வெள்ளி, 19 செப்டம்பர், 2008

கிளிநொச்சியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு இடம் பெயரும் மக்கள் !

கிளிநொச்சி பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படைதரப்பு தொடர்ச்சியாக நடாத்தி வரும் எறிகணை வீச்சு, விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் தரை மார்க்கமான தாக்குதலில் தாக்கத்துக்கு உள்ளாவது வன்னியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களே ஆகும்.

இக் கொடூரத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் கிளிநொச்சிப் பகுதியில் இருந்து கண்டாவளைப் பகுதிக்கு மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

வியாழன், 18 செப்டம்பர், 2008

இரசாயன விஷ வாயு தாக்குதலும் மூச்சுத் திணறலும்!

வன்னி கிளிநொச்சியின் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதிகளில் தொடரும் ஸ்ரீலங்கா படைத்தரப்பினருடனான மூர்க்கத் தனமான சண்டையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிஎஸ் இரசாயன விஷ வாயு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும் இதனால் அக்கராயன் மோதலில் பங்குபற்றிய 6 இராணுவத்தினர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவ தரப்பு பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இரசாயன விஷ வாயுக்களைப் போரில் பாவிப்பது ஐ.நா. சட்ட போரியல் விதிகளுக்கு முரணானது என்பதால் இதனை முறியடிப்பதற்கு தேவையான சகல வழி முறைகளையும் பின்பற்ற ஸ்ரீலங்கா இராணுவம் தயாராக இருப்பதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவ தரப்புப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறிய கருத்துக்களை எடுத்து நோக்கினால், விஷ வாயு தாக்குதலை முறியடிக்கக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா படை தரப்பும் விஷ வாயுத் தாக்குதலை நடத்த தயாராகி விட்டது என்பது புலனாகின்றது.

சாட்சியமே இருக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புக்களை வன்னியில் இருந்து அகற்றிய நிலையில் ஸ்ரீலங்கா படைதரப்பு இரசாயன விஷ வாயு தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி விட்டோமென கூறுவது சிந்திக்கத் தோன்றுகின்றது.

விடுதலைப் புலிகள் இரசாயன விஷ வாயு ஆயுதத் தாக்குதலை நடாத்தினார்களா இல்லையா என்பது வெளிவராத நிலையில் இராணுவத்தினரின் இந்த திடீர் அறிவிப்பு பொது மக்களைக் கவலை கொள்ள வைக்கின்றது.

ஸ்ரீலங்கா இராணுவம் இரசாயன விஷ வாயு ஆயுதங்களை இப் போரில் பாவிக்கத் தொடங்கினால் இதில் அதிகமாகப் பாதிக்கப்படப் போவது அப்பாவிப் பொதுமக்களே என்பது உறுதி.

71,54 வயதுடைய ஓரினத் தம்பதியர் !

71 வயதுடைய "ஸ்ரார் டெக்" நடிகர் ஜோர்ஜ் தகேயி தனது நீண்ட கால ஆண் காதலனான 54 வயதுடைய பிரட் அல்ட்மானை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜப்பான் - அமெரிக்க தேசிய அருங்காட்சியத்தில் பௌத்த மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

ஒரே பாலினத்தவர்களின் திருமணத்துக்கு தடையாக இருந்த சட்டத்தினை கலிபோனியா நீதிமன்றம் 2008.06.17 ஆம் திகதி நீக்கியதையடுத்து 21 வருட காலமாக சட்டரீதியற்று தன்னுடன் வாழ்ந்து வந்த அல்ட்மானை ஜோர்ஜ் தகேயி பல நண்பர்கள் வாழ்த்துடன் கரம் பற்றினார்.

மட்டு.தம்பலவத்தையில் இளம் பெண் சுட்டுக் கொலை !

ஸ்ரீலங்காவின் மட்டு. மண்டூர் தம்பலவத்தை பகுதியில் வைத்து நேற்று முன்தினமிரவு 30 வயதுடைய கணேசபிள்ளை மஞ்சுளா எனும் இளம் பெண் துப்பாகிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரென தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 17 செப்டம்பர், 2008

மட்.தேற்றாத்தீவில் பெண் பொறியியலாளர் சுட்டுக் கொலை !

மட்டக்களப்பு நியாப் திட்ட பெண் பொறியியலாளர் 31 வயதுடைய பிறேமலதா லோகேஸ்வரன் இன்று காலை 7 மணியளவில் தேற்றாத்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீவகங்களில் கரையொதுங்கும் பெண்களின் சடலங்கள் !

யாழ். நெடுந்தீவு, நயினாதீவு கடற்கரைப் பகுதியில் நேற்றும், நேற்று முன்தினமும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைந்த நிலையில் கரையொதிங்கி உள்ளன.

நேற்று முன்தினமிரவு நெடுந்தீவு குயின் டவர் பகுதியில் முதலாவது பெண்ணின் சடலமும், நேற்றுக் காலையில் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் இரண்டாவது சடலமும், நயினாதீவு வெள்ளை மணல் கடற்கரைப் பகுதியில் மூன்றாவது சடலமும், நேற்று நண்பகல் நயினாதீவு பிடாரி அம்மன் கோவில் பகுதியில் நான்காவது பெண்ணின் சடலமும் காணப்பட்டுள்ளன.

சடலமாகக் காணப்பட்ட இப் பெண்கள் உடமைகளாக காதணிகளும், மேற்சட்டையும் மற்றும் பாவாடையும் அணிந்துள்ளார்கள்.

இச் சடலங்கள் கடந்த வாரம் இந்திய அகதி முகாமான இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இலங்கை திரும்பிய போது படகு கவிழ்ந்ததில் மரணித்தவர்களாக இருக்கலாமென அறிய முடிகின்றது.

செவ்வாய், 16 செப்டம்பர், 2008

கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் குண்டு வெடிப்பு !

மட்டக்குளியில் இருந்து மொரட்டுவ நோக்கிச் சென்ற 155 ஆம் இலக்க பிரயாணிகள் பேரூந்து கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் பி.ப 1.45 மணியளவில் சென்று கொண்டிருந்த சமயம் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பயணித்த பயணிகள் சந்தேகத்துக்குரிய பொதியைக் கண்டு பேரூந்தை விட்டு இறங்கிச் சென்ற பின் குண்டு வெடித்துள்ளது, எனினும் நால்வர் காயங்களுக்கு உள்ளாகியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்டன் சதுக்கம் பகுதியில் படையினரின் தேடுதல் நடாத்தி வருகின்றனர்.

வன்னியிலிருந்து "கரிதாஸ்" வெளியேறாது !

வன்னியில் இருந்து செயற்பட்டு வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பல அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு வெளியேறியுள்ளன.

இந் நிலையில் வன்னியில் தொண்டு பணியில் ஈடுபட்டு வந்த கத்தோலிக்க அமைப்பான "கரிதாஸ்" வெளியேறப் போவதில்லையென உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது.

வன்னியில் தங்கியிருந்து இம் மக்களுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து முன்னெடுப்பதே எமது நோக்கமென "கரித்தாஸ்" தெரிவித்துள்ளது.

ஐநா வெளியேறுகின்றது !

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து மனிதாபிமானப் பணிகளில் செயற்பட்டு வந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் தங்களின் வாகனத் தொகுதிகளுடன் இன்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு திரும்புகின்றனர்.

ஓமந்தை வரை பாதுகாப்பாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததற்கமைய அனைத்து ஐ.நா. பணியாளர்களும் வன்னியில் இருந்து இன்றே வெளியேறி விடுவார்கள் எனச் செய்திகள் கூறுகின்றன.

திங்கள், 15 செப்டம்பர், 2008

வன்னியிலுள்ள ஐ.நா. அதிகாரிகள் விரைவில் வெளியேறுவர்!

யுத்தம் நடைபெறும் பிரதேசங்களில் நிவாரணப்பணிகளை அரச சார்பற்ற அமைப்புகளால் செய்ய முடியாதிருப்பதால் வன்னியில் தங்கியிருந்து செயற்படும் தன்னார்வ தொண்டூழியர்கள் அனைவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வன்னியை விட்டு வெளியேறி விடுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி வன்னியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அதன் பணியாளர்களுக்கான பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்பேற்க மாட்டாது.

அங்கிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்து நிவாரணப்பணிகளை முன்னெடுக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ் ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

வன்னியில் பணியாற்றும் ஐ.நா. அதிகாரிகளின் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்துவதால் தமது மனிதாபிமானப் பணிகளை அரச அதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வவுனியாவில் தங்களது அலுவலகத்தை அமைத்துச் செயற்படுமாறு அவர்களுக்கு அறிவுறித்தியுள்ளோம் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ்.

தற்போதைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து செயற்பட்டு வந்த அரசசார்பற்ற நிறுவனங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புத் தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் வெளியேறி விட்டதாகவும், வன்னி மக்கள் ஐ.நா அதிகாரிகளை வெளியேற வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம், வீதி மறிப்புப் போராட்டம் போன்றன நடாத்தி தடுத்ததால் தற்காலிகமாக தங்களது வெளியேற்றத்தை ஒத்திவைத்துள்ள ஐ.நா.அதிகாரிகளும் விரைவில் வெளியேறி விடுவார்களெனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

வசந்த் அவர்களின் லொஜிக் இல்லா மெஜிக் !

மாயாஜாலமென்றால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் விரும்பி இரசிக்கும் நிகழ்ச்சியாகும், இந் நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலையில் ஒளிபரப்பாகி வருகின்றது.

"Logic இல்லா Magic" இதற்கு இரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

திரு.எஸ்.ஏ.சி.வஸந்த் அவர்கள் "லொஜிக் இல்லா மெஜிக்" நிகழ்ச்சியை அழகாக நடத்திக் காட்டுவதுடன், இறுதியில் பார்வையாளர்களும் இலகுவாகச் செய்யக் கூடிய வகையில் சில தந்திர விளையாட்டுக்களைச் செய்து காண்பித்து எல்லோர் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்.

"Maya Maya" S.A.C.Vasanth
எனும் இணையப் பதிவின் மூலமும் சில மாயாஜால விளையாட்டுக்களைக் காட்ட முனைகின்றார் திரு. வசந்த்.

இவரின் மாயாஜால விளையாட்டுக்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற "களத்துமேடு" வாழ்த்துகின்றது.

ஸ்ரீலங்காவில் கொல்லப்பட்ட காயப்பட்டோர் விபரம் !


ஸ்ரீலங்காவில் கடந்த எட்டு மாதங்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த படைதரப்பினரதும் பொது மக்களினதும் விபரங்களைப் பாராளுமன்றத்தில் பிரதமரும் பாதுகாப்புப் பிரதியமைச்சருமான ரத்னஸ்ரீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் பொலிஸ், இராணுவ படை தரப்பிலிருந்து 896 பேர் கொல்லப்பட்டும், 5908 பேர் காயமடைந்தும் உள்ளனர். பொதுமக்களில் 381 பேர் கொல்லப்பட்டும், 621 பேர் காயமடைந்தும் உள்ளதாக அத்தகவல் கூறுகின்றது.

இவை அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் ஆகும், இவை தவிர்த்து பதிவு செய்யப்படாத கொலை மற்றும் காயப்பட்டவர்களினையும் சேர்த்தால் இப்பட்டியல் நீளக் கூடுமென அறிய முடிகின்றது.

வியாழன், 11 செப்டம்பர், 2008

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதியார் ஆற்றிய உரை !

செப்டெம்பர் 11 ஆம் நாளென்றால் மனதை உருக்கிய பல சம்பவங்கள் வந்து சேரும், அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பும் அதில் கொல்லப்பட்ட, குருதி தோய்ந்த அப்பாவி மக்களும் நினைவில் வந்து செல்வதுண்டு.




சுப்ரமணிய பாரதியார் தனது 39 வது வயதில் 1921.09.11 ஆம் நாளன்று இவ்வுலகை விட்டு விடை பெற்றார். அவரின் 86 ஆம் நினைவு தினம் இன்றாகும்.



பாரதியின் பாரியார் செல்லம்மாள் 1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலையத்தில் "என் கணவர்" எனும் தலைப்பில் ஆற்றிய உரையை "உதயன்" பத்திரிகை பதிவு செய்துள்ளது.

நன்றி உதயன்

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் !


வவுனியா ஜோசப் இராணுவத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளும், கிட்டு பீரங்கிப் படையணியும் மற்றும் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இந்திரா ராடர் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளும் வானூர்திகளும் தளம் திரும்பி விட்டதாகவும், கொல்லப்பட்ட கரும்புலிகளினது விபரத்தினையும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  1. கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  2. கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  3. கரும்புலி மேஜர் நிலாகரன்
  4. கரும்புலி மேஜர் ஆனந்தி
  5. கரும்புலி கப்டன் கனிமதி
  6. கரும்புலி கப்டன் முத்துநகை
  7. கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  8. கரும்புலி கப்டன் எழிலகன்
  9. கரும்புலி கப்டன் அகிலன்
  10. கரும்புலி கப்டன் நிமலன்

அரச வரிகளால் திண்டாடும் ஸ்ரீலங்கா மக்கள் !


அண்மையில் அமைச்சர் பேரியல் அஷ்ரப் நகரப்புற மக்கள் அனுபவிக்கும் அனைத்து விடயங்களையும் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென கருத்துத் தெரிவித்திருந்தார்.

தினமும் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் ஸ்ரீலங்கா மக்கள் திண்டாடுவதை "வீரகேசரி" பத்திரிகை காட்டூன் படம் மூலம் அழகாகக் காட்டியுள்ளது.

திங்கள், 8 செப்டம்பர், 2008

பிள்ளையானின் ஊடகச் செயலருக்குத் துப்பாக்கிச் சூடு !

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் ஊடகச் செயலாளராகப் பணிபுரிந்த மட்டக்களப்பைச் சேர்ந்த ராதிகா தேவகுமார் இன்றிரவு 7.30 மணியளவில் கல்லடியில் வைத்து துப்பாக்கிதாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதனுக்கு அஞ்சலி !

தமிழர்களுக்கு வயலின் இசையால் பெருமை சேர்த்த பெருந்தகை குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் இசையுலகுக்குப் பேரிழப்பாகும்.

வைத்தியநாதனின் வயலின் ஒலி அடங்கி விட்டது, இனி எப்போது கேட்போம்?

வயலினால் பெருமை பெற்றவரா குன்னக்குடி வைத்தியநாதன் அல்லது குன்னக்குடி வைத்தியநாதனால் பெருமை பெற்றதா வயலின் என பட்டிமன்றம் நடாத்துமளவுக்கு திறமையின் உச்சத்தில் இருந்தவர் குன்னக்குடி.

வயலின் இசை இருக்கும் வரை குன்னக்குடி வைத்தியநாதனின் பெயர் நிலைத்திருக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய "களத்துமேடு" பிராத்திக்கின்றது.

உறுதிமிக்க போராளிகளைப் புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர் - இக்பால் அத்தாஸ் !

யுத்தக் களநிலை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் நேற்று 2008.09.07 ஆம் திகதி "தமது உறுதி மிக்க போராளிகளை புலிகள் களத்தில் இறக்கியுள்ளனர்" எனும் தலைப்பில் "சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை.

நன்றி உதயன்.

யாழ்.முன்னாள் மேயர்களின் நினைவு தினம் !

தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் மேயர்களான திருமதி சரோஜினி யோகேஸ்வரன், பொன்னுத்துரை சிவபாலன் ஆகியோரின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு நேற்று 2008.07.09 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் திரு.ச.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

பொன்னுத்துரை சிவபாலனின் பத்தாவது நினைவு தினம் செப்ரம்பர் 14ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

மேலதிக விபரங்களை தங்க முகுந்தனின் வலைப்பூவில் எதிர் பார்ப்போம்.

மேலதிக தகவலுக்கு:
தமிழ் நியூஸ்வேப்
தேசம் நெற்
தேனீ இணையத்தளம்

யாழ்.மாணவ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கான கண்காட்சி !

ஸ்ரீலங்கா தலைநகரின் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் இன்று தேசிய புத்துருவாக்குனர் திணைக்கள ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புக்களுக்கான கண்காட்சி இடம்பெறுகின்றது.

2008 ஆம் ஆண்டுக்கான புத்துருவாக்குதலும் புதுமை புகுத்தலும் எனும் கண்காட்சியில் யாழ்ப்பாண மாணவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அனுசரணையுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட நவீன விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புக்களை பார்வைக்கு வைத்திருந்தனர்.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் செந்தூர்ச்செல்வன் அம்புஜனின் கண்டு பிடிப்பில் திருடரின் கைவரிசையில் இருந்து பணப்பையைப் பாதுகாக்கும் அபாய ஒலி எழுப்பும் பணப்பை.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராசேந்திரம் ருபேந்திரனின் கண்டு பிடிப்பில் இருளின் நூல்களை வாசிக்க உதவும் மூக்குக்கண்ணாடி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் உதயகுமார் டயந்தனின் கண்டு பிடிப்பில் தேங்காய் துருவும் கருவி மூலம் இலகுவாக மரக்கறி நறுக்க உதவும் கருவி.


யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி சோபிதா கமலராஜாவின் கண்டு பிடிப்பில் கடல்நீரை எளிய முறையில் நன்னீராக்கும் கருவி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் எஸ்.பிரதாபனின் கண்டு பிடிப்பில் உணவகங்களில் பயன்படக்கூடிய பெருமளவு மரக்கறிகளை மின்சார உதவியுடனும் கையினாலும் வெட்டும் கருவி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் சுரேஷ்குமார் தர்ஷனின் கண்டுபிடிப்பில் எளிய முறையிலான பாதுகாப்பான எலிப்பொறி.


கோப்பாய் சரவணபவ வித்தியாலய மாணவன் நல்லநாதன் பிரசாந்தனின் கண்டுபிடிப்பான இருளில் பயன்படுத்தக்கூடிய காலணி, இருளில் சுத்திகரிக்க உதவும் தும்புத்தடி, பார்வையற்றோர் இருளின் நடக்க உதவும் கைத்தடி.


யாழ். சுண்டிற்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரேணுகா அமிர்தலிங்கத்தின் கண்டுபிடிப்பான இயற்கை மூலிகைகளான வேப்பிலை, துளசி இலை மூலம் தயாரிக்கப்பட்ட நுளம்புத்திரி.


யாழ். மத்திய கல்லூரி மாணவன் ராஜரட்ணம் விதூஷன் கண்டு பிடித்த இலகுவான முறையில் மரக்கறி நறுக்க உதவும் கருவி.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----