வெள்ளி, 28 நவம்பர், 2008

மட்டக்களப்பில் மூன்று நாட்களில் 22 பேருக்கும் மேற்பட்டோர் கொலை!

மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக ஆட்கொலைகள் குடும்பம் குடும்பமாக இடம் பெற்று வருகின்றன, இக் கொலைகளுக்கான சூத்திரதாரிகள் இன்னும் இனம் காணப்படாத்தால் இப் பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் இக் கொலைகளைக் கண்டித்தும், நீதியான விசாரணை கோரியும் இன்று மட்டக்களப்பு மாநகர சபை மேயர் சிவகீத்தா பிரபாகரன் தலைமையில், மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நகரின் மணிக்கூண்டு கோபுரத்தின் கீழ் அடையாள உண்ணாவிரதத்தினை நடாத்தினர்.

 கிழக்கில் நடைபெறும் படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

 கடத்தல்கள், காணாமல்போதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.

 எமது மக்களினதும் பிரதேசத்தினதும் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

 கடந்த 26ம், 27ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 22க்கு மேற்பட்ட கூட்டுப்படுகொலைகளும் ஏனைய படுகொலைகளும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இவை போன்ற பல பதாதைகளைத் தாங்கி நடாத்தப்பட்ட உண்ணாவிரத முடிவில் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

தொடரும் இக் கொலைகளை நிறுத்தக் கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் திரு. பிள்ளையான் சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கடிதமொன்றினையும் எழுதியுள்ளார்.

2008.11.25 ஆம் திகதி மாலை முதல் இன்று மாலை வரை 22 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கொல்லப்பட்டோர் விபரம்:
2008.11.25

1. சாமித்தம்பி திருச்செல்வம், 61 வயது, ஓய்வுபெற்ற கிராமசேவகர்,
எருவில், களுவாஞ்சிக்குடி

2. எம்.நேசம்மா, 85 வயது - தாய்
எருவில், களுவாஞ்சிக்குடி

3. திருச்செல்வம் ஜேசுதாஸன், 25 வயது - மகன்,
எருவில், களுவாஞ்சிக்குடி

4. கந்தையா இராசலிங்கம்,
முருகன் கோவிலடி, களுவாஞ்சிக்குடி

5. இராஜேந்திரன் தீபன், 29 வயது,
ஆரையம்பதி, மட்டக்களப்பு

6. எம்.குணசேகரம், 35 வயது
தும்பாலஞ்சோலை, ஆயித்தியமலை, கரடியனாறு

7. குணமணி (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு

8. சிவநாதன் (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு

9. பிரதீபன் (விசேட அதிரடிப்படை மீது தாக்குதல் செய்ய முனைந்த போது சுட்டுக்கொலை)
கரவெட்டி, வவுணதீவு

10.பொன்னையா சோதிமலர், 27 வயதுடைய பெண்,
ஆற்றங்கரை வீதி, கிண்ணையடி, வாழைச்சேனை

11.ஜோதி சாமுவேல், 33 வயது,
பதுளை வீதி, கரடியனாறு

2008.11.26

12.கணபதிப்பிள்ளை விநாயகமூர்த்தி 40 வயது ,
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை

13.திருமதி விநாயகமூர்த்தி கலாராணி 34 வயது, மனைவி
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை

14.வி.தனூஷா, 18 வயது, மகள்
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை

15.வி.ரிஷாந்தன் 16 வயது, மகன்
கல்லடிப் பிள்ளையார் கோவில் வீதி, களுதாவளை

16.அருளையா விஜயகுமார், 30 வயது,(தாய் பிள்ளையம்மா - 67 வயது, படுகாயம்)
தேவாலய வீதி, தாளங்குடா, மட்டக்களப்பு.

17.அருளையா விக்கினேஸ்வரன், 28 வயது,
கொலனி வீதி, களுவங்கேணி, ஏறாவூர்.


18.செல்வரெட்ணம் ரமேஸ் (கண்ணன்), 33 வயது,
முருகன் கோவில் வீதி, பேத்தாளை, கற்குடா.

2008.11.27

19.சுப்ரமணியம் கமல்ராஜ், 32 வயது,
மட்டு.மாமாங்கம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பூசகர்

20.பெரியதம்பி முத்துப்பிள்ளை, 45 வயது,
பத்தரைக் கட்டை, வவுணதீவு, மட்டக்களப்பு.

21.சின்னத்தம்பி குலேந்திரன், 27 வயது,
ஒட்டியாத்துறை, பாலமுனை, மண்டூர்

22.ஞானகுரு மோகனதாஸ், 32 வயது,
கடற்கரை வீதி, பனிச்சங்கேணி, கதிரவெளி






யாழ்ப்பாணத்தில் வெள்ளக்காடு, மக்கள் இடம்பெயர்வு!

கடந்த 2008.11.24 ஆம் திகதி இரவு பலத்த காற்றுடன் வீசிய கனமழையினால் யாழ்ப்பாணம் வரலாறு காணாத வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றது, இதனால் 32000 பேர் பாதிப்புக்குள்ளாகி இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம் பெயர்ந்துள்ளோர் விபரம்:

அனைக்கோட்டை : 570 குடும்பங்கள்
தங்கியுள்ள இடங்கள்:
கலைஒளி சனசமூக நிலையம் - 30 குடும்பங்கள்
உயரப்புலம் அ.மி.த.க.பாடசாலை - 90 குடும்பங்கள்
ஆதவன் பாடசாலை - 450 குடும்பங்கள்

நவாந்துறை : 130 குடும்பங்கள்
(நாவாந்துறை நித்தியஒளி, வசந்தபுரம், சாயிபுரம்)

நல்லூர் : 112 குடும்பங்கள்
(ஜே/81, ஜே/103)

யாழ்.இந்துக் கல்லூரி - 650 பேர்
இந்து மகளிர் கல்லூரி - 534 பேர்

காரைநகர் : 100 குடும்பங்கள்
(ஊரி, பிட்டிஎல்லை, மருதபுரம், வியாவில், கல்லந்தாழ்வு)
தங்கியுள்ள இடம்:
வியாவில் ஐயனார் ஆலய மண்டபம்
வலந்தலை பொதுக் கட்டடம்

புன்னாலைக்கட்டுவன்
(புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கம்பம்புலம்)
தங்கியுள்ள இடம்: புன்னாலைக்கட்டுவன் மகா வித்தியாலயம்

ஊரெழு
(ஊரெழு கிழக்கு, ஊரெழு மேற்கு)
தங்கியுள்ள இடம்: ஊரெழு கலைவாணி முன்பள்ளி

யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட முடியாத அளவுக்கு பிரசவ விடுதி, இருதய சிகிச்சைப் பிரிவு பகுதிகளில் வெள்ளம் பன்னிரெண்டு அங்குலத்துக்கும் மேலாக பரவியுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து கிடப்பதாலும், வீதிகளில் வெள்ளப் பெருக்கு இருப்பதாலும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ணைப் பாலம் சேதமுற்றுள்ளதால் தீவகங்களுக்கான மக்கள் போக்குவரத்தும் பாதிப்புற்றுள்ளது.













நன்றி: உதயன்

புதன், 19 நவம்பர், 2008

யாழ்ப்பாண இடப்பெயர்வு - புதுவை இரத்தினதுரை


யாழ்ப்பாண இடப்பெயர்வு தொடர்பாக கவிஞர் புதுவை இரத்தினதுரை தனது சாரீரத்துடன் பதிவு செய்த கவிதை.

தமிழர் புனர்வாழ்வுக் கழக நிதி அனைத்தும் ஸ்ரீலங்கா அரசுடமையாக்கப்பட்டுள்ளது!

ஸ்ரீலங்கா வங்கிக் கணக்குகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 7.1 மில்லியன் ரூபா நிதியனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .

ஸ்ரீலங்காவின் சட்டதிட்டத்துக்கமைய அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம், சர்வதேச ரீதியில் சேகரித்த நிதியை ஸ்ரீலங்கா வங்கிக் கணக்குகளில் வைத்திருந்தது, ஸ்ரீலங்கா அரசாங்கம் இக் கணக்கினை 2006.09.04 ஆம் திகதி முடக்கி விசாரணையை மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து, மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற நிதியனைத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் காரணத்தினால், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கிக் கணக்கு நிதி அனைத்தும் அரசுடமையென அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவில் இயங்கிக் கொண்டிருக்கும் 20 அரச சார்பற்ற நிறுவனங்கள் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் அவற்றின் மீது விசேட புலனாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் மத்தியவங்கி மேலும் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 18 நவம்பர், 2008

தமிழீழம் ஏன் சுருங்குகின்றது - களநிலை ஆய்வு

இன்றைய களநிலையை எடுத்து நோக்கினால் தமிழீழ விடுதலைப் போராட்டம் கால் நூற்றாண்டுக்கு முந்திய நிலைக்கு மாறிக் கொண்டிருப்பது புலனாகின்றது.

இம் மாற்றத்துக்கு பல காரணிகளை தரப்படுத்தலாம், அவற்றில் முதன்மையானது ஈழ விடுதலையை நேசித்தவர்களிடையே ஒற்றுமையின்மை, இதற்குக் காரணம் ஈழ விடுதலையை உணர்வுரீதியாக வென்றெடுக்கப் புறப்பட்ட இளைஞர்களைத் துரோகிகளென நாமமிட்டு 1986 மே மாதத்தில் இருந்து பகிரங்கமாகச் சுட்டுச் சரித்தமை, திரு.வே.பிரபாகரனைத் தலைவராகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த வேறெந்த ஈழ விடுதலை அமைப்புக்களும் செயற்படக் கூடாதென ஒருதலைப் பட்சமாக எடுத்த பாதகமான முடிவு.

இதில் தப்பிப் பிழைத்தோர் விடுதலை வேட்கையை உதறிவிட்டு குடும்ப வாழ்க்கைக்கென பிரவேசித்த போதும், அவர்களைத் தேடித் தேடி கொன்றொழித்தமை, செல்வந்தர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஓடித் தப்பினார்கள், குறைந்த பட்சம் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கேனும் தப்பிச் செல்ல வசதியற்ற, குடும்ப வாழ்க்கையில் ஒன்றித்து உயிர் வாழ ஆசைப்பட்ட நடுத்தர அல்லது அடிமட்ட வர்க்க போராளிகள் நடப்பது நடக்கட்டும் வீட்டிலே இருப்போம் என தங்களுக்குள்ளே ஆறுதலடைந்து திருமணமாகி பிள்ளை குட்டியென வாழ்க்கை நடாத்தினர், அவர்களையும் குறி வைத்து தேடும் படலமும் களையெடுப்பும் நடந்தது, எதுவும் செய்ய முடியாத அப்பாவிகளான முன்னாள் போராளிகள் வீட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அருகில் இருக்கும் இராணுவ அல்லது பொலிஸ் நிலையங்களுக்கு ஓடிச் சென்று உயிர்ப்பிச்சை கோரினர்.

விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராமங் கிராமமாக சுற்றிவளைத்து தேடுதல் செய்யும் ஸ்ரீலங்கா படை தரப்பினர் தம்மிடம் உயிர்ப் பிச்சை கேட்டு ஓடி வந்த முன்னாள் போராளிகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டனர், ஒன்று இரண்டு வாரங்கள் பாதுகாப்பும் உணவும் கொடுத்த படையினர் தங்களின் சுற்றுவளைப்பில் கைதானவர்களை அடையாளம் காட்டுமாறு கூறி அழைத்துச் சென்றனர், இவர்கள் பின் நாட்களில் விடுதலைப் புலிகளால் துரோகிகள் எனக் கூறப்படலாகினர், உண்மையில் இவர்களைத் துரோகிகளாக ஆக்கியது விடுதலைப் புலிகளென்றால் அதில் மிகையில்லை.

1986 ஆம் ஆண்டு முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் தாவடிப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது ஹெலிஹொப்டர் மூலமாக ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடாத்தி தரையிறங்கிய போதும் நிர்க்கதியாக நின்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துணை நின்றவர்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினரும், ஸ்ரீசபாரெத்தினத்தின் ரெலோவினரும் ஆகும், இவர்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்ரீலங்கா படையினர் ஹெலிஹொப்டருடன் ஓடித் தப்பியது வரலாற்று உண்மையாகும்.

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக பலாலி விமானத் தளத்தில் வந்து இறங்கிய திரு. டிக்ஸிற் அவர்களை காங்கேசன்துறை ஊடாக யாழ்.கச்சேரி வரை அழைத்து வந்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும், காலையில் இருந்து மாலை வரை தெருக்களில் பந்தலிட்டு பூமாலைகளுடன் காத்திருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களைப் பணித்தவர்கள் விடுதலைப் புலிகள். அந்த அளவுக்கு இந்தியப் படை வருகைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருங்கிய உறவும் உடன்பாடும் இருந்தது.

காலப் போக்கில் இந்திய இராணுவத்துடன் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தமுறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாற்றுக் கருத்துள்ள ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஈழத்தில் காலூன்ற மீண்டும் சந்தற்பம் வாய்த்தது. இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து கொண்டனர், இந்தக் காலகட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணசபை ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது, ஈபிஆர்எல்எவ் திரு.வரதராசப்பெருமாள் முதலமைச்சரானார். இம் மாகாண சபையின் பாதுகாப்புக்கெனவும், இவ் இயக்கங்களின் பாதுகாப்புக்கெனவும் "தமிழ் தேசிய இராணுவம்" எனும் படை உருவாக்கப்பட்டது, இதனை உருவாக்க ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் முக்கிய பங்காற்றின, பாடசாலைக்குச் சென்ற மாணவர்களையும், தெருக்களில் மற்றும் சந்தையில் நின்றவர்களையெல்லாம் பலோத்காரமாக பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள், பலர் தப்பி ஓடினார்கள், எஞ்சியோர்கள் இயக்க உறுப்பினர்கள் ஆக்கப்பட்டார்கள், இவர்களும் பின்னர் விடுதலைப் புலிகளால் துரோகிகளெனக் கூறப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பிரேமதாச- பிரபாகரன் இரகசிய உடன்பாட்டினையடுத்து இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் பூதாகாரமாக வெடித்தது, ஸ்ரீலங்கா அரச படையினர் விடுதலைப் புலிகளுக்கு நேரிலும் மறைமுகமாகவும் இராணுவ உதவி வழங்கினர். இந்நிலையில் இந்தியாவில் அரசியல் மாற்றம் ஏற்படவே தவிர்க்க முடியாமல் இந்திய இராணுவம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது, இவர்களுடன் கூடவே உதவிக்கு இருந்த மாற்றுக் கருத்துக் கொண்ட விடுதலை இயக்கங்களும் இவர்களுடனேயே இந்தியாவுக்கு ஓடிச் சென்றன. போக விருப்பின்றி இலங்கையில் தங்கியோர்கள் விடுதலைப் புலிகளால் தேடித் தேடி சுட்டுக் கொல்லப்பட எஞ்சியவர்கள், உயிரைப் பாதுகாக்க ஈபிடிபி, ரெலோ, புளொட் போன்ற இயக்கங்களிடன் தஞ்சமடைந்தனர், இன்று வரையும் துரோகிகளென கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மொத்தத்தில் துரோகிகள் எப்படி உருவாக்கப்பட்டார்கள் என்பதனை மேற் கூறப்பட்ட விடையங்கள் உணத்துகின்றன.

1989 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அமைதி காக்கும் படை திரும்பிச் செல்ல ஆரம்பித்ததும், வடக்கு கிழக்கு பிரதேசம் படிப்படியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது, 1990 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் ஸ்ரீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் தொடங்கியது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளாயின, வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின, யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரையும் உடுத்த உடையுடனும் 300 ரூபாய் பணத்துடன் மாத்திரமும் இடம்பெயருமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள் இம் முஸ்லிம்கள் புத்தளம், அனுராதபுரம் மற்றும் இதர பகுதிகளில் 18 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படையினர் கைப்பற்றக்கூடிய முன்னேற்பாடு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னி நோக்கிச் செல்லுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் மக்கள் பணிக்கப்பட்டனர், பலர் இடம்பெயர்ந்தார்கள் ஒரு சிலர் போக முடியாதென அங்கேயே தங்கி விட்டனர். மக்கள் இல்லாத யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படை இலகுவாகக் கைப்பற்றியது.

ஸ்ரீலங்கா அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது, ஜனாதிபதியாக திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க இருந்த போதிலும் ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றியடைந்தது, சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி தோல்வியடைந்தது, திரு.ரணில் விக்கிரமசிங்கா பிரதமரானார்.

சர்வதேச நாடுகளின் துணையுடன் ஸ்ரீலங்காவில் நிகழும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க விரும்பினார், நோர்வேயின் அனுசரணையுடன் திரு.எரிக் சொல்ஹெய்மின் முயற்சியில் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனும் திரு.ரணில் விக்கிரமசிங்கவும் யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். காலங்கள் ஓடின, சிங்களவர்களும் தமிழர்களும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். சர்வதேச நாடுகளில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்குமான அரசியற் காரியாலயங்களை அமைத்து நிராயுதபாணியாக வேலைத் திட்டங்களைத் தொடங்கினர், சர்வதேச நாடுகளின் துணையுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்த விடுதலைப் புலிகளின் அணியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி கேணல் கருணா அம்மான் இடம்பெற்றிருந்தார்,

கருணாவுக்கும் அவரது இயக்கம்சார் உட்பூசல் வலுவடையவே 2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்டார். கருணா ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதாக அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

அரசியலில் மாற்றம் வந்தது திரு.ரணிலில் ஐ.தே.க. தோல்வியுற்று திருமதி.சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி வெற்றி பெற்று தற்போதைய ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷ பிரதமரானார், இக்காலத்தில் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிவுறும் நிலை ஏற்பட்டதால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா தயாரானது, போட்டியிட்ட திரு. மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியானார்.

இக் காலத்தில் அரசியல் வேலைத் திட்டத்துக்கென அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளான அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு வந்த விடுதலைப் புலிகள் தங்களுடன் ஆயுதங்களையும் பாதுகாப்புக்கென இரகசியமாக வைத்திருந்தனர், ஆங்காங்கே ஒரு சில தாக்குதல்களையும் இராணுவத்தினர் மீது நடத்தினர், இதனால் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான விரிசல் ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா படையினருடனான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன, படையினர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விடுதலைப் புலிகளிடம் வினாவிய போது, இத் தாக்குதல்கள் மக்கள் படையால் தான் இடம் பெறுகின்றது, விடுதலைப் புலிகளுக்கு இத் தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் பதிலளித்திருந்தார்.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா தூதுக் குழுவினர் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சேர்க்க அரும்பாடுபட்டனர். அதற்கு இணங்கிய பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முத்திரை குத்தினர்.

ஸ்ரீலங்கா படையினரும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை நடாத்தினர், இரு தரப்பிலும் இழப்புக்கள் தொடர்ந்தன, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியற் காரியாலயங்கள் மூடப்பட்டன, விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விரைந்தார்கள், ஆங்காங்கே இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் உள்ள விவசாய நீர்ப் பாய்ச்சல் ஆறான "மாவிலாறு" விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் திரு.எழிலனால் மூடப்பட்டு, சிங்கள விவசாயிகளுக்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. "அங்கே பிடித்தது தான் சனியன்".

தண்ணீரைத் திறந்து விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்தது, எங்களுக்கு எதுவும் தெரியாது மாவிலாறு ஆற்றை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே மூடி வைத்துள்ளார்கள், அவர்களது தேவைகளை நிறைவேற்றினால் திறந்து விடுவார்கள் என திரு. எழிலன் சர்வதேச வானொலி ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது, மாவிலாற்றைத் திறக்க ஸ்ரீலங்கா படை தயாரானது, சண்டை மூண்டது, திருமலையின் மூதூர் சம்பூரில் ஆரம்பித்து 2006.08.02 ஆம் திகதி மாவிலாறு தண்ணீர் திறக்கப்பட்டதுடன் யுத்தம் வெருகல் பாலத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நகர்ந்து இரண்டு தசாப்தமாக விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை உட்பட விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய இராணுவ தளங்களைக் கொண்ட குடும்பிமலைப் பிரதேசமும், அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிகுடியாறு பகுதியும் அடங்கலாக விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியது, கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்து இழந்தனர், ஆனால் இதனை தந்திரோபாயப் பின்வாங்கலென விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு.இராசையா இளந்திரையன் குறிப்பிட்டிருந்தார்.

கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா படையினர் மீட்ட பகுதிகளில் அரசியல் காரியாலயங்களை அமைத்து அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் கடத்திச் சென்று இராணுவப் பயிற்சி கொடுத்து உறுப்பினர்களாக்கிக் கொண்டனர். ஸ்ரீலங்கா அரசாங்கம் கண்டும் காணாத மாதிரி நடந்து கொண்டது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவான வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டாடும் விதத்தில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் உதவியுடனும், ஜேவிபி யினருடனும் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கிழக்கை வேறு மாகாணமாகப் பிரித்தது, இதற்கு கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் ஆதரவு கொடுத்தனர்.

கிழக்கை முழுமையாக மீட்டெடுத்த ஸ்ரீலங்கா படையினர், வடக்கை முழுமையாக மீட்க பிரயத்தனம் செய்து வன்னிக்கான யுத்தத்தின் முதற்படியாக மன்னாரை மீட்டது, மன்னாரில் இருந்து வன்னியை நோக்கிப் புறப்பட்ட இராணுவ அணியும், மணலாற்றில் இருந்து முல்லைத்தீவை நோக்கி இன்னொரு அணியும், முகமாலை நோக்கிய மற்றைய ஸ்ரீலங்கா இராணுவ அணியும் பாரிய படையெடுப்பை மேற்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டது, வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கொண்டு போர் தொடர்ந்தது, ஆட்சேர்ப்பு கட்டாயத் தேவையானது, வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் வர வேண்டுமென விடுதலைப் புலிகள் அறிவித்தனர், விரும்பிப் போவோரின் தொகை குறையவே பலோத்காரமாக பிடித்துச் சென்று பயிற்சி கொடுக்கப்பட்டு யுத்தம் இடம்பெறும் முன்னணி காவலரண்களுக்கு அனுப்பப்பட்டார்கள்,இளையோர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர்களென அனைவரும் அழைக்கப்பட்டு கட்டாய பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இதனால் மக்களின் ஆதரவினை தமிழீழ விடுதலைப் புலிகள் இழக்கும் நிலை துரிதமாக ஏற்பட்டது.

முல்லைத்தீவின் குமுழமுனை, அக்கராயன், முட்கொம்பன், கிராஞ்சி, பாலாவி, பேய்முனை, வலைப்பாடு எனத் தொடர்ந்த ஸ்ரீலங்கா படையினரின் மண் மீட்பு இப்போது வன்னியின் பூநகரியையும் எட்டி விட்டது, இதனையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலென்றே கூறிக் கொள்கின்றார்கள். பூநகரியில் இருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி படையினரின் நகர்வு ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கலை சாதாரணமாக மதிப்பிட முடியாத காரணத்தினால், ஆளணி இழப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே பின்வாங்குவதாக அறிய முடிந்தாலும் கூட கிளிநொச்சியைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விலையையும் கொடுப்பார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இனிவரும் நாட்களின் விடுதலைப் புலிகளின் தாக்குதற்திறன் அதிகரிக்கும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

விடுதலைப் புலிகள் தங்களின் தாக்குதற்திறனை வன்னியில் மாத்திரமல்லாமல் ஸ்ரீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கெரில்லா அடிப்படையிலான தாக்குதலை மேம்படுத்தும் சாத்தியம் அதிகம் இருப்பதையே களநிலை எடுத்துக் காட்டுகின்றது.

மன்னார் பூநகரி ஏ-32 தரைவழிப் பாதையூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு விரைவில் பேரூந்து பயணம் ஆரம்பிக்கப்படுமென ஸ்ரீலங்கா போக்குவரத்து அமைச்சர் கூறுகின்றார்.

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தன்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றும் வேளையில் கிளிநொச்சியை கைப்பற்றி மாற்றத்தினை ஏற்படுத்திவிட வேண்டுமென ஸ்ரீலங்கா படை தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இவை அனைத்தையும் எடுத்து நோக்கினால் சகோதர விடுதலை இயக்கங்களைத் தடை செய்து அப் போராளிகளைக் கொன்று குவித்தமையும், படையணிக்கென கட்டாய ஆட்சேர்ப்புச் செய்தமையால் ஏற்பட்ட ஒற்றுமையின்மையினாலுமே தான் தமிழீழம் சுருங்கிக் கொண்டு வருவதாக அறிய முடிகின்றது, இது இப்படியே தொடர்ந்தால் தமிழீழம் இன்னும் சுருங்குவது தவிர்க்க முடியாததாகும்.

http://img175.imageshack.us/slideshow/player.php?id=img175/9148/1227082643ajv.smil

திங்கள், 17 நவம்பர், 2008

என்ன விலை கொடுத்தும் புலிகள் கிளிநொச்சியைத் தற்காத்துக் கொள்வர் - இக்பால் அத்தாஸ்


"என்ன விலை கொடுத்தும் புலிகள் கிளிநொச்சியைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகி வருகின்றார்கள்" எனும் தலைப்பில் 2008.11.16 ஆம் திகதி "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்காக களநிலை ஆய்வாளர் திரு.இக்பால் அத்தாஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரை.

நன்றி: உதயன் பத்திரிகை

சிறீ ரெலோவினர் மீது துப்பாக்கிச் சூடு இருவர் பலி இருவர் படுகாயம்!

2008.11.16 ஆம் திகதி நேற்று மாலை 6:45 மணியளவில் வவுனியா குருமன்காடு, காளிகோயில் பகுதியில் புதிய காரியாலயம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த சிறீ ரெலோ அமைப்பினர் மீது துப்பாக்கிதாரிகள் நடாத்திய தாக்குதலில் அவ் அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்தவர்களான வசந்த் எனப்படும் இராசையா பிரதீப், மற்றும் பரா எனப்படும் வடிவேல் சிவகுமார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர், மன்னாரைச் சேர்ந்தவர்களான ரமணன் எனப்படும் செல்லையா இளஞ்செழியன் மற்றும் நிர்மலன் எனப்படும் செபமாலை றோச் சபிறியல் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

ஊடகவியலாளர் லோஷன் கைது!

ஸ்ரீலங்கா தலைநகரில் இருந்து ஒலிபரப்பாகும் வெற்றி எப்.எம் வானொலியின் தமிழ் நிகழ்ச்சி பணிப்பாளர் திரு.ரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷன் (லோஷன்) 2008.11.15 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீலங்கா பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணை போதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஊடகவியலாளர் லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா காவற்துறை வழங்கிய பதிவுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஜா நிறுவனத்தின் சக்தி எப்.எம், ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சூரியன் எப்.எம் ஆகிய வானொலி நிறுவனங்களிலும் லோஷன் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி எப்.எம் அறிவிப்பாளர் திரு.சந்திரமோகன் (சந்துரு) அவரது வீட்டில் வைத்து, ஊடகவியலாளர் லோஷன் கைதாவதற்கு சற்று முன்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவிரால் விசாரணைக்கு உட்பட்டிருந்தாரென அறிய முடிகின்றது.

ஊடகவியலாளர்களான திரு.சசிதரன், திரு.வளர்மதி, திரு.திஸ்ஸநாயகம் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதாகி விடுவிக்கப்படாமல் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை சோதனைச் சாவடி ஒட்டிசுட்டானுக்கு விரைவில் மாற்றம்?

ஓமந்தைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இல்லாததால் வன்னிக்கான நுழைவுப் பாதையுடனான இராணுவச் சோதனைச் சாவடியை நெடுங்கேணி - ஒட்டிசுட்டான் வீதிக்குத் தெற்கே ஒட்டிசுட்டான் பகுதிக்கு மாற்றுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைக் கேட்டுள்ளது.

வன்னிக்கான நுழைவுப் பாதையை ஓமந்தைக்கு வடக்கே பொருத்தமான இடத்தில் தெரிவு செய்யலாமென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சனி, 15 நவம்பர், 2008

இந்திய நாடாளுமன்றுக்கு முன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பேரணி!

இந்தியத் தலைநகர் புதுடில்லியிலுள்ள நாடாளுமன்றம் முன்பாக 2008.11.14 ஆம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்காவில் ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தக் கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் ஏற்பாட்டில், மாணவர் பெருமன்றத் தலைவர் திரு.உமன் ஜீனு ஜக்காரியா தலைமையில் அனைத்திந்திய மாநில மாணவர்களினால், கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நிகழ்த்தப்பட்டது.

டில்லியில் உள்ள இராமலீலா திடலில் தொடங்கிய இப்பேரணியில் 20 மாநிலங்களுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுலோகங்களையும் மற்றும் பதாகைகளையும் ஏந்தியவாறு நகரின் முக்கிய சாலைகள் வழியாக காவல்துறையினரின் தடுப்பு அரண்களுக்கும் மத்தியில் நாடாளுமன்றத்துக்கு அண்மித்த வீதியில் பலத்த கண்டன கோஷத்துடன் பேரணி ஊர்வலத்தை நடாத்தி முடித்தனர்.


கண்டாவளையில் மாவீரர் தின முன்னேற்பாடு!

வன்னி - கண்டாவளைக் கோட்டத்தில் கடந்த 2008.11.13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.சி.சீராளன் ஏற்பாட்டில் கண்டாவளைக் கோட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயலாளர் திரு.செ.புஸ்பராஜா தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நினைவு கூரும் முன்னோடிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினர், வட்டப் பொறுப்பாளர்கள், வர்த்தக சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், மாவீரர் செயற்பாட்டுக் குழுவினர் மற்றும் தேசிய போரெழுச்சிக் குழுவினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல், மாவீரர் துயிலுமில்லம், பொது இடங்கள் போன்றவற்றில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளல், குருதிக்கொடை வழங்கல், களமுனைப் போராளிகளுக்கு உலருணவு வழங்கல், வீதிகளில் மாவீரர் நினைவுப் பதாகைகளை அமைத்தல் மற்றும் இறுதிநாளில் மாவீரர் தினத்தை எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பது போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

பூநகரியை ஸ்ரீலங்கா படை கைப்பற்றியுள்ளது!

வன்னியைக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீலங்கா படைதரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தி வரும் யுத்தத்தில் 2008.11.15 ஆம் திகதி இன்று காலை பூநகரி பிரதேசத்தை ஸ்ரீலங்கா விசேட நடவடிக்கைப் பிரிவு - 1 ஆம் அணி கைப்பற்றியதாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் சசிந்தசில்வா தலைமையிலான 58 ஆம் படைப்பிரிவின் விசேட நடவடிக்கை பிரிவு -1, கெமுனுவோச் கஜபா றெஜிமன் 10 ஆகியன இணைந்து பி.69 பூநகரி - பரந்தன் வீதியை மீட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவுக் கோவை




வெள்ளி, 14 நவம்பர், 2008

ரிஎம்விபி யின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்!

அரசியல் கட்சியாகத் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தலைவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 32 வயதுடைய ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபன் மற்றும் வாகன ஓட்டுநர் 29 வயதுடைய சமீர் ராஜ்குமார் (எஸ்.ரி.எம்.நஸீர்) இருவரும் கொழும்பு அத்துருகிரிய - ஒருவெல வீதியிலுள்ள வாகன விற்பனை நிலையத்துக்கு முன்பாக வோல்வோ ரக EP KH-3685 ஆம் இலக்க மகிழூந்தில் "ஃபீல்ட் வியூ" ஹோட்டலுக்குப் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று காலை 11:30 மணியளவில் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த 3 பிள்ளைகளின் தந்தையான நந்தகோபன், கருணா அம்மான் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலுக்காகப் பதிவு செய்யப்பட்ட ரிஎம்விபி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தலில் திருமலை மாவட்ட அபேட்சகராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார், அண்மையில் கருணா அல்ல தானே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் எனும் சர்ச்சைக்குக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்கொம்பன் கோணாவில் பகுதிகளில் 32 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்!

முட்கொம்பன் பகுதியில் 2008.11.12 ஆம் திகதி புதன்கிழமை காலை முதல் மாலை வரை ஸ்ரீலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டும், 20 பேர் காயமடைந்தும் உள்ளனரென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் கோணாவில் பகுதியில் 2008.11.11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு செறிவான எறிகணை மற்றும் கனரக சூட்டாதரவுடன் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்ட ஸ்ரீலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புத் தாக்குதலில் 12 ஸ்ரீலங்கா படையினர் கொல்லப்பட்டும், 25 படையினர் காயமடைந்தும் உள்ளனரெனெ தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

பேய்முனை, வலைப்பாடு ஸ்ரீலங்கா படை வசம்!

ஸ்ரீலங்கா படை தரப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் வன்னியில் நடைபெறும் யுத்தத்தில் மன்னார் - பூநகரி பிரதேசத்திலுள்ள டெவில் பொயின்ற் எனப்படும் பேய்முனை மற்றும் வலைப்பாடு ஆகிய பகுதிகளை 2008.11.13 ஆம் திகதி காலை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகவும், கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம், மடம், பண்டிவெட்டிக்குளம், அக்கராயன்குளம், கிராஞ்சி மற்றும் பாலாவி போன்ற பகுதிகளை ஏற்கனவே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா படை தரப்பின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.

நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கவெல, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார, கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தசநாயக்க, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணாயக்கார மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல போன்றோரும் கலந்து கொண்டனர்.

வியாழன், 13 நவம்பர், 2008

அக்கரைப்பற்றுப் பகுதியில் தொடரும் ஆட்கடத்தல்!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பகுதிகளில் ஆயுததாரிகளின் ஆட்கடத்தல் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் எனக் கூறப்பட்டு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடந்த இரு மாதங்களில் மாத்திரம் பன்னிரெண்டு பேர் இரவு வேளைகளில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.


காணாமற் போனவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.


1.2008.09.23 செல்லத்துரை தவலட்சுமி, விநாயகபுரம்.4, திருக்கோவில்.
2.2008.09.23 தம்பிமுத்து சுசிகரன், விநாயகபுரம்.4, திருக்கோவில்.
3.2008.09.23 விஜயராசா சுஷந்தன் (16 வயது) விநாயகபுரம்.4, திருக்கோவில்.
4.2008.09.23 திருமால் திருச்செல்வம், விநாயகபுரம்.4,(தகவல் - கொல்லப்பட்டுள்ளார்)
5.2008.10.20 ஸ்ரீகரன் பிரதீபா, அக்கரைப்பற்று.
6.2008.10.20 ஸ்ரீதரன் ஸ்ரீகாந்தன், அக்கரைப்பற்று.
7.2008.10.20 சீனித்தம்பி நடேசன், அக்கரைப்பற்று.
8.2008.10.20 கணபதிப்பிள்ளை கிருஷ்ணமூர்த்தி, அக்கரைப்பற்று.
9.2008.10.28 தியாகராசா இந்திரன், அக்கரைப்பற்று.
10.2008.10.29 பேரின்பம் சத்தியன், அக்கரைப்பற்று.
11.2008.10.28 கந்தையா பாஸ்கரன், அக்கரைப்பற்று.
12.2008.11.10 ராசா மகேஸ்வரன் (38 வயது) இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில்.

புதன், 12 நவம்பர், 2008

பாலாவி ஏ-32 வீதியில் 4 பெண் விடுதலைப்புலிகள் கைது!


வன்னியில் ஸ்ரீலங்கா படை தரப்புக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம்பெற்று வரும் சண்டையில் ஏ - 32 வீதியில் பாலாவிக்கு அண்மித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினர் 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு பெண் உறுப்பினர்களைக் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்கா படைதரப்பு கூறுகின்றது.

கைது செய்யப்பட்டர்களில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 வயதுடைய நிலாவெளி, 18 வயதுடைய இளவேனி, 19 வயதுடைய துருவேனி ஆகியோர் மற்றைய மூவருமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் நிலாவெளி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் ஸ்ரீலங்கா கல்வியமைச்சின் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

ஒளிப் பதிவு கோவை

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சுட்டுக் கொலை!

கடந்த 2008.11.09 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் நாயன்மார்கட்டுப் பகுதியில் வைத்து வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 27 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான ஸ்ரீரங்கன் சுமதி துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனைவியின் சடலத்தை கணவர் நிதிபதிக்கு அடையாளம் காட்டினார்.

மும்பையில் மகிந்தவின் உருவப்படம் எரிப்பு !


மும்பாய் தாராவி பகுதியிலுள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசன் சதுக்கத்தில் திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தின் தலைமையில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள்,தமிழ் காப்போம் அமைப்பு, தென்னிந்திய முஸ்லிம் சங்கம், மும்பை தமிழ் ஓட்டுநர்கள் சங்கம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் அப்பாவி தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் படியாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்பட எரிப்புப் போராட்டத்தினை நடாத்தினர்.

ஓமந்தையில் வெடிமருந்துடன் பெண் கைது!

புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வரும் பூநகரி ஞானிமடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ரஞ்சிதமலர் கேதீஸ்வரன் தனது உறவினரான 84 வயதுடைய செல்லம்மா சுந்தரராஜனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் மூலம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலிருந்து வவுனியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்த போது அவரது பிரயாணப் பையில் இருந்து 3.5 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்து இருந்த காரணத்தினால் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்துள்ளனர்.

செவ்வாய், 11 நவம்பர், 2008

முல்லைத்தீவு குமுளமுனை ஸ்ரீலங்கா படை வசம்!


முல்லைத்தீவில் இராணுவ முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினரின் 59 ஆம் படையணியினர் இன்று 2008.11.11 ஆம் திகதி மாலை முல்லைத்தீவின் தெற்கில் 13 கி.மீ தூரத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான குமுளமுனைக் கிராமத்தின் ஒரு பகுதியை அண்மித்துள்ளதுடன் முன்டிமுறிப்புக்கும் குமுளமுனைப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

கிளிநொச்சியிலுள்ள யாழ் – பூநகரி கரையோர ஏ-32 பாதையின் மேற்கே அமைந்துள்ள பேய்முனையின் கிராஞ்சி பகுதியை ஸ்ரீலங்கா படையினர் நேற்று தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

தமிழீழ வான்புலிகள் - ஒளிப்பேழை



ஸ்ரீலங்கா வான்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் தாக்குதல் நடாத்தியதை பிரதிபலிக்கும் பாடலொன்றை இணையத்தின் யூரியூப்பில் காண முடிந்தது.

"என்னடா என்னடா பொடிசிங்கா..." நீங்களும் கேட்டுப் பார்த்து இரசியுங்கள்.

திங்கள், 10 நவம்பர், 2008

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----