தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனப்படும் கருணா அணியினருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த மோர்னிங் லீடர் ஆங்கில வார ஏட்டிற்கு டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரை:
கருணா குழுவினரை பிரித்து ஆளும் உத்தியையே இராணுவ புலனாய்வுப் பிரிவினர் முன்னர் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் முழுமையான சமாதான முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த பிளவு மீண்டும் சேர முடியாதவாறு உருவாகியுள்ளதோ என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது.
கருணாவுக்கு பிள்ளையான் விசுவாசமானவர், உயிருக்குப் பயந்து கருணா வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்த போது பிள்ளையானே தனது உதவியாளர்களுடன் உள்ளுரில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
பின்னர் தனது பாதுகாப்புக் கருதி பனாகொடவில் கருணா முகாம் அமைத்திருந்த போது பிள்ளையான பொலநறுவை மாவட்டத்தில் முகாம் அமைத்து செயற்பட்டு வந்தார்.
சிறிலாங்காவின் புலனாய்வுத்துறையினரின் முழுமையான கட்டுப்பாட்டில் கருணா வந்த போது புலனாய்வுத்துறையினால் அக்குழு வழிநடத்தப்பட்டது.
சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் கருணா குழுவினரை ஒரு குழுவாக இயங்க விடாது சிறு சிறு குழுக்களாக வெவ்வேறு பொறுப்பாளர்களின் கீழ் இயங்க வைத்தார்கள். அவர்களில் சின்னத்தம்பி, றியாசீலன், மங்களன், இனியபாரதி, மாக்கன் என பலர் உண்டு. இவர்களுக்கும் கருணாவுக்கும் இடையிலான தொடர்பாடல்களை பிள்ளையான் மேற்கொண்டு வந்தார்.
இக்குழுவுக்கான பெரும்பாலான கட்டளைகளை சிறிலங்கா புலனாய்வுத்துறையே வழங்கி வந்தது, கருணாவுக்கும் வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான பணத்தை பிள்ளையானே வழங்கி வந்துள்ளார்.
கொட்டாவ பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் கருணாவின் நிதிப்பொறுப்பாளர் குகனேசன் கொல்லப்பட்டார். அவரே கருணாவின் பெருமளவு பணத்தை பல வழிகளில் முதலீடு செய்தவர். அது அவருக்கு மட்டுமே தெரியும், குகனேசனின் மரணத்துடன் எல்லாம் இழக்கப்பட்டு விட்டது.
அதன் பின்னர் வரி அறவிடுதல், மக்களை கடத்தி கப்பம் வாங்குதல் போன்ற வேலைகளை பிள்ளையானே மேற்கொண்டு வந்துள்ளதுடன் கருணாவுக்கு தொடர்ச்சியாக பிள்ளையானே பணத்தை வழங்கி வந்துள்ளார், பிள்ளையான் இதில் பெருமளவான பணத்தை சம்பாதித்துள்ளார்.
கிழக்கிற்கு ஒரு இடைக்கால சபையை அமைத்து அதனை தனக்கு தர வேண்டும் என கருணா விரும்பியிருந்தார், ஆனால் அது கருணாவை வழிநடத்தும் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்குப் பிடிக்கவில்லை. ஆகையால் கருணா குழுவில் மோதலை உருவாக்க செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.
கருணா குழுவை இரண்டாக உடைத்தால் தம்மால் அவர்களை நிர்வகிப்பது இலகுவானது என புலனாய்வுத்துறை நம்பியது, இதற்காக பிரித்தானியாவில் இருந்து கிருஸ்ணபிள்ளை எனப்படும் கிருஸ்ணன் வரவழைக்கப்பட்டார். இவர் முன்னாள் ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினராவார், பின்னர் 1990 களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டு வந்திருந்தார். அதன் பின்னர் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் உதவியுடன் கருணாவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்துள்ளார்.
கருணா, ஈ.என்.டி.எல்.எஃப்புடன் உறவுகளை பேணியது கொழும்புக்கு பிடிக்கவில்லை. எனவே புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் கிருஸ்ணன் இந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார், தற்போது கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பகமையை மூட்டிவிடும் படி கிருஸ்ணன் பணிக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு வந்த கிருஸ்ணன் கருணாவின் அதிகாரத்துடன் வேலையை ஆரம்பித்தார். பிள்ளையானின் நிதிக்கையாடல்கள் குறித்து கருணாவுக்கு கூறப்பட்டது. பணப்பிரச்சினை தொடர்பாக உடனடியாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் மூண்டது.
பிள்ளையான் வசமுள்ள பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைக்கும் படி கருணா உத்தரவிட்டார். பிள்ளையான் துப்பாக்கியை தூக்க ஆயத்தமானார். கருணாவின் விசுவாசியான மட்டக்களப்பில் இருந்த இனியபாரதியை கொல்வதற்கு தனது குழுவினரை அனுப்பினார். இனியபாரதியை பிள்ளையானிடம் இருந்து பணத்தையும், கணக்குகளையும் பெற்றுக்கொள்ளும் படி கருணா பணித்திருந்தார்.
தாரக்கி சிவராமை கொலை செய்ததில் சம்மந்தப்பட்டதாக கருதப்படும் பாரதி கூரையில் ஏறி பிள்ளையானின் கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கொண்டார், கிருஸ்ணனை கொல்வதற்கும் பிள்ளையான் ஆட்களை அனுப்பியிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் தனது இருப்பிடத்தில் இருந்து கிருஸ்ணன் வெளியேறிவிட்டார். பின்னர் இந்த பிளவு வெளிப்படையானது.
சின்னத்தம்பி, இனியபாரதி, றியாசீலன், ஜெயதான், சந்திவெளி மாமா, திலீபன், மகிலன் போன்றோர் கருணா பக்கமும், சிந்துஜன், சித்தா மாஸ்ரர், மாக்கன், சீலன், தூயவன், சசி போன்றோர் பிள்ளையான பக்கமும் பிரிந்தனர், கருணா குழுவின் பேச்சாளர் அசாத் மௌலானா, மங்களன் மாஸ்ரர் போன்றோர் நடுநிலையில் இருந்தனர்.
பிள்ளையான் தனது குழுவினருடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இருந்து பொலநறுவை, திருமலை நோக்கி ஓடத்தொடங்கினார், கருணா ஆதரவாளர்கள் மட்டக்களப்பில் இருந்தனர்.
கிழக்கில் இருந்த படையினர் பிள்ளையானுக்கு ஆதரவளிக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ உயர்பீடம் கருணாவுக்கு ஆதரவளித்தது, இருதரப்பு சமாதானப் பேச்சுக்களும் நடத்தப்பட்டன, இரு தரப்புக்கும் தற்போது பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் தெற்குப் பகுதியான ஆரையம்பதி தொடக்கம் பொத்துவில் வரைக்கும் கருணாவுக்கு வழங்கப்பட்டது, மட்டக்களப்பு வடக்கின் ஆறுமுகத்தான் குடியிருப்பு தொடக்கம் வெருகல் ஆறு வரைக்கும் பிள்ளையானுக்கு வழங்கப்பட்டது, மட்டக்களப்பு நகரம் இரு தரப்புக்கும் பொதுவாக்கப்பட்டது.
எனினும் வாக்கு வாதங்கள் முற்றியது. ஒரு சமயத்தில் மறைத்து வைத்திருந்த தமது கைத்துப்பாக்கிகளை எடுத்த இனியபாரதி மற்றும் சந்திவெளி மாமா ஆகியோர் பிள்ளையான் குழுவினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் சீலனும் மேலும் 6 பேரும் காயமடைந்தனர், இரு தரப்பும் எதிர்த்தரப்பினரை மனிதக் கேடயங்களாக கைப்பற்றிய வண்ணம் பின்வாங்கினார்கள். மகிலனையும் வேறு சிலரையும் பிள்ளையான் தரப்பு பிடித்துச் சென்றது.
சிந்துஜனையும் வேறு சிலரையும் கருணா தரப்பு பிடித்துச் சென்றது. இரு தரப்பும் பாதுகாப்பாக செல்வதற்காக படையினரும் இதனை அனுமதித்தனர், சிந்துஜனையும் ஏனையோரையும் பார் வீதியில் உள்ள அலுவகத்தில் கருணா குழு தடுத்து வைத்தது.
2006 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7 பணியாளர்களை கடத்தி கொலை செய்ததற்கு சிந்துஜனே பொறுப்பாகும், அதில் பிறேமினி என்ற பெண் பணியாளரை கூட்டமாக பாலியல் பாத்காரம் செய்ததிலும் சிந்துஜனே முன்னின்றவர், சிந்துஜனும், விஜிதரனும் தடுப்புக்காவலை உடைத்துக்கொண்டு தப்பியோட முற்பட்டனர். அவர்களை துரத்திச் சென்ற கருணா குழுவினர் கள்ளுத் தவறணை சந்தியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
விஜிதரன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சிந்துஜன் காயமடைந்தார். சிந்துஜனை இழுத்து வந்த கருணா ஆதரவாளர்கள் தூக்கிலிட்டு கொன்றனர், கருணா ஆதரவாளர்கள் சீலனின் மனைவியையும் கைது செய்ததுடன், பிள்ளையான் குழுவுக்கு சொந்தமான பல அலுவலகங்களும் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டன. சீலன், சித்தா மாஸ்ரர், சசி ஆகியோரின் வீடுகளும் உடைக்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தமிழின் வெற்றி
http://www.tamilwin.com/article.php?artiId=2839&token=dispNews
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.