வெளிவராத நிலையில் இராணுவத்தினரின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களைக் கவலை கொள்ள வைக்கின்றது.

ஸ்ரீலங்கா இராணுவம் இரசாயன விஷ வாயு ஆயுதங்களை இப் போரில் பாவிக்கத் தொடங்கினால் இதில் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்களே என்பது உறுதி.

71,54 வயதுடைய ஓரினத் தம்பதியர் !

71 வயதுடைய "ஸ்ரார் டெக்" நடிகர் ஜோர்ஜ் தகேயி தனது நீண்ட கால ஆண் காதலனான 54 வயதுடைய பிரட் அல்ட்மானை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜப்பான் - அமெரிக்க தேசிய அருங்காட்சியத்தில் பௌத்த மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஒரே பாலினத்தவர்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த சட்டத்தினை கலிபோனியா நீதிமன்றம் 2008.06.17 ஆம் திகதி நீக்கியதையடுத்து 21 வருட காலமாக சட்டரீதியற்று தன்னுடன் வாழ்ந்து வந்த அல்ட்மானை ஜோர்ஜ் தகேயி பல நண்பர்கள் வாழ்த்துடன் கரம் பற்றினார்.

மட்டு.தம்பலவத்தையில் இளம் பெண் சுட்டுக் கொலை !

ஸ்ரீலங்காவின் மட்டு. மண்டூர் தம்பலவத்தை பகுதியில் வைத்து நேற்று முன்தினமிரவு 30 வயதுடைய கணேசபிள்ளை மஞ்சுளா எனும் இளம் பெண் துப்பாகிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 17 செப்டம்பர், 2008

மட்.தேற்றாத்தீவில் பெண் பொறியியலாளர் சுட்டுக் கொலை !

மட்டக்களப்பு நியாப் திட்ட பெண் பொறியியலாளர் 31 வயதுடைய பிறேமலதா லோகேஸ்வரன் இன்று காலை 7 மணியளவில் தேற்றாத்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீவகங்களில் கரையொதுங்கும் பெண்களின் சடலங்கள் !

யாழ். நெடுந்தீவு, நயினாதீவு கடற்கரைப் பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் கரையொதிங்கி உள்ளன.

நேற்று முன்தினமிரவு நெடுந்தீவு குயின் டவர் பகுதியில் முதலாவது பெண்ணின் சடலமும், நேற்றுக் காலையில் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் இரண்டாவது சடலமும், நயினாதீவு வெள்ளை மணல் கடற்கரைப் பகுதியில் மூன்றாவது சடலமும், நேற்று நண்பகல் நயினாதீவு பிடாரி அம்மன் கோவில் பகுதியில் நான்காவது பெண்ணின் சடலமும் காணப்பட்டுள்ளன.

சடலமாகக் காணப்பட்ட இப் பெண்கள் உடமைகளாக காதணிகளும், மேற்சட்டையும் மற்றும் பாவாடையும் அணிந்துள்ளார்கள்.

இச் சடலங்கள் கடந்த வாரம் இந்திய அகதி முகாமான இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கை திரும்பிய போது படகு கவிழ்ந்ததில் மரணித்தவர்களாக இருக்கலாமென அறிய முடிகின்றது.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் குண்டு வெடிப்பு !

மட்டக்குளியில் இருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 ஆம் இலக்க பிரயாணிகள் பேரூந்து கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் பி.ப 1.45 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பயணித்த பயணிகள் சந்தேகத்துக்குரிய பொதியைக் கண்டு பேரூந்தை விட்டு இறங்கிச் சென்ற பின் குண்டு வெடித்துள்ளது, எனினும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்டன் சதுக்கம் பகுதியில் படையினரின் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

வன்னியிலிருந்து "கரிதாஸ்" வெளியேறாது !

வன்னியில் இருந்து செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறியுள்ளன.

இந் நிலையில் வன்னியில் தொண்டு பணியில் ஈடுபட்டு வந்த கத்தோலிக்க அமைப்பான "கரிதாஸ்" வெளியேறப் போவதில்லையென உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

வன்னியில் தங்கியிருந்து இம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து முன்னெடுப்பதே எமது நோக்கமென "கரித்தாஸ்" தெரிவித்துள்ளது.

ஐநா வெளியேறுகின்றது !

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.

ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

திங்கள், 15 செப்டம்பர், 2008

வன்னியிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் விரைவில் வெளியேறுவர்!

யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் நிவாரணப்பணிகளை அரச சார்பற்ற அமைப்புகளால் செய்ய முடியாதிருப்பதால் வன்னியில் தங்கியிருந்து செயற்படும் தன்னார்வ தொண்டூழியர்கள் அனைவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வன்னியை விட்டு வெளியேறி விடுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி வன்னியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டாது.

அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

வன்னியில் பணியாற்றும் ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால் தமது மனிதாபிமானப் பணிகளை அரச அதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வவுனியாவில் தங்களது அலுவலகத்தை அமைத்துச் செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறித்தியுள்ளோம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ்.

தற்போதைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் வெளியேறி விட்டதாகவும், வன்னி மக்கள் ஐ.நா அதிகாரிகளை வெளியேற வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம், வீதி மறிப்புப் போராட்டம் போன்றன நடாத்தி தடுத்ததால் தற்காலிகமாக தங்களது வெளியேற்றத்தை ஒத்திவைத்துள்ள ஐ.நா.அதிகாரிகளும் விரைவில் வெளியேறி விடுவார்களெனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

வசந்த் அவர்களின் லொஜிக் இல்லா மெஜிக் !

மாயாஜாலமென்றால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் விரும்பி இரசிக்கும் நிகழ்ச்சியாகும், இந் நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலையில் ஒளிபரப்பாகி வருகின்றது.

"Logic இல்லா Magic" இதற்கு இரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

திரு.எஸ்.ஏ.சி.வஸந்த் அவர்கள் "லொஜிக் இல்லா மெஜிக்" நிகழ்ச்சியை அழகாக நடத்திக் காட்டுவதுடன், இறுதியில் பார்வையாளர்களும் இலகுவாகச் செய்யக் கூடிய வகையில் சில தந்திர விளையாட்டுக்களைச் செய்து காண்பித்து எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.

"Maya Maya" S.A.C.Vasanth
எனும் இணையப் பதிவின் மூலமும் சில மாயாஜால விளையாட்டுக்களைக் காட்ட முனைகின்றார் திரு. வசந்த்.

இவரின் மாயாஜால விளையாட்டுக்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !


ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621 பேர் காயமடைந்தும் உள்ளதாக அத்தகவல் கூறுகின்றது.

இவை அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும், இவை தவிர்த்து பதிவு செய்யப்படாத கொலை மற்றும் காயப்பட்டவர்களினையும் சேர்த்தால் இப்பட்டியல் நீளக் கூடுமென அறிய முடிகின்றது.

வியாழன், 11 செப்டம்பர், 2008

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதியார் ஆற்றிய உரை !

செப்டெம்பர் 11 ஆம் நாளென்றால் மனதை உருக்கிய பல சம்பவங்கள் வந்து சேரும், அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் கொல்லப்பட்ட, குருதி தோய்ந்த அப்பாவி மக்களும் நினைவில் வந்து செல்வதுண்டு.




சுப்ரமணிய பாரதியார் தனது 39 வது வயதில் 1921.09.11 ஆம் நாளன்று இவ்வுலகை விட்டு விடை பெற்றார். அவரின் 86 ஆம் நினைவு தினம் இன்றாகும்.



பாரதியின் பாரியார் செல்லம்மாள் 1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் "என் கணவர்" எனும் தலைப்பில் ஆற்றிய உரையை "உதயன்" பத்திரிகை பதிவு செய்துள்ளது.

நன்றி உதயன்

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் !


வவுனியா ஜோசப் இராணுவத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளும், கிட்டு பீரங்கிப் படையணியும் மற்றும் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இந்திரா ராடர் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளும் வானூர்திகளும் தளம் திரும்பி விட்டதாகவும், கொல்லப்பட்ட கரும்புலிகளினது விபரத்தினையும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  1. கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  2. கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  3. கரும்புலி மேஜர் நிலாகரன்
  4. கரும்புலி மேஜர் ஆனந்தி
  5. கரும்புலி கப்டன் கனிமதி
  6. கரும்புலி கப்டன் முத்துநகை
  7. கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  8. கரும்புலி கப்டன் எழிலகன்
  9. கரும்புலி கப்டன் அகிலன்
  10. கரும்புலி கப்டன் நிமலன்

அரச வரிகளால் திண்டாடும் ஸ்ரீலங்கா மக்கள் !


அண்மையில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நகரப்புற மக்கள் அனுபவிக்கும் அனைத்து விடயங்களையும் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென கருத்துத் தெரிவித்திருந்தார்.

தினமும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் ஸ்ரீலங்கா மக்கள் திண்டாடுவதை "வீரகேசரி" பத்திரிகை காட்டூன் படம் மூலம் அழகாகக் காட்டியுள்ளது.

திங்கள், 8 செப்டம்பர், 2008

பிள்ளையானின் ஊடகச் செயலருக்குத் துப்பாக்கிச் சூடு !

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஊடகச் செயலாளராகப் பணிபுரிந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ராதிகா தேவகுமார் இன்றிரவு 7.30 மணியளவில் கல்லடியில் வைத்து துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலி !

தமிழர்களுக்கு வயலின் இசையால் பெருமை சேர்த்த பெருந்தகை குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் இசையுலகுக்குப் பேரிழப்பாகும்.

வைத்தியநாதனின் வயலின் ஒலி அடங்கி விட்டது, இனி எப்போது கேட்போம்?

வயலினால் பெருமை பெற்றவரா குன்னக்குடி வைத்தியநாதன் அல்லது குன்னக்குடி வைத்தியநாதனால் பெருமை பெற்றதா வயலின் என பட்டிமன்றம் நடாத்துமளவுக்கு திறமையின் உச்சத்தில் இருந்தவர் குன்னக்குடி.

வயலின் இசை இருக்கும் வரை குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய "களத்துமேடு" பிராத்திக்கின்றது.

உறுதிமிக்க போராளிகளைப் புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர் - இக்பால் அத்தாஸ் !

யுத்தக் களநிலை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் நேற்று 2008.09.07 ஆம் திகதி "தமது உறுதி மிக்க போராளிகளை புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர்" எனும் தலைப்பில் "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை.

நன்றி உதயன்.

யாழ்.முன்னாள் மேயர்களின் நினைவு தினம் !

தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன் ஆகியோரின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு நேற்று 2008.07.09 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் திரு.ச.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது நினைவு தினம் செப்ரம்பர் 14ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

மேலதிக விபரங்களை தங்க முகுந்தனின் வலைப்பூவில் எதிர் பார்ப்போம்.

மேலதிக தகவலுக்கு:
தமிழ் நியூஸ்வேப்
தேசம் நெற்
தேனீ இணையத்தளம்

யாழ்.மாணவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கான கண்காட்சி !

ஸ்ரீலங்கா தலைநகரின் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் இன்று தேசிய புத்துருவாக்குனர் திணைக்கள ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புக்களுக்கான கண்காட்சி இடம்பெறுகின்றது.

2008 ஆம் ஆண்டுக்கான புத்துருவாக்குதலும் புதுமை புகுத்தலும் எனும் கண்காட்சியில் யாழ்ப்பாண மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட நவீன விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் செந்தூர்ச்செல்வன் அம்புஜனின் கண்டு பிடிப்பில் திருடரின் கைவரிசையில் இருந்து பணப்பையைப் பாதுகாக்கும் அபாய ஒலி எழுப்பும் பணப்பை.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராசேந்திரம் ருபேந்திரனின் கண்டு பிடிப்பில் இருளின் நூல்களை வாசிக்க உதவும் மூக்குக்கண்ணாடி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் உதயகுமார் டயந்தனின் கண்டு பிடிப்பில் தேங்காய் துருவும் கருவி மூலம் இலகுவாக மரக்கறி நறுக்க உதவும் கருவி.


யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சோபிதா கமலராஜாவின் கண்டு பிடிப்பில் கடல்நீரை எளிய முறையில் நன்னீராக்கும் கருவி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.பிரதாபனின் கண்டு பிடிப்பில் உணவகங்களில் பயன்படக்கூடிய பெருமளவு மரக்கறிகளை மின்சார உதவியுடனும் கையினாலும் வெட்டும் கருவி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் சுரேஷ்குமார் தர்ஷனின் கண்டுபிடிப்பில் எளிய முறையிலான பாதுகாப்பான எலிப்பொறி.


கோப்பாய் சரவணபவ வித்தியாலய மாணவன் நல்லநாதன் பிரசாந்தனின் கண்டுபிடிப்பான இருளில் பயன்படுத்தக்கூடிய காலணி, இருளில் சுத்திகரிக்க உதவும் தும்புத்தடி, பார்வையற்றோர் இருளின் நடக்க உதவும் கைத்தடி.


யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரேணுகா அமிர்தலிங்கத்தின் கண்டுபிடிப்பான இயற்கை மூலிகைகளான வேப்பிலை, துளசி இலை மூலம் தயாரிக்கப்பட்ட நுளம்புத்திரி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராஜரட்ணம் விதூஷன் கண்டு பிடித்த இலகுவான முறையில் மரக்கறி நறுக்க உதவும் கருவி.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----