காதலிக்கு சம்பளத்தை அதிகரித்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார் மாமா, ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது, இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்னும் ஒரு கருத்து வழக்கு எம்மிடம் நீண்ட காலமாக இருந்து வருகின்றது, இத்தகைய சர்ச்சைக்கு மேதைகள் பலர் இலக்காகியுள்ளனர், இந்த வரிசையில் இப்போது சிக்கித் தவிர்க்கின்றார் உலக வங்கித் தலைவர்.காதலிக்கு 31 ஆயிரம் பவுண்ஸ்களுக்கு மேல் சம்பளத்தை உயர்த்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உலக வங்கித் தலைவர் உல்போவிட்ச்.
ஈராக்கிற்கு எதிரான போரின் போது, அமெரிக்க இராணுவ கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்காற்றியவர் பால் உல்போவிட்ச். அப்போது, பென்டகனில் துணைத் தலைவராக இருந்தார். `ஈராக்கிற்கு எதிராக புஷ்ஷுக்கு விவகாரமான யோசனைகளை வழங்கியது இவரே' என கடும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. விமர்சனங்களுக்கு மத்தியில், 2005 இல் உலக வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மனைவியை பிரிந்து வாழும் உல்போவிட்ஸுக்கு தற்போது வயது 63. உலக வங்கி தலைவர் பொறுப்பை ஏற்ற நேரத்தில் ஷாஹா ரிஸா என்ற 53 வயது பெண்மணியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ரிஸாவும் விவகாரத்தானவர் என்பதால் உறவு பலப்பட்டது. இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். ரிஸா, ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பயின்று, அமெரிக்க இராணுவத் துறையில் பணியாற்றியவர். பின்னர் உலக வங்கியில் சேர்ந்தார். உல்போவிட்ஸுக்கு முன்பாகவே உலக வங்கியில் பணியாற்றி வந்தாலும், ரிஸாவுக்கு சமீப காலத்தில் வழக்கத்துக்கு மாறாக பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் என ஏராளமான திடீர் சலுகைகள் கிடைத்தன. உல்போவிட்ச் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பணியாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொடர்பு பிரிவில் இருந்த போது ரிஸாவின் சம்பளம் 67 ஆயிரம் பவுண்ஸ்கள். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசுத் துறையில் உலக வங்கிப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து, 98 ஆயிரம் பவுண்ஸ்கள் சம்பளம் பெறுகிறார் ரிஸா. திடீரென 31 ஆயிரம் பவுண்ஸ்கள் சம்பளம் உயர்த்தப்பட்டது பணியாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி `விசாரணை நடத்த வேண்டும்' என வாஷிங்டன் பணியாளர்கள் சங்கம் வற்புறுத்தியுள்ளது.
நன்றி தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.