சனி, 19 மே, 2007

மனிதனை வெல்லுமா ரோபோக்கள்

"ரோபோக்கள்" என்பது அசையக்கூடிய அத்துடன் சில மனித செயற்பாடுகளை செய்யக்கூடிய கணினிகள். ரோபோ (ROBOT) என்பதை தமிழில் இயந்திரமனிதன் என்பது எவ்வளவு தூரம் பொருத்தப்பாடுடையது என்பது கேள்விக்குறி ஏனெனில், தற்போது ரோபோக்கள் மனித உருவில் மாத்திரமல்லாது, விலங்குகள் மற்றும் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்படுகின்றன.

மனிதன் உணர்ச்சிகளின் கலவையாக இருக்கிறான். அன்பு, பாசம், காதல், கருணை, கோபம், துக்கம், மகிழ்ச்சி என மனித உணர்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த உணர்வுகள்தான் மனிதனின் வாழ்க்கையினை வண்ண மயமாக்குகின்றன. உணர்ச்சிகளற்ற மனிதர்கள் வாழும் பூமியில் எந்த விதமான சுவாரஸ்யமும் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது உணர்வுகளை தனது குடும்பத்தினர், நண்பர்கள், தன்னைச் சூழ உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறான். இதனாலேயே உயிரியல் விஞ்ஞானிகள் மனிதனை "சமூக விலங்கு" என்கின்றனர்.

வேகமாக நகரும் நவீன உலக வாழ்க்கையில் எழுப்பப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு "மனித உணர்வுகள் புரிந்து கொள்ளப்படுவதில்லை, மதிக்கப்படுவதில்லை" என்பதாகும். உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமை குடும்பத்தில் பிளவு ஏற்படவும், சமூகத்தில் குற்றங்கள் மலிந்து போகவும், மன அழுத்தம் அதிகரித்து மன நோயாளர்கள் கூடிச் செல்லவும் காரணமாக அமைகிறது. மனிதன் இயந்திரமாக மாறிவரும் இக்காலகட்டத்தில் இயந்திரங்களுக்கு மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை ஏற்படுத்தும் முயற்சியில் கணினி விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

மனித உணர்வுகளை மதிக்கும் தன்மை மழுங்கிப் போனதற்கு கணினிகளும் ஒரு காரணம் எனலாம். நவீன மனிதன் தனது காலத்தில் பெரும்பகுதியை கணினியுடனேயே செலவழிக்கிறான். கணினி மனிதன் சொல்வதைச் செய்யும் ஒரு இயந்திரம். மனிதனுக்கும் கணினிக்குமுள்ள தொடர்பு எஜமானுக்கும் அடிமைக்குமுள்ள தொடர்பு போன்றது. தான் சொல்வதைச் செய்யும் கணினி போல, மற்றவர்களையும் எதிர்பார்க்கும் உணர்வு மேலோங்குகிறது. கணினியுடன் மனிதன் சிறைப்பட்டுப் போவதை கவிக்கோ அப்துல் ரகுமான் தனது கவிதை யொன்றில் பின்வருமாறு அழகாகக் குறிப்பிடுகிறார்.

"மனிதன் பொறிவைத்து எலி பிடித்தது - அந்தக்காலம்
பொறி எலி வைத்து மனிதனைப் பிடிப்பது - இந்தக்காலம்"

இங்கு மவுஸ் (எலி) என்பது கணினியுடன் தொடர்புபட்டது. மனிதனுக்கும் ரோபோவுக்கும் உள்ள சில ஒற்றுமைகளாவன இருவருக்கும் சக்தி அவசியம், நுண்ணறிவு உள்ளது.மனிதனுக்கு உள்ளது இயற்கையான நுண்ணறிவு. கணினிக்குள்ளது செயற்கையான நுண்ணறிவு (Artifical Intelligence - AI). இருவருக்கும் ஞாபக சக்தி (Memory) உள்ளது. இவை தவிர, பேசும் ஆற்றலையும் குறிப்பிடலாம். ஆனால், கணினிக்கு தானாகவே வார்த்தைகளைக் கோர்த்து பேசும் ஆற்றல் இதுவரைகாலமும் இல்லை (எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்). செயற்கை நுண்ணறிவா, இயற்கை நுண்ணறிவா திறமை வாய்ந்தது என்று கேள்வி எழுந்தால், மனித மூளையில் இயற்கை நுண்ணறிவே சிறந்தது என்று கண்னை மூடிக் கொண்டு சொல்லி விடலாம். ஏனெனில், செயற்கை நுண்ணறிவை உருவாக்கியதே மனித மூளை அல்லவா? இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். செஸ் விளையாட்டில் உலக சாம்பியனாக விளங்கிய ரஷ்ய வீரரான கெரி கஸ்பரோவினை செஸ் விளையாட்டில் கணினியொன்று தோற்கடித்தது.

ஞாபகசக்தியை எடுத்துக் கொண்டால் கணினி முந்திக் கொள்கிறது. கணினியின் ஞாபக சக்தி பிரம்மாண்டமானது. கணினி மனிதனை வென்றுவிடுமா? அடிமைப்படுத்தி விடுமா என்ற கற்பனையில் பல ஹொலிவுட் திரைப்படங்களும் வந்திருக்கின்றன.

புதிய முயற்சியாக மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய கணினிகள், ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கணினி விற்பன்னர்கள் இறங்கியுள்ளனர். இதனை "உணர்ச்சி மயமான இயந்திரங்கள்" (Emotional Machines - EM) எனக் குறிப்பிடுகின்றனர்.

மனித உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு நமது புலன் உணர்வுகள் பெரிதும் உதவுகின்றன. கேட்டல், தொடுகை, நுகர்தல், பார்வை, சுவை என்ற ஐம்புலன்களும் பல கோடி வருட பரிணாமத்தினூடாக உயிர்களுக்கும் மனிதனுக்கும் கிடைத்த சொத்துக்கள்.

கணினிக்கு இந்த ஐம்புலன்களும் வழங்கப்படுமாயின், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது சாத்தியமாகும். கேட்டல், தொடுகை என்ற புலன் உணர்வுகளை தற்போதுள்ள கணினிகள் பெற்றுள்ளன வார்த்தைகளின் மூலம் உணர்வுகளைத் கொட்டுவது ஒரு விடயம். எமது குரலில் ஏற்ற இறக்கங்கள், நடுக்கம் என்பவற்றின் மூலம் மனிதனது உணர்வுநிலையை எடை போடுகிறோம் அல்லவா? இந்த ஆற்றலையும் கூட கணினிகளுக்கு வழங்க முடியும்.

ஒருவருடன் அன்புடன் கை குலுக்கும்போதும் கோபத்துடன் கை குலுக்கும் போதும் மனிதனது கைத்தசை இறுக்கங்கள் வேறுபடுமல்லவா? இதனை உணரும் ஆற்றலைக்கூட கணினிக்கு வழங்க முடியும். ஒரு படி மேலே போய் கணினி எமது இதயத்துடிப்பு வீதம், சுவாசவீதம் என்பவற்றைக் கூட தொடுகைமூலம் வாசித்து மனிதனது மனநிலையை உணர முடியும். இதற்காக உணர் கருவிகள் (sensors) கணினியுடன் இணைக்கப்படலாம்.

மனிதனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் மனித முகபாவங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவே, கணினிக்கு பார்வை வழங்கப்பட வேண்டும். இதற்காக ஒரு படப்பிடிப்புக் கருவியை (Camera) கணினியுடன் இணைக்கலாம். என்றாலும் உணர்வுகளுக்கான முகபாவங்கள் ஆளுக்காள் வேறுபடுவதனால் கணினி தனது எஜமானின் முகபாவங்களையே சரியாக வாசிக்கும். ஏனையவர்களின் முகபாவங்களை வாசிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும்.

சுவையை உணர்தல், மின்சுற்று (electric circuit) ஒன்றின் கடத்துதிறன் மூலம் கணினியால் வாசிக்கப்பட முடியும். வெவ்வேறு சுவையுடைய பதார்த்தங்களின் மின் கடத்துதிறன் வேறுபட்டதாகும்.

வேலை முடிந்து களைத்துப் போய் வீடு வருகிறீர்கள். உங்களைப் புரிந்து கொண்டு உங்களின் ரோபோ, ரொம்ப களைத்துப் போய் வந்திருக்கிறீர்கள் ஒரு கோப்பி போட்டுத்தரவா எனக்கேட்டு கோப்பி இயந்திரத்துக்கு கோப்பி போட உத்தரவு போட்டால் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

மனைவியும் இப்படி கேட்பார் என்றாலும் தொடர்ந்து, சம்பளப் பணம் ஏன் குறைந்தது எனக் கேட்கும் கேள்வியினால் ஏற்படும் பூகம்பம் தவிர்க்கப்படலாமல்லவா.

மனக் குழப்பத்துடன் இருக்கிறீர்கள், ரோபோ உங்களைப் புரிந்து தனது MP3 இசை இயந்திரத்தில் பின்வரும் பாடலை சுழல விடுகிறது.

"மயக்கமா, கலக்கமா மனதிலே குழப்பமா" காதல் மூடில் இருக்கிறீர்கள், ரோபோ சுழலவிடும் பாட்டு
"சுட்டும் விழிச்சுடரே" சுட்டும் விழிச்சுடரே என்னுலகம் உன்னைச் சுற்றுதே - என்று அமையுமா? இதுவே கொஞ்சம் வயதானவராக இருந்தால் "இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே" எமது மனித உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான். உணர்ச்சிமயமான ரோபோக்களை/ கணினிகளை உருவாக்கும் முயற்சியில் விற்பன்னர்கள் வெற்றிபெறுவார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், தானும் உணர்வுகளைக் கொண்டு தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் கணினிகளை உருவாக்குவதே கணினி உலகத்துக்கு பெரிய சவாலாக இருக்கும்

எழுதியவர் - ஆர்.பரமேஸ்வரன்
நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----