தென்னிலங்கை உறுதியான தீர்வை முன்வைக்கும் வரை புலிகளிடம் எதனையும் கோரமுடியாது - வாசுதேவ நாணயக்கார
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காணும் வகையில் சர்வகட்சிகளும் தமது தீர்வு யோசனைகளை சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்து வருகின்றன, இந்த நிலையில் பொருத்தமான அரசியல் தீர்வை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு விரைவில் முன் வைக்கவுள்ளது.
இத் தீர்வு யோசனைபற்றி ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வாசுதேவ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில், அனைத்து இன மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுவான இறுதித் தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தென்னிலங்கையினால் உறுதியான தீர்வு யோசனை முன்வைக்கப்படும் வரை எவ்விதமான கோரிக்கையையும் விடுதலைப் புலிகளிடம் விடுக்க முடியாது.
நாட்டில் கடத்தல்கள், காணாமற் போதல், படுகொலைகள் மற்றும் கொள்ளை போன்றன தற்போது அதிகரித்துள்ளன, மக்கள் பயத்தில் வாழுகின்றனர், மனித உரிமை மீறல்களைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வ முயற்சி எடுத்துள்ளதாக கூறுகின்றது, ஆனால் இதில் இன்னும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவை மக்களைப் பாதுகாக்கின்ற அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
இனப்பிரச்சனை தீர்வு செயற்பாட்டில் தற்போது புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் அதிகமானவை தங்களின் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளன, இன்னும் சில கட்சிகள் தீர்வு யோசனைகளை இன்னும் முன்வைக்கவில்லை, அவை சமர்ப்பித்ததும் விரைவில் தீர்வு யோசனையைக் கொண்ட கூட்டத்தை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நடாத்த முடியுமென அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
அது சரி புலிகள் விரும்புற தீர்வா அது இருக்கனுமே! ஜனநாயக ரீதியான தீர்வுகளை மதிக்கக்கூடிய இடத்தில் புலிகளின் சிந்தனை இல்லாதபோது என்னத்த செய்வது?
பதிலளிநீக்குஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழர் பிரதேசங்களுக்கான மாநில சுயாட்சிதான் இதற்கு நிரந்தர தீர்வு. உதாரணமாக காசுமீரில் ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்டதைப் போன்ற உரிமைகள் இருக்க வேண்டும். அதாவது. நிதி. இராணுவம். வெளியுறவு தவிர மற்ற விவகாரங்களை அவர்களே தீர்வு காணக்கூடிய முறையிலான தீர்வாக அமைந்திட வேண்டும். மேலும் நேபாளத்தில் அமைந்துள்ளது போன்ற ஒரு கூட்டட்சி அமைப்பினைதான் இத்தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்திட வேண்டும். புலிகள் தங்களது பாசிச மற்றும் இதர தமிழர் இன அமைப்புகளுக்கு எதிரான வன்மத்தை அறவே கைவிடுவதோடு அனைவரையும் மதிக்கின்ற ஜனநாயக நடவடிக்கைக்கு முன்வரவேண்டும்.
வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குசந்திப்பு கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த போதிலும் கூட, இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களும் பாதிப்படையக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா அரசு ஓரவஞ்சகத்துடன் செயற்பட்டு வருவது வேதனை தரக்கூடிய விடாயமாகும்.
மாறிமாறி வரும் அரசாங்கங்கள் தமிழருக்கான தீர்வை விரைவில் கொடுக்கப் போகின்றோம் என்று சொல்லியே காலத்தைக் கடத்தியதை எமது வரலாற்றில் கண்டுள்ளோம்.
இலங்கை இந்திய உடன்படிக்கையென கைச்சாத்தான வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் ஸ்ரீலங்காவின் மகிந்த அரசு நடந்து கொண்ட விதம் வியப்பாகத் தெரிகின்றது.
தமிழர்களுக்கு இலங்கையில் நிம்மதியான வாழ்க்கை முறையினை ஸ்ரீலங்கா அரசாங்கங்கள் இன்னும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லையென்று சர்வதேசமே கூறி வரும் நிலையில் குறைந்தபட்சம் தமிழர்களின் உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைப்பை தொடர்ந்து வைத்திருக்கலாமே!, அதையும் துண்டாடி வடக்கு வேறு கிழக்கு வேறு என தமிழர்களின் பலத்தைக் குறைக்க நினைக்கும் அரசாங்கத்தை என்னவென்று சொல்வது?
தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்கின்றார்களா இல்லையா என்பதல்ல பிரச்சனை, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அது நல்ல தீர்வாக இருப்பின் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக் கொள்வார்கள்.
தீர்வுத் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்க உரிய தருணமல்ல இது.
ஆண்டாண்டு காலமாக தமிழர்களை ஏமாற்றி வந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்கமும் தென்னிலங்கைச் சிங்களக் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்க்கமான தீர்வை முன்வைக்கட்டும்.
நல்ல தீர்வை அரசாங்கம் தமிழர்களுக்குக் கொடுத்து அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளாவிடின் இப்பிரச்சனையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் பாரிய அழுத்தத்தினை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்து ஏற்கவைக்கும் நேரம் வரும், ஆகவே முதலில் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டத்தை தயங்காமல் வைக்கட்டும்.