ஆக்கம் - பீஷ்மர்
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக கொழும்பு நிலைப்பட்ட தென்னிலங்கை அரசியல் போக்குகளின் பிரதான பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
முதலாவது இலங்கையில் பிரதானமாக கொழும்பில் நடைபெறும் அரச நிலைப்பட்ட மனிதவுரிமை மீறல்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை. இரண்டாவது யு.என்.பி.அரசாங்க எதிர்ப்பை மிக வேகமாக தூண்டியுள்ளமை. மூன்றாவது இவற்றின் தாக்கங்கள் காரணமாக ஜனாதிபதி நிர்வாக மட்டத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளமை. இந்த அரசியல் உஷ்ண அதிகரிப்பின் பிரதான அம்சம் தமிழர் பிரச்சினையோ விடுதலைப் புலிகள் பிரச்சினையோ பெரிய முக்கியத்துவம் பெறாமையாகும். சடங்காசாரமான குறிப்புகள் உண்டெனினும் மேற்கூறிய பிரச்சினையின் வெடிப்புக்கு தமிழர் பிரச்சினை நிச்சயமாகக் காரணமாக அமையவில்லை.
சற்றுப் பின்நோக்கிப் பார்க்கும்போது அரசாங்கம் சிங்கள மக்களின் ஆதரவை மேலும் மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக எடுத்துக்கொண்ட சில செயல்களின் பக்க விளைவுகளாக இவை தோன்றினவோ என்ற சந்தேகம் ஏற்படவே செய்கின்றது. கிழக்கிலே அரச படைகள் வென்றுவிட்டதாகவும், உண்மையில் கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகவும், அந்தச் சாதனையில் படையினரின் ஊக்கமும் முன்னேற்பாடுகளுமே பிரதான காரணிகளாக அமைந்தன என்றும் கூறப்பட்டது. பிரதான சிங்கள ஊடகங்கள் இதே கருத்தினை சிங்கள நிலைப்பாட்டின் அடிப்படையில் எடுத்துக் கூற இந்தக் கண்ணோட்டம் சிங்கள மக்களிடையே அரசாங்கத்துக்கு பெரிய ஆதரவினை வழங்கிற்று.
இந்தப் பின்புலத்திலே தான் கொழும்பில் சில கைதுகள் நடைபெற்றன. உண்மையில் இவற்றைப் பற்றி சிங்கள ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. இவை பெரும்பாலும் தமிழர் நிலையிலேயே நடைபெற்றன. இவ்விடயம் சம்பந்தமாக மனோகணேசன் ஒழுங்கமைத்த கூட்டம் சர்வதேச கணிப்பாளர்களையும் உள்ளடக்கியிருந்தது. இந்தக் கட்டத்திலே தான் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் முக்கியமானவை இவ்விடயங்கள் பற்றி கருத்துத் தெரிவிக்க தொடங்கின. அமெரிக்க தூதுவர், பிரிட்டிஷ் தூதுவரென படிப்படியாக சில விமர்சனக் குரல்கள் எழத்தொடங்கின.
ஏற்கனவே, நாட்டின் இறைமைக்காக செய்கின்றோமெனக் கூறுகின்ற சிங்கள வாதத்துக்கு, நட்ட- ஆகம ஜாதிய நாடு மதம் இனம்- இது பிரச்சினைகளை ஏற்படுத்திற்று.
ஜனாதிபதி மனிதவுரிமை மீறல்களை கவனிக்காதிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிகரிக்கத் தொடங்கவே அலரி மாளிகையில் அவசர அவசரமாக சில கூட்டங்கள் கூட்டப்பெற்றன.
உதவியமைச்சர் இராதாகிருஷ்ணனே ஜனாதிபதியின் தலையீட்டை வற்புறுத்த தொடங்கினார். ஆனால், கூட்டங்களோ பின்போடத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலேயே பாப்பரசர் தனது வருடாந்த ஈஸ்ரர் செய்தியில் இலங்கை விடயத்தை எடுத்துக் கூறினார்.
இது நிச்சயமாக ஜனாதிபதிக்கு எதிர்பாராத பிரச்சினைகளை கிளப்பிற்று. அதில் முக்கியமானது சிங்கள மக்களிடையே கிறிஸ்தவம்- பௌத்தம் எனும் அடிப்படையில் ஏற்படக்கூடிய தொலைப்படுத்துகையாகும்.
இந்த வேளையிலேயே தான் சற்றும் எதிர்பாராத வகையில் டெய்லி மிரர் விவகாரம் பெருத்த அரசியல் வெடிப்பை ஏற்படுத்தி பூதாகரமாக வளரத் தொடங்கிற்று.
ஜனாதிபதியின் பிரதம நிர்வாகஸ்தர்கள் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறார்களில்லை என்கிற விடயம் மிகப்பெரிதாயிற்று. அரசாங்கம் சர்வதேச பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியாயிற்று. வத்திக்கான் விஜயம் உண்மையில் அத்தியாவசியமானதா என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. ஜே.வி.பி., ஹெல உறுமய இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால் இதனை பேசவும் முடியவில்லை.
ஜனாதிபதி உண்மையானதொரு இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டார்.
அவரவருக்கு ஏற்றவகையில் பேசி பிரச்சினைகளின் உக்கிரத்தை தவிர்க்கின்ற ஜனாதிபதியின் இயல்புக்கு எதிரான நிலைமைகளே இப்பொழுது தோன்றியுள்ளன.
டெய்லி மிரர் ஆசிரியருக்கு ஜனாதிபதி கூறியதாக எடுத்துச் சொல்லப்பட்ட காரணம் கிழக்கில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நடவடிக்கை மாற்றங்களுக்கு பெரிய பிரச்சினைகளாயிற்று, ஆனால் ஒன்று தெரிகின்றது.
ஜனாதிபதியோ அல்லது அவரது அலுவலகமோ கொழும்பை உள்ளடக்கிய சிங்களப் பிரதேசங்களையே கருத்திற்கொண்டுள்ளது. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் தமிழ்ப் பயங்கரவாதம் எனும் உச்சாடனம் அரசியற் தீர்வுக்கான வழிவகைகள் பற்றி பேசவுமில்லை.
ஹெல உறுமயவும் ஜே.வி.பி.யும் முதலில் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்ற கோஷத்தையே முன்வைக்கின்றன.
வியாழனன்று பி.பி.சி. சிங்கள சேவையில் நடந்த ஒரு நேர்காணலில் பாப்பரசர் இலங்கையின் மனிதவுரிமைப் பிரச்சினையை மிக ஆழமாக பார்க்கிறார் என்பதைக் காட்டிற்று. இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதியின் விஜயம் ஏறத்தாழ பிரச்சினை பெரிதாக வெடிப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் வருமுன் காப்பு நடவடிக்கையே தெளிவாகின்றது. இலங்கை விடயங்கள் பற்றி வத்திக்கானுக்குள்ள ஆழமான சிரத்தையின் வெளிப்பாடாக அமைந்தது, வத்திக்கான் மடுத்தேவாலயப் பிரச்சினையை கிளப்பியதாகும்.
உலகிலுள்ள எந்த நாட்டிலுமுள்ள ஒரு சிறு கத்தோலிக்க தேவாலயத்துக்கு கூட வத்திக்கானில் ஒரு `பைல்' இருக்குமென்று கிண்டலாக கூறுவார்கள். அந்த உண்மையை ஜனாதிபதி உணர்ந்திருப்பார்.
இதற்குள் ஜிம் பிறவுண் என்ற கத்தோலிக்க குரு ஒருவர் பற்றிய பிரச்சினை வேறு. இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை நேராகவும் நேர்மையாகவும் எதிர்நோக்கத் தவறுகின்றது என்ற அபிப்பிராயமே சர்வதேச மட்டத்தில் படிப்படியாக மேற்கிளம்புகின்றது.
இலங்கைத் தமிழர் போராட்டங்களின் பொழுது மனிதவுரிமை கோட்பாட்டை தனக்குச் சாதகமாக அடிக்கடி பயன்படுத்தி வந்த அரசாங்கம் இப்பொழுது அதே மனிதவுரிமைப் பிரச்சினையால் வேலிக்கான முட்கம்பி போல தன் கால்களை தானே சுற்றி வளைத்துக் கொண்டுள்ளது.
நன்றி தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.