தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதி, கேணல் போன்ற தரத்தில் இருந்து பல சாகசங்களைப் புரிந்ததுடன் ஏதுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் போர்க்களத்துக்கு அனுப்பி மாவீரராக்கி சொகுசு வாழ்வைத் தேடியவர் இப்போதைய சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும், பிரதியமைச்சருமாகவிருக்கும் கருணா.
ஆரம்ப காலத்தில் இருந்தே பதவியாசையும் இவருடன் கூடவே ஒட்டியே இருந்ததால், அதற்கான சந்தர்ப்பங்களை தேடியே வடிவமைத்து வந்தவர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த கண்ணனைக் கொலை செய்து விட்டு இம் மாவட்டங்களுக்கான பொறுப்பை தன் வசம் அமைத்துக் கொண்டவர், இவரைப் பற்றிய பல தகவல்களை காலச்சுவடு எடுத்துக் கூறுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தனது பிரதேசவாதத்தின் மூலம் தனிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார், ஆனால் தமிழீழம் எனும் சொல்லை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மைச் சிங்களவருடன் கூட்டுறவாடிய கருணாவால் அந்தப் பெயரில் இயக்கத்தைக் கொண்டு நடத்த முடியாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளென மாற்றியமைத்தார், அந்தவேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தமைக்காக அரசினால் கிடைக்கப்பட்ட அளவுக்கதிகமான நிதியை முறைகேடாக உபயோகித்த காரணத்தினால் அமைப்பினுள் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி, அங்கு குடிவரவு அதிகாரிகளினால் கைதாகி குற்றவாளியென சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
தண்டனை முடிவுற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கி வாழ முடியாத காரணத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டார், வந்ததும் அப்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராக பிள்ளையான் தலைமையேற்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்தார்.
வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைச் சேகரிக்கும் கருணாவின் உதவியாளனாக இருந்த பிள்ளையானின் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்டார், பதவி ஆசை மீண்டும் வெளிவர ஆரம்பித்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ஸ கருணாவை வைத்து சதுரங்க ஆட்டம் ஆட முற்பட்டார், அதன் விளைவே கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவியும், கட்சியின் இணைத் தலைமையும்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் கேணல் எனும் கௌரவத்துடன் மதிக்கப்பட்ட கருணா, பதவியாசைக்கு இரையாகியதால் இப்போது கோமாளி வேடமேற்று பல இடங்களில் இடறி விழுந்து வருகிறார்.
சிங்கள மக்களிடம் பல்துறை வேந்தனாக காட்சி தர முற்படும் கருணா, குறைந்த பட்சம் தனது கிரான் கிராமத்து மக்கள் நாளாந்தம் படும் துன்ப துயரங்களையாவது கவனத்தில் எடுக்கத் தவறி வருகின்றார். குவளையைக் கையிலேந்தி நடிகர் போலவும், கிற்றார் இசைப்பது போலவும், பாடகர் போலவும், சில இடங்களின் நாயகியுடன் இணைந்து நாயகனாகவும் பெரும்பான்மை இனத்துக்கு காட்ட முற்படுகின்றார், இவை அனைத்தும் கருணாவைக் கோமாளியாகவே காட்ட முனைகின்றது என்பதை அவர் சிந்திக்க தவறுகின்றார் என்பதுவே உண்மை
சிங்கள மக்களுடன் கருணா சங்கமமாகி இருப்பது இன ஒற்றுமைக்கான முயற்சி, ஆனால் தன் இனத்தின் நிலை மறந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று கேணலாக இருந்து கோமாளியாக மாறியிருப்பது மிகவும் வேதனையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.