தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று 2008.10.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் மன்னாரில் உள்ள தள்ளாடி ஸ்ரீலங்கா படைத்தளத்தின் மீதும், இரவு 11:45 மணியளவில் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
இவ்விரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் அனைத்தும் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளனவென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு களனி திஸ்ஸ மின்சார மையத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நடாத்திய தாக்குதலில் மின் பிறப்பாக்கி ஒன்று சேதத்துக்கு இலக்காகியதாகவும், தாக்குதலில் சிக்குண்ட ஒரு பணியாளர் அதிர்ச்சிகுள்ளாகி காயமேதுமின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று மரணித்துள்ளார், தள்ளாடி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் படையினர் மூவர் காயத்துக்கு இலக்காகியுள்ளதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்ததாக ஸ்ரீலங்கா உத்தியோகபூர்வ ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.
"இரு இலக்குகள் மீதான புலிகளின் வான் தாக்குதல் முறியடிப்பு" - ஸ்ரீலங்கா ஊடகச் செய்தி:
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீதும் மன்னார், தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு புலிகளின் இலகு ரக விமானம் தாக்குதல் நடத்தியாதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்துக்கோ மன்னார், தள்ளாடி இராணுவமுகாமுக்கோ பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மீது புலிகளின் இலகு ரக விமானம் நேற்று இரவு 11.30 மணியளவில் 2 குண்டுகளை வீசியுள்ளது.
இதனால் மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி ஒன்று தீப்பிடித்ததால் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த வந்த கொழும்பு, தீ அணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்தனர். இதன் போது மின்சார சபை ஊழியர் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்று வழமைபோல் இடம்பெறுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மன்னார் தள்ளாடி இராணுவமுகாம் மீதும் நேற்று இரவு 10.20 மணியளவில் புலிகள் விமானம் மூலம் 3 குன்டுகளை போட்டுள்ளனர். இத்தாக்குதலினால் இராணுவ முகாமுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் படை வீரர் ஒருவர் சிறுகாயங்களுக்கு உட்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாக்குதலையடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தறையிறங்குவதற்காக வந்த 2 விமானங்கள் சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நவீன ரக ரேடார் கருவிகளும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றன, இனிமேல் அவர்களால் எவ்வித தாக்குதலும் நடத்த முடியாது, வானில் பறந்தாலே சுட்டு வீழ்த்தி விடுவோம் என்று கூறிய ஸ்ரீலங்காவின் கூற்றுக்கு அவர்களின் பாசையிலையே பதில் சொல்லியுள்ளார்கள் விடுதலைப் புலிகள்.
இலகு ரக விமானத்தின் மூலமோ அல்லது கன ரக விமானத்தின் மூலமோ எவற்றாலும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் ஏக காலத்தில் பல விமானங்களின் மூலம் தாக்குதல் நடாத்த முடியுமென விடுதலைப் புலிகள் நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
ரேடார் கருவிகளும், இலக்குத் தவறாமல் தாக்குதல் நடத்தக் கூடிய விமான எதிர்ப்பு கருவிகளும், அவற்றைச் செவ்வனே இயக்கக் கூடியவர்களும் இருந்தால் ஏன் ஸ்ரீலங்கா படை தரப்புக்கு தயக்கம் ஏற்பட வேண்டும், ஒரு வேளை இவ் இயக்குநர்கள் நித்திரையில் இருந்திருப்பார்களோ!
தேர்ந்தெடுக்கும் இலக்குகள் மீது தமிழீழ வான்புலிகளால் இலகுவாக தாக்குதல்களை நடத்தி சேதத்தை ஏற்படுத்தி விட்டு தளம் திரும்பக் கூடிய நிலை கடினமான இந்த யுத்த சூழ்நிலையில் இருக்கின்றது, ஆனால் உலக நாடுகளில் பயிற்சிகளைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா வான்படையால் சரியான இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்த முடியாமல் இருக்கின்றது.
ஸ்ரீலங்கா ஊடகச் செய்தியின் கருத்தினை உற்று நோக்கும் போது "விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை"யென பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுவது தெரிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் கொழும்பு களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதலை நடாத்தியதன் பின்னர் ஸ்ரீலங்கா படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் கொழும்பு வான் பரப்பு நெருப்புக் கற்றைகளைக் கொண்டதாகக் காட்சியளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.