திங்கள், 22 டிசம்பர், 2008

கருணா அம்மானின் புதிய கட்சி உதயம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் அவ்வமைப்பின் உள்முரண்பாட்டிலிந்து மீண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஸ்தாபித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படும் போது, ஸ்ரீலங்கா பேரினவாதிகளினால் ஈழம் எனும் பதத்தினை கட்சிப் பெயரில் இருந்து நீக்க கருணா அம்மான் நிர்ப்பந்திக்கப்பட்டார், அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகப் கட்சிப் பெயரைச் சுருக்கிக் கொண்டார்.

இந் நிலையில் அக் கட்சியின் தலைவர் கருணா அம்மானுக்கும் உதவித் தலைவர் பிள்ளையானுக்கும் இடையே தலைமைத்துவ பிரச்சனை ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட முறுகலில் சில உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், பிள்ளையான் குழுவினராலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் உயிராபத்து நிகழக்கூடும் என்பதனால், ஸ்ரீலங்காவில் இருந்து செயற்பட முடியாமல் பிரித்தானியாவுக்கு தப்பியோடினார் கருணா.

ஸ்ரீலங்காவில் தரித்து இருந்த பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் புரிந்துணர்வைப் பேணியதுடன், கிழக்கு மாகாணத்தில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியது, இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தினை விட்டு பின்வாங்கியதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளெனும் பிள்ளையான் அணியினர் கிழக்கின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றினர், ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்படாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து நிற்க முடியாத பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அடுத்து வந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தலைவரின்றி இருந்த கட்சிக்கு திரு.ரகு நந்தகோபனை உத்தியோகபூர்வ தலைவராக்கி ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக பதிவு செய்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றி முதலமைச்சராக பிள்ளையான் சந்திரகாந்தன் பதவியேற்றுக் கொண்டார்.

பிரித்தானியக் குடியியல் சட்டத்துக்கு முரணாக உள்ளே வந்த காரணத்தினால் கருணா அம்மான் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் விடுதலையாகி ஸ்ரீலங்கா திரும்பிய சில காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தார் இதனைத் தொடந்து விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறிக் கொண்டார் கருணா.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே கொண்டிருந்த கருணா, கட்சியின் தலைமையை தன்னிடம் ஒப்படைக்கும் படி பிள்ளையானிடம் கேட்டுக் கொண்டிருந்தார், அதற்கு ரகு நந்தகோபன் உடன்படாத காரணத்தினால் காலவோட்டத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தலைநகரை அண்டிய பிரதேசத்தில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டார், இத்தருணத்தில் கட்சியின் பெயரிலும், தலைமைப் பீடத்திலும் மாற்றம் செய்யவிருப்பதாக கருணா பத்திரிகைகளில் செய்திகளை விட்டிருந்தார் அதன் பின்பும் கட்சியினைப் பலப்படுத்தும் நோக்கில் பிள்ளையான், அஷாத் மௌலானா, மற்றும் கைலேஸ்வரராஜா போன்றோர் கட்சியின் பெயரினை மாற்ற கருணாவுக்கு எந்தவித அருகதைகதையும் இல்லையென பத்திரிகைகள் மூலமாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர்.

பிள்ளையான் குழுவினரிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பு தனக்கு தரப்படவில்லையே எனக் கவலை கொண்ட கருணா தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை இணைத்து தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் புதிய கட்சியொன்றினை தொடக்கியுள்ளார், மட்டக்களப்பு நேச வீதியில் உள்ள அலுவலகத்தினை கிழக்கு மாகாண முகவரியாகக் கொண்டு இக் கட்சியின் தலைவராக கருணா விநாயகமூர்த்தியும் செயலராக இனியபாரதியும் மற்றும் பொருளாளராக சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் இக் கட்சிக்கான சின்னம் போன்ற பிற விபரங்கள் தயாரிக்கப்பட்டுவிடுமெனவும் அத்துடன் அரசியற் கட்சியாக தேர்தற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு விடுமெனவும் ஊடகப் பேச்சாளர் திரு. தட்சணாமூர்த்தி கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு திரு.பிள்ளையான் சந்திரகாந்தன் தொடந்து தலைவராக இருப்பாரென திரு.கைலேஸ்வரராஜா ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.

கட்சிக்குப் பெயரிடுவதில் திருப்தி காணாத கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் என்ன திருத்தம் செய்ய இருக்கின்றாரோ!

வெள்ளி, 19 டிசம்பர், 2008

வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் ஸ்ரீலங்கா விஜயம்!

ஸ்ரீலங்காவுக்கு வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளனர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளைச் சேர்ந்த இவ்விராணுவ ஆலோசகர்கள் வவுனியா இராணுவ தலைமையகத்துக்குச் சென்று ஆலோசனைகளை மேற்கொண்டதுடன், 57 வது மற்றும் 59 வது படையணித் தலைமையகத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஸ்ரீலங்கா இராணுவ தரப்புக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்று வரும் சில முன்னரங்க நிலைகளுக்கும் விஜயம் மேற்கொண்டு வன்னியின் நேரடி நிலைமைகளை அவதானித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

புதன், 17 டிசம்பர், 2008

24 ஸ்ரீலங்கா படையினரின் உடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளிடம்!

2008.12.16 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம் மற்றும் முறிகண்டி பகுதிகளை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தியதில் 300 பேருக்கும் அதிகமான ஸ்ரீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும், படையினரின் 24 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

விரைவில் இவ் உடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கையளிக்கப்படவுள்ளதாக திரு.புலித்தேவன் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரம்.

ஏ.கே-எல்.எம்.ஜி - 2
பி.கே-எல்.எம்.ஜி - 1
ரி-56 துப்பாக்கிகள் - 6


திங்கள், 15 டிசம்பர், 2008

கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு நேரடிப் புகையிரத சேவை!

கொழும்பு புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பிலிருந்து, வவுனியா வரை இடம்பெற்ற புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப் புகையிரத சேவை நாளையில் இருந்து வவுனியா வரை தொடரும்.

இப் புகையிரத சேவையினை இன்று 2008.12.15 ஆம் திகதி தொடக்கம் வவுனியா வரை நகர்த்த சமூக சேவைகள், சமூக நலன்புரித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா முயற்சியினை மேற்கொண்டிருந்தார், பாதைச் சீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப வேலைகள் முற்றுப் பெறாததால் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியா வரையான நேரடிப் புகையிரதச் சேவை தொடருமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் செவ்வி

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தினர் மூவருக்கு துப்பாக்கிச் சூடு, ஒருவர் ஸ்தலத்தில் பலி!

மட்டக்களப்பு, ஆரையம்பதி 3 ஆம் குறிச்சியில் வசிக்கும் மாவிலங்குதுறை பாடசாலை ஆசிரியரான செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளையின் வீட்டில் 2008.12.13 ஆம் திகதி இரவு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் அக் குடும்பத்தினரில் ஒருவர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

45 வயதுடைய ஆசிரியர் திரு.செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை (மனோகரன்) அவரது மனைவி திருமதி தயாளினி மற்றும் 17 வயதுடைய மகள் கிருஷ்ணபிள்ளை நிஷாந்தினி ஆகிய மூவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் தாய் தயாளினி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

தந்தையும் மகளும்(செல்லத்தம்பி கிருஷ்ணபிள்ளை, கிருஷ்ணபிள்ளை நிஜாந்தினி) ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

வியாழன், 11 டிசம்பர், 2008

முறிகண்டி ஸ்ரீலங்கா படை வசம்!

வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 57 ஆம் படைப் பிரிவினர் கொக்காவிலுக்கு வடக்காகவும், அக்கராயன்குளத்துக்கு கிழக்காகவும் நகர்ந்து 2008.12.10 ஆம் திகதி நேற்றுப் பிற்பகல் முறிகண்டியை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கா படை தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
ஒளிப்பேழை







புதன், 10 டிசம்பர், 2008

கிளிநொச்சிக்கு மேற்காக படையினரும் விடுதலைப்புலிகளும் பலத்த மோதல்!

ஸ்ரீலங்கா படைதரப்பினரின் உடலங்களும், யுத்த உபகரணங்களும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

கிளிநொச்சிக்கு மேற்குத் திசையிலுள்ள ஊற்றுப்புலம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கான முன்நகர்வில் 2008.12.10 ஆம் திகதி இன்று காலை வேளையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஸ்ரீலங்கா படை தரப்பில் 60 படையினர் கொல்லப்பட்டும் 120 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா படை தரப்பினரின் 12 உடலங்களும் மற்றும் இராணுவ யுத்த உபகரணங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பொருட்கள்:

1. பிகே - எல்.எம்.ஜி. - 02
2. ஆர்.பி.ஜி. - 02
3. ஏகே-எல்.எம்.ஜி. - 04
4. ரி.56-2 ரக துப்பாக்கிகள் - 11
5. இரவு பார்வை காட்டி - 01
6. லோ-01
















விடுதலைப் புலிகளின் சுங்கப் பிரிவு ஸ்ரீலங்கா படை வசம்!

யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 பாதையில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சுங்கப் பிரிவு ஸ்ரீலங்கா படை தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏ-9 பாதையின் 197 ஆம் கிலோமீற்றர் கல் பகுதியை அடுத்து விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டு வந்த சுங்கப் பிரிவு, யாழ்.பயணிகள் பிரிவு, வன்னி பயணிகள் பிரிவு, உந்துருளிகள் செவ்வையிடும் பகுதி போன்ற பல அலுவலங்களைக் ஸ்ரீலங்கா படை வசமாகியுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி தொடர்பான ஒளிப் பேழை






திங்கள், 8 டிசம்பர், 2008

2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

கடந்த 2008 நவம்பர் 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவுத்திட்டம் இன்று மதியம் சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் மூன்றாவது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இவ் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவாக 126 பேரும் எதிராக 84பேரும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய தேசியக் கட்சி (கரு ஜெயசூரிய அணி), ஜே.வி.பி.(விமல் வீரவங்ஸ அணி), இ.தொ.கா, மக்கள் மலையக முன்னணி, ஈ.பி.டி.பி. என்பன வரவு செலவுதிட்டத்திற்கு ஆதரவாகவும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி (சோமவன்ச அணி) என்பன எதிராகவும் ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

2006 ஜூன் 28 ஆம் திகதி ஜேர்மனி நாட்டில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, பா.அரியநேத்திரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா கஜேந்திரன் ஆகிய மூவரும் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு எதிராகக் கருத்து வெளியிட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் டிசம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்துக்குச் சமூகம் தருமாறு கொழும்பு மாவட்ட நீதிபதி அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

சனி, 6 டிசம்பர், 2008

ஸ்ரீலங்காவின் முதற் பெண் முஸ்லிம் உயர்நீதிமன்ற நீதிபதி!

ஸ்ரீலங்காவின் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதலாவது முஸ்லிம் பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக ஏ.எல்.எம்.மைமூனா அவர்கள் தெரிவாகி உள்ளார். இவர் அம்பாறை மாவட்டத்திலும், வேறு பல பிரதேசங்களிலும் நீதிபதியாகக் கடமையாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் திரு.சரத் என்.சில்வா முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம்.மைமூனாவுக்கு "களத்துமேடு" வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வியாழன், 4 டிசம்பர், 2008

ஊடகவியலாளர் திசைநாயகத்துக்கு ஊடகச் சுதந்திர விருது!

ஊடகப் பணியின் மூலம் தகவல் சுதந்திரத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நாடுகளில் உள்ள சிறந்த ஊடகவியலாளர்களுக்கு ஊடக கண்காணிப்பகமான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு "ஊடகச் சுதந்திர விருது" வழங்கி கௌரவித்து வருகின்றது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு இவ் விருதிற்காகத் தெரிவு செய்துள்ள அறுவர்களில் ஸ்ரீலங்கா தமிழ் ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகமும் ஒருவராகும்.

ஊடக கண்காணிப்பகமான எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் இவருக்கான விருதினை இன்று 2008.11.04 ஆம் திகதி வியாழக்கிழமை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸில் நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி அவர்கள் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

மனித உரிமைகள் அமைப்பினால் சர்வாதிகாரப் போக்குடையது என விழிக்கப்படும் ஸ்ரீலங்காவின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அதிகாரத்தினால் கடந்த 2008.03.07 ஆம் திகதி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலாவது ஊடகவியலாளர் திரு.ஜே.எஸ்.திசைநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினாலும், அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள திசைநாயகத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்படின், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றத்துக்காக குறைந்தது ஐந்து வருடமாவது சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனவும், அவசரகால ஒழுங்கு விதியின் கீழான குற்றமென தீர்ப்பு வழங்கப்படின் பத்து வருடங்கள் முதல் இருபது வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

செவ்வாய், 2 டிசம்பர், 2008

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்துக்குச் சென்ற கருணா அணியினருக்கு அனுமதி மறுப்பு!

ஸ்ரீலங்காவில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டம் 2008.12.01 ஆம் திகதி நேற்று மாலை ஆரம்பமாகியது, இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இரு தினங்களுக்குக் கலந்து கொள்ள மாட்டார்களென அக் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று ஆரம்பமான குழுக் கூட்டத்துக்கு ரிஎம்விபி யின் கருணா அணியினர் இருவர் கலந்து கொள்ள வந்த போது சர்ச்சை ஏற்பட்டது. இக் கட்சியின் பெயரில் கருணா, பிள்ளையான் என இரு அணிகள் உருவாகியுள்ளதால் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் எவ் அணியை அனுமதிப்பது என்பதைத் தீர்மானிப்பதற்காக தேர்தற் திணைக்களத்தின் உதவியை நாடிய போது அக்கட்சியின் தலைவர் திரு.ரகு சுப்ரமணியம் நந்தகோபன், பொதுச் செயலர் திரு.ஏ.கைலேஸ்வரராஜா எனத் தெரிய வந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சு.நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதால் புதிய தலைவர் மற்றும் பொதுச்செயலர் யார் என்பதை எவ் அணியினர் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கின்றார்களோ அவர்கள் சார் பிரதிநிதிகளே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ள அனுமதிப்படுவர், இல்லையேல் இக் கட்சி சார்பில் முன்னர் கலந்து கொண்ட பிரதிநிதிகளான சிவகீதா பிரபாகரன் மற்றும் அஸாத் மௌலானா இருவரும் கலந்து கொள்ளலாமென சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்றைய கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஏக தலைவர் தானே என்றும், தான் நியமித்துள்ள இரு பிரதிநிதிகளையும் எமது கட்சி சார்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு திரு.கருணா வினாயகமூர்த்தி முரளிதரன் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கேற்ப நேற்றைய சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்திற் கலந்து கொள்வதற்கென வருகை தந்த கருணா அணியைச் சேர்ந்த திரு.எஸ்.கமலநாதன் மற்றும் திரு.கே.சின்னையா இருவரும் அனுமதி கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

கருணா, பிள்ளையான் விரிசலினால் ரகு நந்தகோபன் கொல்லப்பட்டுள்ளதாக அறியப்பட்ட போதிலும், இவர்களிடையே இன்னும் தொடரும் விரும்பத்தகாத பதவி வெறியினால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்படவுள்ளனவோ தெரியவில்லை.

திங்கள், 1 டிசம்பர், 2008

அமைச்சர் பௌசியை பதவியில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் பணிப்பு!

பெற்றோலியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் திரு.ரவி கருணாநாயக்கவும், சமையல் எரிவாயு விற்பனையாளரொருவரும் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் உயர் நீதிமன்றில் தொடுத்த வழக்கின் பயனாக பெற்றோலியத்துறை அமைச்சரைப் பதவி நீக்கி வேறொருவரை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரை பதவி நீக்கம் செய்யுமாறும் அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நான்கு வங்கிகளுக்கு வழங்கவிருக்கும் கொடுப்பனவுகளை இடை நிறுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.அசந்த டி மெல்லின் பொறுப்பற்ற செயலை பெற்றோலியத்துறை அமைச்சர் திரு.ஏ.எச்.எம்.பௌசி கண்காணிக்கத் தவறியமைக்காகவே அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவரை நியமிக்கும் வரை திறைசேரிச் செயலர் திரு.சுமித் அபயசிங்கவை நியமிக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக பிரதம நீதியரசர் திரு.சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----