18வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா தமிழ் ஊடகங்களின் அண்மைய தேடு பொருளாக மாற்றம் கண்டுள்ளார்.
பியசேனா மீது இவ்வளவு மோகம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உற்று நோக்கினால் சிங்களப் பெயரில் தமிழருக்காகக் குரல் கொடுக்க வந்ததே ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறியைத் தூண்டி தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து வருவதை எவரும் மறுதலிக்க மாட்டார்கள், இவர்களின் இந்தக் கூட்டுச் செயற்பாட்டுக்கு படித்த பல புத்திஜீவிகளும் துணை போகத் தான் செய்கின்றார்கள், ஏனெனில் தமிழர்களுடன் நீண்ட காலமாக பிணைந்திருந்த பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே.
நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு பிரிவினை வாதத்தை ஊட்டி வளர்த்து கொலைக் களத்துக்க்குக் கொண்டு சென்ற முக்கிய கதாபாத்திரத்தை வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் அதனை மனம் திறந்து வெளியில் சொல்ல மனம் கூசுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தூரநோக்கின்றி இருந்தமையால் தான் இருந்ததையும் இழந்து முள்ளிவாய்க்காலுடன் மௌனித்துப் போனது ஈழ விடுதலைப் போராட்டம். விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெகுஜன தளமாக பரிணமித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது சுயநல நோக்கத்துக்காகச் செயற்பட்டதுவே இந்த மௌனிப்புக்கு மூல காரணமாகும். கடந்த காலங்களின் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து வந்தமை விடுதலைப் புலிகளின் சேட்டைகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு சான்றாகும்.
இப்போதும் கூட கடந்த காலங்களில் செய்த தவறுகளை பெருமனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை, இந்தப் போராட்டம் மரணித்துப் போனதற்குக் காரணம் தேட எவரும் முன் வரவில்லை, எதிர்காலத்தில் சரித்திரத்தினைப் புரட்டிப் பார்க்கும் அரசியல் மாணாக்கர் பிழையான வழியில் போக இந்த மூடி மறைப்பு காரணமாக அமைந்து விடாதா?
விடுதலைப் புலிகள் செய்த தவறுகளை வெளிப்படையாகக் கூறி புனிதமான விடுதலைப் போராட்டம் சிதைந்து போனமைக்கான காரணியைக் கண்டு பிடிக்க வேண்டும், இதையெல்லாம் விடுத்து பியசேனா மீது கரி பூச நினைப்பது வெட்கக் கேடு.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றுக்கு காலாகாலமாக இருந்து வந்த நிரந்தர வாக்குவங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது, ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதிருந்த நேசத்தின் நிமித்தமே கூட்டமைப்புக்கு வாக்குகள் விழுந்தன.
திஹாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாக இருந்த காரணத்தினால் ஆட் தேடும் படலம் அதிகரித்தது, இதற்குக் கிடைத்த துரும்பே பியசேனாவாகும்.
பியசேனா பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரல்ல, அக்கரைப்பற்றுக் கிராமத்திலுள்ள தமிழிச்சிக்குப் பிறந்த சிங்களவரின் மகனே இவராவர், இவரின் கற்றல் தொடக்கம் நட்பு வரை அனைத்தும் தமிழர்களுடன் பிணைந்திருந்தது, தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் நேசனான இவர் அவரின் பாணியில் மக்களுக்கு தன்னாலான சில சேவைகளைச் செய்து வந்தார், மறக்காமல் அப் பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து மரண வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவதுடன் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருவார், இதுவே இவரது மக்களுடனான அரசியல் பிரவேசமாகும்.
இவருக்கும் இப்பகுதி மக்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை சரியாக இனங்கண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவரை அபேட்சகராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதை நிர்ணயித்து களத்தில் இறக்கியது, ஆனால் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால அங்கத்துவரல்ல என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும், தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமெனும் நோக்கம் கொண்ட பியசேனா இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார், வெற்றி கிட்டியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அரசியல்வாதிகளான இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றோர் எந்தக் காலத்திலும் அரசாங்கத்தின் எந்தப் பிரேரணைகளையும் ஏற்றுக் கொண்டதாக வரலாறே இல்லை, எதிப்பு அரசியல் நடாத்துவதே இவர்களில் பிழைப்பு, ஆனால்ஆளும் கட்சியிடம் பின் கதவால் சென்று தங்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பெறத் தயங்குவதில்லை.
மக்களின் வாக்குப் பலத்தினால் பாராளுமன்றம் செல்வதுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனிமேல் மக்கள் தேவையில்லையென நடந்து கொள்ள பியசேனாவால் முடியவில்லை, மக்களுக்கு முடியுமானவரை சேவை செய்வதே அவரின் நோக்கம்.
தமிழர்களின் வரலாற்றில் எதிர்ப்பு அரசியல் நடாத்தி கண்ட பலன் எதுவும் இல்லை, இதனால் எந்த அபிவிருத்தியும் தமிழர் பிரதேசம் கண்டதில்லை, அழிவு தான் எஞ்சியது, இப்படியே தொடந்தால் தமிழ் மக்களுக்கு செய்ய நினைத்த எந்த காரியமும் முடியாமல் போய் விடும் என்பதனை நன்கு உணர்ந்த பியசேனா 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார், இதே போன்றே மலையகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீரங்காவும் இணக்க அரசியலினால் மாத்திரமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாமென நினைத்து அத் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார்.
இதேபோல் அடுத்து வரும் காலங்களில் லங்கா இணையத்தின் சோதரர் ஸ்ரீயும் பியசேனாவின் பாதையை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது, இவ்வாறே ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் மனங்களில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.
பின்னிணைப்பு:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.