செவ்வாய், 18 நவம்பர், 2008

தமிழீழம் ஏன் சுருங்குகின்றது - களநிலை ஆய்வு

இன்றைய களநிலையை எடுத்து நோக்கினால் தமிழீழ விடுதலைப் போராட்டம் கால் நூற்றாண்டுக்கு முந்திய நிலைக்கு மாறிக் கொண்டிருப்பது புலனாகின்றது.

இம் மாற்றத்துக்கு பல காரணிகளை தரப்படுத்தலாம், அவற்றில் முதன்மையானது ஈழ விடுதலையை நேசித்தவர்களிடையே ஒற்றுமையின்மை, இதற்குக் காரணம் ஈழ விடுதலையை உணர்வுரீதியாக வென்றெடுக்கப் புறப்பட்ட இளைஞர்களைத் துரோகிகளென நாமமிட்டு 1986 மே மாதத்தில் இருந்து பகிரங்கமாகச் சுட்டுச் சரித்தமை, திரு.வே.பிரபாகரனைத் தலைவராகக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளைத் தவிர்ந்த வேறெந்த ஈழ விடுதலை அமைப்புக்களும் செயற்படக் கூடாதென ஒருதலைப் பட்சமாக எடுத்த பாதகமான முடிவு.

இதில் தப்பிப் பிழைத்தோர் விடுதலை வேட்கையை உதறிவிட்டு குடும்ப வாழ்க்கைக்கென பிரவேசித்த போதும், அவர்களைத் தேடித் தேடி கொன்றொழித்தமை, செல்வந்தர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஓடித் தப்பினார்கள், குறைந்த பட்சம் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கேனும் தப்பிச் செல்ல வசதியற்ற, குடும்ப வாழ்க்கையில் ஒன்றித்து உயிர் வாழ ஆசைப்பட்ட நடுத்தர அல்லது அடிமட்ட வர்க்க போராளிகள் நடப்பது நடக்கட்டும் வீட்டிலே இருப்போம் என தங்களுக்குள்ளே ஆறுதலடைந்து திருமணமாகி பிள்ளை குட்டியென வாழ்க்கை நடாத்தினர், அவர்களையும் குறி வைத்து தேடும் படலமும் களையெடுப்பும் நடந்தது, எதுவும் செய்ய முடியாத அப்பாவிகளான முன்னாள் போராளிகள் வீட்டில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து அருகில் இருக்கும் இராணுவ அல்லது பொலிஸ் நிலையங்களுக்கு ஓடிச் சென்று உயிர்ப்பிச்சை கோரினர்.

விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராமங் கிராமமாக சுற்றிவளைத்து தேடுதல் செய்யும் ஸ்ரீலங்கா படை தரப்பினர் தம்மிடம் உயிர்ப் பிச்சை கேட்டு ஓடி வந்த முன்னாள் போராளிகளை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டனர், ஒன்று இரண்டு வாரங்கள் பாதுகாப்பும் உணவும் கொடுத்த படையினர் தங்களின் சுற்றுவளைப்பில் கைதானவர்களை அடையாளம் காட்டுமாறு கூறி அழைத்துச் சென்றனர், இவர்கள் பின் நாட்களில் விடுதலைப் புலிகளால் துரோகிகள் எனக் கூறப்படலாகினர், உண்மையில் இவர்களைத் துரோகிகளாக ஆக்கியது விடுதலைப் புலிகளென்றால் அதில் மிகையில்லை.

1986 ஆம் ஆண்டு முற்பகுதியில் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் தாவடிப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது ஹெலிஹொப்டர் மூலமாக ஸ்ரீலங்கா படையினர் தாக்குதல் நடாத்தி தரையிறங்கிய போதும் நிர்க்கதியாக நின்ற விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துணை நின்றவர்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தினரும், ஸ்ரீசபாரெத்தினத்தின் ரெலோவினரும் ஆகும், இவர்களின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்ரீலங்கா படையினர் ஹெலிஹொப்டருடன் ஓடித் தப்பியது வரலாற்று உண்மையாகும்.

1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக பலாலி விமானத் தளத்தில் வந்து இறங்கிய திரு. டிக்ஸிற் அவர்களை காங்கேசன்துறை ஊடாக யாழ்.கச்சேரி வரை அழைத்து வந்த பெருமை தமிழீழ விடுதலைப் புலிகளையே சாரும், காலையில் இருந்து மாலை வரை தெருக்களில் பந்தலிட்டு பூமாலைகளுடன் காத்திருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களைப் பணித்தவர்கள் விடுதலைப் புலிகள். அந்த அளவுக்கு இந்தியப் படை வருகைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நெருங்கிய உறவும் உடன்பாடும் இருந்தது.

காலப் போக்கில் இந்திய இராணுவத்துடன் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தமுறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாற்றுக் கருத்துள்ள ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஈழத்தில் காலூன்ற மீண்டும் சந்தற்பம் வாய்த்தது. இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து கொண்டனர், இந்தக் காலகட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணசபை ஆட்சி முறைமை உருவாக்கப்பட்டது, ஈபிஆர்எல்எவ் திரு.வரதராசப்பெருமாள் முதலமைச்சரானார். இம் மாகாண சபையின் பாதுகாப்புக்கெனவும், இவ் இயக்கங்களின் பாதுகாப்புக்கெனவும் "தமிழ் தேசிய இராணுவம்" எனும் படை உருவாக்கப்பட்டது, இதனை உருவாக்க ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் முக்கிய பங்காற்றின, பாடசாலைக்குச் சென்ற மாணவர்களையும், தெருக்களில் மற்றும் சந்தையில் நின்றவர்களையெல்லாம் பலோத்காரமாக பிடித்துச் சென்று ஆயுதப் பயிற்சி கொடுத்தார்கள், பலர் தப்பி ஓடினார்கள், எஞ்சியோர்கள் இயக்க உறுப்பினர்கள் ஆக்கப்பட்டார்கள், இவர்களும் பின்னர் விடுதலைப் புலிகளால் துரோகிகளெனக் கூறப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பிரேமதாச- பிரபாகரன் இரகசிய உடன்பாட்டினையடுத்து இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் பூதாகாரமாக வெடித்தது, ஸ்ரீலங்கா அரச படையினர் விடுதலைப் புலிகளுக்கு நேரிலும் மறைமுகமாகவும் இராணுவ உதவி வழங்கினர். இந்நிலையில் இந்தியாவில் அரசியல் மாற்றம் ஏற்படவே தவிர்க்க முடியாமல் இந்திய இராணுவம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது, இவர்களுடன் கூடவே உதவிக்கு இருந்த மாற்றுக் கருத்துக் கொண்ட விடுதலை இயக்கங்களும் இவர்களுடனேயே இந்தியாவுக்கு ஓடிச் சென்றன. போக விருப்பின்றி இலங்கையில் தங்கியோர்கள் விடுதலைப் புலிகளால் தேடித் தேடி சுட்டுக் கொல்லப்பட எஞ்சியவர்கள், உயிரைப் பாதுகாக்க ஈபிடிபி, ரெலோ, புளொட் போன்ற இயக்கங்களிடன் தஞ்சமடைந்தனர், இன்று வரையும் துரோகிகளென கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மொத்தத்தில் துரோகிகள் எப்படி உருவாக்கப்பட்டார்கள் என்பதனை மேற் கூறப்பட்ட விடையங்கள் உணத்துகின்றன.

1989 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அமைதி காக்கும் படை திரும்பிச் செல்ல ஆரம்பித்ததும், வடக்கு கிழக்கு பிரதேசம் படிப்படியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது, 1990 ஆம் ஆண்டு நடுப் பகுதியில் ஸ்ரீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் தொடங்கியது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல பகுதிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளாயின, வன்னியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாகின, யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அனைவரையும் உடுத்த உடையுடனும் 300 ரூபாய் பணத்துடன் மாத்திரமும் இடம்பெயருமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள் இம் முஸ்லிம்கள் புத்தளம், அனுராதபுரம் மற்றும் இதர பகுதிகளில் 18 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள்.

யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படையினர் கைப்பற்றக்கூடிய முன்னேற்பாடு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தை விட்டு வன்னி நோக்கிச் செல்லுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் மக்கள் பணிக்கப்பட்டனர், பலர் இடம்பெயர்ந்தார்கள் ஒரு சிலர் போக முடியாதென அங்கேயே தங்கி விட்டனர். மக்கள் இல்லாத யாழ்ப்பாணத்தை ஸ்ரீலங்கா படை இலகுவாகக் கைப்பற்றியது.

ஸ்ரீலங்கா அரசபடைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது, ஜனாதிபதியாக திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க இருந்த போதிலும் ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் வெற்றியடைந்தது, சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி தோல்வியடைந்தது, திரு.ரணில் விக்கிரமசிங்கா பிரதமரானார்.

சர்வதேச நாடுகளின் துணையுடன் ஸ்ரீலங்காவில் நிகழும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் திரு.ரணில் விக்கிரமசிங்க விரும்பினார், நோர்வேயின் அனுசரணையுடன் திரு.எரிக் சொல்ஹெய்மின் முயற்சியில் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனும் திரு.ரணில் விக்கிரமசிங்கவும் யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். காலங்கள் ஓடின, சிங்களவர்களும் தமிழர்களும் எவ்வித பிரச்சனைகளும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். சர்வதேச நாடுகளில் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தன, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்குமான அரசியற் காரியாலயங்களை அமைத்து நிராயுதபாணியாக வேலைத் திட்டங்களைத் தொடங்கினர், சர்வதேச நாடுகளின் துணையுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்த விடுதலைப் புலிகளின் அணியில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி கேணல் கருணா அம்மான் இடம்பெற்றிருந்தார்,

கருணாவுக்கும் அவரது இயக்கம்சார் உட்பூசல் வலுவடையவே 2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா நீக்கப்பட்டார். கருணா ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதாக அறிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

அரசியலில் மாற்றம் வந்தது திரு.ரணிலில் ஐ.தே.க. தோல்வியுற்று திருமதி.சந்திரிக்காவின் பொதுஜன முன்னணி வெற்றி பெற்று தற்போதைய ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷ பிரதமரானார், இக்காலத்தில் ஜனாதிபதி திருமதி சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிவுறும் நிலை ஏற்பட்டதால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா தயாரானது, போட்டியிட்ட திரு. மகிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியானார்.

இக் காலத்தில் அரசியல் வேலைத் திட்டத்துக்கென அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளான அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு வந்த விடுதலைப் புலிகள் தங்களுடன் ஆயுதங்களையும் பாதுகாப்புக்கென இரகசியமாக வைத்திருந்தனர், ஆங்காங்கே ஒரு சில தாக்குதல்களையும் இராணுவத்தினர் மீது நடத்தினர், இதனால் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான விரிசல் ஏற்பட்டது.

ஸ்ரீலங்கா படையினருடனான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன, படையினர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் விடுதலைப் புலிகளிடம் வினாவிய போது, இத் தாக்குதல்கள் மக்கள் படையால் தான் இடம் பெறுகின்றது, விடுதலைப் புலிகளுக்கு இத் தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் மறைந்த திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் பதிலளித்திருந்தார்.

அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்த ஸ்ரீலங்கா தூதுக் குழுவினர் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் சேர்க்க அரும்பாடுபட்டனர். அதற்கு இணங்கிய பல நாடுகள் பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முத்திரை குத்தினர்.

ஸ்ரீலங்கா படையினரும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை நடாத்தினர், இரு தரப்பிலும் இழப்புக்கள் தொடர்ந்தன, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியற் காரியாலயங்கள் மூடப்பட்டன, விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விரைந்தார்கள், ஆங்காங்கே இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

2006 ஆம் ஆண்டு திருகோணமலை மூதூரில் உள்ள விவசாய நீர்ப் பாய்ச்சல் ஆறான "மாவிலாறு" விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் திரு.எழிலனால் மூடப்பட்டு, சிங்கள விவசாயிகளுக்கு தண்ணீர் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. "அங்கே பிடித்தது தான் சனியன்".

தண்ணீரைத் திறந்து விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்தது, எங்களுக்கு எதுவும் தெரியாது மாவிலாறு ஆற்றை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே மூடி வைத்துள்ளார்கள், அவர்களது தேவைகளை நிறைவேற்றினால் திறந்து விடுவார்கள் என திரு. எழிலன் சர்வதேச வானொலி ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது, மாவிலாற்றைத் திறக்க ஸ்ரீலங்கா படை தயாரானது, சண்டை மூண்டது, திருமலையின் மூதூர் சம்பூரில் ஆரம்பித்து 2006.08.02 ஆம் திகதி மாவிலாறு தண்ணீர் திறக்கப்பட்டதுடன் யுத்தம் வெருகல் பாலத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நகர்ந்து இரண்டு தசாப்தமாக விடுதலைப் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை உட்பட விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய இராணுவ தளங்களைக் கொண்ட குடும்பிமலைப் பிரதேசமும், அம்பாறை மாவட்டத்திலுள்ள கஞ்சிகுடியாறு பகுதியும் அடங்கலாக விடுதலைப் புலிகளின் அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளையும் ஸ்ரீலங்கா இராணுவம் கைப்பற்றியது, கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்து இழந்தனர், ஆனால் இதனை தந்திரோபாயப் பின்வாங்கலென விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு.இராசையா இளந்திரையன் குறிப்பிட்டிருந்தார்.

கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா படையினர் மீட்ட பகுதிகளில் அரசியல் காரியாலயங்களை அமைத்து அப்பாவி இளைஞர்களையும், பாடசாலை மாணவர்களையும் கடத்திச் சென்று இராணுவப் பயிற்சி கொடுத்து உறுப்பினர்களாக்கிக் கொண்டனர். ஸ்ரீலங்கா அரசாங்கம் கண்டும் காணாத மாதிரி நடந்து கொண்டது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலமாக உருவான வடக்குக் கிழக்கு இணைப்பைத் துண்டாடும் விதத்தில் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் உதவியுடனும், ஜேவிபி யினருடனும் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கிழக்கை வேறு மாகாணமாகப் பிரித்தது, இதற்கு கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் ஆதரவு கொடுத்தனர்.

கிழக்கை முழுமையாக மீட்டெடுத்த ஸ்ரீலங்கா படையினர், வடக்கை முழுமையாக மீட்க பிரயத்தனம் செய்து வன்னிக்கான யுத்தத்தின் முதற்படியாக மன்னாரை மீட்டது, மன்னாரில் இருந்து வன்னியை நோக்கிப் புறப்பட்ட இராணுவ அணியும், மணலாற்றில் இருந்து முல்லைத்தீவை நோக்கி இன்னொரு அணியும், முகமாலை நோக்கிய மற்றைய ஸ்ரீலங்கா இராணுவ அணியும் பாரிய படையெடுப்பை மேற்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டது, வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கொண்டு போர் தொடர்ந்தது, ஆட்சேர்ப்பு கட்டாயத் தேவையானது, வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் வர வேண்டுமென விடுதலைப் புலிகள் அறிவித்தனர், விரும்பிப் போவோரின் தொகை குறையவே பலோத்காரமாக பிடித்துச் சென்று பயிற்சி கொடுக்கப்பட்டு யுத்தம் இடம்பெறும் முன்னணி காவலரண்களுக்கு அனுப்பப்பட்டார்கள்,இளையோர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றைய அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முதியோர்களென அனைவரும் அழைக்கப்பட்டு கட்டாய பயிற்சிக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இதனால் மக்களின் ஆதரவினை தமிழீழ விடுதலைப் புலிகள் இழக்கும் நிலை துரிதமாக ஏற்பட்டது.

முல்லைத்தீவின் குமுழமுனை, அக்கராயன், முட்கொம்பன், கிராஞ்சி, பாலாவி, பேய்முனை, வலைப்பாடு எனத் தொடர்ந்த ஸ்ரீலங்கா படையினரின் மண் மீட்பு இப்போது வன்னியின் பூநகரியையும் எட்டி விட்டது, இதனையும் தமிழீழ விடுதலைப் புலிகள் தந்திரோபாய பின்வாங்கலென்றே கூறிக் கொள்கின்றார்கள். பூநகரியில் இருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி படையினரின் நகர்வு ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கலை சாதாரணமாக மதிப்பிட முடியாத காரணத்தினால், ஆளணி இழப்பைத் தவிர்த்துக் கொள்வதற்காகவே பின்வாங்குவதாக அறிய முடிந்தாலும் கூட கிளிநொச்சியைத் தக்கவைத்துக் கொள்ள எவ்விலையையும் கொடுப்பார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இனிவரும் நாட்களின் விடுதலைப் புலிகளின் தாக்குதற்திறன் அதிகரிக்கும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

விடுதலைப் புலிகள் தங்களின் தாக்குதற்திறனை வன்னியில் மாத்திரமல்லாமல் ஸ்ரீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கெரில்லா அடிப்படையிலான தாக்குதலை மேம்படுத்தும் சாத்தியம் அதிகம் இருப்பதையே களநிலை எடுத்துக் காட்டுகின்றது.

மன்னார் பூநகரி ஏ-32 தரைவழிப் பாதையூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு விரைவில் பேரூந்து பயணம் ஆரம்பிக்கப்படுமென ஸ்ரீலங்கா போக்குவரத்து அமைச்சர் கூறுகின்றார்.

எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தன்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றும் வேளையில் கிளிநொச்சியை கைப்பற்றி மாற்றத்தினை ஏற்படுத்திவிட வேண்டுமென ஸ்ரீலங்கா படை தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இவை அனைத்தையும் எடுத்து நோக்கினால் சகோதர விடுதலை இயக்கங்களைத் தடை செய்து அப் போராளிகளைக் கொன்று குவித்தமையும், படையணிக்கென கட்டாய ஆட்சேர்ப்புச் செய்தமையால் ஏற்பட்ட ஒற்றுமையின்மையினாலுமே தான் தமிழீழம் சுருங்கிக் கொண்டு வருவதாக அறிய முடிகின்றது, இது இப்படியே தொடர்ந்தால் தமிழீழம் இன்னும் சுருங்குவது தவிர்க்க முடியாததாகும்.

http://img175.imageshack.us/slideshow/player.php?id=img175/9148/1227082643ajv.smil

7 கருத்துகள்:

  1. ஈழவன்,தெரிந்த விஷயங்கள் ஆனாலும் வாசிக்கும்போது எங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமையின்மை என்று ஒத்துக் கொண்டேன்.

    என்றாலும் என் பாமரக் கேள்வி ஒன்று.எங்கள் வாழ்வு இனி இப்படியேதானா?அன்றொரு பதிவில்கூடப் பார்தேன் யாழ்ப்பாணத்தில் இப்போ எம் மக்கள் பேச்சு வழக்கில் சில சிங்களச் சொற்களைக் கலந்துதானாம் பேசுகிறார்கள்!!!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஹேமா,
    கட்டுரையை வாசித்தால் போராட்டம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்பது புரிந்திருக்குமே!

    கட்டுரை சற்று நீண்டு விட்டது, முழுவதையும் வாசித்தீர்களா?

    //என் பாமரக் கேள்வி ஒன்று,எங்கள் வாழ்வு இனி இப்படியே தானா? அன்றொரு பதிவில் கூடப் பார்தேன் யாழ்ப்பாணத்தில் இப்போ எம் மக்கள் பேச்சு வழக்கில் சில சிங்களச் சொற்களைக் கலந்துதானாம் பேசுகிறார்கள்//

    இதற்குப் பாமரத்தனமாகப் பதில் சொல்வதானால், சுவிஸில் வசிக்கும் ஹேமா தமிழுடன் டொச் கலந்து பேசலாமென்றால், இந்தியாவில் வாழும் தமிழன் தமிழுடன் தெலுங்கு கலந்து பேசலாமென்றால், பிரித்தானியாவிலுள்ள தமிழன் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசலாமென்றால், அரேபியாவில் தொழில் புரியும் தமிழன் தமிழுடன் அரபு கலந்து பேசலாமென்றால், ஸ்ரீலங்காவில் வாழும் சிங்களவன் சிங்களத்துடன் தமிழ் கலந்து பேசலாமென்றால், ஈழத்தில் வாழும் தமிழன் தமிழுடன் சிங்களத்தைக் கலந்து பேசுவதில் ஏதாவது தப்பு உள்ளதா?

    ஸ்ரீலங்காவில் ஒன்றாக வாழ்ந்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் தமிழர்களும், சிங்களவர்களும் அல்லவா, கலாசார முறைமையிலும் இரு தரப்பிலும் ஒற்றுமை இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  3. ஈழவன்,எனக்கு முழுமையான அரசியலறிவு குறைவாக இருந்தாலும் என் நாடு என் இனம் என்கிற ஆதங்கம் நிறைய.எனவே உங்கள் கட்டுரை முழுமையாக வாசித்தேன்.
    உண்மையில் காலத்திற்குத் தேவையான ஆவணப் பதிவு இக்கட்டுரை.

    மொழி கலந்து பேசுவதற்கு நீங்கள் சொல்லும் உதாரணங்கள் சரியாக இருந்தாலும்,ஆரம்ப காலங்களில் இருந்தே இப்படியான நடைமுறை இருந்ததாக அறியவில்லை நான்.
    எப்போதும் பெரும்பான்மை சிறுபான்மை என்கிற ஒரு பாகுபாடும் பிரிவும் இருந்தே வந்திருக்கிறது.ஏன் கொழும்புக்குப் போனால் தமிழில் ஏதாவது அலுவலகங்கள் இருக்கிறதா?விமானநிலையத்தில் கூடஒரு அரசாங்க ஊழியர், நிச்சயம் அந்த நாட்டு மொழி அறிந்திருக்க வேண்டிய அரசாங்க ஊழியருக்குத் தமிழ் தெரிவதில்லை.

    இப்படியெல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு இடைவெளி தமிழருக்கும் சிங்களவருக்கும் இருந்து வந்தே இருக்கிறது.இவ்வளவு அழிவுகள் இழப்புகளுக்குப் பிறகு இனிச் சாத்தியமா?மனம்தான் ஏற்றுக்கொண்டு ஒன்றுபடுமா?நீங்கள் சொன்னதுபோல புலம் பெயர்ந்த நாம் வேற்று மொழிக் கலப்போடு பேசுகிறோம் என்றால் அது ஆரம்பம் முதல் வேற்றுமை தெரியாமல் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
    அப்படி ஏன் எம் முன்னோர்கள் தமிழர் பகுதிகளில் ஒரு பழக்கத்தைக் கொண்டுவராமல் விட்டு விட்டார்களே!இனி முடியுமா?

    ஒன்று தெரியுமா ஈழவன்.சுவிஸில் ஹேமா தேவைக்கு மட்டுமே டொச் பேசுகிறேன்.தவறியும் நான் தமிழில் பேசும்போது டொச் கலப்பு வருவதில்லை.ஏன் ஆங்கிலம் கலந்து கதைப்பது கூட இல்லை என்றே சொல்வேன்.

    பதிலளிநீக்கு
  4. யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா அரசு அறிவித்தது, மாவிலாற்றைத் திறக்க ஸ்ரீலங்கா படை தயாரானது,//

    மாவிலாறு யுத்தம் தொடங்கி கிழக்கு விழுந்து மிகப் பிந்திய காலத்திலேயே அரசு போர் நிறுத்தத்தில் இருந்து அதிகாரபூர்வமாக விலகியது. 2008 ஜனவரி 22 இலேயே அது விலகியது.

    மாவிலாறு 2006 நடுவினில் போய் விட்டது.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகாத மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரிலேயே கிழக்கினை அரசு மீட்டது.

    மற்றும் படி தெரிந்த தகவல் பிழைகள் ஏதும் இல்லை.

    தற்போதைக்கு பாரிய அளவிலான படையினருடன் மோதி ஆளணி இழப்பை புலிகள் விரும்பவில்லையென்பது புரிகிறது. பிரபாகரனின் எண்ணத்தில் இருக்கும் ஏதோ ஒரு திட்டப் புள்ளிக்கு கெடுதல் ஏற்படாது என அவர் கருதும் முனைகளில் எல்லாம் இராணுவம் முன்னேற வாய்ப்புண்டு.

    அவ்வாறு திட்டத்தை முனை மழுங்கடிக்கும் எனக் கருதும் இடங்களில் எல்லாம் கடுமையான எதிர்ப்பிருக்கும்.

    புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து யாரும் இனி யுத்த களமுனைகளுக்கு செல்வதற்கு இல்லையென்பதுவே யதார்த்தம்.

    அவர்களை குசிப் படுத்த வேண்டும் என்பதற்காக களமுனையில் போராளிகளை இறக்கி விட முடியாது.

    நிலங்களை இழத்தல் என்பது ஒரு விடுதலைபோரின் தோல்வி என்றால் சந்தேகமேயில்லாமல் புலிகள் தோற்கிறார்கள்தான்.

    ஆனால் தனக்கான தருணம் வரும் வரை தனது ஆளணி ஆயுத வளத்தைப் பேணுவதே நீண்ட இருப்புக்கான வழி எனில் புலிகளுக்கு நீண்ட இருப்பு உண்டு. உண்மையில் புலிகளைத் தோற்கடிக்க விரும்பும் சிறிலங்கா படை புலிகளின் பெருமளவிலான ஆளணி ஆயுத பலத்தையே குறிவைத்திருக்க வேண்டும்.

    ஆனால் அதற்கான வாய்ப்பை புலிகள் வழங்கியதில்லை.

    என்னுடைய ஆசை என்னவெனில் 96 முதல் 99 வரை தமிழீழம் சுருங்கிய போது ஈழவனின் கருத்து இதே மாதிரியான இது அஸ்தமனம் என்பதாகத்தான் இருந்ததா ? 99 இல் இராணுவம் முல்லைத்தீவின் குறுக்கே ஒட்டுசுட்டான் வரை தரித்திருந்தது.

    இப்போது மாங்குளத்தில் தரித்து நிற்கும் இராணுவத்திற்கு ஒட்டுசுட்டான் மீது ஒரு கண் இருக்கலாம். நாளையோ நாளை மறுதினமோ அவர்கள் ஒட்டுசுட்டானையும் சென்றடையலாம். யார் கண்டது.

    என்ன ஒன்று? இந்த ராணுவ ஆய்வுக் களேபரத்தில் மக்களை மறந்து விடுகிறோம். :(

    பதிலளிநீக்கு
  5. நீண்ட நாட்களின் பின்னர் களத்துமேட்டுக்கு வருகை தந்து காத்திரமாகக் கருத்திட்டமைக்கு நன்றி கொழுவி.

    //நிலங்களை இழத்தல் என்பது ஒரு விடுதலைபோரின் தோல்வி என்றால் சந்தேகமேயில்லாமல் புலிகள் தோற்கிறார்கள்தான்//

    நீங்கள் குறிப்பிட்ட இவ்விடயம் ஆய்வுக்கு உரியது தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் தற்போதைய பின்வாங்கலானது தற்காலிக அல்லது தந்திரோபாய பின்வாங்கலாக இருக்கலாம் ஆனால் தமிழர்களுக்குரிய பாரம்பரிய நிலபுலங்களை இழந்த பின்பு, தளமின்றி நிற்கும் விடுதலைப் புலிகள் தங்களிடம் இருக்கும் ஆளணிகளையும், ஆயுதத் தளபாடங்களையும் கட்டிக்காப்பது கடினமாக இருக்கும்.

    //என்னுடைய ஆசை என்னவெனில் 96 முதல் 99 வரை தமிழீழம் சுருங்கிய போது ஈழவனின் கருத்து இதே மாதிரியான இது அஸ்தமனம் என்பதாகத்தான் இருந்ததா ? 99 இல் இராணுவம் முல்லைத்தீவின் குறுக்கே ஒட்டுசுட்டான் வரை தரித்திருந்தது//

    நீங்கள் குறிப்பிட்ட முல்லைத்தீவின் குறுக்கே ஒட்டுசுட்டான் வரையேயான நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா படைதரப்பு காலூன்றிய போது ஈழ எல்லையில் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தன, ஆயுத, ஆளனி வழங்கல் அன்றைய போராட்டத்துக்கு இலகுவாக இருந்தன, ஆனால் இன்றைய களநிலை அப்படியல்ல, நாளைய ஸ்ரீலங்காவின் படை நகர்வு எப்படி இருக்குமென அறிய முடியாமலிருக்கின்றது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நிலங்களை மட்டும் மீட்பதே குறி என்றில்லாமல் விடுதலைப் புலிகளின் ஆயுத, ஆளணி வளங்களையும் குறைக்க வேண்டுமெனும் நீண்டகாலத் திட்டத்திலேயே ஸ்ரீலங்கா படை தரப்பு களமிறங்கியுள்ளது.

    இதற்காக இப்போது விடுதலைப் புலிகள் எடுத்திருப்பது தான் தந்திரோபாயமா எனக் கேட்க முடிகின்றது, இதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    //என்ன ஒன்று? இந்த ராணுவ ஆய்வுக் களேபரத்தில் மக்களை மறந்து விடுகிறோம். :( //

    சரியாக சொன்னீர்கள் கொழுவி, இந்த யுத்தத்தில் மக்கள் நலம் சார்பு எதுவும் இல்லை என்பது யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  6. தமிழீழ போராட்டத்தினை உள்ளிருந்து பார்க்கும் பார்வையாக இருக்கிறது தங்களின் ஆய்வு,அடிப்படையில் சகோதர படு கொலை என்பது எமது போராட்ட பலத்தை உலுப்பி உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்,அதே போல அதன் மறுதலையாக ஒரே அமைப்பிற்குள்ளும் நடைபெற்ற கொலைகளையும் நாம் மறந்துவிட கூடாது.பொது எதிரிக்கு எதிராக தூக்கப்பட ஆயுதங்கள் எங்களை நோக்கியே திரும்பிய வரலாறு கொடூரமானது.இதே வேளை புலிகளின் ஆட்சி அலகு அல்லது கட்டுப்பாட்டு அலகு சுருங்கி உள்ளது யதார்த்தமாக தெரிகிறது,இந்த இராணுவ ரீதியான நிலப்பரப்பு சுருக்கம் தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை எந்தளவு தூரம் பாதிக்கப்போகிறது என்பது இப்போது எழும் மிக முக்கியமான வினாவாக இருக்கிறது ?


    தொடர்ந்தும் இப்படியான திறனாய்வுகளை செய்யுங்கள்.பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி அப்புச்சி.
    //அடிப்படையில் சகோதர படு கொலை என்பது எமது போராட்ட பலத்தை உலுப்பி உள்ளது என்பதை ஏற்கத்தான் வேண்டும்,அதே போல அதன் மறுதலையாக ஒரே அமைப்பிற்குள்ளும் நடைபெற்ற கொலைகளையும் நாம் மறந்துவிட கூடாது//
    இவை பற்றி எழுதுவதென்றால் தொடராகி விடும், எனினும் காலத்துக்கேற்ப பதிவு செய்யப்படும்.

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----