வெள்ளி, 24 ஜூலை, 2009

அருகி வரும் மானினத்தைப் பாதுகாப்பாரா கிழக்கு முதல்வர்?

கிழக்கிலங்கையின் முதுகெலும்பாகத் திகழும் திருகோணமலையின் நகரப் பகுதியில் கட்டாக்காலி மானினங்கள் அதிகரித்துள்ளன, இவற்றுக்கு உரிய உணவின்மையால் பேரூந்து நிலையம், மத்திய சந்தை, கடைத் தெருக்களில் எல்லாம் உணவு கிடைக்குமா எனத் தேடி அலைகின்றன.

போதிய உணவின்மையால் தெருக்களில் காணப்படும் பொலித்தீன் பைகளையும் இந்த மானினம் உணவென்று நினைத்து உண்பதையும் காணக் கூடியதாக உள்ளது, இப்படியான பொருத்தமற்ற சமிபாடடையாத பொருட்களை உண்ணுவதால் அருகிவரும் அழகிய மானினம் அழியக் கூடிய வாய்பே அதிகம்.

அருகி வரும் மானினம் தொடர்பாக சக பதிவர் தோழர் த.ஜீவராஜ் "ஜீவநதி" எனும் தளத்தில் அழகிய மானினத்தின் படங்களுடன் பதிவு செய்துள்ளார். அருகி வரும் மானினத்தைப் பாதுகாக்க வேண்டியது சகலரினதும் கடமையாகும்.

ஆயுதக் கலாசாரம் கோலோச்சிய எம் மண்ணில் அழகிய மானினம் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும், காட்டை விட்டு தெருவுக்கு வனவிலங்குகள் வருவதற்குக் காரணம் அவற்றுக்கான உணவுகளும், சீதோஷ்ணநிலையும் கிடைக்காமையே ஆகும்.

திருமலையை ஒத்த அழகிய நகரான இந்தியாவின் ஏழுமலையான் குடி கொள்ளும் திருப்பதி மண்ணில் அருகி வரும் மானினங்களைப் பாதுகாக்க பாரிய முல்லை நிலப்பரப்பரப்பில் அழகிய சரணாலயம் அமைத்து, சுற்றிவர கம்பி வேலியிட்டு, உள்ளே அவற்றுக்குரிய உணவுகளையிட்டு பாதுகாத்து வருகின்றார்கள்.

இதே போன்று திருகோணமலை மாநகர சபையும் முன்வந்து சரணாலயம் அமைத்து அருகி வரும் அழகிய மானினங்களைப் பாதுக்க வேண்டியது அவசியமாகும், இதற்கு கிழக்கு மாகாணசபை தனது பூரண அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அருகி வரும் மானினத்தைப் பாதுகாப்பாரா கிழக்கு முதல்வர்?

நன்றி : http://geevanathy.blogspot.com/2009/05/blog-post_14.html
http://geevanathy.blogspot.com/2009/07/blog-post.html

செவ்வாய், 21 ஜூலை, 2009

களுத்துறை கல்வியற் கல்லூரியில் பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதை!

இலங்கையில் ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் தனது ஆழுமையை நாட்டின் பல திசைகளுக்கும் திரும்பி உள்ளது, இதில் ஓர் அம்சமாக இளைஞர்கள் மத்தியில் தொழில் வாய்ப்பை உருவாக்க முயல்கின்றது. அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வதனையும் ஊடகங்கள் மூலமாக அறியமுடிகின்றது.

பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகாத அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் தராதரத்துக்கேற்ப கல்வியல் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது, இதில் பயின்ற பல மாணாக்கர்கள் படிப்பை முடித்ததும் இலங்கைப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமனம் பெறுகின்றார்கள்.

2009 ஆம் கல்வியாண்டுக்காக ஆங்கில மொழி மூல கற்றலுக்காக கல்வியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகிய வடக்கு கிழக்கு மாணவர்களில் அதிகமானோர் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள ஆங்கில மொழிமூல கல்வியல் கல்லூரிகளுக்கு பயிற்சிக்கென அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் களுத்துறை பஸ்துன்ரட்ட கல்வியற் கல்லூரிக்குத் தெரிவாகிச் சென்ற கனிஷ்ட மாணவர்களுக்கு இந்த வாரம் கொடுமையான பகிடிவதை ஆரம்பமாகியுள்ளது, ஆண் மாணாக்கர் பகுதிகளுக்கு நள்ளிரவில் முகத்தை துணியினால் மறைத்து வரும் சீனியர் என அழைக்கப்படும் சிரேஷ்ட மாணவர்கள் யூனியர் என அழைக்கப்படும் கனிஷ்ட மாணாக்கர்களை அழைத்துச் சென்று கொடுமையான பகிடிவதைகளைச் செய்து வருகின்றனர், இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மாணவர்கள் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், பகிடிவதையென கொடுமையான சித்திரவதைக்குள்ளான மாணவர்களில் மூவர் படிப்பு வேண்டாம் என்று ஓடியுள்ளனர்.

இராணுவ முகாம்களில் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு ஒப்பானதாகவே இவ் வதைகள் இடம்பெறிவதனால், இராணுவத்தினரே வந்து தமிழ் மாணவர்களைச் சித்திரவதை செய்கின்றனரோவென எண்ணத் தோன்றுகின்றது, சிரேஷ்ட மாணவர்கள் எனச் சொல்லப்படுவோரில் அதிகமானோர் சிங்களவர்களாகும், சில தமிழ் சீனியர் மாணவர்கள் இருந்த போதிலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் உள்ளது.

உடைகளைக் கழற்றிவிட்டு தடிகளினாலும், விக்கட் பொல்லுக்களாலும், தாக்கியதில் ஒரு கனிஷ்ட மாணவனின் ஆணுறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது, அம் மாணவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படாமல் விடுதி அறையினுள் வைத்தே சிகிச்சை பெற்று வருகின்றார், இவ் விடுதியின் சுகாதாரமின்மையால் மாணவர்களுக்கு வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது, வெளியே செல்ல கல்வியல் கல்லூரி மேலாளர்களினதும், சிரேஷ்ட மாணவர்களினதும் அனுமதி கிடைக்காமையால் உரிய மருத்துவமின்றி கனிஷ்ட மாணவர்கள் அவதியுறுகின்றனர்.

இக் கொடுமையினைக் கல்வியற் கல்லூரி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, பகிடிவதை எனும் பெயரில் மனித சித்திரவதையை நடத்தும் இக் சிரேஷ்ட மாணவர்கள் எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் நாளைய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்குவார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதை போல அமையாமல் நல்ல சமுதாயம் உருவாக கல்வியல் சமூகம் கவனம் எடுக்க வேண்டும்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

மானாட மயிலாட நூறாம் வாரமும், கலா மாஸ்டரும் !

தமிழகத்தின் தொலைக்காட்சிகளில் ஒன்றான கலைஞர் டிவியில் வாராந்தம் ஒளிபரப்பாகும் "மானாட மயிலாட" நிகழ்ச்சி அதிகம் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது என்றால் அதில் மிகையில்லை.

இந்த வாராந்த நாட்டியப் போட்டி நிகழ்ச்சி நூறாவது வாரத்தை எட்டியதனை சிறப்பிக்கும் முகமாக கலைஞர் கருணாநிதியைப் புகழ் பாடும் நோக்கில் மானாட மயிலாட - 4 பல நாட்டியங்களை அரங்கேற்றின, அனைத்துப் போட்டியாளர்களும் தங்களது திறமைகளை நிலைநாட்ட அருமையான நடன நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

போட்டியாளர்களில் ஒருவரான கோகுல் தனது தனித்துவத்தை நிலைநாட்ட பல சிறப்பு நிகழ்சிகளை நடத்தி வருவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தாகும், கோகுலையும் விஞ்சும் வகையில் இறுதியாக இணைந்துள்ள போட்டியாளர்களில் ஒருவரான மனோ தனது குரலின் திறமையை வெளிக் கொணர பிரபலங்களின் குரலோசையை அப்படியே பிரதி பண்ணுவது சிறப்பாக உள்ளது.

இந்த மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியை திறம்பட நடாத்தும் முழுப் பொறுப்பும் நடன இயக்குநர் கலா மாஸ்டரிடமே தங்கி இருப்பதனால் அவருடன் இணைந்து நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் நடிகை நமீதாவும் செயற்படுகின்றனர். இதில் நடிகை நமீதாவின் கெஞ்சும் குரல் பலருக்கு கொஞ்சும் குரலாக இருந்தாலும் புது நடுவரைத் தேட வேண்டிய கட்டாயம் கலா மாஸ்டருக்கு உள்ளது, தமிழகத்தில் நடுவர்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

இந்த நூறாவது வாராந்த சிறப்பு நிகழ்வில் நடிகை குஷ்பு "சின்னத்தம்பி" படப் பாடலான "நீ எங்கே நான் இங்கே..." எனும் பாடலுக்கு அபிநயம் செய்தது தத்துரூபமாக இருந்தது.

நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உதவியாளர்களில் ஒருவரான ஸ்ராண்டி "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை, ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும், அலை கடல் ஓய்வதில்லை, ஆடிவா, ஆடிவா, ஆடிவா... எனும் பாடலுக்கு நடனத்தில் மெருகூட்ட, கலா மாஸ்டரும் அந்தப் பாடலுக்கேற்ப நடனமாடியது இனிமையாக இருந்தது, ஆனால் அந்தப் பாடல் வரிகளில் வரும் "இடையெனும் கொடியாட நடமாடி வா ..." எனும் சொற்தொடருக்குக் கலா மாஸ்டரின் உடல்வாகு பொருத்தமின்றி இருந்தாலும் கூட அந்த உடலைத் தூக்கி செவ்வனே நடனமாடியதற்காக "ஓ" போட வேண்டும்.

இந் நாட்டியப் போட்டி நிகழ்ச்சிக்கு "மானாட மயிலாட" எனும் தலைப்பை கலைஞர் கருணாநிதியே வைத்ததாக எல்லோரும் கூறிக் கொண்டாலும் கூட இங்கு ஆணும் பெண்ணும் ஜோடியாக இணைந்தல்லவா நடனமாடுகின்றனர், இங்கு குறிப்பிடப்படும் அழகிய தோகை மயில் ஆண் வர்க்கமாகையால், கலைஞர் குறிப்பிடும் மான் பெண் மானாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம் !
























செவ்வாய், 14 ஜூலை, 2009

நாட்டைச் சீர்குலைக்கும் பாதாள உலகக் கும்பலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்களும் !

ஸ்ரீலங்காவின் தலைநகரையும் அதனோடு ஒட்டியுள்ள தென் பகுதியுமான சிங்களப் பகுதிகளில் பாதாள உலகக் கும்பலினால் பலத்த தொல்லைகள் ஏற்பட்டு வருவது சகலரும் அறிந்ததே! இந்தக் கும்பலில் பல்லினத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனராயினும், சிங்கள, முஸ்லிம் காடையர்களே இதில் அதிக சிரத்தையெடுத்து சமூகச் சீரழிவுகளை நடாத்தி வருகின்றனர்.

போதைப் பொருள் வியாபாரம் முதல் கப்பம் பெறல், ஆட்கடத்தல், பணத்துக்காகக் கொலை செய்தல், அடாவடித்தன தரகு வியாபாரம் போன்றன இவர்களால் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போன்று நாட்டை நல்வழிப்படுத்தக் கூடிய அரசியல்வாதிகளும், சில பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் முன்னின்று செயற்படுவதனால் கட்டுப்படுத்துவது கடினமாகவே இருந்து வந்தது.

மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களை முற்றாக ஒழித்துக் கட்டி, சுத்திகரிப்புச் செய்யுமாறு படையினருக்கு பணிப்புரை செய்துள்ள நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, படையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாமென அரசியல்வாதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை பாராட்டத்தக்கது.

அதில் ஒரு கட்டமாக இந்திய என்கவுண்டர் முறையில் சில சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது நல்ல விடயமாக இருந்த போதிலும், அப்பாவிகள் எவரும் இதில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தென்பகுதியில் இருக்கும் இந்த அச்சுறுத்தல் போன்று கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் ஆயுதக் குழுவினரால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, அஸ்ரப்பினால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் இன்னும் தங்களது அடாவடித்தனங்களை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இதனை கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தூபமிட்டு வளர்த்துக் கொண்டே வருகின்றனர், இதனால் பிட்டும் தேங்காய்ப் பூவுமாக வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவர்களிடையே விரிசல் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றனர்.

பாதுகாப்புத் தரப்பினர் சட்ட விரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு அறிவித்திருந்தும் இன்னும் பூரணமான ஆயுதக் களைவு ஏற்பட்டதாக அறிய முடியவில்லை, முஸ்லிம் தீவிரவாத ஆயுதக் குழுத் தலைவர்கள் இப்போது தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதன் மர்மம் என்னவென்று அறிய முடியாமல் இருக்கின்றது.

அரசியல்வாதிகளின் திட்டமிடல்களினால் முன்பும் இதே போன்று முஸ்லிம் ஆயுதக் குழுத் தலைவர்கள் தலைமறைவாக இருப்பது போன்று தகவல்கள் வெளியாகி பாதுகாப்புத் தரப்பினர்களின் தேடுதல்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டது, அதே போன்று இப்போதும் பாதுகாப்பு தரப்பு எடுத்து வரும் முயற்சிகளை நசுக்குவதற்காகவே, முஸ்லிம் ஆயுதக் குழுவினர்களின் தலைவர்கள் ஓடி விட்டார்கள் எனப் போலிப் பிரச்சாரம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மூதூர், கிண்ணியா, வாழைச்சேனை, காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம் போன்ற பகுதிகள் முஸ்லிம் தீவிரவாதிகளின் ஆயுதத் தளங்களாகும், இங்குள்ள சில பள்ளிவாசல்கள் சம்மேளனங்களும், முஸ்லிம் வர்த்தகர்களுமே முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஊக்குவித்து வருகின்றனர், இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் இப்பகுதிகளில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டே வருகின்றனர், 1990 ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் இந்த முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு தங்களது சொந்த கிராமங்களில் இருந்தே துரத்தப்பட்டு, சொத்துக்கள் அழிக்கப்பட்டு, உடமைகளும் அபகரிக்கப்பட்டு இருந்தன.

இப்படியான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுவதுடன், அதற்கு உடந்தையானவர்களும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீவிரமாகச் செயற்பட்டு முஸ்லிம் ஆயுதக் குழுக்களினதும், பாதாள உலகக் கும்பல்களினதும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியது கட்டாயமாகும்.

முஸ்லிம் ஆயுதக் குழுக்களில் ஒன்றான ஜிகாத் முன்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

திங்கள், 13 ஜூலை, 2009

மீண்டும் புலூடா விட்டுள்ள தமிழ்வின்

கடந்த 2009.07.11 ஆம் திகதி சனிக்கிழமை மெனிக்பாம் அகதி முகாமுக்கு இளையோர்களின் செயற்திட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுக்கச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ அங்குள்ள மக்களினால் சேறடிப்புக்கு உள்ளானதாக புகைப்படங்களை ஆதாரப்படுத்தி தமிழ்வின் செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை நிரூபிக்க பல ஆதாரங்கள் இருந்தும் கூட "பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல" தனது பொய் பரப்புரைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றது, தமிழ்வின்னின் பொய்ச் செய்திகளை முன்பும் களத்துமேடு தோலுரித்துக் காட்டியிருந்தது.

"இளைஞர்களுக்கு நாளை" அமைப்பின் தலைவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஷ மக்களைச் சந்திக்கச் செல்லும் போது இராணுவ பாதுகாப்புடன் செல்வது தான் வழக்கம், இப்படியான பாதுகாப்புடன் பின்னியுள்ள நாமல் வன்னி யுத்தத்தில் இருந்து மீண்ட விடுதலைப் புலிகளின் அரசியலுடன் இறுக்கமாகி இருந்த இம் மக்களைப் பார்க்கப் போகும் போது பாதுகாப்பின்றிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை, தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் எந்தப் பாதுகாப்பு படையினரும் இல்லை, அப்படியானால் வன்னி மக்களை முட் கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம் தமிழர்களைச் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது, அங்கு இராணுவ கெடுபிடிகள் இல்லையென்று தமிழ்வின் மறைமுகமாகக் கூற முற்படுகின்றது.

தமிழ்வின் பிரசுரித்துள்ள படத்தில் மக்கள் கூட்டத்துக்குள் நின்றிருக்கும் நாமல் மட்டும் சேறடிப்புக்குள்ளான நிலையில் சிக்கியிருப்பதாக பொய்யான படத்தை தயாரித்து வெளியிட்டமை சிரிப்புக்கு இடமானது, அந்த படத்தைக் கிராபிக்ஸ் செய்தவர்கள், அப் படத்தில் நாமலுக்கு அருகில் நிற்பவர்களுக்கும் சிறிது சேற்றைப் பூசி இருக்கலாமே!, மக்கள் கூட்டத்தினுள் இருக்கும் நாமலுக்கு மட்டும் சேறு படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது?

ஒளிப்படக் கருவியினால் பதிவாகியுள்ள திகதியை மாற்ற முடியாமல் இன்னும் பல திகதிகளை இட்டு படத்தில் மாற்றங்களைச் செய்ய முனைந்தது வேடிக்கையாக உள்ளது, பல திகதிகளை ஒளிப்படக் கருவி ஒரே நேரத்தில் பதிவு செய்வதில்லை, இது ஒன்றே போதும் தமிழ்வின் பிரசுரித்துள்ள படம் போலியானது என்பதற்கு!

நாமல் சேறடிக்கப்பட்டதாக வர்ணிக்கப்பட்டுள்ள படத்தில் அவரை சுற்றி நிற்கும் அனைவரும் சிரித்த முகத்துடன் நிற்பது எந்த அளவு தூரத்துக்குச் சாத்தியமாகும், அப்படியானால் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் நிலவுகின்றது என்று அர்த்தமல்லவா?

இத்தனைக்கும் மேலாக "தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது" எனும் செய்தியை தமிழ்வின் கூடவே பதிவு செய்துள்ளது, இதிலிருந்து தமிழ்வின் பிரசுரித்துள்ள செய்தி போலியானது என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பார்கள், ஏனெனில் அந்த படத்தில் நாமலுக்கு முன்னாலுள்ள நபர் செல்லிடப்பேசியினால் சிரித்த படி புகைப்படம் எடுத்துக் கொண்டி இருக்கும் காட்சி உள்ளது.

ஆகவே தமிழ்வின் பிரசுரிதுள்ள செய்தி உண்மையானால் இலங்கையில் எந்த மக்களுக்கும் இப்போது பிரச்சனை ஏதும் இல்லை, முழுமையான ஜனநாயகம் நிலவுகின்றது என்பது அர்த்தம். இல்லை இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என கருத்துக் கூற முற்படின் தமிழ்வின் சொல்லியுள்ள செய்தி அப்பட்டமான பொய்ச் செய்தி என்பதுடன் மீண்டும் தமிழ்வின் புலூடா விட்டுள்ளது என்பது உறுதியாகின்றது.

தமிழ்வின் செய்தி

மெனிக்பாம் அகதி முகாமுக்கு பயணம் செய்த ஜனாதிபதியின் மூத்தமகன் மீது சேறடிப்பு மற்றும் கல்வீச்சு தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூலை 2009, 05:04.03 AM GMT +05:30 ]
வவுனியா அகதிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் அகதிகள் முகாமுக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.

தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அழித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.





ஞாயிறு, 12 ஜூலை, 2009

யாழ்தேவி இணையத்துக்கு நன்றி

பல்லாயிரம் பதிவர்கள் மத்தியில் "களத்துமேடு" தனக்கே உரித்தான பாணியில் "ஊடகப் புதினங்களின் திறனாய்வுக் களம்" எனும் கருப் பொருளில் பதிவுகளைச் செய்து வருவது பதிவர்கள் அறிந்ததே!

அந்த வகையில் பதிவுலகில் தடம் பதித்துள்ள என்னையையும் ஒரு பதிவராகக் கருதி "யாழ்தேவி" இணையத் தளத்தில் நட்சேத்திரப் பதிவர் அந்தஸ்த்து கொடுத்துள்ளமைக்கு நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கின்றேன்.

யாழ்தேவி இணையத்தின் பணி தொடர களத்துமேட்டின் வாழ்த்துக்கள்.

வியாழன், 2 ஜூலை, 2009

ஆழும் கட்சிக்குள் நுழைய ஒத்திகை பார்க்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வ கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவிருக்கின்றன, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிபாரிசுவில் தெரிவாகி பாராளுமன்றம் சென்று சர்வகட்சிக் குழுக் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவிழந்த பின்னரான இந்த நேரத்தில் ஜனாதிபதியினுடான சர்வகட்சிக் குழுக் கூட்டத்துக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்றைய சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் திரு.என். சிறீகாந்தா தலைமையில் திரு.த.கனகசபை, திரு.கே.துரைரட்ணசிங்கம், திரு.வினோ நோகதாரலிங்கம், திரு.கிஷோர் சிவநாதன் ஆகியோரைக் கொண்ட குழு கலந்து கொள்ளவுள்ளதாகவும், அத்துடன் எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வ கட்சிக் குழுக் கூட்டத்திலும் தாம் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திரு.பா.அரியநேந்திரன் (பா.உ) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்க கட்சியுடனான சந்திப்புக்களை விடுதலைப் புலிகளின் அரசியற் செயலர்களான மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன், பா.நடேசன் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப தவிர்த்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர், இப்போது சொந்த அறிவின் அடிப்படையில் கலந்து கொள்ள முன்வந்துள்ளதமையானது சிறப்பம்சமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிஷோர் சிவநாதன் காட்டிய வழியில் இன்னும் பல தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உள் நுழைய இருப்பதாகவும், அதற்கான இரகசிய பேச்சுக்கள் திரை மறைவில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன, அதற்கான முதற்கட்ட ஒத்திகையே இந்த கூட்டத்திற்கான சமூகமளித்தலாகும்.

எது எப்படி இருப்பினும் எமது நலிந்த மக்களுக்கு உபத்திரமின்றி இனிமேலாவது கிடைத்திருக்கும் பாராளுமன்ற ஆசனம் எனும் பெரிய பதவியினைக் கொண்டு தங்களால் முடியுமான உதவிகளைச் செய்வார்கள் என அறிய முடிகின்றது, இச் சந்தற்பத்தையும் தவற விடுவார்களாயின் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செல்லாக் காசாகி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போதே கருத்தியல்ரீதியாகப் பிரிந்துள்ள இக் கூட்டமைப்பினர் நிரந்தரமாகவே பல கூறுகளாகப் பிரிந்து இருந்த இடமே தெரியாமல் போவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----