தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் அவ்வமைப்பின் உள்முரண்பாட்டிலிந்து மீண்டு தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஸ்தாபித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் செயற்படும் போது, ஸ்ரீலங்கா பேரினவாதிகளினால் ஈழம் எனும் பதத்தினை கட்சிப் பெயரில் இருந்து நீக்க கருணா அம்மான் நிர்ப்பந்திக்கப்பட்டார், அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகப் கட்சிப் பெயரைச் சுருக்கிக் கொண்டார்.
இந் நிலையில் அக் கட்சியின் தலைவர் கருணா அம்மானுக்கும் உதவித் தலைவர் பிள்ளையானுக்கும் இடையே தலைமைத்துவ பிரச்சனை ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட முறுகலில் சில உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், பிள்ளையான் குழுவினராலும், தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் உயிராபத்து நிகழக்கூடும் என்பதனால், ஸ்ரீலங்காவில் இருந்து செயற்பட முடியாமல் பிரித்தானியாவுக்கு தப்பியோடினார் கருணா.
ஸ்ரீலங்காவில் தரித்து இருந்த பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் புரிந்துணர்வைப் பேணியதுடன், கிழக்கு மாகாணத்தில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியது, இத் தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தினை விட்டு பின்வாங்கியதனை சாதகமாகப் பயன்படுத்திய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளெனும் பிள்ளையான் அணியினர் கிழக்கின் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஆளும் கட்சியுடன் இணைந்து அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றினர், ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பதிவு செய்யப்படாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தனித்து நிற்க முடியாத பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அடுத்து வந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக தலைவரின்றி இருந்த கட்சிக்கு திரு.ரகு நந்தகோபனை உத்தியோகபூர்வ தலைவராக்கி ஸ்ரீலங்கா தேர்தற் திணைக்களத்தில் அரசியற் கட்சியாக பதிவு செய்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரத்தினைக் கைப்பற்றி முதலமைச்சராக பிள்ளையான் சந்திரகாந்தன் பதவியேற்றுக் கொண்டார்.
பிரித்தானியக் குடியியல் சட்டத்துக்கு முரணாக உள்ளே வந்த காரணத்தினால் கருணா அம்மான் சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் விடுதலையாகி ஸ்ரீலங்கா திரும்பிய சில காலங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கியிருந்தார் இதனைத் தொடந்து விநாயகமூர்த்தி முரளிதரனாக மாறிக் கொண்டார் கருணா.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுமே கொண்டிருந்த கருணா, கட்சியின் தலைமையை தன்னிடம் ஒப்படைக்கும் படி பிள்ளையானிடம் கேட்டுக் கொண்டிருந்தார், அதற்கு ரகு நந்தகோபன் உடன்படாத காரணத்தினால் காலவோட்டத்தில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தலைநகரை அண்டிய பிரதேசத்தில் வைத்துக் சுட்டுக் கொல்லப்பட்டார், இத்தருணத்தில் கட்சியின் பெயரிலும், தலைமைப் பீடத்திலும் மாற்றம் செய்யவிருப்பதாக கருணா பத்திரிகைகளில் செய்திகளை விட்டிருந்தார் அதன் பின்பும் கட்சியினைப் பலப்படுத்தும் நோக்கில் பிள்ளையான், அஷாத் மௌலானா, மற்றும் கைலேஸ்வரராஜா போன்றோர் கட்சியின் பெயரினை மாற்ற கருணாவுக்கு எந்தவித அருகதைகதையும் இல்லையென பத்திரிகைகள் மூலமாக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர்.
பிள்ளையான் குழுவினரிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பு தனக்கு தரப்படவில்லையே எனக் கவலை கொண்ட கருணா தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இனிய பாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகியோரை இணைத்து தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் புதிய கட்சியொன்றினை தொடக்கியுள்ளார், மட்டக்களப்பு நேச வீதியில் உள்ள அலுவலகத்தினை கிழக்கு மாகாண முகவரியாகக் கொண்டு இக் கட்சியின் தலைவராக கருணா விநாயகமூர்த்தியும் செயலராக இனியபாரதியும் மற்றும் பொருளாளராக சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் இக் கட்சிக்கான சின்னம் போன்ற பிற விபரங்கள் தயாரிக்கப்பட்டுவிடுமெனவும் அத்துடன் அரசியற் கட்சியாக தேர்தற் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு விடுமெனவும் ஊடகப் பேச்சாளர் திரு. தட்சணாமூர்த்தி கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு திரு.பிள்ளையான் சந்திரகாந்தன் தொடந்து தலைவராக இருப்பாரென திரு.கைலேஸ்வரராஜா ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
கட்சிக்குப் பெயரிடுவதில் திருப்தி காணாத கருணா அம்மான் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி எனும் பெயரில் என்ன திருத்தம் செய்ய இருக்கின்றாரோ!
ஈழவன்,என்னதான் கதை கதையாகச் சொன்னாலும் உருப்படுமா எம் இனம்.அமைதியடையுமா எம் நாடு!
பதிலளிநீக்குமுடிந்ததைச் செய்வோம் ஹேமா!
பதிலளிநீக்கு