ரிஎம்விபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரிஎம்விபி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 டிசம்பர், 2008

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்துக்குச் சென்ற கருணா அணியினருக்கு அனுமதி மறுப்பு!

ஸ்ரீலங்காவில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் 2008.12.01 ஆம் திகதி நேற்று மாலை ஆரம்பமாகியது, இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இரு தினங்களுக்குக் கலந்து கொள்ள மாட்டார்களென அக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று ஆரம்பமான குழுக் கூட்டத்துக்கு ரிஎம்விபி யின் கருணா அணியினர் இருவர் கலந்து கொள்ள வந்த போது சர்ச்சை ஏற்பட்டது. இக் கட்சியின் பெயரில் கருணா, பிள்ளையான் என இரு அணிகள் உருவாகியுள்ளதால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எவ் அணியை அனுமதிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக தேர்தற் திணைக்களத்தின் உதவியை நாடிய போது அக்கட்சியின் தலைவர் திரு.ரகு சுப்ரமணியம் நந்தகோபன், பொதுச் செயலர் திரு.ஏ.கைலேஸ்வரராஜா எனத் தெரிய வந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சு.நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதால் புதிய தலைவர் மற்றும் பொதுச்செயலர் யார் என்பதை எவ் அணியினர் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கின்றார்களோ அவர்கள் சார் பிரதிநிதிகளே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ள அனுமதிப்படுவர், இல்லையேல் இக் கட்சி சார்பில் முன்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகளான சிவகீதா பிரபாகரன் மற்றும் அஸாத் மௌலானா இருவரும் கலந்து கொள்ளலாமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஏக தலைவர் தானே என்றும், தான் நியமித்துள்ள இரு பிரதிநிதிகளையும் எமது கட்சி சார்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு திரு.கருணா வினாயகமூர்த்தி முரளிதரன் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கேற்ப நேற்றைய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திற் கலந்து கொள்வதற்கென வருகை தந்த கருணா அணியைச் சேர்ந்த திரு.எஸ்.கமலநாதன் மற்றும் திரு.கே.சின்னையா இருவரும் அனுமதி கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

கருணா, பிள்ளையான் விரிசலினால் ரகு நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்பட்ட போதிலும், இவர்களிடையே இன்னும் தொடரும் விரும்பத்தகாத பதவி வெறியினால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படவுள்ளனவோ தெரியவில்லை.

வெள்ளி, 14 நவம்பர், 2008

ரிஎம்விபி யின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!

அரசியல் கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 32 வயதுடைய ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபன் மற்றும் வாகன ஓட்டுநர் 29 வயதுடைய சமீர் ராஜ்குமார் (எஸ்.ரி.எம்.நஸீர்) இருவரும் கொழும்பு அத்துருகிரிய - ஒருவெல வீதியிலுள்ள வாகன விற்பனை நிலையத்துக்கு முன்பாக வோல்வோ ரக EP KH-3685 ஆம் இலக்க மகிழூந்தில் "ஃபீல்ட் வியூ" ஹோட்டலுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று காலை 11:30 மணியளவில் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான நந்தகோபன், கருணா அம்மான் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலுக்காகப் பதிவு செய்யப்பட்ட ரிஎம்விபி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தலில் திருமலை மாவட்ட அபேட்சகராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார், அண்மையில் கருணா அல்ல தானே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் எனும் சர்ச்சைக்குக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 18 அக்டோபர், 2008

"தமிழ் அலை" பத்திரிகைக் காரியாலயத்தில் கருணா, பிள்ளையான் குழு மோதல்!

மட்டக்களப்பில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டு வரும் "தமிழ் அலை" பத்திரிகையினை ஆக்கிரமிக்கும் நோக்கில் தலைமைக்காகச் சண்டையிடும் கருணா, பிள்ளையான் குழுக்களிடையே நேற்று மோதலேற்பட்டது.

பத்திரிகைக் காரியாலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கருணா குழுவினர் அங்கிருந்த 13 பேரைக் கைது செய்ததுடன், ஆயுதங்களையும் மீட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

ரிஎம்விபி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு வீடு செல்லவும் - கருணா அம்மான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருப்பதாகவும், இதனால் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படையில் இணையுமாறும், இல்லையேல் துப்பாக்கிகளைக் கைவிட்டு வீடுகளுக்குச் சென்று பொது வாழ்வில் இணையுமாறு அக் கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஸ்ரீலங்கா "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.


இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் இருந்து அப்பாவி இளைஞர்கள் தப்பிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன் ஜனநாயக சுதந்திரத்தினைப் பாதுகாக்கலாம் எனவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 6 அக்டோபர், 2008

கருணா அம்மான் பாராளுமன்ற உறுப்பினரானார்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்ற உறுப்பினராக இன்று 2008.10.06 ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிவிஷேட வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான திரு. எச்.எம். வசந்த சமரசிங்க இராஜினாமாச் செய்துள்ளதால் அவ் வெற்றிடத்துக்கு கருணா அம்மான் நியமிக்கப்பட்டுள்ளார், நாளைய பாராளுமன்ற அமர்வின் போது அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.

விரைவில் கருணா அம்மானுக்கு அமைச்சர் அந்தஸ்துள்ள பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2008

டக்ளஸ், கருணா, பிள்ளையான் சந்திப்பு!



நேற்று முந்தினம் கொழும்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானுக்கும் இடையேயான சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது ஈபிடிபி யின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.வி.சிவாவும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திரு.கந்தையா அருமைலிங்கமும் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு நட்புரீதியானது எனக் கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் இரு கட்சிகளும் இணைந்து அரசியல் கால் நகத்துதல் செய்யக் கூடும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.

2008.09.05 ஆம் திகதி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதி மகிந்த முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது அங்கு வருகை தந்த திரு.டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையான் சந்திரகாந்தனும் சந்தித்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வெள்ளி, 26 செப்டம்பர், 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உப தலைவர் பிள்ளையானுக்குப் பதிலாக ஜெயம் ?

கருணா அம்மான் தலைமையில் செயற்பட்டு வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் மீண்டும் உட்பூசல் தலை தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிழக்கிலங்கை மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையின் தோன்றிய முறுகல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கட்சித் தலைவர் கருணாவின் கருத்துக்களை உப தலைவர் பிள்ளையான் ஏற்றுக் கொள்ள தவறுகின்றார் எனும் காரணத்தினால் நேற்றிரவில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உப தலைவராக திரு.ஜெயமும், பேச்சாளராக இருந்த திரு.அஸாத் மௌலானாவுக்குப் பதிலாக வேறு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே பிள்ளையானின் செயலாளர் செயற்பட்டு வருவதாகவும், முதலமைச்சர் பிள்ளையானின் மெய்ப் பாதுகாவலர்கள் போராளிகளற்றவர்களெனவும், இது கட்சி விதிக்கு முரணானதெனவும் திரு.கருணா அண்மையில் சிங்கள பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்தார்.

அண்மையில் சர்வதேச வானொலியொன்று கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானிடம் கட்சித் தலைமைக்கும் உங்களுக்கும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தலைவரைச் சந்தித்து, கருத்துப் பரிமாற்றம் செய்வதில்லையென கருத்து நிலவுவதாகவும் அது பற்றிய கருத்து என்னவெனக் கேட்டபோது அதற்குப் பதிலளித்த திரு.பிள்ளையான் அப்படிக்கூற முடியாது நான் மாகாண சபை வேலைகளில் ஈடுபடுவதால் அவரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலையில் உள்ளேன், ஆனாலும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வருகின்றோம், சில கருத்துப் பிரச்சினைகள் உள்ளன, ஆயுதப் போராளிகளை குறைப்பது சம்பந்தமாக சில பிரச்சினைகள் இருந்தாலும் அதைக் காலவோட்டத்தில் தீர்த்துக் கொள்வதற்கான சாத்தியம் இருக்கின்றது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 25 செப்டம்பர், 2008

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் முக்கியஸ்தர்களுடனான செவ்வி !

ஸ்ரீலங்காவின் கிழக்கிலங்கை மாகாணசபையின் விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் திரு. துரையப்பா நவரெத்தினராஜா, மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான திரு. இனியபாரதி அவர்களை டான் தமிழ் ஒளி தொலைக்காட்சி சதுரங்கம் நிகழ்ச்சிக்காக அண்மையில் செவ்வி கண்டு ஒளிபரப்பி இருந்தது.

செவ்வியின் பாகங்கள்:
பாகம் - ஒன்று
பாகம் - இரண்டு

சனி, 30 ஆகஸ்ட், 2008

மட்டு. சிறைச்சாலையில் குண்டுத் தாக்குதல் !

மட்டக்களப்பு சிறைச்சாலையினுள் நேற்று காலை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் கைதிகளாக இருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் ஐவரும் மேலும் இருவருமாக ஏழு பேர் காயமைடைந்துள்ளதாகவும், அச் சம்பவத்தில் ஈழமாறன் ரவி என்பவர் கையை இழந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிள்ளையான் குழுவினரே இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஈபிடிபியினர் குற்றம் சாட்டிய போதிலும் எவராவது கைது செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. தங்களால் இத் தாக்குதல் நடத்தப்படவில்லையென ரிஎம்விபியினரின் ஊடகப் பேச்சாளர் மௌலானா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையினுள் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் காரணிகளை கண்டு பிடிக்க விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிடிபி இனர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை:


கிழக்கில் வேலியே பயிரை மேய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஊடக அறிக்கை 28.08.2008

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பெயரால் எமது உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமக்கான நியாயமும், நீதியும் கிடைக்குமென நாம் நம்புகின்றோம். எமது அரசியல் செயற்பாடுகளை மட்டக்களப்பிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு காலத்துக்குக் காலம் எம்மீது பலவிதமான வன்முறைகளை சமூக விரோதிகள் புரிந்துவருவதை எமது மக்கள் அறிவார்கள்.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்ட கால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டதையும் மக்கள் அறிவார்கள்.

வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அதுகுறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியது அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பி.யினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.

இத்தகைய அதிகார துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சச் சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கை கடமைகளுக்காக திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயகுமார் (யோகராசா ஜெயகுமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் - வினோதராஜ்), தோழர் விஜி (கோவிந்தன் - பிரதீப்), ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.

இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் - ஜனநாயகம் என்றும் நம்புகின்றோம் என்று மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும். சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர்.

அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி இருக்கிறது.

மக்களே! அரசியல் பலத்தையும், ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஊடகச் செயலாளர்
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----