உலகத்தில் தொற்று நோய்கள் விருத்தியடைய சுகாதாரமின்மையே பிரதான காரணமாகும், இதனை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனங்கள் அரும்பாடுபட்டு வருகின்றன.
உலக நிறுவனங்கள் எவ்வளவு பணங்களைக் கொட்டியும் தொற்று நோய்களுக்கான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலை வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை, ஆனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இது சம்பந்தமான விழிப்புணர்வு இன்மையே இக் குறைபாட்டுக்கு காரணமாகும்.
சுத்தத்தினைப் பேண வேண்டிய வைத்தியசாலைகளே அசுத்தத்தின் பிறப்பிடமாக மாறி வருவது கவலைக்குரியது, இதனை வைத்தியசாலை நிர்வாகம் கவனம் எடுக்காமை பாரிய குறைபாடாக உணர முடிகின்றது. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளின் படுக்கை, பாத்திரம், கழிப்பறை, குளிப்பறை போன்றவை சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டியவை, இவை இலங்கை வைத்தியசாலைகளில் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் மிகவும் அவசியம்.
நேற்று யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் பிரிவு ஏனைய மருத்துவ பிரிவுகள் கழிப்பறைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டதுடன் சுத்தத்துக்கான அவசியத்தைத் தெளிவு படுத்தியது வரவேற்கத்தக்கது ஆகும்.
சுகாதார தொண்டர்களை அரச பணியாளர்களாக இணைத்துக் கொண்டால் மாத்திரம் போதாது, அவர்கள் வைத்தியசாலையைச் சுத்தமாக வைத்திருக்கின்றார்களா என்பதை கழிப்பறை முதற்கொண்டு சகல இடங்களிலும் அவதானித்தல் வேண்டும். இதற்கும் மேலாக பயனாளிகளும் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.