இலங்கையில் ஈழ விடுதலையை நோக்கமாகக் கொண்ட விடுதலை இயக்கங்களிடையே கருத்து மோதல்களும் விரிசல்களும் ஏற்பட்டு தினமும் அப்பாவி இளைஞர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக கொல்லப்படுவது தெரிந்த விடயம்.
ஒத்தகருத்து மாற்றுக்கருத்து என்று வேறுபட்டு ஈழ விடுதலை அமைப்புக்கள் செயற்பட்டு வரும் இவ்வேளையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டு இயங்கி வரும் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரே கருத்தைக் கொண்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.
தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து சிலர் பிரிந்து தமிழரசுக் கட்சி எனும் பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செயற்படுகின்றனர், அதேபோல் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்து சிலர் பிரிந்து ஈ பி ஆர் எல் எவ் சுரேஸ் அணியென விடுதலைப் புலிகளுடன் செயற்படுகின்றனர்.
அமிம்சையை நேசித்த தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் வழி வந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுத தீர்வின் மூலமே ஈழத்தை வென்றெடுக்கலாமெனும் நோக்கோடு செயற்பட்டு அதில் தோல்வி கண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள மற்றய இரு விடுதலை இயக்கங்களுடனும் செயற்பட முற்பட்டமை வரவேற்கக்கூடியதே!
சகல இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் ஈழத்தை வென்றெடுக்க வேண்டுமென்பதே களத்துமேட்டின் ஆசையுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.