ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது சம்பந்தமான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் 77 மேலதிக வாக்குகள் கிடைத்ததால் அவசரகால சட்டம் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது, வழமையாக இப் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்து வருவது தெரிந்ததே!
இம்முறை அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுத் தலைவர் இரா சம்பந்தன் கோரினார், இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.
பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து ஜேவிபியினரும், எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாக்களித்திருந்தனர். ஐ.தே.கட்சியினரும், முஸ்லிம் காங்கிரஸும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஆதரவைக் கொடுத்து வருவது தெரிந்ததே, இந் நிலையில் இவர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பி யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவும் இணைந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவ்விடயம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடையே ஒத்த கருத்தில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதுடன், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் என்.ஸ்ரீகாந்தா எச்சரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம், அல்லது ஸ்ரீகாந்தா இல்லாமல் ஆக்கப்படலாம் என்பதை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அவசர அவசரமாக நேற்று பாராளுமன்றத்தில் அதற்கான வியாக்கியானம் செய்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா அரசாங்கத்துடன் இணைவாரா அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விடுதலைப் புலிகளினால் நீக்கப்படுவாரா இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவாரா எதிர்காலம் பதில் சொல்லும்.
எனது அரசியல் நோக்கத்தை தடை செய்வதற்கோ அல்லது என்மீது சேறு பூசுவதற்கோ எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை.
- சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. தெரிவிப்பு
வீரகேசரியில் வெளியான செய்தியினால் நான் மனவருத்தத்திற்குள்ளாகியுள்ளேன். அந்த செய்தியில் பல முக்கிய விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார்.நேற்று சபையில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றினை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: 07.08.2008 அன்று வீரகேசரி செய்தித் தாளின் முதல் பக்கத்தில் எனது பெயர் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சில முக்கியமான விடயங்கள் உண்மைக்கு புறம்பானது. இதனால், நான் மனவருத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். அத்துடன், 06.08.2008 நடைபெற்ற கடல் தீழ்ப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது நான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை தொடர்பிலும் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.
அவசரகால சட்டம் மீதான விவாதத்தின்போது நான் பிற்பகல் 4 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே சபைக்குள் பிரவேசித்தேன். அதன்போது வேறு சிலர் கட்சியின் சார்பில் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அன்று எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தமையினால் சபைக்கு பிற்பகல் வேளையிலேயே வருகை தருவேன் என்று கட்சியின் பிரதம கொறடாவான செல்வம் அடைக்கல நாதன் எம்.பி.க்கு அறிவித்தேன்.
பாராளுமன்றத்திற்கு நான், அன்று பிற்பகல் வேளையில் வருகை தருகின்றபோது எனது கையடக்க தொலைபேசி மூலமாக கட்சியின் பிரதம கொறடாவான செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக சபைக்குள் பிரவேசித்த நான், விவாதத்தை சில நிமிடங்கள் அவதானித்து விட்டு 06.08.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் எனது பெயர் தொடர்பில் வெளியான செய்தி குறித்து தினக்குரல் பத்திரிகையின் பாராளுமன்ற செய்தி அறிக்கையாளரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக பார்வையாளர் கலரிக்கு சென்று விட்டேன்.
கடல் தீழ்ப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது நான் நடுநிலை வகித்ததாக வெளியான செய்தி தொடர்பில் வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு எனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியதுடன், வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு விளக்கமளித்து தொலைநகலை அனுப்பினேன். எனினும், இது தொடர்பில் பாராளுமன்ற செய்தி அறிக்கையாளரிடம் விளக்கமளிக்குமாறு தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நான் பார்வையாளர் கலரிக்கு சென்றேன். எனினும், கடல் தீழ்ப்பு பிரேரணையை எதிர்ப்பது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் கட்சியினால் எடுக்கப்படவில்லை. எனினும், சக நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரியபோது ஆச்சரியம் அடைந்தேன். கடல் தீழ்ப்பு சட்டமூலம் பொதுவான சட்டம் என்பதனால் அதனை எதிர்ப்பதற்கு கட்சி முடிவெடுக்கவில்லை. எனது அவசர சிந்திப்பிற்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தேன். இந்நிலையில் தினக்குரல் பத்திரிகைக்கு விளக்கமளிப்பதற்காக செய்தி அறிக்கையாளர்களின் அறையிலிருந்து எனது விளக்கத்தை எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர் எழுந்து வருகின்ற பொழுது அங்கு காவலில் நின்ற பொலிஸாரிடம் நேரத்தை கேட்டு விட்டு சபைக்கு ஓடோடி வந்தேன். அப்பொழுது சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில், அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பின்போது நான் கலந்துகொள்ள முடியாமல் போனமைக்கான காரணத்தை சகல பாராளுமன்ற நண்பர்களுக்கும் விளக்கமளித்தேன். பின்னர் எனது மேசையிலிருந்து நாட்குறிப்பு, பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதற்கு முன்னர் கட்சித் தலைவர் சம்பந்தனிடம் என்னுடைய விளக்கத்தை எடுத்துக் கூறினேன். அப்பொழுது கோரம் கேட்கவில்லையா? என்று கேட்ட அவர், 4.30 மணிக்கு முன்னரே வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது என்றும் பிரேரணை மீது பதிலளித்து உரையாற்றுகின்ற அமைச்சர் தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்கு ?ன்னதாக உரையை முடித்துக் கொண்டால் வாக்கெடுப்பு குறித்த நேரத்திற்கு முன்பதாகவே நடைபெறும் என்றும் எனக்கு தெளிவுபடுத்தினார்.
வீரகேசரி பத்திரிகையில் 07.08.2008ஆம் ஆண்டு முதல் பக்கத்தில் வெளியான செய்தி தொடர்பில் அந்த பாராளுமன்ற செய்தி அறிக்கையாளருக்கும் செய்திக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை நான் அறிவேன். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி சேறு பூசும் நோக்குடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதாக காட்டுவதற்காகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். இதில் வெளியாரின் தலையீடு நிச்சயமாக இருக்கின்றது. இந்த நடவடிக்கை எனது அரசியல் நடவடிக்கைகளை சிறுமைப்படுத்துவதற்கான செயற்பாடாகும். வெளியார் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியாகியிருக்கின்றது. எனது அரசியல் நோக்கத்தை தடை செய்வதற்கோ அல்லது சேறு பூசுவதற்கோ எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இதன்போது, சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் இரா. சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவின் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், உறுப்பினர்களின் சிறப்புரிமை குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற குழுவின் கவனத்திற்கும் கொண்டுவருவதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.