வியாழன், 30 அக்டோபர், 2008

தமிழீழ வான்புலிகள் நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் (கேணல் சங்கர்) பொறுப்பில் ஆரம்பமான வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முக்கிய இடங்களில் இந்தியாவின் இந்திரா நவீன ரக ராடர்களைப் பொருத்தியுள்ள போதிலும், அவற்றின் திரைகளுக்கு வான்புலிகளின் விமானம் தெரியாமல் மர்மமாகப் பறந்து சென்று இலக்குத் தவறாமல் குண்டு வீசுவது தான் விந்தை.


"காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்" எனும் சுலோகத்தைத் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ மற்றும் பொருளாதார நிலைகள் மீது நடாத்திய தாக்குதல் பட்டியல் விபரம்.

1. 26 மார்ச் 2007 – கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல்
2. 24 ஏப்ரல் 2007 – பலாலி இராணுவத்தளம் மீதான குண்டுவீச்சு
3. 29 ஏப்ரல் 2007 – கொலன்னாவ எண்ணெய் சேகரிப்பு நிலையம் மீதான தாக்குதல்
4. 22 ஒக்டோபர் 2007 – அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதல்
5. 27 ஏப்ரல் 2008 – வெலிஓயா படைமுன்னரங்குகள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்
6. 26 ஓகஸ்ட் 2008 – திருக்கோணமலை கடற்படைத்தளம் மீதான தாக்குதல்
7. 9 செப்டம்பர் 2008 – வவுனியா படைத்தளம் மீதான தாக்குதல்
8. 28 ஒக்டோபர் 2008 – மன்னார் தள்ளாடி இராணுவத்தலைமையகம் மீதான தாக்குதல்
9. 29 ஒக்டோபர் 2008 – கொழும்பு கனனிதிஸ்ஸ அனல் மின்நிலையம் மீதான தாக்குதல்

நன்றி: பிக்கிபீடியா தமிழீழ வான்புலிகள் பற்றிய மேலதிக விபரங்கள்

புதன், 29 அக்டோபர், 2008

தமிழீழ வான்புலிகளின் தாக்குதலும் ஸ்ரீலங்கா ஊடக கருத்தும்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று 2008.10.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் மன்னாரில் உள்ள தள்ளாடி ஸ்ரீலங்கா படைத்தளத்தின் மீதும், இரவு 11:45 மணியளவில் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.

இவ்விரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளனவென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு களனி திஸ்ஸ மின்சார மையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடாத்திய தாக்குதலில் மின் பிறப்பாக்கி ஒன்று சேதத்துக்கு இலக்காகியதாகவும், தாக்குதலில் சிக்குண்ட ஒரு பணியாளர் அதிர்ச்சிகுள்ளாகி காயமேதுமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று மரணித்துள்ளார், தள்ளாடி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் படையினர் மூவர் காயத்துக்கு இலக்காகியுள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்ததாக ஸ்ரீலங்கா உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.

"இரு இலக்குகள் மீதான புலிகளின் வான் தாக்குதல் முறியடிப்பு" - ஸ்ரீலங்கா ஊடகச் செய்தி
:
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீதும் மன்னார், தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு புலிகளின் இலகு ரக விமானம் தாக்குதல் நடத்தியாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கோ மன்னார், தள்ளாடி இராணுவமுகாமுக்கோ பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது புலிகளின் இலகு ரக விமானம் நேற்று இரவு 11.30 மணியளவில் 2 குண்டுகளை வீசியுள்ளது.

இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி ஒன்று தீப்பிடித்ததால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த வந்த கொழும்பு, தீ அணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தனர். இதன் போது மின்சார சபை ஊழியர் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்று வழமைபோல் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு 10.20 மணியளவில் புலிகள் விமானம் மூலம் 3 குன்டுகளை போட்டுள்ளனர். இத்தாக்குதலினால் இராணுவ முகாமுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் படை வீரர் ஒருவர் சிறுகாயங்களுக்கு உட்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதலையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தறையிறங்குவதற்காக வந்த 2 விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நவீன ரக ரேடார் கருவிகளும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன, இனிமேல் அவர்களால் எவ்வித தாக்குதலும் நடத்த முடியாது, வானில் பறந்தாலே சுட்டு வீழ்த்தி விடுவோம் என்று கூறிய ஸ்ரீலங்காவின் கூற்றுக்கு அவர்களின் பாசையிலையே பதில் சொல்லியுள்ளார்கள் விடுதலைப் புலிகள்.

இலகு ரக விமானத்தின் மூலமோ அல்லது கன ரக விமானத்தின் மூலமோ எவற்றாலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஏக காலத்தில் பல விமானங்களின் மூலம் தாக்குதல் நடாத்த முடியுமென விடுதலைப் புலிகள் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.

ரேடார் கருவிகளும், இலக்குத் தவறாமல் தாக்குதல் நடத்தக் கூடிய விமான எதிர்ப்பு கருவிகளும், அவற்றைச் செவ்வனே இயக்கக் கூடியவர்களும் இருந்தால் ஏன் ஸ்ரீலங்கா படை தரப்புக்கு தயக்கம் ஏற்பட வேண்டும், ஒரு வேளை இவ் இயக்குநர்கள் நித்திரையில் இருந்திருப்பார்களோ!

தேர்ந்தெடுக்கும் இலக்குகள் மீது தமிழீழ வான்புலிகளால் இலகுவாக தாக்குதல்களை நடத்தி சேதத்தை ஏற்படுத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய நிலை கடினமான இந்த யுத்த சூழ்நிலையில் இருக்கின்றது, ஆனால் உலக நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா வான்படையால் சரியான இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்த முடியாமல் இருக்கின்றது.

ஸ்ரீலங்கா ஊடகச் செய்தியின் கருத்தினை உற்று நோக்கும் போது "விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை"யென பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுவது தெரிகின்றது.





தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதலை நடாத்தியதன் பின்னர் ஸ்ரீலங்கா படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் கொழும்பு வான் பரப்பு நெருப்புக் கற்றைகளைக் கொண்டதாகக் காட்சியளித்தது.


செவ்வாய், 28 அக்டோபர், 2008

பரந்தனில் ஸ்ரீலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் நடத்தியது (படங்கள் இணைப்பு)

பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அண்மித்து இன்று 2008.10.28 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் ஸ்ரீலங்கா வான் படையினர் இரு வானூர்திகள் மூலம் நடாத்திய குண்டுத் தாக்குதலில் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியதுடன், வீதியால் சென்று கொண்டிருந்த மூவர் கொல்லப்பட்டும், மாணவர்களில் மூவர் உட்பட ஆறு பொதுமக்கள் காயத்துக்கு இலக்காகி உள்ளனர்.

பாடசாலைக்கு அண்மித்து இத் தாக்குதல்கள் இடம்பெற்று இருந்தனாலேயே கிறிஸ்டி, கனிஸ்டன், தனுசன் ஆகிய மூன்று மாணவர்கள் காயத்துக்கு இலக்காகியுள்ளனர்.

47 வயதுடைய சுகுமார் ரதி, 37 வயதுடைய பத்மசீலன், 29 வயதுடைய வீ.காண்டீபன் ஆகியோர் வீடுகளிலிருந்த போதே குண்டுத் தாக்குதலில் காயத்துக்கு இலக்காகி உள்ளனர்.








வன்னியில் இருந்து மண்டைதீவுக்கு வள்ளதில் வந்த 19 பேர்!


தீபாவளி தினமான 2008.10.27 நேற்று வன்னியில் இருந்து 19 பொது மக்கள் வள்ளத்தின் மூலம் இடம்பெயர்ந்து மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

முறிகண்டி பகுதியைச் சேர்ந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் 6 ஆண்களை மற்றும் இரு குழந்தைகள் உட்பட 19 பேர் பலத்த செல் வீச்சுக்கும் மத்தியில் பூநகரி ஊடாக மண்டைதீவுக்கு வந்துள்ளனர்.

கடற்படை அதிகாரிகளினால் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரச அதிகாரிகளிடம் இம் மக்கள் ஒப்படைக்கப்படவுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

திங்கள், 27 அக்டோபர், 2008

தீபாவளி வாழ்த்துக்கள்


தீபாவளித் திருநாளைக் கொண்டாடும்
அனைவருக்கும் "களத்துமேட்டின்"
தீபாவளி வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

கஞ்சிகுடிச்சாறை அண்டிய பகுதிகளில் மிதிவெடிகளும், பொறிவெடிகளும் விதைக்கப்பட்டுள்ளன - விடுதலைப் புலிகள்

அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளினால் கஞ்சிகுடிச்சாறுக்கு அண்மித்துள்ள வெள்ளைக்கல்லுக்கு ( பொத்தானை) உட்புறமாக உள்ள வட்டமடு, வேப்பையடி, வம்மியடி பகுதிகளிலும் ரூயஸ்குளம், கஞ்சிகுடிச்சாற்றுக்குளம், தங்கவேலாயுதபுர தாமரைக்கேணிக் குளம், கோமாரி ஆலங்குளம், ஊரணி செம்மணிக்குளம், றொட்டைக்குளம், செங்காமம் குளங்களில் உட்புறமாக உள்ள வனப்பகுதிகளிலும் வயல்பகுதிகளிலும் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாத படைகளை இலக்குவைத்து பல நூற்றுக்கணக்கான மிதிவெடிகளும் சூழ்ச்சிப்பொறிகளும் பொறிவெடிகளும் விதைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா அரசின் கள யதார்த்தத்துக்கு புறம்பான நடைமுறை சாத்தியமற்ற எடுப்பான பரப்புரைகளை நம்பி இப்பகுதிக்குள் வந்து, சிங்கள நாசகார படைகளை சிதறடிக்க வைத்த பொறிவெடிகளில் சிக்கி உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாமல், சிங்களப்படைகளை இப்பகுதிகளிலிருந்து வெளியேற்றும்வரை இப்பகுதிக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியற் பிரிவினர் 2008.10.25 ஆம் திகதி வெளியிட்டுள்ள பிரசுரத்தில் தெரிவித்துள்ளனர்.

சனி, 25 அக்டோபர், 2008

பொலிஸாரினால் புத்தளத்தில் தமிழர்களின் விபரம் நாளை பதிவு செய்யப்படும்!

வடக்கிலங்கை, கிழக்கிலங்கை பகுதிகளில் இருந்து கொழும்புக்கு வந்து ஐந்து வருடங்களுக்குள்ளாக வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பொலிஸ் நிலையங்களில் தங்களது பெயர் விபரங்களைப் பதிவு செய்யுமாறு கடந்த மாதம் ஸ்ரீலங்கா படை தரப்பு அழைப்பு விடுத்திருந்தது, அதற்கிணங்க பதிவு சுமுகமாக நடந்தேறியதாக தகவல்கள் தெரிவித்தன.

வடக்கிலங்கை, கிழக்கிலங்கை மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து புத்தளம் பொலிஸ் பிரிவில் கடந்த ஐந்து வருடங்களுக்குள்ளாக நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் தமிழ் பேசு மக்கள் அனைவரையும் நாளை 2008.10.26 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொலிஸ் நிலையத்தில் தங்களது விபரத்தைப் பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.



பொலிஸ் பதிவுகள் நடைபெறவிருக்கும் இடங்கள் பின்வருமாறு:

புத்தளம் பொலிஸ் நிலையம்:
புத்தளம் சென்.அன்ட்றூ மத்திய மகா வித்தியாலயம்.

கருவலகஸ்வ பொலிஸ் நிலையம்:

ஸ்ரீ விஜய ரஜமகா விகாரை.

சாகியவ பொலிஸ் நிலையம்:

அளுத்கம துட்டுகெமுனு மகா வித்தியாலயம்
ரவசத்தேசம பொலிஸ் நிலையம்
சிறிசங்கபோ மரணாதார சமிதசாலாவ

ஆனமடுவ பொலிஸ் நிலையம்:

சங்கட்டிகுளம் பாடசாலை
உஸ்வ பாடசாலை
ஆனமடுவ கன்னங்கர பாடசாலை
தோனிகல பாடசாலை

பல்லம பொலிஸ் நிலையம்:

சேருகெலே பாடசாலை
கற்பிட்டி அல்அக்ஷா மண்டபம்
தலவில மகா வித்தியாலயம்
மாம்புரி ரோமன் கத்தோலிக்க பாடசாலை

முந்தல் பொலிஸ் நிலையம்:

ஆண்டிமுனை பாடசாலை
கருக்குவட்டன பாடசாலை
முந்தல் சிங்கள மகா வித்தியாலயம்
கரிக்கட்டி அகதி முகாம்
ஸ்ரீமாபுர அகதி முகாம்

வண்ணாத்தி வில்லு பொலிஸ் நிலையம்:

கரைதீவு முஸ்லிம் பாடசாலை
வட்டிகந்த முஸ்லிம் பாடசாலை

வெள்ளி, 24 அக்டோபர், 2008

திட்டமிட்டபடி மனித சங்கிலி கொட்டும் மழையிலும் தொடங்கியது!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஈழத் தமிழர்கள் வதைக்கப் படுவதைக் கண்டித்து திட்டமிட்டபடி சென்னையில் இன்று 2008.10.24 ஆம் நாள் மனிதச் சங்கிலிப் போராட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் மாலை 4 மணிக்கு கொட்டும் மழையில் வடசென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலிருந்து ஆரம்பித்து பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், சென்ட்றல், பல்லவன் சாலை வழியாக அண்ணாசாலையிலிருந்து தாம்பரம் ஊடாகவும் இம் மனிதச் சங்கிலித் தொடர் சென்றது.

தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம், ஜனநாயக முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்களும், பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் இவர்களுடன் சிறுசேமிப்பு குழு துணைத் தலைவர் திரு.ரகுமான்கான், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.ஜே அன்பழகன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் திரு.ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் திரு.கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.திருமாவளவன் ஆகியோர் அண்ணாசாலை பெரியார் சிலை அருகே மனிதச் சங்கிலித் தொடரில் கலந்து கொண்டனர்.

கடலூரில் காங்கிரஸாரினால் பிரபாகரன் கொடும்பாவி எரிப்பு!

தமிழ்நாட்டின் கடலூரில் காங்கிரஸ் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று மாவட்டத் தலைவர் திரு.நெடுஞ்செழியன் தலைமையில் ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்தனர், இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகளில் பலர் தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.கருணாநிதியையும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரையும் கண்டித்தனர்.

செயற்குழுக் கூட்டம் முடிவுற்றதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனின் உருவ பொம்மையை வீதியில் எரிக்க முயன்ற காங்கிரஸாரைப் போலீஸார் தடுக்கவே, இறுதியில் கட்சி அலுவலகத்துக்குள் கொடும்பாவியை எரித்தனர்.

தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் திரு.அறிவுடைநம்பி, தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.அறிவு, சிறுவர் எழுச்சி துணை செயலர், தொண்டரணி துணைச் செயலர் உள்பட பலர் அவ்விடத்துக்கு வந்து பிரபாகரன் கொடும்பாவியை எரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் காங்கிரஸுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வியாழன், 23 அக்டோபர், 2008

உணவுக் கப்பல்கள் தாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள மாறுபட்ட கருத்துக்கள்!

நேற்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குச் சொந்தமான றுகுணு மற்றும் நிமலவ எனும் இரு கப்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது, இக் கப்பல்களில் தாக்குதல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை:


ஸ்ரீலங்கா படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்களின் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.


தமிழ் மக்களது நலன்களில் புலிகளுக்கு அக்கறையில்லை!

தகவல் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற இரண்டு விநியோகக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் தமிழ் மக்களது நலன்களில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை புலிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுச பெல்பிட்ட வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடபகுதி கடற்பரப்பில் றுகுண மற்றும் நிமலவ என்ற இரண்டு விநியோகக் கப்பல்கள் மீது புலிகள் நேற்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இது அண்மைக்காலத்தில் வன்னி பொதுமக்களுக்காகக் கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது புலிகள் இலக்கு வைத்த இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
இம்மாதம் 16ஆம் திகதி ஐ.நா. சபையின் பதாகையின் கீழ் மருந்துப் பொருட்கள் உட்பட உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 லொறிகள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்திருந்தனர். கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவே இப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாகனத் தொடரணியை இலக்குவைத்து புலிகள் கடும் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பொதுமக்களுக்காகக் கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்களைத் தடைசெய்து, அங்குள்ள மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதே புலிகளின் நோக்கமாகும்.
பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் பிரதானமான போக்குவரத்து மார்க்கங்களாக கடல் மற்றும் ஆகாய மார்க்கங்;களையே அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. வடக்கிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. வடக்கில் இவற்றுக்கு எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாதவகையில் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடைவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்;கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கை மனிதாபிமானத்திற்கெதிரான நடவடிக்கையாகும். தாக்குதலுக்குட்பட்ட இரண்டு கப்பல்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தனியார்துறை விநியோகஸ்தர்களினாலும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
இக்கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சீரான முறையில் அத்தியாவசிப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதும் அப்பிராந்தியத்தில் மனித அவலங்களைத் தோற்றுவிப்பதுமே புலிகளின் நோக்கமாகும்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் புலிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர் என்பது தெளிவு. அப்பாவிப் பொதுமக்களது உயிர்களைப் பலியிட்டு குறுகிய அரசியல் இலாபங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை வண்மையாகக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தைக் அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒளிப்பதிவு இதில் உள்ளது.

புதன், 22 அக்டோபர், 2008

வன்னி தமிழர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

வன்னியில் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடாத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரிலுள்ள காந்தி சிலை முன்பாக நேற்று முன்தினம் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.



இவ் ஆர்ப்பாட்டத்தில் பல இளையோர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 அக்டோபர், 2008

"ஈழத்தமிழர்" - திரைப்பட இயக்குனர் சீமான்!

ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?

விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காகத்தான் நாங்க இவ்வளவு காலமும் உழைச்சோம். எல்லோருக்கும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஒரே சமதளத்தில் இயங்கணும்னு. அது இப்போ நடந்திருக்கு. அதை எதற்கு விமர்சிக்கணும்? அது மகிழ்ச்சி தானே!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழர் பிரச்சினையில் ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“தமிழ் ஈழம் தவிர, தனிநாடு தவிர வேறு தீர்வு இல்லை’ என்கிற நிலைப்பாட்டை எடுக்கிற அரசியல் கட்சிகள் உண்மையிலேயே அந்த மக்கள் குறித்து சிந்திக்கின்றன என்று அர்த்தம். “ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு மாநிலப் பகிர்வு, ஒரு அதிகாரப் பகிர்வு’ என்று பேசுபவர்கள் எல்லாம் அரசியல் பண்ணுகிறார்கள் என்பதே என் கருத்து.

ஏனென்றால் மாநில சுயாட்சி என்பது எல்லாம் இறையாண்மை மிக்க நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவுக்குள்தான் சாத்தியமான விஷயம். இலங்கை போன்ற ஒரு மதத் தீவிர நாட்டில் இறையாண்மையே இல்லை; அப்புறம் எப்படி மாநில சுயாட்சி சாத்தியம்?

தமிழர் பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு என்ன?


தமிழ் ஈழம் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு தீர்வு கிடையாது என்பதைச் சொல்லி வருகிறோம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிஞ்சு போனபோது அதை யாரும் பிரிவினையாகக் கருதலை. அதே பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிஞ்சுபோனபோது அதையும் இவங்க பிரிவினையா கருதலை.

ஸ்ரீலங்காவில் மொழி, இனம், மதம், பண்பாடு கலாசாரம், வாழ்வியல் அமைப்புகள் என்று எல்லா வழிகளிலும் தமிழர்கள் அங்கே மாறுபடுகிறோம். அதனால நாங்க தனியா ஒரு நாடு கேட்கிறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. 10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட கொசாவா இன்னைக்கு விடுதலை அடையும்போது நாங்க ஏன் விடுதலை அடையக்கூடாது? இதை நீங்க தமிழீழத்தில் வாழும் மக்களின் விடுதலையாகக் கருதக்கூடாது.

உலகமெங்கும் பரவி வாழக்கூடிய 12 கோடி மக்களின் தேசிய இன விடுதலையாகத்தான் பார்க்கணும். உலகத்தில் எல்லா நாட்டு விடுதலைகளையும், புரட்சிகளையும் ஆதரித்த தேசங்களும், இயக்கங்களும், மனிதநேயமிக்க அமைப்புகளும் எங்கள் விடுதலையை மட்டும் தீவிரவாதமாகப் பார்க்கும் காரணம்தான் என்ன என்பது எங்களுக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

சர்வதேச நாடுகளை “கன்வின்ஸ்’ பண்ண நீங்கள் முயற்சி எடுத்தீர்களா?


நாங்க சர்வதேச நாடுகளில் எல்லாம் போய் பேசறோம். அந்தப் பேச்சின் வடிவத்தை அந்தந்த நாட்டின் மொழிகளில் மொழிபெயர்த்து ஏடுகளில் போடச் சொல்கிறோம். அப்படித்தான் நாங்கள் எங்கள் குரல்களை எழுப்பி உலகத்தாரின் கவனத்தை, எங்கள் பக்கம் திருப்புகிறோம். இப்போது தமிழ்நாட்டில் எழுந்திருக்கிற இந்த இன எழுச்சி, சர்வதேசக் கதவைத் தட்டும்னு நினைக்கிறோம். உலக சமுதாயம் ஈழத்தமிழர் பற்றி ஒருமுறை மெளனமாகச் சிந்திக்கட்டும்னு நினைக்கிறோம். இந்த நெருப்பை அணையவிடாம ஏந்தி நாங்கள் எடுத்துச் செல்வோம்.

இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் செய்கிறதா?


இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வந்தாலும் நாங்கள் அவர்களோடு சண்டையிட்டுக் கொள்கிறோம். தமிழீழத்தில் வாழும் எல்லா மக்களும் இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடென்றே கருதுகிறார்கள். தன் ஆறரைக் கோடி சொந்த உறவுகளை வைத்திருக்கிற ஒரு நாடாகவே அவர்கள் இந்தியாவை மதிக்கிறார்கள். அதனால் இந்தியா பகை நாடாக மாறுவதை தமிழர்கள் விரும்பவில்லை.

இப்போது பாகிஸ்தான்காரன் ஒரு நாளைக்கு ரெண்டு கப்பல் ஆயுதங்கள் அனுப்பறான். அதை இறக்காதேன்னு சொல்லணும். விடுதலைப் புலிகளையோ அதன் தலைமையையோ அழிச்சி ஒழிச்சிட்ட பிறகு, அந்தக் கருவிகளை வைத்து சிங்களவன் என்ன செய்வான்? அங்கிருக்கிற பாகிஸ்தானியை, அமெரிக்க துருப்புகளை வச்சிக்கிட்டு என்ன செய்வான்?

அந்த ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தமாட்டான்னு நீங்க எப்படி நம்புறீங்க? 70 குண்டுகளை ஒரே நேரத்தில் வீசுகின்ற ஒரு பல்குழல் பீரங்கியை பாகிஸ்தான் கொடுத்திருக்குது. அங்கே மன்னாரிலிருந்து அடிச்சா, அது மதுரையில் வந்து விழும். இது இந்தியாவுக்குத் தெரியுமா? தெரியாதா? அதனாலதான் ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு சொல்றோம்.

ஆனால் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் பிரபாகரன் இருக்கிறார் என்கிறார்களே?


அது தவறு. பிரபாகரனும், ஈழ மக்களும் இந்தியாவின் மீது எத்தகைய அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி மாளாது. ஆனால் இந்திய தேசத்து மீனவர்கள் 306 பேரை இதுவரை சிங்கள இராணுவம் சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அச்சுறுத்தல் இல்லையா? பிரதமர் சொல்லியிருக்கிறார். இனிமேல் செய்யவில்லை என்கிறார்கள். பாதுகாப்புச் செயலர் நாராயணன் முதல்வரிடம் உத்தரவாதம் தருகிறார், இனிமே நடக்காதென்று. அவர் டெல்லி போய் இறங்கவில்லை… சுட்டு வீழ்த்தி விட்டார்கள்.

கச்சதீவு எங்கள் சொத்து. அதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவனை தனுஷ்கோடி வரை துரத்தி வந்து சுடுகிறான் என்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? இதை ஏன் இந்தியா கண்டிக்கலை? உண்மையில் யார் அச்சுறுத்துவது? உன் தேசத்து மக்களை தினம் சுட்டு வீழ்த்திகிட்டிருக்கிறது இலங்கை இராணுவமா? இல்லை விடுதலைப் புலிகளா?

ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்றது விடுதலைப் புலிகள் தானே?


இந்தியா, தமிழீழம் மலர்வதை விரும்பாத ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டதால் அதற்கு எதிராக என்னென்ன செய்யலாம் என்று யோசிக்கிறது. அதற்கு ஒரு முகமூடி இருக்கிறது. அது ராஜீவ்காந்தியின் மரணம். அப்படியென்றால் ராஜீவ்காந்தியின் மரணத்துக்கு பழிக்குப்பழி வாங்குகிறீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள்; நாங்கள் அனைவரும் செத்து ஒழியத் தயார்.

இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். ராஜீவ்காந்தியின் மரணத்தைப் பேசுகின்ற பெருமக்களுக்கு தேசப்பிதா காந்தியின் மரணத்தைப் பற்றிப் பேச தைரியம் இருக்கா? அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைக் குறை கூற தைரியம் இருக்கா? ராஜீவ்காந்தியின் அம்மா இந்திரா காந்தியை சுட்டு வீழ்த்திய சீக்கியர் பற்றி அந்த அம்மையாரின் நினைவு தினத்திலேயோ, பிறந்த நாளிலேயோ பேசுவதற்கு ஒரு காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்தவருக்காவது தைரியம் இருக்குதா?

காங்கிரஸ் தலைமையிலான அரசில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற பா.ம.க. போன்ற கட்சிகள் அங்கம் வகிப்பது இரட்டை வேடம்தானே?


இந்த மண்ணுக்கான அரசியல் வேறு; தமிழீழத்துக்கான அரசியல் வேறு. இந்த மண்ணுக்கான அரசியலை செய்து, வென்று செல்வாக்கில் இருந்தால்தான் நீங்கள் அந்த மண்ணுக்கான அரசியலைச் செய்ய இயலும். இப்போ திருமாவளவன்ற மிகப் பெரிய போராளியை நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அந்தக் கட்சியை, ஒரு சின்னம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்க்கப் போராடுகிற போராட்டமே அவருக்குச் சரியாக இருக்கு.

கொள்கை அளவிலயோ, உழைப்பிலேயோ, தியாகத்திலேயோ நோக்கத்திலேயோ அவரை நீங்க யாரோடும் குறைச்சு மதிப்பிட முடியாது. ஆனா ஒரு அரசியல் கட்சியின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் பொதுப்பிரச்சினை என்று வரும்போது ஒன்றாகிறார்களா? ஒருமித்து வருகிறார்களா என்பதுதான் நமக்குத் தேவை.

நடிகர், நடிகைகள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அறிவித்திருக்கும் போராட்டம் பற்றி?


அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நான்தான் அதைச் செய்ய விரும்பி சரத்குமார் ஸார், பாரதிராஜா அப்பா உட்பட எல்லார்கிட்டேயும் பேசினேன். அடிப்படையில் அவங்களும் உணர்வுள்ள தமிழர்கள். அதனால் இது குறித்து நல்ல ஒரு புரிதல் இருந்தது. இது கடமை. தமிழன் காசில், உழைப்பில் தான் நாம வாழறோம். அவன் பணம் வேண்டும்; ஆனால் அவன் உயிர் வேண்டாமா என்கிற கேள்வி எழுது. சக தமிழனா இல்லைன்னாலும், சக மனுஷனா அவனது படுகொலைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது நம் கடமை.

நெய்வேலி காவிரிப் போராட்டம், ஒகேனக்கல் உண்ணாவிரதம் போன்று இதையும் சிலர் அரசியலாக்கிவிட்டால்..?


இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை, உயிர்ப் பிரச்சினை என்பதால அப்படிச் செய்ய மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்

திங்கள், 20 அக்டோபர், 2008

மெலமைன் சேர்க்காத பால்மா உள்ளதா?

சீனாவின் பால்மாவினுள் மெலமைன் சேர்க்கப்பட்டுள்ளதால் பாலுணவு அருந்திய 53,000 குழந்தைகள் சிறுநீரகப் பாதிப்புக்கு இலக்காகியதுடன் பத்துப் பேருக்கும் அதிகமான சிறார்கள் மரணித்தும் உள்ளதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் சீனப் பால்மா பிரச்சனை மேற்குலக நாடுகளின் சதியா? எனும் தலைப்பில் "உதயன்" நாளேட்டுக்காக அருள் எழுதிய கட்டுரையை "களத்துமேடு" நன்றியுடன் மீள் பதிவு செய்கின்றது.

நன்றி: உதயன்


ஞாயிறு, 19 அக்டோபர், 2008

வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி இராமேஸ்வரத்தில் தென்னிந்திய திரைபடத்துறையினர் ஆர்ப்பாட்டம்! (பட இணைப்பு)

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதலை நிறுத்தக் கோரி டைரக்டர் திரு.பாரதிராஜா தலைமையில் தென்னிந்திய திரைப்படத் துறையினர் இந்திய மத்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முகமாக ஆர்ப்பாட்டமொன்றினை இராமேஸ்வரத்தில் நடத்த சென்னையிலிருந்து விசேட புகையிரதத்தில் இராமேஸ்வரம் சென்றுள்ளனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றுகையில், ஆதி காலத்தில் கரிகால சோழன் இலங்கை மீது படையெடுத்து சிங்களர்களை வெற்றி கொண்டு அவர்களை அடிமை படுத்தி கல்லணையை கட்டினான்.

ஆதித் தமிழர்கள் பூமியாக "லேமுரிய கண்டம்" மூழ்கிய போது அதன் மேல் உள்ள மலைப் பங்கான பூமி எச்சமே இலங்கை ஆகும். மட்டகளப்பு மண்ணையும்,மதுரை மண்ணையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒரே மண்ணே என நிருபணம் ஆனது.

அந்த மண்ணின் மைந்தர்களை இன்று கொடுங்கோலன் ராஜபக்ஷ விரட்டி கொல்கிறான், அடுத்த வருடம் நடக்கும் தேர்தலில் வெற்றி பெற, தமிழனை கொன்று குவித்து அந்த பிணத்தின் மீது அரியாசனம் ஏற முயல்கிறான்.

விடுதலை புலிகள் தமிழனை கேடயமாக பயன்படுத்து வதாக கூசாமல் பொய் சொல்கிறான், தமிழனை முன் நிறுத்தி அவர்களை கொன்றொழித்து, இவன்தான் வெற்றி பெற துடிக்கிறான்.

தமிழ் இனம் மானம் மிகுந்தது, வீரம் செறிந்தது, தமிழன் இறுதியில் வென்றே தீருவான், மட்டக்களப்பில் தமிழ் பெண்ணின் பிறப்பு உறுப்பில் வெடிகுண்டு வைத்து கொல்லும் கேடுகெட்ட ஈனத்தனமான வீரம் சிங்களனுடையது, அப்பாவி பிஞ்சுகள் மீது ரசாயன குண்டுகளை வீசி அழிக்கும் வீரம் இவனுடையது.

இந்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள், உடனே ராடார் கருவிகளை திரும்ப பெற வேண்டும், அக்கருவிகளை இயக்க கூட தெரியாத அந்த முட்டாள்கள் இரண்டு இந்தியரை வைத்து இயக்கி கொண்டுள்ளனர் அவர்களையும் திரும்ப அழைக்க வேண்டும்.

இப் போராட்டத்துக்கு ஆதரவு செய்து எதிர்வரும் நவம்பர் முதலாம் நாள் சென்னையில் காலை முதல் மாலை வரை கமலஹாசன், ரஜனிகாந்த் உட்பட தென்னிந்திய நடிகர்கள் பலரும் உண்ணாவிரததப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளதாக நடிகர்கள் சங்க தலைவர் திரு.சரத்குமார் தெரிவித்துள்ளார்.




சனி, 18 அக்டோபர், 2008

"தமிழ் அலை" பத்திரிகைக் காரியாலயத்தில் கருணா, பிள்ளையான் குழு மோதல்!

மட்டக்களப்பில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டு வரும் "தமிழ் அலை" பத்திரிகையினை ஆக்கிரமிக்கும் நோக்கில் தலைமைக்காகச் சண்டையிடும் கருணா, பிள்ளையான் குழுக்களிடையே நேற்று மோதலேற்பட்டது.

பத்திரிகைக் காரியாலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கருணா குழுவினர் அங்கிருந்த 13 பேரைக் கைது செய்ததுடன், ஆயுதங்களையும் மீட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

வெள்ளி, 17 அக்டோபர், 2008

கோயமுத்தூரில் மகிந்தவின் கொடும்பாவி எரிப்பு

ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ஷ அரசினால் நடாத்தப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 2008.10.15 ஆம் திகதி புதன்கிழமை இந்திய தமிழகத்தின் கோயமுத்தூரில் மாணவர்கள் வகுப்புகளும் புறக்கணித்து எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் இறுதியில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் எரித்தனர்.


வியாழன், 16 அக்டோபர், 2008

ஜூனியர் விகடனுக்காக பா.நடேசனின் செவ்வி!


இந்திய தமிழகத்தில் இருந்து வெளிவரும் "ஜூனியர் விகடன்" சஞ்சிகைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் வழங்கிய செவ்வி.

நன்றி: உதயன்

புதன், 15 அக்டோபர், 2008

ஸ்ரீலங்கா படையினர் தமிழ் மக்கள் மீது தொடரும் யுத்தத்தை நிறுத்தாவிட்டால் தமிழக பா.உ. பதவி விலகுவர்!

ஸ்ரீலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் மீது தொடரும் போரை இரு வாரங்களுக்குள் நிறுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக நேரிடுமென தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்., கம்யூ., தி.க., விடுதலை சிறுத்தைகள் , சமத்துவ மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டன.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ., ம.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., பங்கேற்கவில்லை.

இப் பதவி விலகலின் முதற்படியாக கருணாநிதி கனிமொழி திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதத்தை தந்தை கருணாநிதியிடம் கையளித்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

செவ்வாய், 14 அக்டோபர், 2008

மீண்டும் ஆழிப் பேரலை தாக்கக்கூடும் - இலங்கை விஞ்ஞானி

ஆழிப் பேரலை மீண்டும் விரைவில் தாக்கக் கூடிய நிகழ்வுகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

சுமத்ரா தீவுக் கடலுக்கு அடியில் ஏற்படப் போகும் புவி அதிர்வு காரணமாகவே இந்த ஆழிப் பேரலை ஏற்படலாம், கடலடிப் படுக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உணர்ந்த, சுமத்ராப் பகுதிகளிலுள்ள மீனினங்கள் தற்போது இலங்கைக் கடற்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலும் இவ்வாறான மீனின இடப்பெயர்வு ஏற்பட்டிருந்ததாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

ரிஎம்விபி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு வீடு செல்லவும் - கருணா அம்மான்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி வழங்கியிருப்பதாகவும், இதனால் கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா படையில் இணையுமாறும், இல்லையேல் துப்பாக்கிகளைக் கைவிட்டு வீடுகளுக்குச் சென்று பொது வாழ்வில் இணையுமாறு அக் கட்சியின் தலைவர் கருணா அம்மான் ஸ்ரீலங்கா "சன்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.


இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் இருந்து அப்பாவி இளைஞர்கள் தப்பிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுவதுடன் ஜனநாயக சுதந்திரத்தினைப் பாதுகாக்கலாம் எனவும் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 11 அக்டோபர், 2008

கிழக்கில் தொடரும் ஆட்கொலைக்கு முதலமைச்சர் பொறுப்பு கூற வேண்டும் - ரெட்ணம்

2008.10.02 ஆம் திகதி மட்டக்களப்பு, வலம்புரி வியாபார நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா காவற்துறையினரால் 18 வயதுடைய கந்தசாமி குகதாஸ் மற்றும் 26 வயதுடைய ஏ.குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர், இவர்களை உறவினர்கள் சென்று பார்வையிட்டும் வந்திருந்தனர்.

இவ் இருவருடைய உடலங்களும் காத்தான்குடி கடற்பகுதியில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அடிக்கடி காணாமற் போதலும் ஆட்கடத்தலும், ஆட் கொலையும் கிழக்கிலங்கையில் சர்வ சாதாரணமாக நிகழ்வதால் இதற்குரிய முழுப் பொறுப்பையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேட்டுள்ளார்.

அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனாவின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரி!

2008.10.09 ஆம் திகதி பொரலஸ்கமுவையில் அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனவின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பின் தற்கொலைதாரியின் புகைப்படத்தினையும், இந்தப் பெண் சம்பந்தமான தகவல்களைத் தருமாறு பின்வரும் தொலைபேசி இலக்கங்களையும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பு அறிவித்துள்ளது.



தொலைபேசி இலக்கங்கள்:
119
0112662311
0112662323
0112854931

வெள்ளி, 10 அக்டோபர், 2008

ஸ்ரீலங்காவின் விமானக் குண்டுத் தாக்குதலுக்கு தாயும் மகளும் பரந்தனில் பலி!

ஸ்ரீலங்கா விமானப் படையினர் கிளிநொச்சியை அண்டியுள்ள பரந்தன் குமரபுரம் பகுதியில் 2008.10.10 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நடத்திய விமானக் குண்டு வீச்சில் பரந்தன் இந்து வித்தியாலய பாடசாலை ஆசிரியை 50 வயதுடைய அருமைநாதன் சந்திராதேவி, இவரின் மகளான 10 வயதுடைய அருமைநாதன் அச்சிகா ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன், அதே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உட்பட ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தோர் விபரம்:

தா.அருமைநாதன் - 52 வயது
அருமைநாதன் அஜிதன் - 12 வயது
சிறிகாந்தா துவாரகன் - 13 வயது
மனோகரன் உசா - 32 வயது
த.சிவானந்தன் - 39 வயது
க.யோகம்மா - 65 வயது

புதன், 8 அக்டோபர், 2008

கருணா அம்மான் பா.உ. எதிராக ஜேவிபி வழக்கு தாக்கல்!

ஜனதா விமுக்தி பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வஸந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கருணாஅம்மான் 2008.10.06 ஆம் திகதி 1570/6 எனும் விசேட வர்த்தமானி அறிவுறுத்தலின் பிரகாரம் நேற்று நியமிக்கப்பட்டதானது சட்டத்திற்கு முரணானதெனக் காரணம் காட்டி, ஜே.வி.பி. பொதுச்செயலாளர் ரில்வில் சில்வா இவ் வர்த்தமானி பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்ததுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைப் பிரதிவாதிகளாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வி.முரளிதரன் பா.உ. சத்தியப் பிரமாணம் (படம் இணைப்பு)


ஸ்ரீலங்கா பாராளுமன்ற சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார முன்னிலையில் வி.முரளிதரன் கருணா அம்மான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்த போது எடுக்கப்பட்ட படம்.

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கருணா அம்மான் பாராளுமன்றில் ஆற்றிய கன்னி உரை!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொகுபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததைத் தொடர்ந்து சபையில் கருணா அம்மான் கன்னி உரையாற்றினார்.

"பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தப் பதவியை எனக்குத் தந்தமைக்கு ஜனாதிபதிக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இப்பதவி எனக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்றாக நான் கருதவில்லை. தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள கௌரவத்தையே இப்பதவி பிரதிபலிக்கிறது. தமிழ் மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து பாராளுமன்ற ஜனநாயகம் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த காலங்களில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்"

திங்கள், 6 அக்டோபர், 2008

விடுதலைப்புலிகளின் அரசியலகங்கள் மீதான தாக்குதல் - இக்பால் அத்தாஸ்

நேற்று 2008.10.05 ஆம் திகதி வெளிவந்த "சண்டே டைம்ஸ்" பத்திரிகையில் பிரசுரமாயிருந்த, இராணுவ களநிலை ஆய்வாளர் திரு.இக்பால் அத்தாஸ் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள்.







நன்றி: உதயன்

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----