தமிழக அரசியற் களத்தில் கால் பதிப்பதற்காக அண்மைக் காலமாக புதிய முகங்கள் சில புதிய புதிய யுக்தியைக் கையாண்டு வந்தார்கள், கடந்த காலங்களில் இவர்களுக்கு "இலங்கைத் தமிழர்" எனும் நாமம் பேசு பொருளாகக் கிடைத்திருந்தது, இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்து வந்தார்கள். முள்ளிவாய்க்கால் சங்கமத்துடன் பேசு பொருளுக்கு நாதியற்றிருந்த சினிமாத்துறை அரசியலாளர்கள் இப்போது கிடைத்திருக்கும் துருப்பாக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்பார்த்து இருக்கும் முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் போன்றோரை இன்றைய அரசியல் காய் நகர்த்தலுக்குப் பயன்படுத்துகின்றார்கள்.
இவர்களின் மூளைச் சலவையினால் இளையோர் அதிகம் பேர் ஈர்க்கப்பட்டு தெருவுக்கு இழுக்கப்படுகின்றனர், இதன் ஓரங்கமாக இன்று 2011.08.28 ஆம் திகதி மாலை மூவருக்குமான தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காஞ்சிபுரம், ஓரிக்கையைச் சேர்ந்த 27 வயதுடைய மக்கள் மன்றம் எனும் இயக்கத்தைச் சேர்ந்த செங்கொடி எனும் இளம்பெண் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக கடிதம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார்.
தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யுமாறு பலரும் அழுத்தத்தைக் கோரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடிய தீக்குளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல, இந்திய நீதிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தியே தூக்குத் தண்டனையை இந்திய மண்ணில் இருந்து அகற்றலாம், மாறாக இளையோர் உணர்ச்சி வசப்படாமல் மூளைச் சலவைக்கு பலியாகாமல் அரசியல் அழுத்தத்தைக் கொடுப்பதே சிறந்த வழி முறையாகும், தீக்குளிப்பதால் எவ்வித பலனும் எட்டப் போவதில்லை.
சோதரி செங்கொடியின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் உறவுகளுக்கு "களத்துமேடு" ஆழ்ந்த அனுதாபத்தை பதிவு செய்கின்றது. செங்கொடியுடன் முற்றுப் பெறட்டும் மூளைச் சலவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.