ஸ்ரீலங்காவின் வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேளையில் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன, இன்று பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் நடக்கவுள்ள இரு மாகாணங்களுக்குமான நான்கு மாவட்டங்களில் 73 உறுப்பினர்களில், வடமத்திய மாகாண சபைக்காக 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்காக 42 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளனர்.
690 பேர் போட்டியிடும் வடமத்திய மாகாண சபைக்காக அனுராதபுர மாவட்டத்தில் 21 பேரும், பொலநறுவ மாவட்டத்திலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 569 398 வாக்காளர்கள் அனுராதபுர மாவட்டத்தவர்களும், 277 056 வாக்காளர்கள் பொலநறுவை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 846 454 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தின் 12 அரசியல் கட்சிகளில் இருந்து 288 பேரும் மற்றும் 7 சுயேச்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக மொத்தம் 456 அபேட்சர்களும், பொலநறுவை மாவட்டத்தின் 10 அரசியல் கட்சிகளில் இருந்து 130 பேரும், 8 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 104 பேருமாக 234 அபேட்சகள் களம் இறங்குகின்றனர்.
1008 பேர் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்காக இரத்திரபுரி மாவட்டத்தில் 24 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 18 பேருமாக மொத்தம் 42 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 713 205 வாக்காளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தவர்களும், 605 621 வாக்காளர்கள் கேகாலை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 131 826 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் 12 அரசியற் கட்சிகளில் இருந்து 324 பேரும் மற்றும் 9 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 243 பேருமாக மொத்தம் 567 அபேட்சகர்களும், கேகாலை மாவட்டத்தின் 11 அரசியற் கட்சிகளில் இருந்து 231 பேரும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அனுராதபுர மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 231 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 758 வாக்களிப்பு நிலையங்கள் வடமத்திய மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் 8 தேர்தற் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களும், கேகாலை மாவட்டத்தின் 9 தேர்தற் தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 1014 வாக்களிப்பு நிலையங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1772 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1698 பேர் போட்டியிடும் இவ்விரு மாகாணங்களுக்கான நான்கு மாவட்டங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 2 165 280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். இத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற 45 அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
இத் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 36000 பேரில் 2100 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு, ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போது ஏற்படும் வன்முறைகளைக் கண்காணிக்கவென 21 000 பொலிஸாரும் மேலதிக பாதுகாப்புக்கென இராணுவத்தினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.