வியாழன், 26 ஏப்ரல், 2007
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
கடந்த 24ம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் தமிழீழ வான் படை இரண்டாவது தாக்குதல் முயற்சியாக யாழ்ப்பாணம் பலாலி விமானப் படைத் தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி விட்டு எதுவித சேதமுமில்லாமல் தளம் திரும்பியது.
விடுதலைப் புலிகளின் கன்னித் தாக்குதல் முயற்சி ஸ்ரீலங்காவின் தலைநகரை அண்டிய நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருக்கும் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதல் சம்பவம் ஆகும்.
எதிர்பாராமல் நடைபெற்ற முதல் தாக்குதல் என்பதால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விட்டது, இனிமேல் இப்படி நடக்க சாத்தியம் இல்லை, எமது பாதுகாப்புப் பிரிவு பலத்த உசார் நிலையில் இருக்கின்றது என்றெல்லாம் ஸ்ரீலங்கா அரச தரப்பு காரணம் கூறி இனவாதக் கட்சிகளையும், சிங்கள மக்களின் குரல்களையும் மழுங்கடித்தது, ஆனால் இரண்டாவது முறையான தமிழீழ வான்படையின் தாக்குதலிற்கு காரணம் கூற முடியாமல் அரசாங்கம் திண்டாடுவதை நினைத்தால் சிரிப்பு வருகின்றது.
விடுதலைப் புலிகள் தங்களின் விமானப்படை மூலமான தாக்குதலை இரவு வேளையில் செய்யாமல் பகலில் செய்யட்டும் பார்ப்போம் என்று அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். அப்படியெனில் இவர்களின் படைபலம் பகலில் மாத்திரம் தானா, ஒரு நாட்டின் படை பலமானது இரவு பகலாக விழிப்பு நிலையில் இருக்க வேண்டுமென்பதனை அறியாக அமைச்சர்கள் இந்த நாட்டை ஆட்சிமை புரிகின்றார்கள் என்பது வேதனைக்குரியது.
இலங்கை விமானப் படையின் பேச்சாளர் கப்டன் அஜந்த டி சில்வா பலாலி விமான படைத்தளத்தின் மீதான தமீழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படைத் தாக்குதல் சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த போது புலிகள் வசமுள்ள இலகுரக விமானங்களைத் தாக்கியழிப்பதே ஸ்ரீலங்கா விமானப் படையின் முதல் இலக்காகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.இருப்பதை விடவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொள்வனவு செய்து தமிழீழ வான் படையை அழிக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுவது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பாகும்.
1998 கார்த்திகை மாதம் தமிழீழ வான்படை வெள்ளோட்டமாக முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தின் மேல் மலர் தூவிய நேரம் முதற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வான் படையை தம்வசம் கொண்டுள்ளார்கள் என்பதனை ஸ்ரீலங்கா அரசும் படைபலமும் நன்கு அறிந்திருந்தது, ஆனால் இவ் வான்படையின் தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய ஆயுதங்கள் தம் வசம் இல்லையென கூறுவது வேடிக்கையாக இல்லையா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.