வலைப்பூக்கள் பெருக்கெடுத்து வரும் இக் காலகட்டத்தில் பல வலைப்பதிவுகள் அரட்டையுடன் காலத்தைக் கழிக்கின்றன, சில ஆக்கபூர்வமான தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன, அவற்றினைப் பட்டியலிடுவது கடினமாகையால் களத்துமேட்டில் இருந்து உலாவிய போது "வின்மணி" வலைப்பூவை அறிய நேர்ந்தது.
நீண்ட கால வலைப்பயண அனுபவத்தினைக் கொண்ட வலைப்பூவாக வின்மணி திகழ்வது பாராட்டத்தக்கதே ஆகும்.
தினம் தினம் புதிய தகவல் தொழில் நுட்ப செய்திகள், வின்மணி சிந்தனை, பொது அறிவுக் கேள்வி பதில்கள், பிரபலமான மனிதர்கள் இப்பேற்பட்ட பல தகவல்களுடன் சேவை புரிந்து வரும் வின்மணியைக் களத்துமேடு வாழ்த்துகின்றது.
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கொள்கலன்கள் மூன்று வெடித்ததனால் 26 பேர் மரணித்தும் 50 பேருக்கும் மேற்பட்டோர் காயங்களுக்கும் உள்ளாகினர், அவ் அனர்த்தத்தை மட்டக்களப்பின் பல பாகங்களும் இன்று நினைவு கூர்ந்தன.
பெருந் தெருக்களுக்கான வேலைத் தளத்தினைக் கொண்ட சீன நிறுவனத்தினருக்குச் சொந்தமான வெடி மருந்தை சீன நாட்டவர்கள் இருவர் பரிமாற்றம் செய்த போதே இக் கோரம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வீரியம் மிக்க வெடிமருந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு நன்கு அறிந்துள்ளது, ஆனால் கரடியனாற்றில் வெடிமருந்து அசமந்தமாக வைக்கப்பட்டிருந்த விடயமானது பல வினாக்களுடன் தொக்கி நிற்கின்றன.
பல அமைப்புக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது, அந் நிலமையைத் திசை திருப்ப வேறு நிகழ்வுகளை நடாத்தி பயணிக்கும் கோட்டில் இருந்து வேறு திசைக்கு வழி மாற்றும் சம்பவங்கள் உலக நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளன, அதற்கு புலனாய்வுத் துறை பெரிதும் உதவி செய்து வந்துள்ளது.
இதற்கு விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ விதி விலக்கல்ல, எல்லோரும் சந்தற்பத்துக்கு ஏற்ப திசை திருப்பும் விடயங்களை நன்கே செய்து வந்துள்ளனர், இதன் ஒரு கட்டமாகவே கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிமருந்து கொள்கலன் வெடிப்புச் சம்பவத்தையும் கூறத் தோன்றுகின்றது.
இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க எடுத்த முயற்சிக்காக, விசாரணையைத் துரிதப்படுத்த உலகளவில் பலத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந் நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமர்வில் உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரும், இது பற்றிய ஏனைய வினாக்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந் நிலையைத் திசை திருப்பவே கரடியனாறு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றதாக எண்ணத் தோன்றுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதி, கேணல் போன்ற தரத்தில் இருந்து பல சாகசங்களைப் புரிந்ததுடன் ஏதுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் போர்க்களத்துக்கு அனுப்பி மாவீரராக்கி சொகுசு வாழ்வைத் தேடியவர் இப்போதைய சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும், பிரதியமைச்சருமாகவிருக்கும் கருணா.
ஆரம்ப காலத்தில் இருந்தே பதவியாசையும் இவருடன் கூடவே ஒட்டியே இருந்ததால், அதற்கான சந்தர்ப்பங்களை தேடியே வடிவமைத்து வந்தவர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த கண்ணனைக் கொலை செய்து விட்டு இம் மாவட்டங்களுக்கான பொறுப்பை தன் வசம் அமைத்துக் கொண்டவர், இவரைப் பற்றிய பல தகவல்களை காலச்சுவடு எடுத்துக் கூறுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தனது பிரதேசவாதத்தின் மூலம் தனிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார், ஆனால் தமிழீழம் எனும் சொல்லை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மைச் சிங்களவருடன் கூட்டுறவாடிய கருணாவால் அந்தப் பெயரில் இயக்கத்தைக் கொண்டு நடத்த முடியாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளென மாற்றியமைத்தார், அந்தவேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தமைக்காக அரசினால் கிடைக்கப்பட்ட அளவுக்கதிகமான நிதியை முறைகேடாக உபயோகித்த காரணத்தினால் அமைப்பினுள் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி, அங்கு குடிவரவு அதிகாரிகளினால் கைதாகி குற்றவாளியென சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
தண்டனை முடிவுற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கி வாழ முடியாத காரணத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டார், வந்ததும் அப்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராக பிள்ளையான் தலைமையேற்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்தார்.
வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைச் சேகரிக்கும் கருணாவின் உதவியாளனாக இருந்த பிள்ளையானின் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்டார், பதவி ஆசை மீண்டும் வெளிவர ஆரம்பித்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ஸ கருணாவை வைத்து சதுரங்க ஆட்டம் ஆட முற்பட்டார், அதன் விளைவே கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவியும், கட்சியின் இணைத் தலைமையும்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் கேணல் எனும் கௌரவத்துடன் மதிக்கப்பட்ட கருணா, பதவியாசைக்கு இரையாகியதால் இப்போது கோமாளி வேடமேற்று பல இடங்களில் இடறி விழுந்து வருகிறார்.
சிங்கள மக்களிடம் பல்துறை வேந்தனாக காட்சி தர முற்படும் கருணா, குறைந்த பட்சம் தனது கிரான் கிராமத்து மக்கள் நாளாந்தம் படும் துன்ப துயரங்களையாவது கவனத்தில் எடுக்கத் தவறி வருகின்றார். குவளையைக் கையிலேந்தி நடிகர் போலவும், கிற்றார் இசைப்பது போலவும், பாடகர் போலவும், சில இடங்களின் நாயகியுடன் இணைந்து நாயகனாகவும் பெரும்பான்மை இனத்துக்கு காட்ட முற்படுகின்றார், இவை அனைத்தும் கருணாவைக் கோமாளியாகவே காட்ட முனைகின்றது என்பதை அவர் சிந்திக்க தவறுகின்றார் என்பதுவே உண்மை
சிங்கள மக்களுடன் கருணா சங்கமமாகி இருப்பது இன ஒற்றுமைக்கான முயற்சி, ஆனால் தன் இனத்தின் நிலை மறந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று கேணலாக இருந்து கோமாளியாக மாறியிருப்பது மிகவும் வேதனையானது.
வெள்ளை வான் ஆட் கடத்தல் எனும் பீதி இலங்கை மக்களைப் பெரிதும் பாதிப்புற வைத்துள்ளது, 1990 ஆம் ஆண்டு காலத்தில் "வெள்ளை வான்" எனும் வார்த்தையே அதிகம் பேசப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் ஆயுதம் மக்களுடன் பேச முன் வந்ததேயாகும், இதனைப் பிரசவித்தவர்கள் இலங்கை ஆயுதப் போராட்டக்காரர்கள் தான்.
புளொட் மோகன் காலத்தில் உக்கிரமடைந்திருந்த வெள்ளை வான் கடத்தல் படிப்படியாகக் குறைந்து இல்லையென்ற நிலை ஏற்பட்ட போதும், இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய மாதிரி இந்தப் பீதி மக்களை மீண்டு ஆட்கொள்கின்றது.
2010.08.23 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டார். இந்த வரிசையில் 2010.09.15 ஆம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இக் காலத்தில், இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை இன்னும் காவற்துறை கண்டு பிடிக்காமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.
தெருவுக்குத் தெரு இராணுவ காவலரண்களும், சோதனைச் சாவடிகளும் மலிந்துள்ள இந்தப் பூமியில் கடத்தலை நடத்தி விட்டு கடத்தற்காரர்கள் தப்பிச் செல்வது கடினமான விடயம், படையினரின் ஒத்துழைப்பின்றி இந்த வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது அரிதான விடயமாகும்.
ஆகவே அரசாங்கம் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க முழு முயற்சியை மேற்கொள்வதுடன், இப்படியான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்.
கடத்தப்பட்டவர்களை விடுவிக்க கடத்தக்காரர்களிடமிருந்து எந்தவித சமிக்கையும் கிடைக்காததால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றி அரசியல்வாதிகள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் மௌனித்து வருவதன் மர்மம் தான் என்ன.
இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் அடிக்கடி குழந்தைகள் அநாதரவாக விடப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக ஊடகச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றன, பிறந்து சில நாட்களேயான மகவுகள் யாழ்ப்பாணம் செம்பியன்பற்று, மட்டக்களப்பு இருதயபுரம், புத்தளம் மற்றும் பதுளைத் தமிழ்ப் பகுதிகளில் இக் குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார் எவருக்கும் தெரியாமல் இக் கைக்குழந்தைகளை வீதியில் விட்டுச் செய்வதற்கான காரணமென்னவென தெரியாமல் உள்ளது, இருப்பினும் போர்காலச் சூழலினால் ஏற்பட்ட அகதி வாழ்வு மக்களை நெருக்கமாக இணைந்து வாழ வைத்தது, இதனால் பருவ வயதையடைந்தோரில் சிலர் காதல் முதல் காமம் வரைக்கும் சென்று திரும்புகின்றனர்.
இதில் சிலர் திருமணம் எனும் பந்தத்துக்குள் இணைந்து கொள்கின்றனர், சிலர் உடலுறவுடன் பிரிந்து கொள்கின்றனர், இதில் இரண்டாம் தரப்பினரின் செயற்பாடுகளில் ஒரு வகையினர் கருக்கலைப்பு செய்து பாவசங்கீத்தனம் செய்து கொள்கின்றனர், மற்றைய தரப்பு எதுவும் செய்யத் தெரியாமல் பிரசவ நாட்களை நெருங்கி குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.
பிரசவித்த குழந்தையை உலகுக்குக் காட்டுவதால் ஏற்படப்போகும் அவமானம், மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை கவனத்தில் எடுத்தே பெற்றெடுத்து சில நாட்களேயான மகவுகளை தெருக்களில் விட்டுச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது என எண்ணவும் தோன்றுகின்றது.
இரத்தினபுரி பகுதியின் நிவித்திகல பொலிஸ் பிரிவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக தமிழர்கள் இடம் பெயர்ந்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
குக்குலகல பிரிவைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரின் சடலம் கரவிட்ட திமியாவ பகுதியில் மீட்கப்பட்டதையடுத்து, தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட கைகலப்பின் உச்சக் கட்டமே இரு வீடுகள் தீக்கிரையானதும், இடப்பெயர்வும் ஏற்படக்காரணமாகும்.
கடந்த காலங்களில் இப்படியான துரதிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை விஸ்வரூபம் எடுக்காமல் முளையிலே கிள்ளப்பட்டு அணைக்கப்பட்டன, அதேபோன்றே இச்சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அந்த குற்றவாளியை அரச நீதி நிர்வாகம் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆயுதப் போராட்டம் மௌனித்து விட்டது என்பதால் எதுவும் செய்யலாம் என பெரும்பான்மையினம் நினைக்குமாக இருந்தால் அது அவர்களின் அறியாமையே ஆகும், அடக்கப்படும் இனம் தொடர்ந்து ஒடுக்கப்படும் போது வீறு கொண்டெழும் என்பது கடந்த கால வரலாறு, இதனை எமது வரலாற்றுப் பாடமாக நினைத்து ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது இரு சமூகமும் பார்த்துக் கொள்ள வேண்டும், அரச எந்திரம் சகல இன மக்களும் இலங்கையில் ஒன்றாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒற்றுமையாக இணைந்து வாழக் கூடிய புறச் சூழலை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
உலகத்தில் தொற்று நோய்கள் விருத்தியடைய சுகாதாரமின்மையே பிரதான காரணமாகும், இதனை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனங்கள் அரும்பாடுபட்டு வருகின்றன.
உலக நிறுவனங்கள் எவ்வளவு பணங்களைக் கொட்டியும் தொற்று நோய்களுக்கான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலை வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை, ஆனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இது சம்பந்தமான விழிப்புணர்வு இன்மையே இக் குறைபாட்டுக்கு காரணமாகும்.
சுத்தத்தினைப் பேண வேண்டிய வைத்தியசாலைகளே அசுத்தத்தின் பிறப்பிடமாக மாறி வருவது கவலைக்குரியது, இதனை வைத்தியசாலை நிர்வாகம் கவனம் எடுக்காமை பாரிய குறைபாடாக உணர முடிகின்றது. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளின் படுக்கை, பாத்திரம், கழிப்பறை, குளிப்பறை போன்றவை சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டியவை, இவை இலங்கை வைத்தியசாலைகளில் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் மிகவும் அவசியம்.
நேற்று யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் பிரிவு ஏனைய மருத்துவ பிரிவுகள் கழிப்பறைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டதுடன் சுத்தத்துக்கான அவசியத்தைத் தெளிவு படுத்தியது வரவேற்கத்தக்கது ஆகும்.
சுகாதார தொண்டர்களை அரச பணியாளர்களாக இணைத்துக் கொண்டால் மாத்திரம் போதாது, அவர்கள் வைத்தியசாலையைச் சுத்தமாக வைத்திருக்கின்றார்களா என்பதை கழிப்பறை முதற்கொண்டு சகல இடங்களிலும் அவதானித்தல் வேண்டும். இதற்கும் மேலாக பயனாளிகளும் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை நிறுத்திக் கொள்வதற்கென தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றனர்.
கட்டண மற்றும் இலவச சேவையென தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்கின்றன, இத் தொலைக்காட்சிகளில் சில கட்டண அட்டைகளின் மூலம் வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கின்றன, சில நூறு சத விகித இலவச சேவையாகவும் செயற்படுகின்றன, இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தொலைக்காட்சி இரண்டும் கெட்டான் நிலையில் இலவசம் எனக் கூறிக் கொண்டு பணம் தாருங்கள் எனும் யாசிப்பு மூலம் தொலைக்காட்சி நடாத்துகின்றார்கள், ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக விளம்பரக் கட்டணங்களின் மூலம் பெருமளவு யூரோக்களைப் திரட்டி ஒளிபரப்பு வியாபாரம் செய்து வருகின்றன இத் தொலைக்காட்சிகள்.
இதில் இலவசமெனக் கூறிக் கொள்ளும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவதானமில்லாமல் இருப்பதனால் செய்தி வேளைகளில் பல குறைபாடுகள் தினமும் முகம் காட்டியே செல்கின்றன.
காட்டப்படும் படத்துக்குச் சம்பந்தமில்லாமல் செய்தி ஒளிபரப்பப்படுவதுடன், படத்துக்குக் கீழே சம்பந்தமில்லாத வசனமும் பதிவாகின்றது, இவை ஏற்படக் காரணம் தயாரிப்புப் பிரிவு சிலவேளை இலங்கைத் தமிழரைச் சாராதவர்களாக இருக்கக் கூடும்.
சங்கீத பாரம்பரியத்தில் வந்தவர் தானென தன்னைத் தானே புகழ்ந்து அடிக்கடி பாடல்கள் பாடிக் கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி செய்தி வேளைகளில் தன்னை பிபிஸி ஆனந்தி என நினைத்து செய்து வாசிப்பது கொடுமை. இவர் ஆனந்தியிடம் கற்றுக் கொள்ள அதிகம் உள்ளன, விரைவாக செய்தியை வாசித்தால் மட்டும் ஆனந்தியாக முடியுமா, நிதானித்து வசனங்களைப் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்து, சொற்களைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து செய்தி வாசித்தலே பார்வையாளர்களுக்கு புரியக் கூடியதாக அமையும்.
"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தானாம் அனுமான்" நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடிய கவனம் செலுத்தினால் நல்ல நிகழ்ச்சிகளைப் படைக்கலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்மொழிகளிலும் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா இன்று மரணமான செய்தி இசை இரசிகர்களின் மனதில் இடியாய் இறங்கியிருக்கும்.
1989 ஆம் ஆண்டு முதல் பாடல்கள் பாடி வரும் சுவர்ணலதா, 1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிறந்த "போறாளே பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்குச் சொந்தக்காரியாகி தேசிய விருது பெற்றார்.
37 வயதேயான பாடகி சுவர்ணலதா சத்ரியன் திரைப்படத்துக்காக, கவிஞர் வாலி இயற்றி இளையராஜாவின் இசையில் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச..." எனும் பாடல் என்னைப் போன்ற பலரின் மனதைக் கொள்ளையடித்திருக்கும்.
அலைபாயுதே திரைப்படத்துக்காக எவனோ ஒருவன்..., பம்பாய் திரைப்படத்துக்காக குச்சி குச்சி ராக்கம்மா..., ஜென்டில்மேன் திரைப்படத்துக்காக உசிலம் பட்டி பெண்குட்டி..., உயிரே திரைப்படத்துக்காக பூங்காற்றிலே..., இந்தியன் திரைப்படத்துக்காக மாயா மச்சேந்திரா போன்ற பல தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் சுவர்ணலதா, இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் எல்லோர் வாயிலும் முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.
அன்னாரின் துயரில் உள்ள குடும்பத்தினருக்கும், இரசிகர்கட்கும் களத்துமேடு தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்கிறது.
2001.09.11 ஆம் நாள் உலகத்தையே உசுப்பியெடுத்த பயங்கரவாதத்தின் உக்கிர நாள், பயங்கரவாதம் தலை விரித்தாடிய கோர நாள், பகிரங்கமாக ஏகாதிபத்தியத்துக்கு சம்மட்டி கொண்டு உச்சந்தலையில் அடித்த வரலாறு மறக்காத நாள், ஒசாமாவை உலகமே உற்று நோக்க ஆரம்பித்த நாள். இத் தினத்தினைத் தொடர்ந்தே பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிக்க வேண்டுமென உலகம் சபதம் எடுத்த நாள்.
அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் விமானத் தாக்குதலுக்குள்ளாகி 2996 பேருக்கும் அதிகமானோரை ஒரே நொடியில் பலியெடுத்த அகோர நாளை ஒன்பது வருடங்களாக அமெரிக்கா நினைவு கூர்ந்து வருகின்றது.
இந்த நாளை சர்வதேச குர் ஆன் எரிப்பு தினமாக அனுட்டிக்குமாறு அமெரிக்காவின் புளோரிடா மாநில கிருஸ்தவ தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தார், இவரின் அறிவிப்பை உச்சக்கட்ட பயங்கரவாதமாக கருதிய "த நஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)" என்ற கிறிஸ்தவ அமைப்பும், பாப்பரசரும் குர் ஆன் எரிப்பு தின நிகழ்வைக் கைவிட வேண்டுமெனவும் அப்படிச் செய்து மதவாதத்தை வளர்க்க வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை இடம்பெறவிருந்த குர் ஆன் எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
அமெரிக்க டொலர் நாணயக் குறியீட்டின் இலச்சனை $ இதுவாகும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள S உம் நீளவாக்கில் உள்ள இரட்டைக் கோடுகளும் செப்டம்பர் 11 ஐக் குறித்துள்ளதெனவும் சில சோதிடர்கள் கூறுவதாக தகவல்கள் கூறுகின்றன, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கிராம மற்றும் சிறு நகர அபிவிருத்தி மேம்பாட்டுக்காக கம நெகும எனும் கிராம எழுச்சித் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதெனவும் இத் திட்டம் அடுத்த மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படுமென தகவல்கள் கூறுகின்றன.
இதற்காக 86 மில்லியன் அமெரிக்க டொலர் (9,668 மில்லியன் இலங்கை ரூபா) செலவாகுமென அறிய முடிகின்றது.
சிங்களப் பகுதிகளில் இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தமிழரின் பாரம்பரிய பூமியில் நடக்கவிருப்பது பாராட்டத்தக்கதே!
சிங்களமும், தமிழும் இந்த நாட்டின் உத்தியோக மொழிகளென சட்டம் கூறிய போதிலும் நடைமுறையில் தேடல் அவசியமாகின்றது, தற்போதைய ஜனாதிபதியும் சிறுபான்மையென ஒரு இனம் இல்லையென குறிப்பிடும் இக் கால கட்டத்தில் எதற்காக "கம நெகும" எனும் சிங்களத்தில் அமைந்த கிராம எழுச்சி எனும் வாசகம்.
தமிழில் "கிராம எழுச்சி" எனும் சொல்லாட்சி இருக்கும் போது, கம நெகும எனும் வாசகம் தேவையானதல்ல, கிராம எழுச்சி எனும் சொல்லாட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது சிறந்தது.
சிங்களப் பகுதிகளில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்களத்தில் கம நெகும எனும் வாசகத்துக்கு முன்னுரிமை கொடுத்து தமிழில் கிராம எழுச்சி என்பதை இணை வாசகமாகக் கொடுக்கலாம், இதேபோல் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் தமிழில் கிராம எழுச்சியெனவும், இணை வாசகமாக சிங்களத்தில் கமநெகும எனவும் வடிவமைத்தால் பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்ள வழிகோலும்.
18வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா தமிழ் ஊடகங்களின் அண்மைய தேடு பொருளாக மாற்றம் கண்டுள்ளார்.
பியசேனா மீது இவ்வளவு மோகம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உற்று நோக்கினால் சிங்களப் பெயரில் தமிழருக்காகக் குரல் கொடுக்க வந்ததே ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறியைத் தூண்டி தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து வருவதை எவரும் மறுதலிக்க மாட்டார்கள், இவர்களின் இந்தக் கூட்டுச் செயற்பாட்டுக்கு படித்த பல புத்திஜீவிகளும் துணை போகத் தான் செய்கின்றார்கள், ஏனெனில் தமிழர்களுடன் நீண்ட காலமாக பிணைந்திருந்த பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே.
நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு பிரிவினை வாதத்தை ஊட்டி வளர்த்து கொலைக் களத்துக்க்குக் கொண்டு சென்ற முக்கிய கதாபாத்திரத்தை வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் அதனை மனம் திறந்து வெளியில் சொல்ல மனம் கூசுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தூரநோக்கின்றி இருந்தமையால் தான் இருந்ததையும் இழந்து முள்ளிவாய்க்காலுடன் மௌனித்துப் போனது ஈழ விடுதலைப் போராட்டம். விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெகுஜன தளமாக பரிணமித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது சுயநல நோக்கத்துக்காகச் செயற்பட்டதுவே இந்த மௌனிப்புக்கு மூல காரணமாகும். கடந்த காலங்களின் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து வந்தமை விடுதலைப் புலிகளின் சேட்டைகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு சான்றாகும்.
இப்போதும் கூட கடந்த காலங்களில் செய்த தவறுகளை பெருமனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை, இந்தப் போராட்டம் மரணித்துப் போனதற்குக் காரணம் தேட எவரும் முன் வரவில்லை, எதிர்காலத்தில் சரித்திரத்தினைப் புரட்டிப் பார்க்கும் அரசியல் மாணாக்கர் பிழையான வழியில் போக இந்த மூடி மறைப்பு காரணமாக அமைந்து விடாதா?
விடுதலைப் புலிகள் செய்த தவறுகளை வெளிப்படையாகக் கூறி புனிதமான விடுதலைப் போராட்டம் சிதைந்து போனமைக்கான காரணியைக் கண்டு பிடிக்க வேண்டும், இதையெல்லாம் விடுத்து பியசேனா மீது கரி பூச நினைப்பது வெட்கக் கேடு.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றுக்கு காலாகாலமாக இருந்து வந்த நிரந்தர வாக்குவங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது, ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதிருந்த நேசத்தின் நிமித்தமே கூட்டமைப்புக்கு வாக்குகள் விழுந்தன. திஹாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாக இருந்த காரணத்தினால் ஆட் தேடும் படலம் அதிகரித்தது, இதற்குக் கிடைத்த துரும்பே பியசேனாவாகும்.
பியசேனா பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரல்ல, அக்கரைப்பற்றுக் கிராமத்திலுள்ள தமிழிச்சிக்குப் பிறந்த சிங்களவரின் மகனே இவராவர், இவரின் கற்றல் தொடக்கம் நட்பு வரை அனைத்தும் தமிழர்களுடன் பிணைந்திருந்தது, தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் நேசனான இவர் அவரின் பாணியில் மக்களுக்கு தன்னாலான சில சேவைகளைச் செய்து வந்தார், மறக்காமல் அப் பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து மரண வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவதுடன் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருவார், இதுவே இவரது மக்களுடனான அரசியல் பிரவேசமாகும்.
இவருக்கும் இப்பகுதி மக்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை சரியாக இனங்கண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவரை அபேட்சகராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதை நிர்ணயித்து களத்தில் இறக்கியது, ஆனால் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால அங்கத்துவரல்ல என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும், தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமெனும் நோக்கம் கொண்ட பியசேனா இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார், வெற்றி கிட்டியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அரசியல்வாதிகளான இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றோர் எந்தக் காலத்திலும் அரசாங்கத்தின் எந்தப் பிரேரணைகளையும் ஏற்றுக் கொண்டதாக வரலாறே இல்லை, எதிப்பு அரசியல் நடாத்துவதே இவர்களில் பிழைப்பு, ஆனால்ஆளும் கட்சியிடம் பின் கதவால் சென்று தங்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பெறத் தயங்குவதில்லை.
மக்களின் வாக்குப் பலத்தினால் பாராளுமன்றம் செல்வதுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனிமேல் மக்கள் தேவையில்லையென நடந்து கொள்ள பியசேனாவால் முடியவில்லை, மக்களுக்கு முடியுமானவரை சேவை செய்வதே அவரின் நோக்கம்.
தமிழர்களின் வரலாற்றில் எதிர்ப்பு அரசியல் நடாத்தி கண்ட பலன் எதுவும் இல்லை, இதனால் எந்த அபிவிருத்தியும் தமிழர் பிரதேசம் கண்டதில்லை, அழிவு தான் எஞ்சியது, இப்படியே தொடந்தால் தமிழ் மக்களுக்கு செய்ய நினைத்த எந்த காரியமும் முடியாமல் போய் விடும் என்பதனை நன்கு உணர்ந்த பியசேனா 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார், இதே போன்றே மலையகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீரங்காவும் இணக்க அரசியலினால் மாத்திரமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாமென நினைத்து அத் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார்.
இதேபோல் அடுத்து வரும் காலங்களில் லங்கா இணையத்தின் சோதரர் ஸ்ரீயும் பியசேனாவின் பாதையை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது, இவ்வாறே ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் மனங்களில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.
தமிழகத்தில் பாடகர்களென விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஒரு சிலரே நிலைத்திருந்த காலம் போய் இப்போது பல பாடகர்கள் இசை ஞானம் உள்ளவர்களாய் உருவெடுத்து வரும் இக்கால கட்டத்தில் அநேகமான புதிய பாடகர்கள் சினிமாத் துறையைச் சார்ந்து செல்வதையே அவதானிக்க முடிகின்றது.
கர்நாடக இசையுலகின் மாமேதைகளெனக் கூறப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் போன்றோர் கொடிகட்டிப் பறந்த இத் தேசத்தில் இன்று கர்நாடக இசைப் பாடகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக இசையைப் கற்றுத் தேறும் பாடகர்கள் அரிதெனக் கூறும் அளவுக்கே தமிழகம் இன்றுள்ளது, இந்தக் கூற்றை மறுதலிக்கும் வகையில் சீர்காழி கோவிந்தராஜன், ரி.எம். சௌந்தரராஜன், யேசுதாஸ் போன்றோர் வரிசையில் உன்னி கிருஷ்ணன், ஹரிகரன், நித்தியஸ்ரீ மகாதேவன் போன்றோரும் வரத்தான் செய்கின்றார்கள், இவர்களின் தடத்தினைப் பின்பற்றி இப்போது வந்திருக்கும் இளையவர் காஷ்யாப் மகேஷ் என்றால் அதில் மிகையில்லை.
கர்நாடக சங்கீதத்தில் நாட்டங் கொண்ட 19 அகவையுடைய காஷ்யாப் மகேஷ் சிறிய வயதிலே பல விருதுகளைப் பெற்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கின்றார், 2000 ஆண்டு முதல் கர்நாடக சங்கீத பால பூஷன், இளம் இசைச் சுடர், இளந்தளிர் இசைஞானி, உயர் சாதனையாளர் விருது, வாணி கலைமணி, சேவா ரத்னா, லயஞான அரசு, கலை இளம்மணி, இன்னிசை வேந்தன், யுககலா பாரதி, தமிழ் இசைத் தென்றல், மணிவாசக மணி, தேசிய சிறுவர் விருது இவைகளுக்கும் அப்பால் கணினி வர்ணத்தினைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களுக்காக மக்றோசொப்ட் நிறுவனர் திரு.பில்கேட்ஸ்ஸிடமிருந்து பெற்ற விருது போன்றவற்றுடன் திகழ்கின்றார் பாடகர் காஷ்யாப் மகேஷ்.
இளம் பாடகர் காஷ்யாப் மகேஷின் சாதனைகள் அடங்கிய பொதியாக www.kashyapmahesh.com எனும் இணையம் பல தகவல்களைத் தருகின்றது.
தமிழகத்தில் பல பாடகர்களின் முன்னே நீச்சலடித்து முன்னேறி வருவதென்பது இமாலய சாதனை தான், இருந்தும் இதனையும் தாண்டி முன்னேற்றம் கண்டு வரும் இளைய தலைமுறை கர்நாடக இசைப் பாடகர் காஷ்யாப் மகேஷை களத்துமேடும் வாழ்த்துகின்றது.
மக்களின் வாக்குகளால் தெரிவாகி பாராளுமன்றம் செல்பவர் மக்களின் குறை நிறைகளை கண்டறிந்து, அவர்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லாமல் தக்க நேரத்துக்கு ஏற்ப நிலமையறிந்து செவ்வனே செயப்படுபவன் உண்மையான மக்கள் சேவகன்.
மாறாக எந்த நேரமும் எதிர்ப்பு அரசியல் பேசிக் கொண்டிருப்பவன் மக்கள் சேவகன் அல்ல மனநோயாளி.
நடிகர் முரளியின் மரணச் செய்தி கவலையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக பதிவு செய்யாமல் விட்ட களத்துமேட்டின் பக்கம் தலையை நீட்டுகிறேன்.
தற்போதைய தமிழக நடிகர்களினுள் தன்னைத் தானே சுயவிமரிசனம் செய்து கொள்ளுமளவுக்கு பக்குவமுள்ளவர் தான் நடிகர் முரளி. சென்ற வாரம் நடிகை லக்ஷ்மி விஜய் தொலைக்காட்சிக்காகத் தொகுத்தளிக்கும் "கதையல்ல நிஜம்" நிகழ்ச்சிக்கு நடிகர் முரளியும் அவர் மகன் அகர்வாவும் வந்து சிறப்பித்தனர், இந் நிகழ்ச்சியில் நடிகர் முரளி அருமையாக தனது உளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
1964 வைகாசி 19 ஆம் திகதி பிறந்த முரளி 1984 ஆம் ஆண்டு சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த பூவிலங்கு திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி புதுவசந்தம், இதயம், பொற்காலம், பகல் நிலவு, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உட்பட 99 திரைப்படங்கள் நடித்து பல இரசிகர்களினதும் பாராட்டைப் பெற்றவர், இறுதியாக தனையன் அதர்வா கதாநாயகனாக நடித்த சத்தியஜோதி பிலிம்ஸ் தயாரித்த காணா காத்தாடி திரைப்படத்தில் சிறு பாத்திரமேற்று நடித்திருந்தார், இதுவே இவரின் இறுதித் திரைப்படமாகும்.
இயக்குநர் பாரதிராஜாவின் கடல் பூக்கள் படத்துக்காக, 2001 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றவர் முரளி.
தனது 46 வது வயதில் நூறாவது படத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி நடிக்க முன்பாகவே இவ்வுலகத்தை விட்டு நடிகர் பிரிந்தது இரகசிகர்கட்கு துரதிஷ்டமே!
எனக்குப் பிடித்த நடிகரின் மறைவால் துயருறும் அன்னாரின் குடும்பத்துக்கும் இரசிகர்கட்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் வலது குறைந்தோருக்கான சர்வதேச தினம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதம அதிதியாகக் கொண்டு அலரி மாளிகையில் நடைபெற்றது, டக்ளஸ் தேவானந்தா, போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமாவும் மற்றும் இன்னோரன்ன அதிதிகளும் கலந்து கொண்டு வலது குறைந்தோருக்கான இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்ததாக ஊடகச் செய்திகள் படங்களுடன் செய்திகளைப் பதிவேற்றி இருந்தன.
முப்பது ஆண்டு கால போய் ஓய்ந்து விட்டதென முரசம் கொட்டிக் கொண்டிருக்கும் அரச பேரினவாதமும் அதன் ஏவலாளர்களும், இந்தப் போரின் எச்சங்களாக வலது குறைந்து எஞ்சியிருக்கும் மக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும், இன்னும் இதற்கு அப்பால் சென்று முகாம்களில் சித்தசுவாதீனமுற்று, வலது குறைந்து நிர்க்கதியாக முடங்கிப் போயுள்ள தமிழ் உள்ளங்களைப் பார்த்து நேசக்கரத்தினை நீட்டினால் குதூகலமாக இருந்திருக்கும் அல்லவா?
இந்த நிகழ்வை நடத்திய அமைச்சரே தமிழராக இருப்பதால், எமது மக்களின் ஊனமான நிலையை உலகுக்கு உரத்துக் கூற அருமையான சந்தற்பமாக இது அமைந்திருக்கும், அமைச்சு சார் நிகழ்வுகள் தமிழருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல இலங்கை வாழ் சகலருக்கும் தேவையானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை, ஆனால் இன்றைய சூழலில் வலது குறைந்து நிர்க்கதியாக அழுது கொண்டிருக்கும் மக்களென்றால் நிவாரணக் கிராமங்களில் வாழும் எமது மக்கள் மாத்திரமே! "ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்" படம்- 1 படம்- 2
நோர்வே நாட்டில் வாழும் சில தமிழர்கள் இணைந்து "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் நாமத்தில் நேற்று 2009.12.15 ஆம் திகதி தேர்தலை நாடாத்தினர்.
"# வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும், # நோர்வே வாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும், # வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்" எனும் குறிக்கோளுடன் இத் தேர்தலை நடாத்தினர்.
நோர்வேயில் வாழும் வாக்களிக்கத் தகுதியான இலங்கைத் தமிழ் மக்களின் தொகை கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர், நேற்றைய தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 2767 பேராகும், ஆகவே கிட்டத்தட்ட 90 சதவிகிதமான 27,233 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.
10 வீதமான தமிழ் வாக்காளர்கள் அளித்த வாக்குகளின் மூலமே நோர்வே ஈழத் தமிழர் அவை தெரிவாகியுள்ளது தெரியவந்துள்ளது, 90 வீதமான வாக்காளர்கள் இத் தேர்தலை நிராகரித்தமைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, அவற்றில் முதலாவதாக இவ்வமைப்பு விடுதலைப் புலிகளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அமைப்பாகவும், மற்றைய காரணியாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தினை மாத்திரம் பிறப்பிடமாகக் கொண்ட பிரதிநிதிகளை வேட்பாளர்களாக உள்வாங்கிக் கொண்டதும் ஆகும்.
இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதிகளாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அலகுகளாகும், இந்த எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் நோர்வே நாட்டில் வாழும் போது யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இத் தேர்தலுக்கான அபேட்சர்களாக நியமிக்கப்பட்டு தேர்தலும் நடந்து முடிந்துள்ளது, இங்கு உருவாக்கப்பட்டுள்ள பிராந்தியவாதத்தினால் 10 சத விகித வாக்குகளை மட்டுமே இந்த அபேட்சகர்கள் பெறக் கூடிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது, இதனை வைத்துக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமென தம்பட்டம் அடிக்கும் நிலை இவர்களுக்கு இல்லையென்பது தெட்டத்தெளிவாகின்றது.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது அபேட்சகர்களின் குடும்ப அங்கத்தவர்கள் செலுத்திய வாக்குகளாகவே கணிக்க முடிகின்றது, அவ்வாறே அபேட்சகர்களும் வாக்குகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பட்டியலில் உள்ள ஜெயஸ்ரீ பாலசுப்பிரமணியம், ஆ.குமாரசாமி (ஆதி), சனுகாந்த் பரம்சோதி (சனு), ஸ்ரிவன் புஸ்பராஜா கருணசாமி, தயாபரன் பரமானந்தன், திலகவதி சண்முகநாதன், பஞ்சகுலசிங்கம் கந்தையா (Dr. ரமணன்), பியோனார் முக்ஸ்னெஸ் மற்றும் தர்மசீலன் தர்மலிங்கம் போன்றவர்களில் எவரும் யாழ்ப்பாணம் தவிர்ந்த வேறு எந்த இலங்கையின் தமிழ் மக்கள் வாழும் மாவட்ட பிரதிநிதிகளிடமிருந்து தெரிவு செய்யப்படவில்லை.
இந்தத் தெரிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதனை எவராலும் அறிய முடியவில்லை, இதற்கான காரணத்தையும் இந்த அவையினர் அறியத் தரவும் இல்லை.
"இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம்" எனும் தலைப்பில் தேர்தற்குழு 2009.11.14 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கும் மேற்சொல்லப்பட்ட அபேட்சகர்கள் தெரிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கின்றது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் சொந்தமாகக் கொண்டவர்களை பட்டியலிட்டு பிரதேசவாதத்தை உருவாக்கிவிட்டு இனியாகிலும் நாம் தமிழர்களாய் ஒன்றிணைவோம் எனக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?
வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது, இதனை இணையவழியூடாக கேட்க வசதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர், ஆனால் சீராக அதனைக் கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாமல் இருக்கின்றது.
இணையவழியூடாக பத்துக்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் இந்த நிகழ்வைப் பார்க்க ஆவலோடு காத்து இருப்பதுடன், ஒலி ஒளி அமைப்புக்களைச் சீர்செய்யுங்களென பல தடவைகள் கூறியும் கருத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.
முதற் தடவை நடைபெற்ற இலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வின் நேரடி இணையவழிச் சந்திப்பு சீராக ஒலி ஒளி தடங்கலின்றி இருந்தது, இந் நிகழ்வை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்திருந்தார், இவரைப் போன்ற தொழிநுட்ப அறிவுகொண்டவர்கள் யாராவது இந்த ஒலி ஒளித் தடங்கலை நிவர்த்தி செய்யலாமே!
இலங்கையின் கொழும்பு - 7, ரொறிங்டன் அவனியூ, இலக்கம் - 3 இல் அமைந்துள்ள "இருக்கிறம்" சஞ்சிகை அலுவலகத்தில் நவம்பர் இரண்டாம் நாளாகிய நாளை மாலை 3 மணியளவில் வலைப்பதிவர்கள் மற்றும் அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் நடைபெற இருக்கின்றது.
இச் சந்திப்பு வலைப்பதிவருக்கான உத்தியோகபூர்வ இரண்டாவது சந்திப்பாக மதிப்பிடப்படுகின்றது, இச்சந்திப்பு சிறப்படைய "களத்துமேடு" வாழ்த்துகின்றது.
இந்தச் சந்திப்பினை இணைய வழியூடாகச் சென்று கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை தோழர் கௌபாய்மது எனப்படும் மதுவதனன் மௌ.ஏற்பாடு செய்துள்ளார், முதலாவது வலைப்பதிவர் சந்திப்பினை இணைய வழியூடாகவும் பங்குபற்ற வழி வகுத்தவர் மதுவதனன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த தடவை ஏற்பட்ட தவறுகள் இனிமேலும் ஏற்படாது என எதிப்பார்க்கப்படுகின்றது.
இந்தச் சந்திப்பானது இலங்கைப் பதிவர்களுக்கு மட்டுமானதா அல்லது சர்வதேச பதிவர்களுக்குமானதா என அறிய முடியவில்லை, தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.