
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க புறப்பட்ட பல விடுதலை இயக்கங்களின் ஒன்றான குட்டிமணி தங்கத்துரை வழி வந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபாரெத்தினம் அவர்களும் அவரது இயக்க உறுப்பினர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வது நினைவூட்டல் தினம் இன்றாகும்.
1986 வைகாசி மாதம் தமிழர் தாயகப் பிரதேசத்தில் விடுதலை நேசித்து வந்த ரெலோ இயக்க உறுப்பினர்கள் இன்னுமொரு விடுதலை இயக்கத்தினால் தெருக்களில் சுட்டு வீசப்பட்டு, டயர் போட்டு எரிக்கப்பட்ட இக் கொடிய நாளை தமீழீழ விடுதலை இயக்கத்தின் உண்மையான போராளிகள் இன்று நினைவு கூருகின்றார்கள்.
ஸ்ரீசபாரெத்தினம் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் உயிரை தக்க வைத்துக் கொள்ள ஓடித் திரிந்த அடுத்த கட்ட தலைவர்கள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதாகக் கூறி ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கையில் செயற்பட்டனர், இந் நடவடிக்கைகளை செல்வம் அடைக்கலநாதன், வினோதலிங்கம், சிவாஜிலிங்கம், ஜனா போன்றோர் செயற்படுத்தி வந்தனர், இதற்காக ஸ்ரீலங்கா அமைச்சரவையில் இருந்து பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு வந்தது.
இந்த வேளையில் அரசியல் நடவடிக்கையில் இறங்கிய இவர்களுக்கு பாராளுமன்ற ஆசனம் அடுத்த அடுத்த தடவைகளில் கிடைப்பது முயற்கொம்பாகி விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளும் இவர்களது செயற்பாடுகளுக்குத் தடையாக இருந்தனர். இந்திய அமைதிகாப்புப் படை இலங்கையில் இருந்த சமயம் தமிழ் மக்களுக்கெதிரான துரோகத்தனத்தில் மேற்குறிப்பிட்டோர் செயற்பட்டதனால் அரசியற் தலமைத்துவத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்கள், எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களாக வேண்டுமெனும் எண்ணத்தினாலும் மற்றும் உயிர் மீதுள்ள ஆசையிலும் போராட்ட சிந்தனையில் இருந்த ஏனைய உறுப்பினர்களைத் துறந்து விட்டு தங்களது இயக்கத் தலைவரையே சுட்டுக் கொன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களின் நன்கொடையில் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்துடன் பாதுகாப்பாக வாழ்கின்றார்கள். தங்களின் இயக்கத் தலைவனின் கொலைக்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் தானென்று மறந்தும் கூறிவிட திராணியற்றவர்கள் இவர்கள்.
1986 இல் தொடங்கிய சகோதர இயக்கப் படுகொலையாட்டம் இன்றும் தொடர்கின்றது, என்று தணியும் இச் சகோதரப் படுகொலையாட்டம், தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்போது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.