இலங்கையில் ஆயுதக் கலாசாரம் நச்சுப் பார்வையை திணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து அப்பாவிப் பொதுமக்களின் மீதான படுகொலைகள் சர்வசாதாரணமாக நடைபெறுவதை எவரும் மறுத்துவிட முடியாது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் அனைத்தும் ஸ்ரீலங்கா அரச இயந்திரத்தின் திட்டமிட்ட நசுக்குதலாலும், ஈழ விடுதலை இயக்கங்களாலும் மற்றும் தீவிரவாத போக்குடைய முஸ்லிம்களினாலும் தினமும் நடைபெறுவதனை ஊடங்களின் மூலமாக எல்லோரும் அறியக் கூடியதாக செய்திகள் வருகின்றன. விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களில் அதிகமானோர் ஈழ விடுதலை அமைப்புக்களினால் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ள விடையமாகும். அப்போதைக்கப்போது முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஆயுதக் கலாசாரத்தின் இரத்தவெறிக்கு இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஈழ விடுதலை எனும் பெயரில் அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடையமாகும், போலிக் காரணங்களைக் கூறி மனிதாபிமானமின்றி செய்யப்படும் இப்படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அப்பாவி ஜீவன்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஏதுமறியாத அப்பாவி சிங்கள மக்கள் மீதான கொலை வெறியாட்டத்தின் மூலம் கொலையாளிகள் உலகுக்கு அல்லது ஸ்ரீலங்கா நாட்டுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு எதைக் கூற முற்படுகின்றார்கள் என்பது தெரியாத விடயமாக உள்ளது.
சிங்கள மக்களைக் கொல்வதால் இன்னும் இன்னும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே
பூசல்கள் விரிசலடைந்து கொண்டு தான் இருக்கும். பதிலுக்கு அவர்களும் தாக்குதல் நடத்த வேண்டுமெனத் தீர்மானித்து சில தமிழர்களை கொலை செய்வார்களேயானால் விளைச்சல் எப்படி இருக்கும். பொது மக்களை அழிப்பதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை, இதனை ஆயுத மேந்திய சகல தரப்பும் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.
இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு உட்பட்ட அவரந்துலாவ பகுதியில் உள்ள பழைய ஊருவ என்ற சிங்கள கிராமத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் புகுந்த ஆயுதபாணிகள் 7 பொதுமக்களைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் பெண்கள் என்றும், ஒருவர் ஆண் என்றும் ஊடகத் தகவல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தச்சம்பவத்தை விடுதலைப் புலிகளே மேற்கொண்டுள்ளதாக் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது, எனினும் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதியிடம் சம்பவம் பற்றி தெரிவித்த கிராமவாசி ஒருவர் இன்று மாலை 4.15 மணியளவில் தமது கிராமத்திற்கு ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் இரு பிரிவுகளாகப் பிரிந்து வீடுகளை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இதில் தனது மனைவி, அம்மா, தங்கை, தங்கையின் மகள் ஆகியோர் உட்பட
6 பெண்களும் 17 வயதுடைய ஒரு இளைஞனும் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 13 வயதுக்கும் 85 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களின் தலை, கால்கள், வயிற்றுப்பகுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த ஏழு சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பழைய ஊருவ என்ற கிராமத்தில் குறைந்த எண்ணிக்கையான குடும்பங்களே வசிப்பதாகவும்,
இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் அநேகமானோர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினருக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை முறியடித்து, கிராமப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக ஊர்காவல் படை என்ற அணியில் கிராமவாசிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி பிபிசி தமிழோசை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.