திங்கள், 9 ஏப்ரல், 2007

`எயார் கனடா'

புலிகளின் விமானங்கள்

ஸ்ரீலங்காவில் தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி பேசப்படும் சொற்பிரயோகம் "கொட்டியா" தான், கொட்டியா என்பது புலி என்பதன் சிங்களச் சொல். 26.3.2007 திகதியன்று அதிகாலை தமீழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் சிங்களவர்களின் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது, எவரின் வாயிலும் புலிகளின் விமானம் பற்றிய பேச்சே ஒலிக்கின்றது, ஏதாவது பேரிரைச்சல் கேட்டாலும் உடனே ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து புலிகளின் விமானம் வருகின்றதோ என பார்க்குமளவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானம் பேர் பெற்று விட்டது.

புலிகளின் விமானம் ஸ்ரீலங்கா பகுதிகளில் குண்டு வீச்சுக்களை நடாத்தாமல் தடுப்பதற்காக அரசாங்கம் பலவித முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது, மக்களிடமிருந்து தகவல் திரட்டுவதற்காக இலவச தொலைபேசி இலக்கம் ஊடகங்களின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் உண்மையான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைப்பதை விட பொய்யான தகவல்களே அதிகமாக கிடைப்பதாக அறிய முடிகின்றது.

கொழும்பு நகரைத் தாக்க புலிகளின் விமானம் வந்து விட்டதாக எழுந்த அனாமதேய தகவலைத் தொடர்ந்து கடந்த வாரம் தலைநகல் அல்லோல கல்லோலப்பட்டது, இருபது நிமிடம் சகல மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கியிருந்தது கொழும்பு.
யானை அடிக்க முன்னர் தானே அடித்துச் சாவது என்பது இதைத் தானோ!

புலிகள் இயக்கத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் சைக்கிள்களில் வந்தே திடீரென்று தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிள்களில் வந்தும் அதன் பின்னர் சிறிய, பெரிய வாகனங்களில் வந்தும் தாக்குதல்களை விரிவுபடுத்தினர். இவ்வாறே கடற்பிராந்தியங்களில் ஆரம்ப காலகட்டங்களில் படகுகள் மூலம் தாக்குதல்களைத் தொடங்கிய புலிகள் பின்னர் கப்பல்கள், நீர்மூழ்கிப் படகுகளில் வந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தனர். இன்று விமானங்களில் வந்து தாக்குதலை நடத்துகின்றனர். இது மிகவும் பயங்கரமான விடயமாகும்.

புலிகள் அமைப்பு ஹெலிகொப்டர்கள், விமானங்கள் பற்றி இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னரே சிந்தித்து விமானப் படைபலத்தையும் விமானங்களையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டனர். புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்கியவர் வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் அல்லது `சங்கர்' எனப்படும் புலிகள் இயக்க முன்னணி உறுப்பினராவார். இவர் புலிகள் அமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னர் கனடாவிலுள்ள "எயார் கனடா" எனப்படும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றியவராவார். இவர் புலிகள் அமைப்புடன் 1983 ஆம் ஆண்டில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு 1985 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துகொண்டார்.

வைத்திலிங்கம் சொர்ணலிங்கம் அல்லது "சங்கர்" இவ்வாறு புலிகள் அமைப்பின் விமானப்படையை உருவாக்குவதற்கு முன்னர் கடற்புலிகள் படையணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவராவார். இந்த வகையில் புலிகள் அமைப்பின் கடற்படையையும் வான் படையையும் உருவாக்குவதற்கு அடிப்படையான பலமாக இருந்துள்ளார் சொர்ணலிங்கம்.

இவ்வாறு முதன்முதலில் கடற்புலிகள் படையை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட அவர், அக்காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அதிநெருங்கிய சகாவாக இருந்துள்ளார். பின்னர் பிரபாகரனின் விமானப்படை அமைக்கும் கனவை நனவாக்கும் நடவடிக்கைகளில் "சங்கர்" தீவிரமாக ஈடுபட்டார். இதற்காக ஹெலிகொப்டர்களின் இயந்திரம் மற்றும் பாகங்களைத் தனித்தனியாக இங்கு கொண்டுவந்து சேர்த்த அவர் அவற்றைப் பொருத்தி சிறிய விமானம் ஒன்றை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் அமைப்பின் விமானப்படையின் தலைவராகிய அவர் புலிகளுக்காக விமானம் ஒன்றை உருவாக்குவதில் வெற்றிகண்டுவிட்டதாக உலகறிய பகிரங்கமாக புலிகள் இயக்கம் அறிவித்தது. குறித்த 1998 நவம்பர் 27 ஆம் திகதி புலிகள் இயக்கத்தின் விமானம் வன்னியைச் சேர்ந்த முள்ளியவளைப் பிரதேசத்தின் மேலாகப் பறந்து சென்று அங்குள்ள கோவில் ஒன்றுக்கும் உயிரிழந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் சமாதிகள் அமைந்திருக்கும் மயான நிலையத்துக்கும் மலர்களைத் தூவியதாக புலிகள் இயக்கம் அறிவித்தது. இந்த நிகழ்ச்சி பற்றிய நேர்முக வர்ணனை புலிகளின் குரல் வானொலி மூலமாக ஒலிபரப்பப்பட்டது. அன்றைய இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியின்போது விமானங்களைத் தாக்கியழிக்கும் ஆயுத உபகரணமும் புலிகள் அமைப்பிடம் இருப்பதாகத் தகவல் வெளியிடப்பட்டது. இவ்வாறு புலிகள் இயக்கம் அதனிடம் விமானப்படை இருப்பதாக உத்தியோகபூர்வமாக முதன்முதலில் அறிவித்த சந்தர்ப்பம் 1998 நவம்பர் 27 ஆம் திகதியாகிய அன்றாகும். எவ்வாறாயினும் குறித்த புலிகளின் குரல் ஒலிபரப்பின்போது விமானம்பற்றிய மேலதிக விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு 1998 தொடக்கம் 2007 வரையான தற்போதைய காலகட்டம் வரையில் அதாவது, சுமார் 9 வருடகாலமாக புலிகள் அமைப்பு படிப்படியாக அதன் விமானப் படை பலத்தை அதிகரித்து வந்துள்ளது. 1998 இல் "சங்கர்" புலிகள் அமைப்பின் முதலாவது விமானத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து சிறிய ஹெலிகொப்டர்கள், பாரம்குறைந்த விமானங்கள் ஆகியவற்றின் பாகங்கள் கொண்டுவரப்பட்டு சிறிய விமானங்களை புலிகள் அமைப்பின் விமானப் படையினர் உருவாக்கினர். புலிகள் இயக்க உறுப்பினர்கள் விமானமோட்டிகளாகப் பயிற்சிபெற்றனர். இவ்வாறு புலிகளின் விமானப் படையின் விமானமோட்டிகளாக இருந்தவர்கள் முன்னர் கனடா, இந்தியா, இங்கிலாந்து உட்பட வெளிநாடுகளில் புலிகள் அமைப்பிற்காகச் செயற்பட்டுவந்த இயக்க உறுப்பினர்களேயாவர்.

இவ்வாறு புலிகளின் விமானப்படை உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மேலாக விமானங்களில் பறந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விமானப்பயிற்சிகள் பகல் நேரத்திலும் இரவு நேரங்களிலும் நடத்தப்பட்டன.

புலிகள் அமைப்பின் விமான நிலையம் மற்றும் ஓடுபாதை இரணைமடுவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போலவே, பிரமந்தன் குளம் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் அமைக்கப்பட்டு புலிகளின் பாரம் குறைந்த விமானங்கள் இறங்குவதற்கும் புறப்பட்டுச் செல்வதற்குமான வசதிகள் செய்யப்பட்டன. இவ்வாறு மேற்படி பிரதேசங்களுக்கு மேலுள்ள வான் பரப்பிலேயே புலிகளின் விமானப்படையினர் விமானம் செலுத்தும் பயிற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இவ்வாறு இரணைமடுவில் புலிகளின் விமான ஓடுபாதையில் இரண்டு சிறிய விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை முன்னரே சிறிலங்கா விமானப்படையின் செலுத்துநர் இல்லாத தன்னியக்க உளவு விமானங்கள் புகைப்படம் பிடித்துள்ளன.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் அங்கு புலிகளின் விமானத்தரிப்பிடத்தில் சில விமானங்கள் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது பற்றிய தகவல்கள் அடிக்கடி அரச பாதுகாப்புத் துறைக்கு அறிவிக்கப்பட்டன. ஆயினும், அந்தத் தகவல்கள் உண்மையானவை அல்லவென்றே இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சாத்தியப்பாடான அவ்வாறான தகவல்களை விமானப்படை உயரதிகாரிகள் கவனத்தில் எடுக்காமல் அலட்சியமாகவே இருந்தனர். மொத்தத்தில் பாதுகாப்புத்துறை சிரேஷ்ட தரத்தினர் அனைவருமே மேற்படி தகவல்களை பொய்யெனவே நினைத்தனர். இந்த வகையில் அரச ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூட இதுபற்றித் தெரிவிக்கையில்;

"சிறிய சிறிய விமானங்கள் அவர்களிடம் இருக்கக்கூடும். ஆனால், எமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நெருங்கக்கூடிய எவையும் அவர்களிடம் இல்லை. அப்படி வந்தாலும் அவற்றை அழித்துவிட முடியும்" என்று கூறியிருந்தார். இவ்வாறே விமானப்படையினரும் எந்தவொரு புலிகளின் விமானத்தையும் அது வானத்தை நோக்கி எழுந்த 5 நிமிடத்தில் அழித்துவிட முடியும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியில் விமானப்படையினரை ஏமாற்றிவிட்டு, தேசிய பாதுகாப்புப் பலத்தைச் சூனியமாக்கிவிட்டு புலிகள் அமைப்பின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். அவர் அந்த விமானங்களைப் புகைப்படம் பிடித்தபோதிலும் உடனே அவை புலிகள் இயக்கத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இறுதியில் விமானப்படையினரை ஏமாற்றிவிட்டு, தேசிய பாதுகாப்புப் பலத்தைச் சூனியமாக்கிவிட்டு புலிகள் அமைப்பின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைப் பார்த்துள்ளார். அவர் அந்த விமானங்களைப் புகைப்படம் பிடித்தபோதிலும் உடனே அவை புலிகள் இயக்கத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

இனி புலிகள் இயக்க விமானப்படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றித் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப கடந்த 2005 அக்டோபர் 19 ஆம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய கிளிநொச்சிப் பகுதிக்கு மேலாக ஏவப்பட்ட சிறிலங்கா விமானப் படையினரின் செலுத்துனரற்ற தன்னியக்க உளவு விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே உடைந்து அப்பகுதியில் விழுந்தது. பின்னர் கிடைத்த தகவல்களுக்கேற்ப புலிகளின் விமானப்படையினர் தமது விமானத்தில் வந்து அந்த உளவு விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து புலிகள் இயக்க விமானப்படையினரின் பயிற்சிகள் பற்றிப் பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றில் வன்னிப் பகுதியில் வான்பரப்பில் புலிகளின் சிறிய விமானங்களும் ஹெலிகொப்டர்களும் கட்டுநாயக்காவுக்கு மேலாகப் பறந்து குண்டுகளை உமிழ்ந்துவிட்டு திரும்பவும் பாதுகாப்பாக வன்னிக்குச் சென்றுவிட்டன. இந்த விமானத் தாக்குதலுக்காக இரண்டு விமானங்கள் கட்டுநாயக்காவுக்கு வந்ததாக புலிகள் அமைப்பு தெரிவித்தது. அவர்கள் தரப்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் தாக்குதலுக்காக வந்த விமானம் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அது "ஸ்லின் - 143" (Zlin - 143) வகையைச் சேர்ந்த விமானம் என்பதைப் பாதுகாப்புத்துறை உறுதி செய்துள்ளது. அது பாரம் குறைந்த விமான வகையைச் சேர்ந்ததாகும். 7.58 மீற்றர் நீளம் கொண்டதும் இரண்டு இறக்கைகளின் அகலப்பக்கமாக 10.14 மீற்றர் கொண்டதுமான இந்த விமானத்தில் நான்கு பேர் பயணம் செய்து தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். மேலும், ஒரே தடவையில் இந்த விமானத்தில் 600 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரம் பயணம் செய்ய முடியும். இதன்மூலம் மணிக்கு 260 கிலோமீற்றர் வரை அதிகூடுதலான வேகத்தில் பறந்து செல்ல முடியும்.

வன்னிப் பகுதியிலிருந்து இவ்வாறான இரண்டு விமானங்கள் தெற்கு நோக்கி கட்டுநாயக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த வந்ததாகக் கூறப்பட்ட போதும் விமானப்படை முகாமுக்கு மேலாக ஒரு விமானமே பறந்துசென்று தாக்குதலை நடத்தியதாக விமானப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு விமானம் தாக்குதல் விமானத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக வந்திருக்கலாம் எனவும் அவ்வாறு தாக்குதலுக்காக வந்த விமானத்தின் மீது அரச விமானப்படையினர் தாக்குதல் தொடுத்தால் பதில் தாக்குதல் நடத்துவதற்குத் தயாராக அந்த விமானம் வந்துள்ளதாகவும் மேலும் விமானப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதுவரை புலிகளின் இந்த விமானத் தாக்குதல் பற்றிய விசாரணைகளிலிருந்து தாக்குதலுக்காக வந்த விமானிகளின் எண்ணிக்கை பற்றியோ அல்லது தாக்குதல் நடத்தப்பட்ட முறை பற்றியோ உறுதியான தகவல்கள் பெறப்படாத வகையில் கேள்விக்குறியான நிலைமையே உள்ளது.

-லங்காதீப பாதுகாப்பு விமர்சனம்: 01.04.2007-

நன்றி தினக்குரல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----