இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ள மர்ம மனிதனினால் தினமும் தொல்லைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது, இதனை தமிழ் அரசியல்வாதிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.
எமது எதிர்கால கல்வியலாளர்களைச் சிதைப்பதற்காக திட்டமிட்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் இந்த நேரம் பார்த்து மர்ம மனிதனை உருவாக்கி உள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.
பெண்களின் மார்பகத்தினைக் குறியாக வைத்தே மர்ம மனிதர்களின் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன, ஆண்களின் துணையின்றி தனித்து வாழும் பெண்களை அவதானித்து இம் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடாத்துகின்றார்கள்.
தாக்குதல் நடாத்தும் வேளைகளில் அடையாளம் தெரியாதிருப்பதற்காக முகமூடி அணிந்திருப்பதுடன், கையில் அறுவைச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் சவர அலகினைப் போன்ற கூரான மெல்லிய கத்தியினால் காயத்தினை ஏற்படுத்துகின்றனர், இந்த காயம் ஏற்பட்ட சிறிது நேரத்துக்குள்ளேயே பாதிக்கப்பட்டோர் மயக்க நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் கத்தி விசம் பூசப்பட்ட கத்தியாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மாலையானதும் உறவினர்களின் வீடுகளில் சேர்ந்து ஒன்றாகச் நிம்மதியின்றி இரவைக் கழிகின்றனர், இதனால் மக்களுக்கு ஒழுங்கான நித்திரையின்றி அவஸ்தைப்படுகிறார்கள், உயர்தரப் பரீட்சைக்குத் செல்லவிருக்கும் மாணவர்கள் கல்வியை கற்க முடியாமல் மர்ம மனிதனில் தொந்தரவுக்காக வீட்டைக் காவல் காக்கின்றனர்.
இந்த மர்ம மனிதன் பற்றிய கதைகள் அனைத்தும் அவரவர் வீட்டில் ஏற்படாத வரைக்கும் சிரிப்பான விடயமாகவே காணப்படும். தாக்குதல் நடாத்தி விட்டு மர்ம மனிதர்கள் பொலிஸ் நிலையத்துக்கு உள்ளேயே தப்பியோடிய சம்பவங்கள் அண்மைக்காலமாக கூறப்பட்டே வருகின்றது, இதனை பொலிஸ் தரப்பினர் மறுதலித்து வருவதுடன் மனநோயாளிகள் என மூடி மறைக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாமல் போனதால் தமிழினம் கொஞ்சம் கொஞ்சமாக வேதனைகளை அனுபவிக்கத் தொடங்கி விட்டார்கள், இதனை அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகளும், கிழக்கு மாகாண ஆட்சியாளர்களும் அறியாமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலேயென சில சிங்கள அரசியல்வாதிகள் உறுதியாகக் கூறுகின்றனர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினால் மர்ம மனிதர்கள் உருவாக்கபட்டுள்ளனரென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தமிழ் பேசும் மக்களை அச்சுறுத்தி வரும் மர்ம மனிதர்களுக்கு முற்றுப் புள்ளி காண வேண்டும், இதற்காக பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையைக் கொணர்ந்து அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்க வேண்டியது கட்டாய தேவையாகும்.
அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் ஈபிடிபி, ரிஎம்விபி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் எப்படி அரசாங்கத்துடன் பகைத்துக் கொள்வது என நினைத்து, தமிழ் பேசும் மக்களின் அவஸ்தையில் கவனம் செலுத்தாமல் இருப்பீர்களாயின் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.