திங்கள், 28 மே, 2007

இலங்கையின் இன்றைய சமூகவியல் உண்மைகள்

சிங்களத்துவ அரசியலின் சமூகவியல் அடிப்படைகளும் அரசியற் தீர்வுக்காண தேவைகளும்
கட்டுரையாளர் - பீஷ்மர்

சென்ற வார நடுப்பகுதியில் `லங்காதீப' சிங்கள நாளிதழில் வந்த ஒரு கட்டுரை தென்னிலங்கை அரசியல் நோக்கிலும் போக்கிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருடைய படங்களுடன் பிரசுரிக்கப்பட்ட அக் கட்டுரையில் சிங்கள அரசியல் தலைவர்களின் குழப்ப நிலை அதிகார மையங்கள் பற்றி மிக விரிவாக பேசப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்தையும் ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு மருமகனாகவிருந்து அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதையும் அவரது சகோதரரின் ரி.என்.எல். வானொலி ஒலிபரப்புப் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ பற்றிய தகவல்கள் மிக சுவாரஷ்யமானவை. இவரது தகப்பனார் டி.ஏ.ராஜபக்‌ஷ. அவர் முன்னர் ஸ்ரீமா அரசாங்கத்தில் உதவி அமைச்சராக இருந்தவர். அவரது சகோதரர் டி.எம்.ராஜபக்‌ஷ இவர் முன்னர் உப அமைச்சராகவிருந்து முக்கிய இடம் வகித்த ஜோர்ஜ் ராஜபக்‌ஷவின் தகப்பனார். ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு அம்பாந்தோட்டையில் நில புலங்களின் அடிப்படையில் மிகுந்த செல்வாக்கு உண்டு.

டி.ஏ.ராஜபக்‌ஷவின் மறைவின் பின்னரே மகிந்த ராஜபக்‌ஷ அரசியலுக்கு வருகிறார். பஷில் ராஜபக்‌ஷவும் சமல் ராஜபக்‌ஷவும் இவரது சகோதரர்கள். சமல் ராஜபக்‌ஷ தமயன், பஷில் ராஜபக்‌ஷ தம்பி. சந்திரிகா குமாரதுங்கவினுடைய முதலாவது அமைச்சுக் காலத்திலிருந்து இவர் அமைச்சராகவிருந்து வருகின்றார். முதலில் இவர் மீன்பிடித் துறை அமைச்சராகவிருந்தவர். இதன் காரணமாக கடலோர சிங்களக் கிராமங்களில் தனது செல்வாக்கைப் பதித்துக்கொண்டவர்.

குறித்த அந்தக் கட்டுரையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினர் தனது தளமான அம்பாந்தோட்டையையே தனது அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்றும் நாட்டின் ஜனாதிபதி என்கின்ற முறையிலும் அம்பாந்தோட்டையில் அபிவிருத்திக்கு தனித்த விசேட இடம் கொடுக்கின்றார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று பல்வேறு தென்னிலங்கை அரசாங்கங்கள் எல்லாக் காலத்திலும் எப்படியோ தமது குடும்பச் சுற்றை அரசியல் மையமாகக் கொண்டுள்ளனர் என்பது அது நன்றாக விளங்குகிறது. அந்தப் பின்புலத்திலேயே இப்போதைய ஜனாதிபதி தனது சகோதரர்களை நம்பியிருக்கின்றார் என்று கருத்துத் தொனிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளருடனான உறவு தெளிவாக எடுத்துக்கூறப்படவில்லையெனினும் அவரும் இந்தப் பெருங் குடும்பத்தின் அங்கத்தவரே. அவர் இலங்கை இராணுவத்தில் இருந்தவர் என்பதும் பின்னரே அமெரிக்கா சென்றார் என்ற கதையும் பலருக்குத் தெரிந்ததே.

இவரைப் பற்றி பேசும்பொழுது இவர் லலித் அத்துலத் முதலியின் வடமராட்சி ஒப்பிரேஷனின் பொழுது முக்கிய இடம் வகித்த இராணுவ வீரர். மேற்குறிப்பிட்ட கட்டுரை தென்னிலங்கை அரசியல் அதிகார மையங்களின் சமூகவியல் உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வருகின்றது. அவற்றுள் பிரதானமானது அதிகாரத்துள்ளவர் எப்பொழுதும் இரத்த உறவினருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளமையை அறிந்துகொள்ளலாம்.

அது மாத்திரமல்ல ஏதோவொரு வகையில் இவற்றில் பெரும்பாலானவை தமக்குள் தாமே குடும்பப் பிரக்ஞையையையும் கொண்டிருந்தன.

இந்தப் பொது விதிக்குள் பிரேமதாச வரார். சிங்கள அரசியலில் குலத்துவேசங்கள் முற்றாக அழிக்கப்படாமலேயே இருந்தன என்பதற்கு அவருடைய அரசியல் வாழ்க்கை வரலாறு ஒரு நல்ல உதாரணமாகும். மேற்குறிப்பிட்ட கட்டுரையில் குறிப்பிடப்படவில்லையெனினும் தென்னிலங்கை அரசியலிலே சாதி (குலம்) அடிப்படை மிக முக்கியமானதொரு இடத்தைப் பெறுகின்றது.

சமகாலத்தை எடுத்துக்கொண்டால் இலங்கைத் தமிழரின் அரசியலில் காணப்படாத சாதிப் பிரக்ஞை சிங்கள அரசியலில் இன்னும் முக்கியமாகவுண்டு. மங்கள சமரவீரவை ஜனாதிபதி கைகழுவி விட்டு விடாமைக்கான காரணம் அவருடைய சாதியே ஆகும். அவரது தகப்பனார் மகாநாம சமரவீர பொதுவுடைமைக் கட்சியினூடாக அரசியலை ஆரம்பித்திருந்தாலும் அந்தக் குலத் தளத்தையே முக்கியமாகக் கொண்டிருந்தார். காலி மாத்தறைப் பகுதியிலும் ரம்புக்கனைப் பகுதியிலும் இச் சாதியினருக்கும் அரசியல் பலம் உண்டு.

தென்னிலங்கையின் அரசியலில் குறிப்பாக கடலோரப் பகுதியின் அரசியலில் முக்கியம் வகிக்கின்றது சாதிக்குழப்பம் `சலாகம' என்போர் ஆவர். டொக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, சி.பி.டி.சில்வா ஆகியோர் இந்தப் பின்புலத்தையுடையவர்களே. கொல்வின் அதற்குள்ளிருந்து வெளியேவர விரும்பியபொழுது கொழும்பு தெற்குத் தமிழர் வாக்குகள் மிக முக்கியமாகின்றன. சலாகமவிலும் பார்க்க முக்கியமுடைய சாதிக் குழுமம் `கறாவ' எனப்படும் மீன்பிடிக் குலமாகும்.

தமிழிலுள்ள கரையார் என்ற சொல்லே சிங்களத்தில் கறாவ என்று நிற்கின் றது. விவசாயிகளான `கொய்கமவினரே மேலிடத்தைத் பெறுவர். கண்டியச் சிங்களவர்கள் உடரட் ட சிங்களவர்கள் என்ற வகைப்பாட்டுக்குள் வந்து விடுவர்.

சிங்கள அரசியலைப் புரிந்து கொள்வதற்கு இச் சமூகவியல் உண்மைகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், அதிலும் பார்க்க முக்கியம் இந்த அடித்தள குல நிலைப்பாடுகள் தமிழர் பிரச்சினை விடயத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதாகும்.

இவற்றை மனங்கொண்டு சிந்திக்கும் பொழுது ஒரு முக்கிய சமூகவியல் வரலாற்று உண்மை தெட்டத்தெளிவாகின்றது. அதாவது சிங்கள- பௌத்தவாதம் சாதியடிப்படையிலிருந்து இன்னும் விடுபடவில்லை யென்பதாகும். உண்மையில் தங்களிடையே நிலவும் குல முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள அவர்கள் சிங்களத்துவத்தை முதன் நிலைப்படுத்துகின்றனர் என்பதை பல அரசியல் அறிஞர்களும் சமூகவியலாளர்களும் தவறாது எடுத்துக் கூறுகின்றனர்.

இலங்கையில் தமிழ்ப் பிரக்ஞை வந்த வழி சாதிக்குழும அடிப்படைகளை ஊடறுத்துச் செல்வதாகவும் அவ் அடிப்படையை புறக்கணிப்பதனை அவதானிக்க வேண்டும். அதற்கான பிரதானமான காரணம் தென்னிலங்கையின் சிங்கள எழுச்சி சகல தமிழர்களினதும் மொழியுரிமைகளுக்கும் பெரும் சவாலாக அமைந்ததே. இதனால், இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியாக முகங்கொடுப்பதற்கு இரண்டு முக்கிய நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியது அவசியமாயிற்று. ஒன்று சாதியடிப்படைக்கு அப்பாலே செல்லுதல், இரண்டு பிரதேச அடிப்படைக்கு அப்பாலே செல்லுதல் .

தமிழ்- சிங்கள மொழிகள் மூலம் கல்வி முதல் உத்தியோகத்துக்கான தெரிவுகள் செய்யப்பட்டமையால் தமிழை மையமாகக் கொண்டு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய ஓர் அரசியல் வரலாற்றுத் தேவை இங்கு உருவாயிற்று.

தமிழகத்தில் நிலைமை வேறு. அங்கு கல்வி, உத்தியோகம் என்பன ஏதோவொரு வகையில் சாதியடிப்படையிலேயே இன்னும் இயங்குகின்றது.

இவ்விடயம் ஆழமானதொன்றாகும். ஆனால் இங்கு இப்பொழுது எமக்கு முக்கியமாவது மொழியுரிமை. சமூக ஒற்றுமையில் தளமாகவும் அரசியற் தேவையாகவும் அமைந்துள்ளமையாகும். இதனுள்ளும் ஒரு சிக்கலுள்ளது. இந்த மொழியுரிமையே முக்கியமானது என்பதன் காரணமாகவே சமஷ்டிக் கட்சியினர் தமிழ் பேசும் மக்கள் என்ற கரத்தினை முன்வைத்தார். ஆனால் முஸ்லிம்கள் அதனை ஏற்கவில்லை. இதனால் மொழியுரிமையும் இன உணர்வும் சிங்கள, தமிழர் உறவில் குறிப்பாக தமிழர் பிரக்ஞையில் முக்கியமாகின்றது. இலங்கைத் தமிழருடைய அடித்தள நிலைப்பாடு அவர்கள் ஒரே வேளையில் இலங்கையர்களாகவும் தமிழர்களாகவுமிருக்க விரும்புகின்றனர். இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு என்பது இந்த உண்மையை மனங்கொள்வதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் மேலே கூறிய சிங்கள அரசியல் பிரக்ஞையின் சமூகவியல் அதற்கு இடம் தருவதாக அமையவில்லை. தங்களின் சிங்கள தன்மையை வலியுறுத்த வேண்டும் என்பதற்காக இவர்கள் இலங்கை என்பது சிங்களமே என்று கொள்கின்றார்கள். இந்த பலவீனத்திலிருந்து சிங்கள அரசியல் விடுபடும் வரை இலங்கைக்கு விமோசனம் இருப்பதாக தெரியவில்லை.

மகிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் வேர்களும் இதற்கு உதவுவனவாக தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----