"அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை" எனும் தலைப்பில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய பதிவு தற்போதைய இலங்கையின் சில சாதக பாதக நிலமையைக் குறிப்பிட்டிருந்தது, தலைப்புக்குப் பொருத்தமற்ற பத்தியாக காணப்பட்ட போதிலும் நாட்டை உலுப்பிக் கொண்டிருக்கும் கிறிஸ் பூசப்பட்ட மர்ம மனிதனைப் பற்றியதாக தொட்டுச் சென்றுள்ளார்.
இம் மர்ம மனிதர்களினால் இலங்கை மக்களின் நடுத்தர வர்க்கம் நிம்மதி இழந்து வாழ்கின்றனர், பொது மக்கள் குறிப்பாக இளம் பெண்கள் மர்ம மனிதனினால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன, சிலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது ஊடகங்கள் வாயிலாகவும் அறியப்பட்டது, கட்டுரையாளரின் ஊரிலும் ஒரு இளம்பெண் மலசலகூடத்தினுள் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் படத்துடன் பிரசுரமாகி கவலையைத் தோற்றுவித்தது.
மர்ம மனிதர்களின் தாக்குதல் இடம்பெற்ற பல இடங்களில், பொது மக்களால் இனம் காணப்பட்டு துரத்திச் செல்லப்பட்ட மர்ம மனிதர்கள் பாதுகாப்புக்காக ஓடிச் சென்ற இடமாக காவல் நிலையங்கள் பதிவாகியுள்ளன. சந்தேகத்தின் பேரில் பல அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தவிர்க்க முடியாதது, வேலியே பயிரை மேய்வதனைப் போன்று அரசாங்கத்தின் துணை கொண்டு புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களால் மர்ம மனிதர்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் கட்டுப்படுத்துவது அல்லது கண்டுபிடிப்பது என்பது இருட்டில் பூனையைத் தேடுவதற்கு ஒப்பாகும், ஆனால் இந்தச் சம்பவங்கள் எதுவும் கட்டுரையாளருக்குத் தெரியாமல் போனது வேடிக்கையே!
சட்டத்தை பொது மக்கள் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாதெனில், மக்களின் நிம்மதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களை கண்டுபிடிக்க வேண்டியவர்கள் அரச காவற்துறையராகும். அவர்களே இது வதந்தி எனக் கூறிவிட்டு ஒதுங்க முற்படுவதால், பாதிக்கப்பட்ட தரப்பு நியாயம் தேட காவல் நிலையங்களுக்குச் சென்ற போதில் மக்கள் கூட்டத்தைக் கலைந்து போகுமாறு கூறும் அதிகாரிகளின் அசண்டையீனம், விசாரணை செய்யப்படாமலேயே ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கிப் பிரயோகம் போன்றவை ஆங்காங்கே கைகலப்புகளை ஏற்படுத்த தீர்மானிக்கின்றது.
இச் சம்பவங்கள் அனைத்தும் வதந்தியென அரசாங்கத்தின் பேச்சாளர்களும், அரசியல்வாதிகளும் கூறுவதனைப் போன்று பெண்ணிய எழுத்தாளர் திருமதி இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் பதிவு செய்ய நினைப்பது மறுதலிக்கத்தக்கது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பெண்களே ஆகும். வதந்தி எனக் கூறுவோரின் வீட்டில் அல்லது உறவுகளுக்கு மர்ம மனிதனின் தாக்குதல் ஏற்படாத வரைக்கும் கிறிஸ் மனிதன் என்பது நகைப்புக்குரிய விடயமாகவே கருதப்படும்.
கிறிஸ் ஜக்கா எனும் மர்ம மனிதர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட செயற்பாட்டில் உருவாக்கி விடப்பட்டவர்கள் என பேரினவாத சமூகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களே கூறுகின்ற போதில் அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்க எழுத்தாளர் நினைப்பது வேதனையானது.
அரசாங்கம் உளத் தூய்மையுடன் செயற்பட்டாலொழிய இம் மர்ம மனிதர்களை அழிப்பதென்பது முடியாத காரியம் ஆகும், அப்பாவி மக்களை மனதளவில் நோகடித்து, நிம்மதி இழக்க வைத்து அரசியல் பிழைப்பு நடாத்த ஆளும் தரப்பு நினைத்தால் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
தொடர்புபட்டபட்ட பதிவுகள்:
1.அரசியலாக்கப்படும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சமுதாய நிலை
2.மர்ம மனிதர் பெண்ணொருவரை மலசலகூடத்துக்குள் வைத்து தாக்குதல்: அக்கரைப்பற்று கோளாவில் சம்பவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.