கிழக்கிலங்கையின் மட்டு. நாவற்குடா மஞ்சம்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அப்பாஸ் எனப்படும் 28 வயதுடைய ஆறுமுகம் வரதராஜன் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரது கொலை தொடராக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்திருப்பதாக ஈபிடிபியினர் அவர்களின் "ஈபிடிபி நியூஸ்" ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கில் பிள்ளையான் குழுவுக்கும் ஈபிடிபிக்கும் தொடர் முறுகல் நிலை இருப்பதால் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலையாக இருக்கலாமென "நெருப்பு இணையத்தளம்" உறுதிப்படுத்தப்படாத செய்தியாக குறிப்பிடுள்ளது.
இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது ஏன் இப்படியான கொலைகள் தொடர்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளியே இல்லையா?
தமது கட்சி உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் இருப்புக்காக உயிரைக் காவு கொள்ளும் அரசியல் வியாபாரம் செய்வத் துணிவது ஏன் என்பது தெரியாமல் உள்ளது.
கிழக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினதும் பிள்ளையான் குழுவினதும் பொறுப்பில் இருக்கின்றது என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அல்லது கிழக்கு மாகாண அரசு இக் கொலைதாரியை கைது செய்யாமைக்கான காரணம் என்ன?
இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து 200 மீற்றர் தூரத்திலே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஸ்ரீலங்கா படையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவே!
எது எப்படி இருப்பினும், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான தொடர் கொலைகளினால் எஞ்சப் போவது சுடலைகளும், மண்டையோடுகளுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.