நேற்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்குச் சொந்தமான றுகுணு மற்றும் நிமலவ எனும் இரு கப்பல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியது, இக் கப்பல்களில் தாக்குதல் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கை:
ஸ்ரீலங்கா படையினருக்கான தமது வழமையான வழங்கல் பணியை முடித்தபின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்களின் மீது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் மகளிர் துணைத்தளபதி கடற்கரும்புலி லெப். கேணல் இலக்கியா தலைமையில் சென்ற அணி மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.
தமிழ் மக்களது நலன்களில் புலிகளுக்கு அக்கறையில்லை!
தகவல் திணைக்கள பணிப்பாளர் அறிக்கை
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களையும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்றிச் சென்ற இரண்டு விநியோகக் கப்பல்களைத் தாக்கியதன் மூலம் தமிழ் மக்களது நலன்களில் தங்களுக்கு அக்கறையில்லை என்பதை புலிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுச பெல்பிட்ட வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடபகுதி கடற்பரப்பில் றுகுண மற்றும் நிமலவ என்ற இரண்டு விநியோகக் கப்பல்கள் மீது புலிகள் நேற்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். இது அண்மைக்காலத்தில் வன்னி பொதுமக்களுக்காகக் கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீது புலிகள் இலக்கு வைத்த இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
இம்மாதம் 16ஆம் திகதி ஐ.நா. சபையின் பதாகையின் கீழ் மருந்துப் பொருட்கள் உட்பட உணவு மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 லொறிகள் மீது புலிகள் தாக்குதல் தொடுத்திருந்தனர். கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காகவே இப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன. இவ்வாகனத் தொடரணியை இலக்குவைத்து புலிகள் கடும் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பொதுமக்களுக்காகக் கொண்டுசெல்லப்படும் நிவாரணப் பொருட்களைத் தடைசெய்து, அங்குள்ள மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதே புலிகளின் நோக்கமாகும்.
பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்லும் பிரதானமான போக்குவரத்து மார்க்கங்களாக கடல் மற்றும் ஆகாய மார்க்கங்;களையே அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது. வடக்கிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. வடக்கில் இவற்றுக்கு எந்தவித பற்றாக்குறையும் ஏற்படாதவகையில் மனிதாபிமான உதவிகள் முறையாக சென்றடைவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல்;கள் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கை மனிதாபிமானத்திற்கெதிரான நடவடிக்கையாகும். தாக்குதலுக்குட்பட்ட இரண்டு கப்பல்களும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தனியார்துறை விநியோகஸ்தர்களினாலும் பயன்படுத்தப்பட்டவையாகும்.
இக்கப்பல்கள் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு சீரான முறையில் அத்தியாவசிப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதும் அப்பிராந்தியத்தில் மனித அவலங்களைத் தோற்றுவிப்பதுமே புலிகளின் நோக்கமாகும்.
இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் புலிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகின்றனர் என்பது தெளிவு. அப்பாவிப் பொதுமக்களது உயிர்களைப் பலியிட்டு குறுகிய அரசியல் இலாபங்களை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை வண்மையாகக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்தைக் அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் பற்றிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒளிப்பதிவு இதில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.