நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான பதவியேற்பு விழா யாழ்ப்பாணத்தில் ததேகூ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதேசசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் வழங்காவிடின் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து பெற்று சபையைத் திறம்பட நடாத்துவோம் என சம்பந்தன் கூறினார்.
சபையைத் திறம்பட நடாத்த நினைப்பதுடன் நின்று விடாது உளத்தூய்மையுடன் இவர்கள் செயற்படுவார்களா என்பது கேள்விக்குறியே!, சபைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் பலர் சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள், ஆனால் தலைமைத்துவம் பழைமைவாதத்தில் இருந்து மீண்டதற்கு அறிகுறி தென்படவில்லை, மீண்டும் மீண்டும் புலி வாலைப் பிடித்தவர்களாகவே தோன்றுகின்றார்கள். உதாரணம் வவுனியா நகரசபையின் செயற்பாடு இன்றும் மந்த கதியிலேயே உள்ளது.
பிரதேசசபைகள் அப் பிரதேசத்துக்குரிய வளங்களைப் பயன்படுத்துவதுடன் வரி வசூலிப்பினாலும் அதிக பணத்தினை பெற்று அபிவிருத்திகளை மேற் கொள்வர், இதற்குப் போதாத மீள் நிரப்பு நிதியே அரச கஜனாவில் இருந்து பெறப்படும். எமது பிரதேச அபிவிருத்திக்குத் தேவையான பணத்தினை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஏதுவான வழி முறைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். மாறாக விதண்டாவாதத்துடன் செயற்பட்டால் எமது பிரதேசம் மீண்டும் இருண்ட யுகத்துக்கே செல்லும்.
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உதவி கோருவதில் தவறில்லை, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த காலங்களில் அரசியல் துரும்பாகபாகப் பயன்படுத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய பிதாமகர்கள் ஒரு சத நாணயமேனும் வழங்கமாட்டார்கள், அவர்களுக்குத் தேவை தங்களது பைகளை நிரப்பிக் கொள்வதே ஆகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.