வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்காவின் நாளைய மாகாணசபைத் தேர்தல் !

ஸ்ரீலங்காவின் வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நடக்கவிருக்கும் வேளையில் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன, இன்று பலத்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் நடக்கவுள்ள இரு மாகாணங்களுக்குமான நான்கு மாவட்டங்களில் 73 உறுப்பினர்களில், வடமத்திய மாகாண சபைக்காக 31 உறுப்பினர்களும், சப்ரகமுவ மாகாண சபைக்காக 42 உறுப்பினர்களும் தெரிவாகவுள்ளனர்.

690 பேர் போட்டியிடும் வடமத்திய மாகாண சபைக்காக அனுராதபுர மாவட்டத்தில் 21 பேரும், பொலநறுவ மாவட்டத்திலிருந்து 10 பேருமாக மொத்தம் 31 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 569 398 வாக்காளர்கள் அனுராதபுர மாவட்டத்தவர்களும், 277 056 வாக்காளர்கள் பொலநறுவை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 846 454 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தின் 12 அரசியல் கட்சிகளில் இருந்து 288 பேரும் மற்றும் 7 சுயேச்சை குழுக்களிலிருந்து 168 பேருமாக மொத்தம் 456 அபேட்சர்களும், பொலநறுவை மாவட்டத்தின் 10 அரசியல் கட்சிகளில் இருந்து 130 பேரும், 8 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 104 பேருமாக 234 அபேட்சகள் களம் இறங்குகின்றனர்.

1008 பேர் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்காக இரத்திரபுரி மாவட்டத்தில் 24 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 18 பேருமாக மொத்தம் 42 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 713 205 வாக்காளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தவர்களும், 605 621 வாக்காளர்கள் கேகாலை மாவட்டத்தவர்களுமாக மொத்தம் 131 826 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின் 12 அரசியற் கட்சிகளில் இருந்து 324 பேரும் மற்றும் 9 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 243 பேருமாக மொத்தம் 567 அபேட்சகர்களும், கேகாலை மாவட்டத்தின் 11 அரசியற் கட்சிகளில் இருந்து 231 பேரும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களிலிருந்து 210 பேருமாக மொத்தம் 441 அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அனுராதபுர மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 527 வாக்களிப்பு நிலையங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் 7 தேர்தற் தொகுதிகளில் உள்ள 231 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 758 வாக்களிப்பு நிலையங்கள் வடமத்திய மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் 8 தேர்தற் தொகுதிகளில் 541 வாக்களிப்பு நிலையங்களும், கேகாலை மாவட்டத்தின் 9 தேர்தற் தொகுதிகளில் 473 வாக்களிப்பு நிலையங்களுமாக மொத்தம் 1014 வாக்களிப்பு நிலையங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

1772 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1698 பேர் போட்டியிடும் இவ்விரு மாகாணங்களுக்கான நான்கு மாவட்டங்களிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க 2 165 280 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். இத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்ற 45 அரசியல் கட்சிகளும், 34 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இத் தேர்தல் வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 36000 பேரில் 2100 அதிகாரிகள் தேர்தல் கண்காணிப்பு, ஆலோசனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போது ஏற்படும் வன்முறைகளைக் கண்காணிக்கவென 21 000 பொலிஸாரும் மேலதிக பாதுகாப்புக்கென இராணுவத்தினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2008

தட்டிக் கேட்கத் திராணியற்ற ஸ்ரீலங்காவின் நீதி நிர்வாகம் !

ஸ்ரீலங்கா அமைச்சரான மேர்வின் டி சில்வா அடாவடித்தனத்துக்குப் பெயர் பெற்ற ஒரு நபராகி விட்டார், இவர் எது செய்தாலும் தட்டிக் கேட்க ஆள் இல்லை எனும் நிலையே உருவாகி விட்டது.

ஊடகவியலாளர்களைத் தாக்கியது முதற்கொண்டு கடையடைப்பு காடைத்தனம் செய்வது வரையான அனைத்து குற்றச் செயல்களுக்கும் மூல கர்த்தாவாக மேர்வின் டி சில்வாவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரின் குற்றச் செயல்கள் எல்லை மீறிச் சென்றதால் கொழும்பு நீதவான் நீதிமன்று, இவரைக் கைது செய்யுமாறு பணித்தது, உடனே காவற்துறை தனது கடமையைச் செய்யாமல் இழுத்தடிப்புச் செய்தது.

இந் நிலையில் இன்று சட்டத்தரணிகளுடன் நீதிமன்றம் வந்த மேர்வின் டி சில்வாவுக்கு, நீதவான் 50 000 ரூபாய் ரொக்கப் பிணையும், 500 000 ரூபாய் சரீரப் பிணையும் வழங்கி விடுவித்துள்ளது.

எல்லைமீறிச் செயற்படும் அமைச்சர்களை தட்டிக் கேட்க திராணியற்ற நிலையில் ஸ்ரீலங்கா நீதி நிர்வாகம் அமைந்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கமிழந்த ஸ்ரீலங்கா !

ஒலிம்பிக் போட்டிக்கென ஸ்ரீலங்காவில் இருந்து சென்ற எண்மரில் எவரும் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகாத நிலையில் நாடு திரும்பவுள்ளனர்.

குத்துச் சண்டை வீரர் அனுருத்த ரத்னாயக்க, பாரம் தூக்கும் வீரர் சிந்தன விதானகே, நீச்சல் வீரர் டானியல் லீ, துப்பாக்கி சுடும் வீரர் செனநாயக்க, பெட்மிண்டன் வீராங்கனை திலினி ஜயசிங்க, ஈட்டி எறியும் வீராங்கனை நதீகா லக்மாலி மற்றும் நீச்சல் வீராங்கனை மயூமி றஹிம் ஆகியோர் முதற் சுற்றுப் போட்டியுடனேயே தோல்வியுற்று வெளியேறினர். ஆனால் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதிப் போட்டியில் 22.98 வினாடிகளில் ஓடி ஏழாவது இடத்தைப் பிடித்ததால் தோல்வியுற்றார்.

ஜமைக்காவின் வெரோனிக்கா கம்பல் 200 மீற்றர் தூரத்தை 22.19 வினாடிகளில் ஓடி முதலிடத்தையும், ஜமைக்காவின் ஸ்டுவட் கரோன், அமெரிக்காவின் மூனா லீ ஆகிய இருவரும் 22.29 வினாடிகள் ஓடி இரண்டாம், மூன்றாம் இடங்களையும், பஹாமாசின் பெர்கியூசன் 22.51 வினாடிகள் ஓடி நான்காம் இடத்தையும் பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

2000 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கின் 200 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை ஸ்ரீலங்காவுக்குப் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 ஆகஸ்ட், 2008

வன்னி மக்களுக்கு கிழக்கு மாகாண சபையின் அவசர உதவி !

ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்றுவரும் யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னிப் பகுதி மக்களுக்கு அநர்த்த நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. இரா. துரைரெத்தினம், அம் மாகாணசபைக்குக் கோரிக்கை விடுத்ததன் பேரில் மனிதாபிமான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள கிழக்கு மாகாணசபை முடிவு செய்துள்ளது.

யுத்தத்தால் பாதிப்புற்று இடம்பெயர்ந்துள்ள 150 000 பேருக்கும் மேற்பட்ட வன்னி மக்களுக்குக் தேவையான அவசர உதவிகளையும், அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா மற்றும் இதர பொருட்களையும் அனுப்ப கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் சி. சந்திரகாந்தன் உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இத் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்கள்.

விரைவில் இம்மக்களுக்கான அவசர உதவிகளும், அத்தியாவசியப் பொருட்களும் போய்ச் சேருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

சிங்கையில் அதிக குழந்தைகளைப் பெற்றெடுங்கள் !

சிங்கை வாலிபப் பருவத்தினரை அதிகம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அந் நாட்டுப் பிரதமர் லீ ஹஸியன் லூங் கோரிக்கை விடுத்துள்ளார். சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 1.29 குழந்தைகள் ஆகும், ஆனால் சனத்தொகையின் சமநிலையைப் பேண வேண்டுமாயின் சிங்கப்பூர் பெண்ணின் சராசரி இனப்பெருக்க விகிதாசாரம் 2.1 குழந்தைகள் என்று மாற்றப்பட வேண்டும்.

சிங்கைப் பெண்கள் தொழிலிம் மட்டும் அதிகம் நாட்டம் காட்டாமல் திருமணத்திலும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிங்கைப் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சனி, 16 ஆகஸ்ட், 2008

அமிரைத் தமிழர் தலைவராக ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் !


விமானக் குண்டு வீச்சில் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 53 மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் கலந்து சிறப்புரையாற்றினார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பயங்கரவாதம் தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடாத்தி வருகின்றது, அறவழியில் போராடிய தமிழர் தலைவர்கள் இப் பயங்கரவாதத்துக்குப் பலியாகி உள்ளனர், 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டத்துக்கு எதிராக காலிமுகத் திடலில் அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய தமிழ் தலைவர்கள், தொண்டர்கள் தாக்கப்பட்டனர் என்றும் திரு.பா.நடேசன் சிறப்புரையில் குறிப்பிட்டிருந்தார்.

1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5ஆம்திகதி பதவியேற்ற பிரதமர் பண்டாரநாயக்கா "சிங்களம் மட்டும் மொழி" என்னும் மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த போது ஐக்கிய தேசியக் கட்சியும் இம் மசோதாவை ஆதரித்தது.

இம் மசோதாவை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் இன்னோரன்ன 300 பேர் நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அவ்விடத்துக்கு ஊர்வலமாக வந்த பிக்குகள் முன்னணியினர் சத்தியாக்கிரகத்தில் இருந்த தமிழர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்தியதுடன் சிலரைத் தூக்கி அருகில் இருந்த ஏரியில் வீசி தங்களது துவேசத்தை வெளிப்படுத்தினர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் யோகேஸ்வரன் போன்றோரையெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகள் நினைத்துப் பார்ப்பது ஆரோக்கியமான செய்தியாகவுள்ளது.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோர் 1989.ஆடி.13 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளாலே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, 1956 ஆனி 05 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தின் போது சிங்களக் காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் தலையிலுள்ள காயத்துடனேயே அன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பிரசன்னமாகி இருந்தார்.

இவர்களை 19 வருடங்களின் பின்னர் தமிழர்களின் தலைவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டமையானது வரவேற்கத்தக்கதே!

ஈபிடிபி உறுப்பினரின் கொலை !

கிழக்கிலங்கையின் மட்டு. நாவற்குடா மஞ்சம்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரிக்கு அருகாமையில் நேற்று காலை தினமுரசு பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈபிடிபி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான அப்பாஸ் எனப்படும் 28 வயதுடைய ஆறுமுகம் வரதராஜன் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது கொலை தொடராக பலதரப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளே இக் கொலையைச் செய்திருப்பதாக ஈபிடிபியினர் அவர்களின் "ஈபிடிபி நியூஸ்" ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கில் பிள்ளையான் குழுவுக்கும் ஈபிடிபிக்கும் தொடர் முறுகல் நிலை இருப்பதால் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலையாக இருக்கலாமென "நெருப்பு இணையத்தளம்" உறுதிப்படுத்தப்படாத செய்தியாக குறிப்பிடுள்ளது.

இவை அனைத்தையும் உற்று நோக்கும் போது ஏன் இப்படியான கொலைகள் தொடர்கின்றன, இதற்கு முற்றுப்புள்ளியே இல்லையா?
தமது கட்சி உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத நிலையில் இருக்கும் போது டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் இருப்புக்காக உயிரைக் காவு கொள்ளும் அரசியல் வியாபாரம் செய்வத் துணிவது ஏன் என்பது தெரியாமல் உள்ளது.

கிழக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் அரசாங்கத்தினதும் பிள்ளையான் குழுவினதும் பொறுப்பில் இருக்கின்றது என்றெல்லாம் பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் அல்லது கிழக்கு மாகாண அரசு இக் கொலைதாரியை கைது செய்யாமைக்கான காரணம் என்ன?

இராணுவ சோதனைச் சாவடியில் இருந்து 200 மீற்றர் தூரத்திலே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஸ்ரீலங்கா படையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு குறைவே!

எது எப்படி இருப்பினும், தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்படியான தொடர் கொலைகளினால் எஞ்சப் போவது சுடலைகளும், மண்டையோடுகளுமே!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

செஞ்சோலையில் மரிந்த மாணவிகளின் சிரார்த்ததினம்


இரண்டு வருடங்களின் முன்னர் முல்லைத்தீவில் உள்ள வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மீது ஸ்ரீலங்காவின் விமானப் படையினரின் 4 விமானங்கள் 16 குண்டுகளை வீசி தாக்குதலை நடாத்தியதில் கொல்லப்பட்ட மாணவிகளின் 2 ஆம் ஆண்டு சிராத்ததினம் நேற்று முல்லைத்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் இந் நிகழ்வில் ஒன்றாக கலந்து சோகத்தை வெளிப்படுத்திய விதம் எல்லோரினதும் மனதைக் கலங்க வைத்து விட்டது.

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்ற தயாராக இருந்த மாணவிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தகால முதலுதவி பயிற்சிக்கு வருமாறு அழைத்ததுக்கிணங்க, விரும்பியும் விரும்பாமலும் கலந்து கொண்ட மாணவிகளே கொல்லப்பட்டவர்களாவர்.

2008.08.14 ஆம் திகதி அதிகாலை செஞ்சோலை பாசறையில் பயிற்சிக்காகக் காத்திருந்த 53 மாணவிகள் உட்பட 62 பேர் கொல்லப்பட்ட கொடூரம் மனதை உருக்கக் கூடியதாகும்.

செஞ்சோலையில் வாழ்ந்த ஆதரவற்ற குழந்தைகளே இதில் கொல்லப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின, இதனையே தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆமோதித்தனர், மறுநாள் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பத்து நாட்களின் பின் நடக்கவிருக்கும் உயர்தரப் பரீட்சைக்காகக் காத்திருக்கும் மாணவிகள் என்பதும் இவர்களை விடுதலைப் புலிகளே பயிற்சிக்கு வருமாறு அழைத்திருந்தனர் எனும் செய்திகளும் கூடவே கசிந்தன.

யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விடுதலைப் புலிகளையே குண்டு வீசி அழித்ததாக ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மனித ஜீவன்கள் என்பதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

புதன், 13 ஆகஸ்ட், 2008

இனச்சுத்திகரிப்பின் நினைவாக நினைவுத் தூபி

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 ஆம் திகதி ஸ்ரீலங்கா படையினராலும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளினாலும் 200 பேருக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், இச் செய்தி அரசினால் திட்டமிட்டு ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் எனக் காரணம் காட்டி திட்டமிட்டு அம்பாறை மாவட்டத்தில் இனச் சுத்திகரிப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்டது.

அம்பாறையில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும், அம்பாறைக்கு அருகில் இருந்த வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, மற்றும் வீரச்சோலை கிராமத்தவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் உடுத்த உடையுடன் அகதிகளாக வீரமுனைக்கு ஓடி வந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கினர்.

இங்கு தமிழர்களுக்கான சுத்திகரிப்பை அரங்கேற்ற ஸ்ரீலங்கா படையினரும், சம்மாந்துறை முஸ்லிம் இனவாதிகளும் இணைந்து பாடசாலையிலும் ஆலயத்திலும் தங்கியிருந்த அகதிகளை கண்டபடி கோடரி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், துப்பாக்கிப் பிரயோகமும் செய்து கொலை செய்தனர்.

இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப், திஹாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தயாரட்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.திவ்வியநாதன் போன்றோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலைவெறித் தாக்குதலுக்குப் பலியான 200 பேருக்கும் மேற்பட்ட குழந்தைகள், தாய்மார்கள்,ஆடவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்களை நினைவு கூர்ந்து 18 ஆம் சிரார்த்த தினமும், நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நினைவுத் தூபியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. இனியபாரதி திறந்து வைத்தார்.

மீண்டும் இக் கிராமங்களில் இனச்சுத்திகரிப்பின் பேரால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமலும், ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னமான நினைவுத் தூபி சிதையாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கருணா அம்மானிடம் கேளுங்கள் !

ஸ்ரீலங்காவின் ஊடகமான "டெய்லி மிரர்" ஆங்கில பத்திரிகையின் மூலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரனிடம் மக்கள் திறந்த வினாக்களை தொடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வினா தொடுக்க விரும்புவோர்
இச் சுட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

மனதினுள்ளே கம்பளிப்பூச்சியாய் அரித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரம் கேள்விகளை, கேணல் கருணாவிடம் கேட்க சந்தற்பம் இல்லையே என்றெல்லாம் சிந்தித்திருப்போருக்கு ஆங்கில ஊடகம் சந்தற்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மொழியில் இப்படியான ஒரு தளத்தை தமிழ் பத்திரிகைகள் ஆரம்பிக்கவில்லையே எனும் ஆதங்கம் இருந்தாலும் கூட, அண்மையில் அதிரடி.கோம் வினாக்களைக் கேட்டு பதில் தந்திருந்தமை குறிப்பிட வேண்டியதுவே!

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

பிரபாகரனைக் கேலி செய்த கருணா - ஓர் ஆய்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய தளபதியும், தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா ஸ்ரீலங்காவின் சிங்களப் பத்திரிகைகளின் ஒன்றான "லக்விம"வுக்கு செவ்வி வழங்கியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர், சாவுக்குப் பயந்தவரென குறிப்பிட்டதனை எடுத்து நோக்கினால், இந்த உலகில் உயிரின் மேல் ஆசை இல்லாதவர்கள் எவருமிலர், அதற்கு பிரபாகரன் விதிவிலக்கானவரில்லை, ஆனால் அவர் சாவுக்குப் பயந்தவரென குறிப்பிடுவது பொருத்தமானதாக தெரியவில்லை. அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை முனைப்படையச் செய்வதற்காக பல களங்களைக் கண்டவர், எதிரியை துரத்தித் துரத்திப் போர் புரிந்தவர், இன்றைய அவரது வயதானது வன்முறைப் போராட்ட சிந்தனையில் இருந்து வழுவிக் கொண்டிருக்கின்றது என்பது நிஜம் தான்.

ஆனால் பிரபாகரனைப் பற்றி விமர்சிப்பதற்கு கருணாவுக்கு தகுதி இருக்கின்றதா என்பதனை கவனத்தில் எடுக்க வேண்டும், அத்தோடு கருணாவும் தன்னை சுயவிமர்சனம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய நிலையில் கருணாவுக்கு உயிரில் ஆசையில்லையா?, சாவுக்குப் பயந்தவரில்லையா? இயக்கத்தவர்களின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளாமல் ஸ்ரீலங்கா படையினரின் பாதுகாப்பை மாத்திரமே நம்பி வாழ்வதன் மர்மம் என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே பதில் உயிரின் மேலுள்ள ஆசையே ஆகும்.

கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த கடைசி தருணத்தில் பணப் பொதிகளை பிக்கப் வாகனத்தில் ஏற்றும் போது மூலை கிழிந்து அதனுள் இருந்த பணம் வெளியே தெரிந்ததை அவரது வாகன சாரதி கண்டு விட்டார், எனும் காரணத்தினால் அந்த அப்பாவிச் சாரதிக்கு குளிர்பானத்தினுள் விசம் கலந்து குடிக்கக் கொடுத்துக் கொல்லவில்லையா? ஏன்! இச் செய்தி பரவினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமே எனும் பயமே!

இந்திய அமைதி காக்கும் படையினர் ஸ்ரீலங்காவில் தங்கி இருந்த காலத்தில் அவர்களின் எடுபிடிகளாக இருந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஏதுமறியாத அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் பலோத்காரமாகப் பிடித்து தமிழ் தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்கள், இந்திய இராணுவமும் அவர்களது எடுபிடி இயக்கங்களும் இந்தியாவுக்குத் திரும்பி ஓடிய போது இந்த தமிழ் தேசிய இராணுவத்தினரை நிர்க்கதியான நிலையில் விட்டுச் சென்றார்கள், கிழக்கில் கருணாவின் தலைமையில் இருந்த தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அவர்களைக் கைது செய்தார்கள், கஞ்சிகுடியாறு காட்டுப் பகுதிக்கு அணி அணியாக கைகள் கட்டப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அனைவரும் என்னவானார்கள் என்பது அந்தப் பகுதி மக்களுக்கு மாத்திரம் தெரியும், அனைவரும் வரிசையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பதுவே உண்மையானது.

அன்று மாற்றுக் கருத்துக் கொண்ட இயக்கத்தினரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவம் தேவையற்றதென்றும், அப்பாவி மக்களைக் கடத்திச் சென்று இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு செய்கின்றார்கள் என்றெல்லாம் கூக்குரலிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் கருணாவும், இன்று அப்பாவிகளைக் கடத்தி இயக்கத்துக்குச் சேர்த்து ஆயுதப் பயிற்சி செய்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா?

பல சகோதரக் கொலைகளை நடாத்தி முடித்த கருணா இப்போது எதுவும் தெரியாத அப்பாவி மாதிரி பாசாங்கு செய்வதால் புனிதனாகி விட முடியாது, துரதிஸ்டம் அவரது கட்சியே அவரைத் தூக்கி எறிந்து விட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தாபகர் கருணா இப்போது பிள்ளையானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சுயமாக எதனையும் செயற்படுத்த முடியாமல் திண்டாடுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது, உயிரின் மேலுள்ள ஆசையே பிரித்தானியாவுக்கு ஓட வைத்தது, ஆனால் அங்கும் நிம்மதியாக இருக்க முடியாமல் சிறைவாசம் அனுபவித்து ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டு ஸ்ரீலங்கா திரும்பி ஸ்ரீலங்கா படைகளின் பாதுகாப்பில் இருந்து கொண்டு மீண்டும் காட்டிக் கொடுப்பையும், தமிழின அழிப்பையும் செய்து வரும் கருணா எப்படி பிரபாகரனை மாத்திரம் குற்றம் சாட்ட முடியும், தயவு செய்து சுய விமர்சனம் செய்து பாருங்கள்.

கருணா கடந்த வாரம் மட்டக்களப்புக்குச் சென்ற போது, அங்கு பொது மக்கள் சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டு அதிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது, இந்த சுத்திகரிப்பு எதற்காக ஏன் இவ்வளவு பயம். மக்களுக்குச் சேவை செய்யப் புறப்பட்ட உங்களுக்கு ஏன் பயம், உங்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கின்றது தானே, சாவுக்குப் பயந்து தானே வாழ்கின்றீர்கள்!

லக்விம செய்தியின் தமிழாக்கம்:
பிரபாகரன் உயிரின் மேல் ஆசையுள்ளவர் சாவுக்கு பயந்த கோழை.புலி உறுப்பினர்கள் அரச படையினரிடம் சரணடையவேண்டும்.- கருணா அம்மான் கோரிக்கை


யாராகினும் பிரபாகரனை உயிருடன் பிடிக்க முடியாது எனக்கூறினால் அது முற்றிலும் தவறானதாகும் அவர் தனது உயிரின் மேல் அபார ஆசை கொண்டவர், சாவுக்கு பயந்த கோழை அதனாலேயே தன்னை சூழ பலரையும் வைத்துக்கொண்டுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலை முன்னனி தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஒருபோதும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை புலிகளால் காப்பாற்றிக்கொள்ள முடியாது எனவும் பிரபாகரன் இந்தோனேசியா அல்லது காம்போடியாவிற்கு பாய்ந்து செல்ல ஏற்பாடுகள் நடப்பதாக தனக்கு செய்திகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது இறுதி போராட்டத்தின் போது புலிகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கக் கூடும் எனவும், தான் புலிகளோடு இருந்தபோது இராசயன ஆயுதங்கள் பல இருந்ததாகவும் இதுவரை புலிகள் அவற்றைப் பயன்படுத்தவில்லை எனவும் லக்பிம ஊடகவிலயலாளரை சந்தித்து பேசிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


புலிகளின் இரண்டாம், மூன்றாம் நிலை சிறந்த தலைவர்களை இழந்துள்ளமையால் அரசின் தொடர் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் வடக்கில் பல சமர்களில் தோல்விகண்டு வருகிறது எனவும் இவர்கள் படையினரின் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

பித்துபிடித்துப் போயுள்ள பிரபாகரனின் அறிவுரைகளை கேளாமல் அரச படையினரிடம் சரணடைந்து விடுமாறு புலி உறுப்பினர்களை தான் கேட்டுக்கொள்வதாக கருணா கூறியுள்ளார்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெற்ற முதல் பத்து நாடுகள்


நன்றி வீரகேசரி

86 மனைவியருடனும் 170 குழந்தைகளுடனும் வாழும் முஸ்லிம் மத போதகர் !

"நைஜீரியாவைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகரான 84 வயதுடைய முகமட் பெல்லோ அபூபக்கர் 86 பெண்களைத் திருமணம் செய்து 170க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது, நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்" என உபதேசம் செய்கின்றார் முகமட் பெல்லோ.

நீடூழி வாழ்க முகமட் பெல்லோ.

ஊடகவியலாளர் சிவராமின் பிறந்தநாள் !

2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா தலைநகரில் வைத்துக் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் சிவராம் அவர்களின் 49 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

தமிழ் மக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் சிவராமும் ஒருவர், காலத்தின் கோலத்தால் போராட புறப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களுக்குள்ளேயே சகோதரப் படுகொலைக் கலாசாரம் துளிர் விடத் தொடங்கியதும், ஈழமெனும் இலட்சியப் போராட்டம் சிதைவுற்றுவிட்டது என்பதை உணர்ந்த சிவராம் ஜனநாயக வழியான போராட்டத்துக்கு ஆதரவு காட்டியதுடன் பத்திரிகையூடாக தமிழ் மக்களின் இன்னல்களை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்ட அரும்பாடுபட்டார்.

சிவராமின் பல கட்டுரைகள் உரத்துப் பேசப்பட்ட சந்தற்பங்கள் ஏராளம், அவரின் கட்டுரைகள் மக்களிடையே ஆட்சிமை செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆயுததாரிகள் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தனர்.

பாராளுமன்றமுள்ள பத்தரமுல்ல பகுதியில் கொலை செய்து வீசப்பட்ட தமிழ் மக்களின் குரலாக ஒலித்த தேசிய ஊடகவியலாளன் சிவராமின் குரல் மறக்கக் கூடிய ஒன்றல்ல.


03.10.2004 வீரகேசரி வாரவெளியீட்டுக்காக சிவராம் எழுதிய கட்டுரை :
http://epaper.virakesari.lk/Default.aspx?selpg=655&selDt=08/10/2008&BMode=100

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த பதக்க விபரம்

ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவின் பாரம் தூக்கும் போட்டியில் சீனா வீராங்கனையான சென் சியக்ஸியா 212 கிலோ நிறை தூக்கி தங்கப் பதக்கம் பெற்று ஒலிம்பிக் சாதனை ஏற்படுத்தியுள்ளார்.



துருக்கி வீராங்கனை சிபெல் ஒஸ்கான் 199 கிலோ நிறை தூக்கி வெள்ளிப் பதக்கத்தையும், சீன தாய்பேயைச் சேர்ந்த வீராங்கனை சென் வீ லிங் 196 கிலோ நிறை தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் பெற்று போட்டியைச் சிறப்பித்தார்கள்.



...



நேற்றைய பதக்க விபரங்கள்:

நாடு-----------தங்கம்--------------வெள்ளி-----------வெண்கலம்--

சீனா-------------2--------------------0-------------------0------
செக்.குடியரசு---1--------------------0-------------------0------
உருஷ்யா--------0---------------------1-------------------0------
தென்கொரியா---0--------------------1-------------------0------
துருக்கி-----------0--------------------1-------------------0------
தாய்பே-----------0--------------------0-------------------1------
குரோஷியா-------0--------------------0-------------------1------
வடகொரியா------0--------------------0-------------------1------

08.08.08, 08:08 , 08இறா.08 அவு. இருமகவுகள் அவதரிப்பு


அமெரிக்காவின் மாநிலங்களான அயோவா மற்றும் மின்னே சொட்டா வில் 08.08.08ஆம் திகதி, 08:08 மணிக்கு 08 இறாத்தல் 08 அவுன்ஸ் நிறையுடைய ஸாண்டர் ஹோய் நினிக்கர், நெய்லி ஜோ ஹொவர் எனும் பெயருடைய இரு குழந்தைகள் பிறந்துள்ளன.

முதலாவது தங்கப் பதக்கமும் ஒலிம்பிக் சாதனையும் !

சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற 10 மீற்றர் துப்பாக்கி சுடும் போட்டியில் 503.5 புள்ளிகளைப் பெற்று ஒலிம்பிக் சாதனையையும் அத்துடன் முதலாவது தங்கப் பதக்கத்தை செக்.குடியரசு வீராங்கனை கத்தரினா எமோன்ஸ் பெற்றார்.

இப்போட்டியில் உருஷ்யாவைச் சேர்ந்த லியோபோவ் கல்கினோ வெள்ளிப் பதக்கத்தினையும், குரேஷியா வீராங்கனையான சன்ஜிஸானா பென்ஜிக் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

நடப்புச் சம்பியனாக இருந்து வந்த டூ லீயால் சீனாவுக்கு தங்கப் பதக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியவில்லை.

2004 ஆம் ஆண்டு எதென்ஸ்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சந்தித்த அமெரிக்க துப்பாக்கி சுடும் வீரரை வீராங்கனை கத்தரினா எமோன்ஸ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜெக்ஸ் ரொக்கி 2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் முதலாவது தங்கப் பதக்கத்தை கத்தரினா எமோன்ஸுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

சனி, 9 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் பெறுவது யார் ?

08.08.'08, 08:08 இரவு மணிக்கு ஆரம்பமான ஒலிம்பிக் போட்டியில் 302 பதக்கங்களை வெற்றி கொள்வோர் யாரென்பதை சர்வதேசம் கவனித்து வருகின்றது, அதிலும் முதல் பதக்கத்தைப் பெற்று பெயர் பதிக்க வேண்டுமென்பதில் சீனா மிகவும் கவனமாக இருக்கின்றது.

துப்பாக்கி சுடுதல் போட்டியிற்கான பதக்கமே முதலில் வழங்கப்படவுள்ளது, கடந்த எதேன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற டூ லீ, இம்முறையும் 10 மீற்றர் வாயு துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஏதாவது இடையூறு ஏற்படின் அடுத்ததாகவுள்ள சீன வீராங்கனை நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தப் போட்டியில் சீனா தங்கப் பதக்கத்தினைப் பெறத் தவறினால் இதற்கான பரிசளிப்பை ஒத்திபோட சீனா நினைத்துள்ளது. இதனால் இவ்வேளையில் பாரம் தூக்கும் போட்டிக்கு வழங்கப்படும் முதல் தங்கப் பதக்கத்தை சென்ஜியாஜியா சீனாவுக்குப் பெற்றுக் கொடுப்பார் என எதிப்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவின் வியாக்கியானம்

ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தினை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது சம்பந்தமான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் 77 மேலதிக வாக்குகள் கிடைத்ததால் அவசரகால சட்டம் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது, வழமையாக இப் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்து வருவது தெரிந்ததே!

இம்முறை அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுத் தலைவர் இரா சம்பந்தன் கோரினார், இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 84 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன.

பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்துடன் இணைந்து ஜேவிபியினரும், எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாக்களித்திருந்தனர். ஐ.தே.கட்சியினரும், முஸ்லிம் காங்கிரஸும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஆதரவைக் கொடுத்து வருவது தெரிந்ததே, இந் நிலையில் இவர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பி யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவும் இணைந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவ்விடயம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடையே ஒத்த கருத்தில்லை என்பதனை எடுத்துக் காட்டுவதுடன், எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்துடன் சேரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் என்.ஸ்ரீகாந்தா எச்சரிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படலாம், அல்லது ஸ்ரீகாந்தா இல்லாமல் ஆக்கப்படலாம் என்பதை உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அவசர அவசரமாக நேற்று பாராளுமன்றத்தில் அதற்கான வியாக்கியானம் செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா அரசாங்கத்துடன் இணைவாரா அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விடுதலைப் புலிகளினால் நீக்கப்படுவாரா இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவாரா எதிர்காலம் பதில் சொல்லும்.


எனது அரசியல் நோக்கத்தை தடை செய்வதற்கோ அல்லது என்மீது சேறு பூசுவதற்கோ எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை.
- சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. தெரிவிப்பு

வீரகேசரியில் வெளியான செய்தியினால் நான் மனவருத்தத்திற்குள்ளாகியுள்ளேன். அந்த செய்தியில் பல முக்கிய விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா சபையில் தெரிவித்தார்.நேற்று சபையில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றினை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: 07.08.2008 அன்று வீரகேசரி செய்தித் தாளின் முதல் பக்கத்தில் எனது பெயர் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சில முக்கியமான விடயங்கள் உண்மைக்கு புறம்பானது. இதனால், நான் மனவருத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். அத்துடன், 06.08.2008 நடைபெற்ற கடல் தீழ்ப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது நான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமை தொடர்பிலும் செய்திகள் பிரசுரமாகியிருந்தன.

அவசரகால சட்டம் மீதான விவாதத்தின்போது நான் பிற்பகல் 4 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே சபைக்குள் பிரவேசித்தேன். அதன்போது வேறு சிலர் கட்சியின் சார்பில் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அன்று எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தமையினால் சபைக்கு பிற்பகல் வேளையிலேயே வருகை தருவேன் என்று கட்சியின் பிரதம கொறடாவான செல்வம் அடைக்கல நாதன் எம்.பி.க்கு அறிவித்தேன்.

பாராளுமன்றத்திற்கு நான், அன்று பிற்பகல் வேளையில் வருகை தருகின்றபோது எனது கையடக்க தொலைபேசி மூலமாக கட்சியின் பிரதம கொறடாவான செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் நேரத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக சபைக்குள் பிரவேசித்த நான், விவாதத்தை சில நிமிடங்கள் அவதானித்து விட்டு 06.08.2008 அன்று தினக்குரல் பத்திரிகையில் எனது பெயர் தொடர்பில் வெளியான செய்தி குறித்து தினக்குரல் பத்திரிகையின் பாராளுமன்ற செய்தி அறிக்கையாளரிடம் சில விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக பார்வையாளர் கலரிக்கு சென்று விட்டேன்.

கடல் தீழ்ப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது நான் நடுநிலை வகித்ததாக வெளியான செய்தி தொடர்பில் வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு எனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியதுடன், வீரகேசரி ஆசிரியர் பீடத்திற்கு விளக்கமளித்து தொலைநகலை அனுப்பினேன். எனினும், இது தொடர்பில் பாராளுமன்ற செய்தி அறிக்கையாளரிடம் விளக்கமளிக்குமாறு தினக்குரல் பத்திரிகை ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே நான் பார்வையாளர் கலரிக்கு சென்றேன். எனினும், கடல் தீழ்ப்பு பிரேரணையை எதிர்ப்பது தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் கட்சியினால் எடுக்கப்படவில்லை. எனினும், சக நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரியபோது ஆச்சரியம் அடைந்தேன். கடல் தீழ்ப்பு சட்டமூலம் பொதுவான சட்டம் என்பதனால் அதனை எதிர்ப்பதற்கு கட்சி முடிவெடுக்கவில்லை. எனது அவசர சிந்திப்பிற்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்தேன். இந்நிலையில் தினக்குரல் பத்திரிகைக்கு விளக்கமளிப்பதற்காக செய்தி அறிக்கையாளர்களின் அறையிலிருந்து எனது விளக்கத்தை எழுதிக் கொண்டிருந்தேன். அதற்குப் பின்னர் எழுந்து வருகின்ற பொழுது அங்கு காவலில் நின்ற பொலிஸாரிடம் நேரத்தை கேட்டு விட்டு சபைக்கு ஓடோடி வந்தேன். அப்பொழுது சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில், அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பின்போது நான் கலந்துகொள்ள முடியாமல் போனமைக்கான காரணத்தை சகல பாராளுமன்ற நண்பர்களுக்கும் விளக்கமளித்தேன். பின்னர் எனது மேசையிலிருந்து நாட்குறிப்பு, பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு வெளியே செல்வதற்கு முன்னர் கட்சித் தலைவர் சம்பந்தனிடம் என்னுடைய விளக்கத்தை எடுத்துக் கூறினேன். அப்பொழுது கோரம் கேட்கவில்லையா? என்று கேட்ட அவர், 4.30 மணிக்கு முன்னரே வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது என்றும் பிரேரணை மீது பதிலளித்து உரையாற்றுகின்ற அமைச்சர் தனக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்திற்கு ?ன்னதாக உரையை முடித்துக் கொண்டால் வாக்கெடுப்பு குறித்த நேரத்திற்கு முன்பதாகவே நடைபெறும் என்றும் எனக்கு தெளிவுபடுத்தினார்.

வீரகேசரி பத்திரிகையில் 07.08.2008ஆம் ஆண்டு முதல் பக்கத்தில் வெளியான செய்தி தொடர்பில் அந்த பாராளுமன்ற செய்தி அறிக்கையாளருக்கும் செய்திக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதை நான் அறிவேன். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி சேறு பூசும் நோக்குடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதாக காட்டுவதற்காகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். இதில் வெளியாரின் தலையீடு நிச்சயமாக இருக்கின்றது. இந்த நடவடிக்கை எனது அரசியல் நடவடிக்கைகளை சிறுமைப்படுத்துவதற்கான செயற்பாடாகும். வெளியார் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியாகியிருக்கின்றது. எனது அரசியல் நோக்கத்தை தடை செய்வதற்கோ அல்லது சேறு பூசுவதற்கோ எடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதன்போது, சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் இரா. சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவின் சிறப்புரிமை தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், உறுப்பினர்களின் சிறப்புரிமை குறித்து விசாரிக்கும் பாராளுமன்ற குழுவின் கவனத்திற்கும் கொண்டுவருவதாக தெரிவித்தார்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

கிழக்கிலங்கையில் ஓர் முனிவர்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு பிரதேசத்தில் தாந்தாமலை எனுமிடத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் முத்தையா முனிவர் என்றொரு மனிதர் வாழ்கின்றார்.

அதிகாலை 5 மணிக்கு வடக்குத் திசையாக மடிகாலில் அமர்ந்திருந்து கடவுளைப் பூஜிப்பதே இவரின் பூஜை முறையாகும்.

இல்லற வாழ்வை முடித்த பின்பு துறவறத்தினை மேற் கொண்டிருக்கும் முத்தையா முனிவர், தவம் இருந்த காலத்தில் எவ்வித ஆகாரமும் அருந்தாமல் இருந்ததாகவும், தவத்தினை முடித்த பின்னர் நீரே இவரின் உணவாக இருந்ததாகவும், இப்போது பாலை மாத்திரமே உணவாக உட்கொள்வதாக அவரே கூறியுள்ளார்.


பாம்பு வடிவ நீண்ட ஜடாமுடியும், அழுக்கான கந்தல் உடையொன்றை மாத்திரம் கீழ் வஸ்த்திரமாகவும் அணிந்துள்ள முத்தையா முனிவர் நீராடுவதே இல்லையாம், ஆனால் இவரிடம் எவ்வித கெட்ட துர்வாடையும் வீசுவதில்லையென இவரின் சீடர்கள் கூறுகின்றார்கள்.

முருகக் கடவுளை மாத்திரம் வழிபட்டால் போதும் எனக் கூறும் முனிவர் இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு முறைமையையும் இணைத்திருப்பது தெரிகின்றது.




இவருக்குப் பின்னால் பக்தர்களெனப் பலர் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. எது எப்படியோ முத்தையா முனிவரின் போதனைகள் ஆய்வுக்கு உரியவையே.

முத்தையா முனிவரைப் பற்றிய மேலதிக தகவலுக்கு:
http://munivar.karaitivu.org/

நல்லூர் கந்தனும் செல்லப்பா சுவாமிகளும் !

நல்லூர் தேரடியில் அமர்ந்திருந்து செல்லப்பா சுவாமிகள் உபதேசித்த எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை, யாமறியோம், முழுதும் உண்மை போன்ற நல்வாக்கியங்கள் மனிதன் உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும்.



நல்லூர் கந்தன் ஆலயக் கொடியேற்றம் எனும் செய்தி கேட்டதும் செல்லப்பா சுவாமிகளும் யோக சுவாமிகளும் நினைவில் வந்து அவர் போதித்த மகா வாக்கியங்கள் நினைவூட்டிச் செல்லும்.

சீனப் பெருஞ் சுவரில் ஒலிம்பிக் தீபம்


நேற்று சீனப் பெருஞ்சுவரின் மேல் ஒலிம்பிக் தீபம் கொண்டு செல்லப்பட்ட போது காணப்பட்ட அழகுக் கோலம்.

ஒலிம்பிக் வெற்றிக் கிண்ணத்தை பெறச் செல்லும் இலங்கை வீரர்கள்


சீனா - பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீலங்காவில் இருந்து செல்லும் விளையாட்டு வீர வீராங்கனைகள் :
1. மயூமி ரஹீம் - பெண்களுக்கான - நீச்சல் - 100 மீ.
2. சிந்தன விதானகே - ஆண்களுக்கான பாரம் தூக்குதல் - 69 கி.கி.
3. டானியல் லீ - ஆண்களுக்கான நீச்சல் - 50 மீ.
4. எதிரிசிங்க எம்.சேனாநாயக்க - ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் - 10 மீ.,50மீ.
5. சுசந்திகா ஜயசிங்க - பெண்களுக்கான தடகளப்போட்டி - 100 மீ, 200 மீ.
6. அனுருத்த ரத்னாயக்க - ஆண்களுக்கான குத்துச்சண்டை - பைலைவெயட் 51 கி.கிராம்.
7. நதீகா லக்மாலி - பெண்களுக்கான தடகளப்போட்டி - ஈட்டி எறிதல்.
8. திலினி ஜயசிங்க - பெண்களுக்கான ஒற்றையர் - பெற்மிண்டன்.

இதில் எத்தனை பேர் பதக்கங்களுடன் நாடு திரும்புவார்களோ தெரியவில்லை.

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் திருவிழா 08.08.08 இரவு 08.08 மணிக்கு ஆரம்பம்

ஒலிம்பிக் திருவிழா நாளை 08.08.08 சீனாவின் நேரப்படி இரவு 08.08 மணிக்கு தலைநகர் பீஜிங்கில் 4 மணித்தியாலத்துக்கும் மேலான கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடனும், 200 க்கும் அதிகமான நாடுகளின் வீர வீராங்கனைகளின் அணிவகுப்புடன் தொடக்க விழா ஆரம்பமாகி 24.08.08 வரை 17 நாட்கள் நடைபெறும்.

"குருவிக்கூடு" என வர்ணிக்கப்படும் பீஜிங்க் தேசிய விளையாட்டு மைதானம் 91,000 பேர் அமரக்கூடிய ஆசனங்களை கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பிரான்சு அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி உட்பட 101 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். கனடா, ஜேர்மன் நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி கடந்த 2004 ஆம் ஆண்டு கிரீஸின் தலைநகர் எதேன்ஸில் இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக் கழக மீது பாலியல் வல்லுறவு


கொழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் மாணவியை அவ்வளாகத்தினுள்ளேயே வைத்து பல்கலைக் கழக ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளான இரு மார்ஷல்கள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

இவ்வல்லுறவு விடயமாக பல்கலைக் கழகம் போதிய விசாரணை நடாத்தவில்லை எனும் காரணத்தைக் காட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் விசாரணைக் குழுவிடம் கருத்து தெரிவிக்கும் போது ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்தால்.......... பயிரைக் காப்பது யார்?

ஸ்ரீலங்கன் எயார் விமானத்தைச் செலுத்திய போலி விமானி

போலி விமானியொருவர் "ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்" விமானத்தைச் செலுத்தி உலகிலுள்ள பெரிய விமான நிலையங்களில் தரை இக்கியதுடன், 340 ஏ தரமுடைய மிகப் பெரிய விமானங்களையும் செலுத்தியுள்ளார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜெராட் டெஸ்மன் என்பவர் முன்பு விமானியாக பதவி வகித்ததாக கருதப்படும் போலிச் சான்றிதழ்களை ஸ்ரீலங்கா விமான அதிகார சபைக்குச் சமர்ப்பித்து "ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ்" நிறுவனத்தின் தலைமை விமானியாக பொறுபேற்றுள்ளார்.

போலி ஆவணங்களின் மூலம் விமானியான விடயம் கண்டு பிடிக்கப்பட்டதால் ஜெராட் டெஸ்மன் தண்டனைக்கு ஆளாகியுள்ளார்.

விமானப் பயணிகளுக்கு ஏற்படவிருந்த பலத்த அநர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது, உண்மையை கண்டறியாமல் போலிகளுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்ரீலங்காவின் அசமந்தப்போக்கை "களத்துமேடு" கண்டிக்கின்றது.

புதன், 6 ஆகஸ்ட், 2008

ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கையும் களம் இறங்குகின்றது

முதற் தடவையாக ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் ஸ்ரீலங்கா களம் இறங்குகின்றது.


40 வருட போட்டிகளில் இவ்வருடமே ஸ்ரீலங்காவின் சார்பாக அனுருத்த ரத்னாயக்க குத்துச் சண்டை போடவிருக்கின்றார்.


இலங்கைக்கென பதக்கம் பெறவிருக்கும் அனுருத்த ரத்னாயக்காவுக்கு வாழ்த்துக்கள்!

வீரகேசரிக்குப் பிறந்தநாள்


78 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் வீரகேசரி நாளிதழுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஆங்கிலேயரின் ஆட்சியில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை வெளிக் கொணரும் நோக்கில் தென்னிந்திய பத்திரிகை ஆர்வலர் சுப்பிரமணிய செட்டியார் அவர்களால் 1930.08.06 ஆம் நாள் வீரகேசரி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொழும்பு கிராண்பாஸில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஸ்ரீலங்காவின் தேசிய ஊடகமான வீரகேசரி நடுநிலைக் கருத்துக்களில் இருந்து வழுவாமல் பரிணமிக்க வாழ்த்துக்கள்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரர்களுக்கும் சரத்பொன்சேகாவுக்கும் எதிராக அமெரிக்காவில் விசாரணை?

ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்து தமிழர்களுக்கு சொல்லொண்ணா துயரங்களைக் கொடுத்து வரும் அமெரிக்க குடியுரிமையுள்ள கோத்தபாய ராஜபக்ஷ், பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ் மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக அமெரிக்க குடிமக்கள் எனும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் "இனச் சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு கலிபோனியாவில் டிமாஸ் எனுமிடத்தில் வீடும், பஸில் ராஜபக்ஷ்வுக்கு கலிபோனியாவில் பொண்டோனா எனுமிடத்தில் வீடும் உள்ளது, அத்துடன் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்க வதிவிட தகைமையுடைய "கிறீன் கார்ட்" இருப்பதுடன் ஒக்கலாமா எனுமிடத்தில் வீடும் உள்ளது.

போர்க் குற்றங்களைப் புரியும் அமெரிக்கர்களையும்,அமெரிக்க குடிமக்கள் அல்லாதவரையும் அமெரிக்கச் சட்டம் கடுமையாகத் தண்டிக்க கூடியது என்பதால், அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தலைமையில் "இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு" நடவடிக்கை எடுக்கவுள்ளது.

ஊடகவியலாளர் சரிநிகர் சரவணன் தாக்கப்பட்டார் !


ஸ்ரீலங்காவின் தலைநகரில் இருந்து 1992 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிந்த "சரிநிகர்" எனும் நடுநிலைப் பத்திரிகைக் குழுமத்தின் உறுப்பினராகவும், "உயிர்ப்பு" சஞ்சிகை குழுமத்தின் உறுப்பினருமாக இருந்த ஊடகவியலாளர் நடராஜா சரவணனை நோர்வேயின் ஒஸ்லோவில் வைத்து இன்னுமொரு தமிழரான பத்மநாதன் குட்டி என்பவர் மதுப் போத்தலினால் கன்னத்தில் தாக்கியுள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் திகதி கன்னத்தில் பலத்த காயத்துக்குள்ளான சரவணன் ஒஸ்லோ மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சரவணன் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் நோர்வே வெளிநாட்டு ஊடக அமைப்பின் உறுப்பினராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவில் ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அதேபோல் நோர்வேயிலுமா?

சார்க் மாநாட்டில் அரச தலைவர்களின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்


சார்க் மாநாட்டு வேளையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வுக்கும் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பையடுத்து தங்குவிடுதிக்குச் செல்ல மன்மோகன் சிங் வந்த போது அவரது காருக்கு பாதுகாப்பளிக்க வந்த பாதுகாவலர்கள் காணப்படவில்லை, இதனால் இந்திய பாதுகாவலர்களினாலேயே காரைச் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

...

...

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கே.என்.நாராயணன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் முதல் நாள் அமர்வில் கலந்து விட்டு தங்குவிடுதிக்குத் திரும்பவென மாநாட்டு மண்டபத்தின் பிரதான வாயிலுக்குச் சென்ற போது அவருக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக காரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அங்கு காணப்படவில்லை, அங்கு நீண்ட நேரம் காத்து நின்ற நாராயணன் இறுதியில் காரொன்றை வாடகைக்கு அமர்த்தி விடுதி சென்றார்.

அரச தலைவர்களின் வாகனப் பவனிக்கு முன்பாகச் செல்ல வேண்டிய மோட்டார் சைக்கிள் தொடரணியைச் சேர்ந்தவர்களில் இருவர் ஒரு அரச தலைவரின் அணியில் காணப்படவில்லை, இவர்கள் இருவரும் உணவு உண்பதற்காகச் சென்றிருந்ததாகவும் அறியக் கூடியதாக இருந்தது.

சார்க் மாநாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பிலும் இவ்வாறே பலத்த குளறுபடிகள் ஏற்பட்டு இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியோ பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நாடான ஸ்ரீலங்காவில் 15 வது சார்க் உச்சி மாநாடு நடந்து முடிந்து விட்டது.

அரச தலைவர்களின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----