வெள்ளை வான் ஆட் கடத்தல் எனும் பீதி இலங்கை மக்களைப் பெரிதும் பாதிப்புற வைத்துள்ளது, 1990 ஆம் ஆண்டு காலத்தில் "வெள்ளை வான்" எனும் வார்த்தையே அதிகம் பேசப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் ஆயுதம் மக்களுடன் பேச முன் வந்ததேயாகும், இதனைப் பிரசவித்தவர்கள் இலங்கை ஆயுதப் போராட்டக்காரர்கள் தான்.
புளொட் மோகன் காலத்தில் உக்கிரமடைந்திருந்த வெள்ளை வான் கடத்தல் படிப்படியாகக் குறைந்து இல்லையென்ற நிலை ஏற்பட்ட போதும், இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய மாதிரி இந்தப் பீதி மக்களை மீண்டு ஆட்கொள்கின்றது.
2010.08.23 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டார். இந்த வரிசையில் 2010.09.15 ஆம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் கடத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இக் காலத்தில், இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை இன்னும் காவற்துறை கண்டு பிடிக்காமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.
தெருவுக்குத் தெரு இராணுவ காவலரண்களும், சோதனைச் சாவடிகளும் மலிந்துள்ள இந்தப் பூமியில் கடத்தலை நடத்தி விட்டு கடத்தற்காரர்கள் தப்பிச் செல்வது கடினமான விடயம், படையினரின் ஒத்துழைப்பின்றி இந்த வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது அரிதான விடயமாகும்.
ஆகவே அரசாங்கம் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க முழு முயற்சியை மேற்கொள்வதுடன், இப்படியான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்.
கடத்தப்பட்டவர்களை விடுவிக்க கடத்தக்காரர்களிடமிருந்து எந்தவித சமிக்கையும் கிடைக்காததால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றி அரசியல்வாதிகள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் மௌனித்து வருவதன் மர்மம் தான் என்ன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.