மட்டக்களப்பு சிறைச்சாலையினுள் நேற்று காலை நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் கைதிகளாக இருந்த ஈபிடிபி உறுப்பினர்கள் ஐவரும் மேலும் இருவருமாக ஏழு பேர் காயமைடைந்துள்ளதாகவும், அச் சம்பவத்தில் ஈழமாறன் ரவி என்பவர் கையை இழந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பிள்ளையான் குழுவினரே இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக ஈபிடிபியினர் குற்றம் சாட்டிய போதிலும் எவராவது கைது செய்யப்பட்டதாக அறிய முடியவில்லை. தங்களால் இத் தாக்குதல் நடத்தப்படவில்லையென ரிஎம்விபியினரின் ஊடகப் பேச்சாளர் மௌலானா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையினுள் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் காரணிகளை கண்டு பிடிக்க விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிடிபி இனர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை:
கிழக்கில் வேலியே பயிரை மேய்கிறது அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!
ஊடக அறிக்கை 28.08.2008
ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் பெயரால் எமது உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எமக்கான நியாயமும், நீதியும் கிடைக்குமென நாம் நம்புகின்றோம். எமது அரசியல் செயற்பாடுகளை மட்டக்களப்பிலிருந்து அகற்றும் நோக்கத்தோடு காலத்துக்குக் காலம் எம்மீது பலவிதமான வன்முறைகளை சமூக விரோதிகள் புரிந்துவருவதை எமது மக்கள் அறிவார்கள்.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த எமது நீண்ட கால உறுப்பினர் தோழர் அப்பாஸ் சுடப்பட்டதையும் மக்கள் அறிவார்கள்.
வாழைச்சேனையில் எமது உறுப்பினரான தோழர் சீலன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நாம் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும், அதுகுறித்து இன்றுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எமது உறுப்பினர்களைக் கடத்தியது அஜித் தலைமையிலான ரி.எம்.வி.பி.யினர்தான் என்பதை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த விடயத்தில் தமது தலையீட்டை அரசியல் செல்வாக்குச் செலுத்தித் தப்பித்துக் கொண்டுள்ளனர்.
இத்தகைய அதிகார துஷ்பிரயோகமானது நீதி, நியாயம் கிடைக்கவிடாது, கிழக்கில் அச்சச் சூழலையே தோற்றுவித்துள்ளது. இத்தகைய பயங்கரமான சூழலின் பின்னணியிலேயே 29.08.2008 அன்று மட்டக்களப்பு சிறையில் நடந்த கைக்குண்டு வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 6.30 மணிக்கு சிறையில் இருப்பவர்களை இயற்கை கடமைகளுக்காக திறந்துவிடும் வழக்கமான நேரத்திலேயே எமது உறுப்பினர்கள் மீது திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் செங்கலடியின் பொறுப்பாளர் தோழர் ரவி (தர்மரெட்ணம் ஈழமாறன்), தோழர் சேகர் (வீரகுட்டி சேகர்), தோழர் ஜெயகுமார் (யோகராசா ஜெயகுமார்), தோழர் விஜய் (மகேந்திரராஜ் - வினோதராஜ்), தோழர் விஜி (கோவிந்தன் - பிரதீப்), ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களுடன் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு நிறைந்த சிறைக்குள்ளேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கில் இருக்கும் குறைபாடுகளையே இது கோடிட்டுக் காட்டுகிறது. எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற அதிர்ச்சியையே மக்கள் கொண்டிருக்கின்றனர்.
இத்தாக்குதலை நடத்திய ரி.எம்.வி.பி. உறுப்பினரை எமது உறுப்பினர்கள் பார்த்துள்ளனர். எனினும் அது தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? இத்தகைய சூழலையா கிழக்கின் விடுவிப்பும் - ஜனநாயகம் என்றும் நம்புகின்றோம் என்று மக்களின் கேள்விகளுக்கு என்ன பதிலளிக்க முடியும். சட்டம், ஒழுங்கைச் செயற்படுத்த வேண்டியவர்கள், ஒரு குறிப்பிட்ட தரப்பை பாதுகாக்க செயற்படுகின்றனர்.
அப்படியாயின், அப்பாவிப் பொதுமக்களையும், அரசியல் சக்திகளையும் பாதுகாக்க வழியேதுமில்லையா? நீதிக்காகக் காத்திருப்போரை சிறையிலேயே கொலை செய்யும் கொடூரம்தான் கிழக்கின் தற்போதைய அரசியல் போக்காக மாறி இருக்கிறது.
மக்களே! அரசியல் பலத்தையும், ஆயுதப் பின்னணியையும் கொண்டு, மக்களை அடக்கி ஒடுக்கி காட்டு ராஜ்ஜியம் நடத்த எத்தனிக்கப்படுகின்றது. இந்த நிலையானது சட்டியிலிருந்து அடுப்பில் வீழ்ந்த கதையாகிவிட்டிருக்கிறது. மக்களையும், மக்கள் சேவகர்களையும், வன்முறையைப் பிரயோகித்து அடிமைப்படுத்த நினைக்கும் சக்திகளின் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஊடகச் செயலாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.