
உத்தேச தேர்தல் சீர்திருத்தத்துக்குப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளிடமிருந்தும் ஏகோபித்த உடன்பாடு பெறப்படாமல் தேர்தல் முறையில் மறுசீரமைப்பு வேண்டாமென்று ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
ஆனால் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் வெவ்வேறானவையாகும்.
உத்தேச தேர்தல் மறுசீரமைப்பை சடுதியாக மேற்கொள்வதற்கான காரணம் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடுவதற்கான மறைமுகமான காய் நகர்த்தலென்ற சந்தேகத்தை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் எழுப்பியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா அறிமுகப்படுத்திய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினால் சிறிய கட்சிகள் மற்றும் சிறுபான்மையினர் கட்சிகளுக்கு பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால் பழைய தொகுதிவாரி முறையும் விகிதாசார முறையையும், நியமன முறையையும் கொண்டதாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளால் சிறுபான்மைக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மிகச் சொற்ப அளவினதாக வீழ்ச்சி காணும் நிலைமையை முன்கூட்டியே உணர்ந்தே உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கின்றன.
வட, கிழக்கை பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் புதிய முறைமை அறிமுகத்தினால் பாரிய அளவில் குறைவடையப்போவதில்லை. என்றாலும் பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமது வரலாற்று ரீதியான தாயகத்தில் சுயாட்சி நிர்வாகக் கோரிக்கையை தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து நீண்டு செல்லும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதே உடனடித் தேவையாகும். ஆயினும் இதற்கு மாறாக அதாவது இனநெருக்கடிக்கு தீர்வாக அரசியலமைப்பில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு முன்பாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு ஆளும்தரப்பு முயற்சிகளை முடுக்கி விட்டிருப்பது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் சதி முயற்சியே தவிர வேறொன்றுமில்லையென அந்த மக்களின் பிரதிநிதிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றன.
உத்தேச சீர்திருத்தத்தின் மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக தென்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யும் சிரேஷ்ட தமிழ்த் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் அரசியலமைப்பில் அடிப்படையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் முயற்சியில் வட, கிழக்குத் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ள சம்பந்தன், அதேசமயம் முஸ்லிம்களினதும் மலையகத் தமிழர்களினதும் உரிமைகள் இந்த நடவடிக்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்பினூடாக உறுப்பினர்களின் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக தென்படுவதாக தெரிவித்துள்ள சம்பந்தன் `வேற்றுமையில் ஒற்றுமை' என்பதற்குப் பதிலாக வெறும் `இலக்கங்களை' நோக்கமாகக் கொண்ட முயற்சியே இதுவெனவும் சாடியிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் `பேரம் பேசும்' சக்தியை இல்லாமல் செய்வதற்கான முயற்சி இதுவென இதர தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளன.
பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவையாகவும் குறைந்தளவிலேனும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்பவையாகவுமே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து நிராகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை நியாய சிந்தை படைத்த எவருமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறும் நடவடிக்கைகளினால் ஆட்சிக் கதிரையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது நாட்டிற்கு ஒரு போதுமே நிரந்தர சமாதானத்தை தேடித் தராது.
நாட்டின் எந்தவொரு சமூகக் குழுமத்தினரிடத்தும் எதிரான கருத்துகள் உள்வாங்கப்பட்டால் அதாவது நமக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு அவர்கள் மத்தியில் சகிப்புணர்வின்மையை ஏற்படுத்தி வன்முறைகளுக்கு தூண்டி மோதலுக்கு வழி வகுத்துவிடும் என்ற பாடத்தை ஆட்சியதிகாரத்தில் இருப்போர் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலையளிக்கும் விடயமாகும்.
கடந்த காலத்தில் பெற்ற கசப்பான அனுபவங்களிலிருந்தாவது பட்டறிவு பெற்று இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் வலியுறுத்தலுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.