வியாழன், 12 ஏப்ரல், 2007
தமிழீழ வான்படையின் தாக்குதலும் இந்திய நிபுணர்களின் மாற்றுக் கருத்துக்களும்!
சர்வதேச ரீதியில் பல விடுதலை அமைப்புக்களும், எண்ணற்ற தீவிரவாத அமைப்புக்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன, இவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு எவ்வமைப்புக்களும் தம் கைவசம் விமானப்படையை வைத்திருப்பதற்கான தகவல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படை கச்சிதமாக நடத்தி முடித்த கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கமும் வேற்று அமைப்புக்களும் பற்பல கருத்துக்களை உள்வாங்கி தங்களது உளக்கிடக்கைகளை வெளியிட்டுள்ளன, இதில் அச்சம்சார் பதிலே அதிகம் தொக்கி நிற்கின்றது, இதற்கு இந்தியா ஆதாரபூர்வமாக எக்கருத்தையும் பதிவு செய்யவில்லை, இருந்தும் சில கருத்துக்கள் ஆங்காங்கே கசிந்து கொண்டுதானிருக்கின்றன, இதில் இந்திய பாதுகாப்பு நிபுணர்களிடம் இருக்கும் மாற்றுக்கருத்துக்களுக்கு மத்தியில் பி.இராமன் அவர்கள் பல சந்தேகங்களுக்கு விடை தேடுகின்றார்.
வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு முன் புலிகள் சிறிது காலமாவது அதற்கான பயிற்சியை பெற்றிருக்க வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்டதா? அப்பகுதியில் விமானங்கள் பறப்பதை இலங்கை விமானப் படையினரும், இந்தியாவும் கவனிக்காமல் விட்டு விட்டனரா? மீண்டும் வான்வழித் தாக்குதல் இருக்கும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர். அப்படியென்றால் அதற்குத் தேவையான எரிபொருள் அவர்களிடம் ஏராளமாக இருப்பில் உள்ளது என்பதே இதன் அர்த்தம். அந்த எரிபொருளை அவர்கள் தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றது எப்படி? புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் ஓடுதளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது சரமாரியாக குண்டுகள் வீசி சேதப்படுத்திவிட்டோம் என்று இலங்கை விமானப்படை முன்னர் தம்பட்டம் அடித்தது. அந்த ஓடுதளத்தை புலிகள் சரி செய்து விட்டனரா? அல்லது அதேபோன்றதொரு ஓடுதளம் மற்றொரு பகுதியில் உள்ளதா? இவ்வாறு பல்வேறு கேள்விகளை ராமன் எழுப்பியுள்ளார். `புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஆபத்தானதே' என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். ஆனால், புலிகளின் வான்வழித் தாக்குதலால் மத்திய அரசு கவலை அடையவில்லை. வான்வழித் தாக்குதலுக்கு அடுத்தநாள் மட்டக்களப்புப் பகுதியில் புலிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இவ்விரு சம்பவங்களுக்கு முன் மேற்கத்தைய நாடுகளின் தூதர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. இவை அனைத்தும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள். `இவற்றினால் புலிகள் பலம் பெற்று விட்டதாக கருத முடியாது. முன்பை விட புலிகள் பலவீனம் அடைந்துள்ளதையே இந்தத் தாக்குதல்கள் வெளிப்படுத்துகின்றன' என்று இந்திய உளவுத் துறையினர் கூறுகின்றனர். மூன்று தாக்குதல்களிலும் பெருத்த அளவு சேதம் ஏற்படவில்லை. பீதியை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்குதல் இருந்தாலும், சேதம் மிகக் குறைவே என்பது அவர்களின் கணிப்பு.
புலிகளின் தற்போதைய நிலை குறித்து உளவுத்துறையினர் கூறியதாவது; பீதியை உண்டாக்கவும் மீண்டும் அனைத்து தரப்பினராலும் பேசப்படுவதற்காகவும் இதுபோன்ற தாக்குதல்களை புலிகள் தொடர்ந்து மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றினால் பெரிய அளவு வெற்றி எதையும் காண முடியாது. சர்வதேச அளவில் புலிகள் மேற்கொண்டுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புலிகள் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையே இதற்கு காரணம். அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இலங்கைத் தமிழர்களால் நிதி திரட்டப்பட்டு புலிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் புலிகள் மீது அனுதாபம் காட்டியவர்கள் தற்போது கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். புலிகளின் எதிர்கால நோக்கம் என்ன? என்பது தான் அவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. புலிகள் அமைப்பில் உள்ளவர்களின் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சிறுவர், சிறுமிகளை படையில் தொடர்ந்து சேர்த்து வருவது ஆகியவையே இந்தக் கேள்விக்கு அடிப்படையாக உள்ளது.
புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது மிகப் பெரிய அடி. கடந்த காலங்களில் ஆதரவுக் கரம் நீட்டி வந்த கனடா அரசும் புலிகளின் ஆதரவாளர்கள் நடமாட்டத்தை தடை செய்யத் தொடங்கிவிட்டது. பிரிட்டனும் இதேபோன்ற செயலில் இறங்கியுள்ளது. இவையெல்லாம், புலிகள் அமைப்பினர் மீது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே. இராணுவத்தின் துணையுடன் புலிகளை கட்டுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை முன்னெப்போதையும் விட இலங்கையில் தற்போது தோன்றியுள்ளது. இதனால் தான், வடக்கு பகுதியில் தீவிர தாக்குதலை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள மக்களிடம் ஒருவித வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை இந்த வெறுப்புணர்வு தான் தடுத்து வருகிறது. இதுவும் புலிகளுக்கு ஒரு பின்னடைவு தான். இவ்வாறு உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.