சனி, 11 டிசம்பர், 2010

ஓரணியாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க் கட்சிகள் அரங்கமும்!

காலம் காலமாக பிரிந்து அரசியற் பணி செய்த தமிழ் அரசியற் கட்சிகட்குள் இருந்து வந்த பேதங்கள் நீங்கி ஓரணியில் அனைவரும் இணைந்து தமிழர்களின் குரலாக ஒலிக்கும் தருணம் வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளை எனும் நிலையிலே கவனிக்கப்படலாகினர், பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களின் பார்வைக்கேற்பவே தமிழர்கள் வாழ வேண்டுமென நினைக்கலாகினர், இவர்களின் பார்வைக் கோளாறை தீர்த்து வைக்க வேண்டுமெனில் தமிழர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று தமிழர்களின் பிரச்சனைகளை உரத்துக் கூற வேண்டும், ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்ட நிலையில் சாத்வீக அரசியற் போராட்டமே நிரந்தர உரிமைமைப் பெற்றுத் தரும்.

எமது அரசியற் தீர்வை நோக்கிய பயணத்தில் காலடி வைத்திருக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அணியுடன் இணைந்து கொள்ளுமாறு கடந்த ஜூன் 24 ஆம் திகதி முதல் பல தடவை கோரிக்கை விடுத்திருந்தது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டத்துக்கேற்ப செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்து செயற்படுவதில் இருவேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததால் பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப முயற்சியிலேயே இழுபறி ஏற்பட்டது, இந்த நிலையில் தமிழர்கள் இணைந்து ஒரு குடையின் கீழே என்னிடம் வாருங்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார், மகிந்தவின் குரலை ஆமோதிப்பதாக அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா அவர்களும் இணைந்து செயற்படுமாறு இரு கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுத்தார்.

இதன் முதற் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புதிதாக உருவெடுத்த தமிழ்க் கட்சிகள் அரங்கமும் உத்தியோக பூர்வமாக 2010.12.11 ஆம் திகதியான இன்று பம்பலப்பிட்டியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை நடாத்தினர்.

இரு பிரதான அரசியல் அமைப்புக்களின் கட்சித் தலைவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சிவசக்தி ஆனந்தன், பா.அரியநேத்திரன், எம்.சுமந்திரன், பொன்.செல்வராசா, எஸ்.வினோநோதாரலிங்கம் மேல்மாகாண சபை உறுப்பினர் குமரகுருபரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, எம்.கே.சிவாஜிலிங்கம், த.சித்தார்த்தன், அ.இராசமாணிக்கம், மற்றும் செ.சந்திரஹாசன், ரி.சிறிதரன், ப.உதயராசா ஜீ.சுரேந்திரன், கோபாலகிருஷ்ணன், ஆர்.ராகவன், எஸ்.சதானந்தம், டி.மாணிக்கவாசகர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள் போன்றனவுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகுறித்து அடுத்தடுத்த கட்டங்களில் இணைந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டதுடன் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு இலகுவாக அதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஏதுவாக ஆறு பேர் கொண்ட உபகுழுவினை எதிர்வரும் 2010.12.13 ஆம் திகதி திங்கட்கிழமை அமைப்பதென்றும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டதானது, தமிழர்களுக்கு பிரகாசமான ஒளி கிடைக்கவுள்ளது என்பதை எதிர்வு கூறுகின்றது.

இணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் எனும் இரு துருவங்களும் எத்தகைய சவால்களையும் முறியடித்து தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ்வுக்கு வழிவகுப்பார்களென எதிர்பார்ப்போம்.

வெள்ளி, 19 நவம்பர், 2010

ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ

ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாம் தடவை பதிவியேற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி, ஒரே தேசியக்கொடி, இங்கு எல்லோரும் சம உரிமையோடு வாழவேண்டும் எனும் கோசத்தை மையப்படுத்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விடயமானது பாராட்டத்தக்கதே, இதுவரை காலமும் பதவி வகித்த ஜனாதிபதிகளுள் எவரேனும் இதுவரை கூறிக் கொள்ளாத சொற்பிரயோகமானது மகிந்த ராஜபக்ஷ வாயினால் வந்திருப்பது ஒரு திருப்புமுனையே!

இதனை வார்த்தை ஜாலத்தில் மாத்திரம் நிறுத்தி விடாமல், இந்த நாட்டில் தமிழர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என பிறர் மெச்சத்தக்க வகையில் எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவார் என எதிர்பார்ப்போம்.

இதனை தூர நோக்கோடு சிந்தித்து செயற்படும் பக்குவம் மகிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாகவே அறிய முடிகின்றது, எதிர்பார்ப்போம்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஈபிஆர்எல்எவ் நாபா அணியின் பாரிஸ் மாநாடு!

ஈழ விடுதலைப் போராட்டம் எனக் கூறிப் புறப்பட்டவர்கள், இத் தேச மக்களின் விடுதலைக்காக செய்தவை என்ன, இதற்கான விடையை மனம் திறந்து உரத்துக் கூற முடியுமா? ஈழ விடுதலை என நாமமிட்ட இயக்கங்கள் முதற்கொண்டு தமிழீழ விடுதலை என பெயரிட்ட இயக்கங்கள் வரை துப்பாக்கி ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்து எமது இனத்தை அழித்ததே வரலாறு!

ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞர்களை விடுதலைப் போராட்டம் எனும் பெயரில் அணி திரட்டி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றது தான் இந்த விடுதலை இயக்கங்கள் செய்த காரியமாகும்.

ஈழப் புரட்சி அமைப்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப் பெயரிட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் எமது மக்களின் வளர்ச்சிக்காக செய்த நல்ல காரியங்கள் எதுவுமே இல்லை.

இந்த விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்களுக்காவது குறைந்த பட்சம் எதாவது செய்து கொடுக்க இவர்களால் முடிந்ததா, இயக்க இலட்சியத்துக்காக உழைத்து மரணித்துப் போன போராளிகளின் குடும்பங்கள் நாளாந்த உணவுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை இன்றும் உள்ளது, இயக்கத் தலைமையோ தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டதுடன் வழங்களையும் சுருட்டிக் கொண்டதே வரலாறு, இதில் சற்று வித்தியாசமாக விடுதலைப் புலிகள் தாங்களும் அழிந்து தம்மைச் சார்ந்த சமூகத்தையும் அழித்துச் சென்றது.

பாரிஸில் மாநாடு நடத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்களுக்காக இது வரை செய்த நல்ல காரியம் எதுவும் இல்லை, இயக்கச் சொத்துக்களை பாகப் பிரிவினை செய்து கொண்ட சுரேஸ் முதல் வரதர் வரை தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டார்களே தவிர மக்களின் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் இருந்து இந்திய இராணுவம் பின்வாங்கிச் சென்ற போது அவர்களின் பின்னால் ஓடிய வரதராஜப்பெருமாள் வட இந்தியாவில் சொத்துக்களை வாங்கி மனைவி, பிள்ளைகளுடன் சுகபோகம் அனுபவித்தார், இவர் சார்ந்த இயக்கத்தின் இலட்சியத்துக்காகப் போராடிய போராளிகள் விடுதலைப் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டு தெருத் தெருவாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தகனாக வாழ்ந்த வரதருக்கு இன்று எதற்காக மீண்டும் இயக்கப் புனரமைப்பு.

சந்தற்பவாத தலைமைத்துவம் நடாத்தும் நாடகங்களுக்கு முகம் கொடுக்காமலும், இன்னும் இன்னும் எமது இனத்தை அழிவு பாதைக்குக் கொண்டு செல்ல வரதராஜப்பெருமாள் போன்றோர் எடுக்கும் முயற்சிக்கு விலை போகாமலும் புலம் பெயர்ந்த சமூகம் இருப்பதே எஞ்சியுள்ள தமிழினத்தைப் பாதுக்காக்கச் சிறந்த வழியாகும்.

வியாழன், 14 அக்டோபர், 2010

சிலியின் மெய் சிலிப்பு!

சிலி நாட்டின் நிலக் கீழ் கனிமச் சுரங்கத்தில் 69 நாட்களாக சிக்கித் தவித்த 33 பேரை இலாவகமாக துளை குழாய் உறை மூலம் வெளியே கொண்டு வந்து உலகுக்கு மீள் அவதாரம் கொடுத்தது சிலி அரசாங்கம்.

2010.08.10 ஆம் நாள் 700 மீட்டருக்கும் ஆளமான சுரங்கத்தினுள் கனிமத் தொழிலாளர்கள் 33 பேர் அடைபட்டுக் கொண்டிருந்த போது அவர்களை வெளியே கொண்டு வர அந் நாட்டு அதிபர் செபஸ்டின் பினேரா அரும்பாடு பட்டார், சிறு சிறு துளைகள் மூலம் 17 ஆம் நாள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களின் ஆரோக்கிய தகவல் கிடைத்ததும் வெளியே கொண்டு வர தொடர் முயற்சியில் இறங்கினார் அதிபர் செபஸ்டின்.

2010.10.13 ஆம் திகதி சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, துளை குழாய் உறை மூலம் முதலாவதாக சுரங்கத் தொழிலாளர் ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே கொண்டு வரப்பட, நேடியாகவே ஸ்தலத்துக்கு வந்து வெளியே கொண்டு வரப்பட்ட தொழிலாளரைக் கட்டியணைத்து ஆரத்தழுவி தனது சந்தோசத்தை வெளிக்காட்டினார் அதிபர். சின்னஞ் சிறிய நாடான சிலி தனது நாட்டு குடி மக்களை கண்ணியமாக கவனித்து வருவது சிறப்பு மிக்கதாகும்.

இலங்கையைப் போன்ற நாட்டில் இப்படியான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின் விடயம் வெளியே கசிவதற்கு முன்பாகவே உள்ளே சிக்கிய அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள், அல்லது அழிக்கப்பட்டிருப்பார்கள்.

2010.10.14 ஆம் திகதி சிலி நாட்டு நேரம் 20.15 மணி வரை 29 பேர் எந்தவித இடையூறுமின்றி வெளியே கொண்டு வரப்பட்டு உடல் ஆரோக்கியத்துக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். முப்பதாம் தொழிலாளி இரவு மணி 08.40 க்கு வெளியே கொண்டு வரப்பட்டார், வெளியே கொண்டு வரப்படும் நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு பல்லாயிரம் மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி வருவதுடன், அதிபர் செபஸ்டிருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சிலி நாட்டு அதிபர் செபஸ்டின் தனது குடிமக்கள் மீது வைத்திருக்கும் அன்பைப் போன்று இலங்கையிலும் ஏற்படுமா? தமிழ் மக்கள் மீது ஜனாதிபதி கருணை காட்டுவாரா!

2010.10.14 சர்வதேச நேரம் அதிகாலை 02.05 மணிக்கு உள்ளூர் நேரம் இரவு மணி 21.05 க்கு 31 வது தொழிலாளி வெளியே கொண்டு வரப்பட்டார். உள்ளூர் நேரம் 21.56 மணிக்கு இறுதியாக இருந்த 33 வது சுரங்கத் தொழிலாளியான லுஸ் உர்ஷாவும் வெளிக் கொணரப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.



















சனி, 2 அக்டோபர், 2010

இலங்கை அரச இலக்கிய விருதுகள்.

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட 1332 நூல்களில் மும்மொழிகளையும் சேர்ந்த 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றன.

தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய "குறும்புக்கார ஆமையார்", சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய "என்றும் உங்கள்", சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய "கூத்துக்கள் ஐந்து" போன்ற நூல்கள் பெற்றுக் கொண்டன.

மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய "தீச்சுடர்", திக்குவல்லை கமால் எழுதிய "தொடரும் உறவுகள்", கெக்கிராவ சுலைஹா எழுதிய "பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்", ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்”, கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ. எழுதிய "கவிதையில் துடிக்கும் காலம்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய "அற்புதமான வானம்", சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய "மனைவி மகாத்மியம்", சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய "துயரம் சுமப்பவர்கள்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.

விருதுக்குத் தகுதியான நூல்களைப் படைத்த ஆசான்களுக்கு களத்துமேட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

புதன், 29 செப்டம்பர், 2010

கிழக்கில் முஸ்லிம் ஆயுததாரிகளின் ஆயுதக் களைவு?

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதி காக்கும் படையும் அதனோடு இணைந்து செயற்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈ.என்.டி.எல்.எவ் போன்ற அமைப்புக்களும், விடுதலைப் புலிகள் பிரேமதாஸ உடன்படிக்கையைத் தொடர்ந்து பின்வாங்கினர்.

பின்வாங்கிய மேற்படி இயக்கங்கள் தங்களின் கைவசமிருந்த ஆயுதங்களை குறைந்த விலையில் முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பி ஓடினர், இந்த ஆயுதங்களைக் கையில் எடுத்த முஸ்லிம்களின் ஆயுதப் பாவனையாளர்கள் கிழக்கில் பிட்டும் தேங்காய்ப்பூவுமென வாழ்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது கொடுஞ் செயல்கள் செய்ய முனைந்தனர்.

அதன் விளைவே 1990 ஆம் ஆண்டு கால நடுப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு விடுதலைப் புலிகள் உடைவை அடுத்து வீச்சம் கொண்ட முஸ்லிம் ஆயுததாரிகள் ஸ்ரீலங்கா அரச படைகளின் துணையுடன் அருகிலுள்ள தமிழர்களின் கிராமங்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு தமிழர்களை அழித்ததுடன், சொத்துக்களையும் அபகரித்தனர், இதில் எஞ்சிய தமிழர்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த சம்பவம் கிழக்கில் பரவலாக நடைபெற்றது, இதனை உலகம் அறிந்தும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது எனும் பெறுபேற்றைப் பெற்றுக் கொடுக்க இன்று வரை எதுவித விசாரணைகளும் இடம்பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட இயக்கங்களின் ஆயுத விற்பனையைப் போல், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த கருணா அணி, பிள்ளையான அணி போன்றோரும் ஆயுத விற்பனையை முஸ்லிம்களுக்கு செய்துள்ளார்களென ஊடகச் செய்திகள் அண்மையில் தெரிவித்திருந்தன.

கிழக்கில் காத்தான்குடி முஸ்லிம் ஆயுததாரிகளால் அருகிலுள்ள ஆரையம்பதி தமிழ் கிராமம், மருதமுனை முஸ்லிம் ஆயுததாரிகளால் நீலாவணை தமிழ் கிராமம், கல்முனை முஸ்லிம் ஆயுததாரிகளினால் பாண்டிருப்பு தமிழ்க் கிராமம், நற்பிட்டிமுனை முஸ்லிம் ஆயுததாரிகளினால் சேனைக்குடியிருப்பு தமிழ் கிராமம், சவளக்கடை முஸ்லிம் ஆயுததாரிகளினால் சொறிக்கல்முனை தமிழ்க்கிராமம், சாய்ந்தமருது முஸ்லிம் ஆயுததாரிகளினால் காரைதீவு தமிழ் கிராமம், சம்மாந்துறை முஸ்லிம் ஆயுததாரிகளினால் வீரமுனை தமிழ் கிராமம், ஒலுவில் முஸ்லிம் ஆயுததாரிகளினால் அட்டப்பள்ளம், திராய்க்கேணி தமிழ்க் கிராமம், அக்கரைப்பற்று முஸ்லிம் ஆயுததாரிகளினால் ஆலயடிவேம்பு தமிழ்க் கிராமம், இறக்காமம் முஸ்லிம் ஆயுததாரிகளினால் அம்பாறை தமிழ்க் கிராமம், பொத்துவில் முஸ்லிம் ஆயுததாரிகளினால் இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில் தமிழ்மக்கள் போன்று இன்னும் பல முஸ்லிம் ஆயுததாரிகளினால் பல தமிழ்க் கிராமங்கள் தொடர்ச்சியாகப் பாதிப்படைந்து வந்திருக்கிறார்கள், முஸ்லிம் ஆயுததாரிகளின் சட்ட விரோத ஆயுதப் பாவைனையால் முஸ்லிம் சமூகத்தினுள்ளேயும் சொந்தப் பகையின் காரணமான ஆட்கொலைகளும், கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன.

இவ் அத்துமீறிய சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 2010.09.30 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாயல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2010.09.24 ஆம் திகதி கல்முனை பிரதேச பள்ளிவாயல் மௌலவிகளுடன் பேசிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், 30ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோர் குற்றம் சுமத்தப்பட்டு 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறையின் கல்முனைப் பகுதியினர் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையினைப் போன்று கிழக்கின் ஏனைய பாகங்களிலும் இருக்கும் முஸ்லிம் ஆயுததாரிகளின் ஆயுதங்களும் களையப்பட வேண்டும், இதனால் முஸ்லிம், தமிழ் மக்கள் மீண்டும் ஐக்கியமாக வாழ வழி வகுக்கலாம்.

இவ் ஆயுததாரிகளினால் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, முஸ்லிம்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர், இச் சம்பவங்கள் பீதியின் நிமித்தம் வெளிவருவதில்லை, ஆகவே காவற்துறை வாயளவில் மாத்திரம் ஆயுதக் களைவு பற்றி கருத்துரைப்பதுடன், நின்று விடாமல், தொடர் நடவடிக்கையை இறுக்கமாக்குவதனால் ஆயுதங்களை நிச்சயம் களையலாம்.

சனி, 25 செப்டம்பர், 2010

அடைமழையும், மீள்குடியேற்ற மக்களும்!

இலங்கையின் சகல பாகங்களிலும் மழை பெய்கின்றது, இந்த மழையினால் வன்னிப் பிரதேசங்களில் மீள்குடியேறிய குடிசை, கூடாரங்களில் வாழும் மக்கள் சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். மீளக்குடியேறிய இம் மக்களுக்கு அரசாங்கம் இன்னும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கவில்லை.

தொடராகப் பெய்து வரும் மழையினால் குடிசை, கூடாரங்கள் சேதமடைந்துள்ளதுடன் மழை நீரும் உட்புகுந்துள்ளதால் 33 வருடங்களின் பின்னர் வவுனியாவின் மீள்குடியேறியுள்ள வீமன்கல் கிராமம் அடங்கலாக குடாகச்சகொடி, பாவற்குளம், ரன்கெட்கம போன்ற பல மீள்குடியேற்றக் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று வன்னியில் மீள்குடியேற்றம் எனும் போர்வையில் அனுப்பி வைக்கப்பட்ட மக்களும் பல இன்னல்களைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றார்கள், ஆகவே அடைமழை தொடங்குவதற்கு முன்னர் இம் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து முடிக்க வேண்டும்.

தென் பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் அரசாங்கம், மழைக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்களின் இன்றைய அவல நிலையை கவனத்தில் எடுத்து உடனடியாக நிவாரணத்துடன் கூடிய உதவிகளைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

அழிவுக்கு வழி வகுத்த எழிலனும், தூக்கிப் பிடிக்கும் ஊடகங்களும்!

உலகிலே கெரில்லா தாக்குதலுக்கு தனித்துவம் வாய்ந்ததென கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பூண்டோடு சரிய காரணமாக இருந்தவருள் முதன்மையானவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் என்றால் அதில் மிகையில்லை.

சிங்கள மக்களின் விவசாயப் பாவனைக்குத் தேவையான நீரை செல்லவிடாமல் மாவிலாறு அணைக்கட்டை பூட்டி நீரைத் தடுத்து நிறுத்தி சிங்களப் பெரும்பான்மை மக்களிடம், அத்தியாவசியத் தேவையான தண்ணீரைத் தடுத்து நிறுத்திய தமிழர்கள் மனிதாபிமானமற்றவர்கள் எனும் அவப் பெயரை அண்மைக் காலத்தில் ஏற்படுத்தியவர் எழிலன்.

இவரின் முறைகேடான நடவடிக்கையைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூதூர், சம்பூர், புலிபாய்ந்தகல், கஞ்சிகுடியாறு, குடும்பிமலை.... போன்றன தொடராக சிங்களப் படையினர் வசமாகி இறுதியாக மன்னாரின் சகல பகுதிகளையும் இழந்து பூநகரி அடங்கலாக விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியான வன்னியும் பறிபோனது.

எதிர்காலத்தைச் சரியாக எடை போடாது குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டதாலே மாவிலாறில் தொடங்கிய அழிவு முள்ளிவாய்க்காலில் சென்று முடிந்தது, இந்த அழிவு யுத்தத்தில் சொல்லொணா துன்பங்களை, அவலங்களை எமது இனம் அனுபவித்து விட்டது.

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சரணடைந்த எழிலனை மறைமுகமான இடத்தில் படையினர் தடுத்து வைத்துள்ளதாக எழிலனின் மனைவி ஆனந்தி சசிகரன் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த அழிவு யுத்தம் பல அறிவுஜீவிகளை கொன்றொழித்து விட்டது, தமிழர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு நகர்த்தக் கூடிய எத்தனையோ புத்திமான்கள் இல்லாமல் போய் விட்டார்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளும் அழிவு யுத்தத்தை விரும்பாத பல உறுப்பினர்கள் மௌனியாக இருந்துள்ளார்கள், இவ்வாறு மக்களின் நலன் கருதி வாழ்ந்த மக்கள் பலர் இருக்க அழிவுக்காக செயற்பட்ட எழிலனை இப்போது ஊடகங்கள் தூக்கிப் பிடிப்பதன் மர்மம் என்ன!

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஐந்தாம் தரம் புலமைப் பரிசில் பரீட்சையும், மாணவக் குழந்தைகளும்!

இலங்கை கல்வி முறையில் ஐந்தாம் தர மாணாக்கர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முறையும் ஒன்றாகும், இத் திட்டம் பன்னெடுங் காலமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாடளாவிய ரீதியில் பரீட்சை நடாத்தப்பட்டு அப் பரீட்சையின் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் இலங்கையின் முதற் தர பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதியும், அத்துடன் ஏழை மாணவர்களுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புப் பணமும் இலங்கை அரசாங்க கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது.

ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர்கள் தனது குழந்தையும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து விட வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்டு செயற்படுவதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.

2010.08.22 ஆம் திகதி நாடளாவ 3500 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்காக இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த 5300 மாணவர்கள் அடங்கலாக 3,14,000 மாணவர்கள் தோற்றினர்.

தமிழ் மொழி மூலமாகத் தோற்றிய மாணவர்களுள் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா 193 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் திகழ்கின்றார், கண்டி கல்வி வலயம், கலஹா இராமகிருஸ்ண மத்திய கல்லூரி மாணவன் என்.எஸ்.என்.ஸபீர் 192 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தையும், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஜெனிஸ் ஜீட் விதுசன் பிஃகுராடோ 190 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவக் குழந்தைகளை "களத்துமேடு" வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றது.

புதன், 22 செப்டம்பர், 2010

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

உலகளாவிய ரீதியில் வீதி விபத்துக்கள் குறைந்து கொண்டு வருகின்றன, ஆனால் ஆசிய நாட்டில் வீதி விபத்துக்கள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, அதிலும் இலங்கையில் இப்போது வீதி விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.

இவ் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்களை எடுத்துக் கூறலாம், அவற்றில் பிரதானமானது வீதிப் பிரயாண ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஏற்று நடக்காமையாகும்.

சாரதிப் பயிற்சியை முறைப்படி பெற்றுக் கொள்ளாமல் ஓட்டுநர் சான்றிதழ் பெற்றவர்களினால் எட்டப்படும் வீதி விபத்துக்களே பலவென ஆய்வுகள் கூறுகின்றன, அதிலும் இலஞ்சம் கொடுத்து ஓட்டுநர் சான்றிதழ் பெற்று வாகனம் ஓட்டுபவர்களினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டுதலினால் ஏற்படும் விளைவுகளை ஓட்டுநர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுவதும் வீதி விபத்துக்குக் காரணமாகும். இலங்கையில் வாகனம் ஓடக்கூடிய அதி கூடிய வேகம் என்னவெனும் சைகைப் பலகை அனேகமான வீதிகளில் காணப்படாமையும் ஒரு குறையாகும்.

வீதிச் சட்ட திட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம்.

இவை அனைத்துக்கும் மேலாக பாதசாரிகள் தெருவை அவதானித்தும், வீதிக் கட்டுப்பாட்டுச் சட்ட திட்டங்களை மதித்து நடந்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிக்கலாம்.

பின் இணைப்பு:

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளினால் 15 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையில் அதிகரித்த வாகன எண்ணிக்கையும் வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகளுமே விபத்துகளுக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரதிகளில் பலர் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதே விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணமெனக் கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நகர அபிவிருத்தி அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அளித்த வாகன விபத்துகள் தொடர்பான விளக்கத்திலும் இதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 33,339 வாகன விபத்துகளில் 2,065 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 32,458 வாகன விபத்துகளில் 2,176 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 30,420 வாகன விபத்துகளில் 2,157 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 20090930 ஆம் திகதி வரை இடம்பெற்ற 23,903 விபத்துகளில் 1,661 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துகளில் 1,205 விபத்துகள் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2007 இல் 1,461 விபத்துகளும் 2008 இல் 1,522 விபத்துகளும் 20090930 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,047 விபத்துகளும் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற 1,20,120 வாகன விபத்துகளில் 8,059 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சாரதிகளின் மதுபாவனையால் 5,235 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 150 வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ்விபத்துகளினால் ஒரு நாளைக்கு 6 வீதி விபத்து மரணங்கள் நிகழ்வதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். 2 கோடியே 11 இலட்சம் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் இத் தொகை மிக அதிகமென்றே கூற வேண்டும். இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான திட்டமிடல் இன்மைபோன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்குச் சாரதி ஆசனத்திற்குப் பின்னால் நிற்கக் கூடத் தகுதியில்லையெனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒரு தடவை பகிரங்கமாகவே கூறிச் சாரதிகளின் லட்சணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சாரதிகள் பலர் மதுபோதையிலேயே வாகனங்களைச் செலுத்தி வருவது அமைச்சர் குணவர்த்தனவின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மது அருந்திய பின் வாகனம் செலுத்திய சாரதிகளினால் 2006 ஆம் ஆண்டு 99 பேர் உயிரிழந்ததுடன் 183 பேர் ஊனமுற்றனர். 2007 ஆம் ஆண்டு 110 பேர் உயிரிழந்ததுடன் 299 பேர் ஊனமுற்றனர். 2008 ஆம் ஆண்டு 153 பேர் உயிரிழந்ததுடன் 308 பேர் ஊனமுற்றனர். 2009 ஆம் ஆண்டு (20090930 வரை) 79 பேர் உயிரிழந்ததுடன் 368 பேர் ஊனமுற்றனர். அரசாங்கம் "மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 (மத்தட்டதித்த) என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மது போதையால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 திட்டத்தினால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகின்ற நிலையிலேயே இந்தளவு தொகையான மக்கள் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளினால் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. எனவே அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் சிறைத்தண்டனையும் பெருமளவான தண்டப்பணமும் விதிக்கப்படவேண்டும். இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாகி விடும்.

நன்றி. தினக்குரல்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

விநாயகர் கரைப்புக்கான தத்துவ விளக்கம் என்ன, தெரிந்தவர்கள் கூறுங்கள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமாகச் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்து வருகின்றார்கள் இந்து சமயத்தவர்கள். இந்தியாவில் இவ்வளவு காலமும் இருந்து வந்த பிள்ளையாரைக் கரைக்கும் பாரம்பரியம் இப்போது ஐரோப்பாவுக்கும் தாவி விட்டது, இந்த வருடம் முதன் முதலாக பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தினால் 2010.09.19 ஆம் திகதியன்று பெரிய விநாயகர் சிலை செய்யப்பட்டு நீர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு நீரில் கரைக்கப்பட்டது, இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

விநாயகர் சிலையைக் கடலில் கரைப்பதற்குரிய காரணத்தை இந்து சமயம் எடுத்துக் கூறுகின்றது, ஆனால் வோல்த்தம்ஸ்ரோ விநாயகர் சிலை கரைக்கக் கொண்டு செல்லப்பட்ட போது, அச் சிலையைக் கரைப்பதற்கான முழுப் பொறுப்பையும் கொண்ட அர்ச்சகர், களிமண்ணும், நீரும் கலந்து செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலையைக் கரைப்பதற்கான தத்துவமானது நீரும், மண்ணும் இந்த உலகத்தில் அழிக்க முடியாதது என்பதால் விநாயகர் சிலையைக் கரைக்கின்றோம் என கருத்துரைத்தார்.

விநாயகர் கரைப்புக்கான தத்துவ விளக்கத்தினை மக்களுடன் சரியாகப் பகிர்ந்து கொள்ளத் தெரியாமல் அர்ச்சகர் இருந்திருக்கலாம், அவரின் கருத்தில் அனேகமானோருக்கு உடன்பாடில்லை என்பதால் இது பற்றிய விடயங்கள் தெரிந்தவர்கள் விநாயகர் சிலை கரைப்புக்கான காரணத்தினை அறியத் தாருங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

புதிய தகவல் தொழில் நுட்ப செய்திகளுடன் வின்மணி வலைப்பூ!

வலைப்பூக்கள் பெருக்கெடுத்து வரும் இக் காலகட்டத்தில் பல வலைப்பதிவுகள் அரட்டையுடன் காலத்தைக் கழிக்கின்றன, சில ஆக்கபூர்வமான தகவல்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன, அவற்றினைப் பட்டியலிடுவது கடினமாகையால் களத்துமேட்டில் இருந்து உலாவிய போது "வின்மணி" வலைப்பூவை அறிய நேர்ந்தது.

நீண்ட கால வலைப்பயண அனுபவத்தினைக் கொண்ட வலைப்பூவாக வின்மணி திகழ்வது பாராட்டத்தக்கதே ஆகும்.

தினம் தினம் புதிய தகவல் தொழில் நுட்ப செய்திகள், வின்மணி சிந்தனை, பொது அறிவுக் கேள்வி பதில்கள், பிரபலமான மனிதர்கள் இப்பேற்பட்ட பல தகவல்களுடன் சேவை புரிந்து வரும் வின்மணியைக் களத்துமேடு வாழ்த்துகின்றது.

வின்மணி வலைப்பூ சுட்டி: http://winmani.wordpress.com

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

மகிந்தவும் கரடியனாறு வெடிமருந்து கொள்கலன் வெடிப்பும்!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கொள்கலன்கள் மூன்று வெடித்ததனால் 26 பேர் மரணித்தும் 50 பேருக்கும் மேற்பட்டோர் காயங்களுக்கும் உள்ளாகினர், அவ் அனர்த்தத்தை மட்டக்களப்பின் பல பாகங்களும் இன்று நினைவு கூர்ந்தன.

பெருந் தெருக்களுக்கான வேலைத் தளத்தினைக் கொண்ட சீன நிறுவனத்தினருக்குச் சொந்தமான வெடி மருந்தை சீன நாட்டவர்கள் இருவர் பரிமாற்றம் செய்த போதே இக் கோரம் நிகழ்ந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

வீரியம் மிக்க வெடிமருந்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஸ்ரீலங்கா பாதுகாப்புத் தரப்பு நன்கு அறிந்துள்ளது, ஆனால் கரடியனாற்றில் வெடிமருந்து அசமந்தமாக வைக்கப்பட்டிருந்த விடயமானது பல வினாக்களுடன் தொக்கி நிற்கின்றன.

பல அமைப்புக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும் போது, அந் நிலமையைத் திசை திருப்ப வேறு நிகழ்வுகளை நடாத்தி பயணிக்கும் கோட்டில் இருந்து வேறு திசைக்கு வழி மாற்றும் சம்பவங்கள் உலக நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளன, அதற்கு புலனாய்வுத் துறை பெரிதும் உதவி செய்து வந்துள்ளது.

இதற்கு விடுதலைப் புலிகளோ, இலங்கை அரசோ விதி விலக்கல்ல, எல்லோரும் சந்தற்பத்துக்கு ஏற்ப திசை திருப்பும் விடயங்களை நன்கே செய்து வந்துள்ளனர், இதன் ஒரு கட்டமாகவே கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிமருந்து கொள்கலன் வெடிப்புச் சம்பவத்தையும் கூறத் தோன்றுகின்றது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழித்தொழிக்க எடுத்த முயற்சிக்காக, விசாரணையைத் துரிதப்படுத்த உலகளவில் பலத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, இந் நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமர்வில் உரையாற்ற இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரும், இது பற்றிய ஏனைய வினாக்களுக்கும் பதில் கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந் நிலையைத் திசை திருப்பவே கரடியனாறு வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றதாக எண்ணத் தோன்றுகின்றது.

சனி, 18 செப்டம்பர், 2010

கேணலாக இருந்து கோமாளியாகிய கருணா!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டளைத் தளபதி, கேணல் போன்ற தரத்தில் இருந்து பல சாகசங்களைப் புரிந்ததுடன் ஏதுமறியாத அப்பாவிப் பிள்ளைகளை கட்டாயத்தின் பேரில் போர்க்களத்துக்கு அனுப்பி மாவீரராக்கி சொகுசு வாழ்வைத் தேடியவர் இப்போதைய சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவரும், பிரதியமைச்சருமாகவிருக்கும் கருணா.

ஆரம்ப காலத்தில் இருந்தே பதவியாசையும் இவருடன் கூடவே ஒட்டியே இருந்ததால், அதற்கான சந்தர்ப்பங்களை தேடியே வடிவமைத்து வந்தவர். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த கண்ணனைக் கொலை செய்து விட்டு இம் மாவட்டங்களுக்கான பொறுப்பை தன் வசம் அமைத்துக் கொண்டவர், இவரைப் பற்றிய பல தகவல்களை காலச்சுவடு எடுத்துக் கூறுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்து தனது பிரதேசவாதத்தின் மூலம் தனிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைமைப் பொறுப்பை தனதாக்கிக் கொண்டார், ஆனால் தமிழீழம் எனும் சொல்லை ஜீரணிக்க முடியாத பெரும்பான்மைச் சிங்களவருடன் கூட்டுறவாடிய கருணாவால் அந்தப் பெயரில் இயக்கத்தைக் கொண்டு நடத்த முடியாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளென மாற்றியமைத்தார், அந்தவேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தமைக்காக அரசினால் கிடைக்கப்பட்ட அளவுக்கதிகமான நிதியை முறைகேடாக உபயோகித்த காரணத்தினால் அமைப்பினுள் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி, அங்கு குடிவரவு அதிகாரிகளினால் கைதாகி குற்றவாளியென சிறைத் தண்டனையை அனுபவித்தார்.

தண்டனை முடிவுற்றும் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கி வாழ முடியாத காரணத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டார், வந்ததும் அப்போதைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவராக பிள்ளையான் தலைமையேற்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்தார்.

வாகனங்களுக்கான உதிரிப்பாகங்களைச் சேகரிக்கும் கருணாவின் உதவியாளனாக இருந்த பிள்ளையானின் முன்னேற்றம் கண்டு பொறாமை கொண்டார், பதவி ஆசை மீண்டும் வெளிவர ஆரம்பித்தது, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மகிந்த ராஜபக்ஸ கருணாவை வைத்து சதுரங்க ஆட்டம் ஆட முற்பட்டார், அதன் விளைவே கருணாவுக்கு பிரதியமைச்சர் பதவியும், கட்சியின் இணைத் தலைமையும்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் கேணல் எனும் கௌரவத்துடன் மதிக்கப்பட்ட கருணா, பதவியாசைக்கு இரையாகியதால் இப்போது கோமாளி வேடமேற்று பல இடங்களில் இடறி விழுந்து வருகிறார்.

சிங்கள மக்களிடம் பல்துறை வேந்தனாக காட்சி தர முற்படும் கருணா, குறைந்த பட்சம் தனது கிரான் கிராமத்து மக்கள் நாளாந்தம் படும் துன்ப துயரங்களையாவது கவனத்தில் எடுக்கத் தவறி வருகின்றார். குவளையைக் கையிலேந்தி நடிகர் போலவும், கிற்றார் இசைப்பது போலவும், பாடகர் போலவும், சில இடங்களின் நாயகியுடன் இணைந்து நாயகனாகவும் பெரும்பான்மை இனத்துக்கு காட்ட முற்படுகின்றார், இவை அனைத்தும் கருணாவைக் கோமாளியாகவே காட்ட முனைகின்றது என்பதை அவர் சிந்திக்க தவறுகின்றார் என்பதுவே உண்மை

சிங்கள மக்களுடன் கருணா சங்கமமாகி இருப்பது இன ஒற்றுமைக்கான முயற்சி, ஆனால் தன் இனத்தின் நிலை மறந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போன்று கேணலாக இருந்து கோமாளியாக மாறியிருப்பது மிகவும் வேதனையானது.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பீதிக்குள்ளாக்கும் வெள்ளை வான் ஆட்கடத்தல்!

வெள்ளை வான் ஆட் கடத்தல் எனும் பீதி இலங்கை மக்களைப் பெரிதும் பாதிப்புற வைத்துள்ளது, 1990 ஆம் ஆண்டு காலத்தில் "வெள்ளை வான்" எனும் வார்த்தையே அதிகம் பேசப்பட்டது, இதற்கு முக்கிய காரணம் ஆயுதம் மக்களுடன் பேச முன் வந்ததேயாகும், இதனைப் பிரசவித்தவர்கள் இலங்கை ஆயுதப் போராட்டக்காரர்கள் தான்.

புளொட் மோகன் காலத்தில் உக்கிரமடைந்திருந்த வெள்ளை வான் கடத்தல் படிப்படியாகக் குறைந்து இல்லையென்ற நிலை ஏற்பட்ட போதும், இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய மாதிரி இந்தப் பீதி மக்களை மீண்டு ஆட்கொள்கின்றது.

2010.08.23 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவருமான பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டார். இந்த வரிசையில் 2010.09.15 ஆம் திகதி மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த முனுசாமி நரேந்திரன் கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையில் சிவில் நிர்வாகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இக் காலத்தில், இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை இன்னும் காவற்துறை கண்டு பிடிக்காமல் இருப்பது கவலையை ஏற்படுத்துகின்றது.

தெருவுக்குத் தெரு இராணுவ காவலரண்களும், சோதனைச் சாவடிகளும் மலிந்துள்ள இந்தப் பூமியில் கடத்தலை நடத்தி விட்டு கடத்தற்காரர்கள் தப்பிச் செல்வது கடினமான விடயம், படையினரின் ஒத்துழைப்பின்றி இந்த வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது அரிதான விடயமாகும்.

ஆகவே அரசாங்கம் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க முழு முயற்சியை மேற்கொள்வதுடன், இப்படியான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாமல் மக்களைப் பாதுக்காக்க வேண்டும்.


கடத்தப்பட்டவர்களை விடுவிக்க கடத்தக்காரர்களிடமிருந்து எந்தவித சமிக்கையும் கிடைக்காததால் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பற்றி அரசியல்வாதிகள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் மௌனித்து வருவதன் மர்மம் தான் என்ன.

வியாழன், 16 செப்டம்பர், 2010

வீதிகளின் அநாதரவான கைக்குழந்தைகள்!

இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் அடிக்கடி குழந்தைகள் அநாதரவாக விடப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக ஊடகச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றன, பிறந்து சில நாட்களேயான மகவுகள் யாழ்ப்பாணம் செம்பியன்பற்று, மட்டக்களப்பு இருதயபுரம், புத்தளம் மற்றும் பதுளைத் தமிழ்ப் பகுதிகளில் இக் குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்மார் எவருக்கும் தெரியாமல் இக் கைக்குழந்தைகளை வீதியில் விட்டுச் செய்வதற்கான காரணமென்னவென தெரியாமல் உள்ளது, இருப்பினும் போர்காலச் சூழலினால் ஏற்பட்ட அகதி வாழ்வு மக்களை நெருக்கமாக இணைந்து வாழ வைத்தது, இதனால் பருவ வயதையடைந்தோரில் சிலர் காதல் முதல் காமம் வரைக்கும் சென்று திரும்புகின்றனர்.

இதில் சிலர் திருமணம் எனும் பந்தத்துக்குள் இணைந்து கொள்கின்றனர், சிலர் உடலுறவுடன் பிரிந்து கொள்கின்றனர், இதில் இரண்டாம் தரப்பினரின் செயற்பாடுகளில் ஒரு வகையினர் கருக்கலைப்பு செய்து பாவசங்கீத்தனம் செய்து கொள்கின்றனர், மற்றைய தரப்பு எதுவும் செய்யத் தெரியாமல் பிரசவ நாட்களை நெருங்கி குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்.

பிரசவித்த குழந்தையை உலகுக்குக் காட்டுவதால் ஏற்படப்போகும் அவமானம், மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை கவனத்தில் எடுத்தே பெற்றெடுத்து சில நாட்களேயான மகவுகளை தெருக்களில் விட்டுச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளது என எண்ணவும் தோன்றுகின்றது.

புதன், 15 செப்டம்பர், 2010

அடக்கப்பட்ட இனம் ஒடுக்கப்பட்டால்...!

இரத்தினபுரி பகுதியின் நிவித்திகல பொலிஸ் பிரிவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக தமிழர்கள் இடம் பெயர்ந்ததாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

குக்குலகல பிரிவைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரின் சடலம் கரவிட்ட திமியாவ பகுதியில் மீட்கப்பட்டதையடுத்து, தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் ஏற்பட்ட கைகலப்பின் உச்சக் கட்டமே இரு வீடுகள் தீக்கிரையானதும், இடப்பெயர்வும் ஏற்படக்காரணமாகும்.

கடந்த காலங்களில் இப்படியான துரதிட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவை விஸ்வரூபம் எடுக்காமல் முளையிலே கிள்ளப்பட்டு அணைக்கப்பட்டன, அதேபோன்றே இச்சம்பவமும் தடுத்து நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அந்த குற்றவாளியை அரச நீதி நிர்வாகம் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆயுதப் போராட்டம் மௌனித்து விட்டது என்பதால் எதுவும் செய்யலாம் என பெரும்பான்மையினம் நினைக்குமாக இருந்தால் அது அவர்களின் அறியாமையே ஆகும், அடக்கப்படும் இனம் தொடர்ந்து ஒடுக்கப்படும் போது வீறு கொண்டெழும் என்பது கடந்த கால வரலாறு, இதனை எமது வரலாற்றுப் பாடமாக நினைத்து ஒற்றுமையாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாது இரு சமூகமும் பார்த்துக் கொள்ள வேண்டும், அரச எந்திரம் சகல இன மக்களும் இலங்கையில் ஒன்றாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒற்றுமையாக இணைந்து வாழக் கூடிய புறச் சூழலை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வைத்தியசாலை அசுத்தத்தின் பிறப்பிடமாகக் கூடாது!

உலகத்தில் தொற்று நோய்கள் விருத்தியடைய சுகாதாரமின்மையே பிரதான காரணமாகும், இதனை நிவர்த்தி செய்ய உலக சுகாதார நிறுவனங்கள் அரும்பாடுபட்டு வருகின்றன.

உலக நிறுவனங்கள் எவ்வளவு பணங்களைக் கொட்டியும் தொற்று நோய்களுக்கான வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலை வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை, ஆனால் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இது சம்பந்தமான விழிப்புணர்வு இன்மையே இக் குறைபாட்டுக்கு காரணமாகும்.

சுத்தத்தினைப் பேண வேண்டிய வைத்தியசாலைகளே அசுத்தத்தின் பிறப்பிடமாக மாறி வருவது கவலைக்குரியது, இதனை வைத்தியசாலை நிர்வாகம் கவனம் எடுக்காமை பாரிய குறைபாடாக உணர முடிகின்றது. வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளின் படுக்கை, பாத்திரம், கழிப்பறை, குளிப்பறை போன்றவை சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டியவை, இவை இலங்கை வைத்தியசாலைகளில் எந்த நிலையில் உள்ளன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் மிகவும் அவசியம்.

நேற்று யாழ்ப்பாணத்தின் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நோயாளர் விடுதிகள், வெளிநோயாளர் பிரிவு ஏனைய மருத்துவ பிரிவுகள் கழிப்பறைகள் உட்பட அனைத்து பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டதுடன் சுத்தத்துக்கான அவசியத்தைத் தெளிவு படுத்தியது வரவேற்கத்தக்கது ஆகும்.

சுகாதார தொண்டர்களை அரச பணியாளர்களாக இணைத்துக் கொண்டால் மாத்திரம் போதாது, அவர்கள் வைத்தியசாலையைச் சுத்தமாக வைத்திருக்கின்றார்களா என்பதை கழிப்பறை முதற்கொண்டு சகல இடங்களிலும் அவதானித்தல் வேண்டும். இதற்கும் மேலாக பயனாளிகளும் சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவ வேண்டும்.

திங்கள், 13 செப்டம்பர், 2010

புலம்பெயர் தொலைக்காட்சி தொகுப்பாளினியின் கவனத்துக்கு!

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் தனித்துவ அடையாளத்தை நிறுத்திக் கொள்வதற்கென தமிழ் தொலைக்காட்சிகள், வானொலிகளை அமைத்து செயற்படுத்தி வருகின்றனர்.

கட்டண மற்றும் இலவச சேவையென தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்கின்றன, இத் தொலைக்காட்சிகளில் சில கட்டண அட்டைகளின் மூலம் வாடிக்கையாளர்களை கைவசம் வைத்திருக்கின்றன, சில நூறு சத விகித இலவச சேவையாகவும் செயற்படுகின்றன, இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தொலைக்காட்சி இரண்டும் கெட்டான் நிலையில் இலவசம் எனக் கூறிக் கொண்டு பணம் தாருங்கள் எனும் யாசிப்பு மூலம் தொலைக்காட்சி நடாத்துகின்றார்கள், ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக விளம்பரக் கட்டணங்களின் மூலம் பெருமளவு யூரோக்களைப் திரட்டி ஒளிபரப்பு வியாபாரம் செய்து வருகின்றன இத் தொலைக்காட்சிகள்.

இதில் இலவசமெனக் கூறிக் கொள்ளும் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவதானமில்லாமல் இருப்பதனால் செய்தி வேளைகளில் பல குறைபாடுகள் தினமும் முகம் காட்டியே செல்கின்றன.

காட்டப்படும் படத்துக்குச் சம்பந்தமில்லாமல் செய்தி ஒளிபரப்பப்படுவதுடன், படத்துக்குக் கீழே சம்பந்தமில்லாத வசனமும் பதிவாகின்றது, இவை ஏற்படக் காரணம் தயாரிப்புப் பிரிவு சிலவேளை இலங்கைத் தமிழரைச் சாராதவர்களாக இருக்கக் கூடும்.

சங்கீத பாரம்பரியத்தில் வந்தவர் தானென தன்னைத் தானே புகழ்ந்து அடிக்கடி பாடல்கள் பாடிக் கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளினி செய்தி வேளைகளில் தன்னை பிபிஸி ஆனந்தி என நினைத்து செய்து வாசிப்பது கொடுமை. இவர் ஆனந்தியிடம் கற்றுக் கொள்ள அதிகம் உள்ளன, விரைவாக செய்தியை வாசித்தால் மட்டும் ஆனந்தியாக முடியுமா, நிதானித்து வசனங்களைப் பிரிக்க வேண்டிய இடத்தில் பிரித்து, சொற்களைச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து செய்தி வாசித்தலே பார்வையாளர்களுக்கு புரியக் கூடியதாக அமையும்.

"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தானாம் அனுமான்" நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூடிய கவனம் செலுத்தினால் நல்ல நிகழ்ச்சிகளைப் படைக்கலாம்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

பாடகி சுவர்ணலதாவுக்கு அஞ்சலி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்மொழிகளிலும் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா இன்று மரணமான செய்தி இசை இரசிகர்களின் மனதில் இடியாய் இறங்கியிருக்கும்.

1989 ஆம் ஆண்டு முதல் பாடல்கள் பாடி வரும் சுவர்ணலதா, 1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிறந்த "போறாளே பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்குச் சொந்தக்காரியாகி தேசிய விருது பெற்றார்.



37 வயதேயான பாடகி சுவர்ணலதா சத்ரியன் திரைப்படத்துக்காக, கவிஞர் வாலி இயற்றி இளையராஜாவின் இசையில் பாடிய "மாலையில் யாரோ மனதோடு பேச..." எனும் பாடல் என்னைப் போன்ற பலரின் மனதைக் கொள்ளையடித்திருக்கும்.



அலைபாயுதே திரைப்படத்துக்காக எவனோ ஒருவன்..., பம்பாய் திரைப்படத்துக்காக குச்சி குச்சி ராக்கம்மா..., ஜென்டில்மேன் திரைப்படத்துக்காக உசிலம் பட்டி பெண்குட்டி..., உயிரே திரைப்படத்துக்காக பூங்காற்றிலே..., இந்தியன் திரைப்படத்துக்காக மாயா மச்சேந்திரா போன்ற பல தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் சுவர்ணலதா, இவர் பாடிய அனைத்துப் பாடல்களும் எல்லோர் வாயிலும் முணுமுணுக்க வைத்த பாடல்களாகும்.



அன்னாரின் துயரில் உள்ள குடும்பத்தினருக்கும், இரசிகர்கட்கும் களத்துமேடு தனது அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

சனி, 11 செப்டம்பர், 2010

அமெரிக்க இரட்டைக் கோபுரமும் $ இலச்சனையும்!

2001.09.11 ஆம் நாள் உலகத்தையே உசுப்பியெடுத்த பயங்கரவாதத்தின் உக்கிர நாள், பயங்கரவாதம் தலை விரித்தாடிய கோர நாள், பகிரங்கமாக ஏகாதிபத்தியத்துக்கு சம்மட்டி கொண்டு உச்சந்தலையில் அடித்த வரலாறு மறக்காத நாள், ஒசாமாவை உலகமே உற்று நோக்க ஆரம்பித்த நாள்.
இத் தினத்தினைத் தொடர்ந்தே பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிக்க வேண்டுமென உலகம் சபதம் எடுத்த நாள்.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் விமானத் தாக்குதலுக்குள்ளாகி 2996 பேருக்கும் அதிகமானோரை ஒரே நொடியில் பலியெடுத்த அகோர நாளை ஒன்பது வருடங்களாக அமெரிக்கா நினைவு கூர்ந்து வருகின்றது.

இந்த நாளை சர்வதேச குர் ஆன் எரிப்பு தினமாக அனுட்டிக்குமாறு அமெரிக்காவின் புளோரிடா மாநில கிருஸ்தவ தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தார், இவரின் அறிவிப்பை உச்சக்கட்ட பயங்கரவாதமாக கருதிய "த நஷனல் அசோசியேசன் ஆப் எவான்ஜெலிக்கல்ஸ் (NAE)" என்ற கிறிஸ்தவ அமைப்பும், பாப்பரசரும் குர் ஆன் எரிப்பு தின நிகழ்வைக் கைவிட வேண்டுமெனவும் அப்படிச் செய்து மதவாதத்தை வளர்க்க வேண்டாமென பொது மக்களைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை இடம்பெறவிருந்த குர் ஆன் எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

அமெரிக்க டொலர் நாணயக் குறியீட்டின் இலச்சனை $ இதுவாகும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள S உம் நீளவாக்கில் உள்ள இரட்டைக் கோடுகளும் செப்டம்பர் 11 ஐக் குறித்துள்ளதெனவும் சில சோதிடர்கள் கூறுவதாக தகவல்கள் கூறுகின்றன, தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

கம நெகும எனும் கிராம எழுச்சி வடக்கு கிழக்கில்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கிராம மற்றும் சிறு நகர அபிவிருத்தி மேம்பாட்டுக்காக கம நெகும எனும் கிராம எழுச்சித் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதெனவும் இத் திட்டம் அடுத்த மூன்று வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படுமென தகவல்கள் கூறுகின்றன.

இதற்காக 86 மில்லியன் அமெரிக்க டொலர் (9,668 மில்லியன் இலங்கை ரூபா) செலவாகுமென அறிய முடிகின்றது.

சிங்களப் பகுதிகளில் இவ்வளவு காலமும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தமிழரின் பாரம்பரிய பூமியில் நடக்கவிருப்பது பாராட்டத்தக்கதே!

சிங்களமும், தமிழும் இந்த நாட்டின் உத்தியோக மொழிகளென சட்டம் கூறிய போதிலும் நடைமுறையில் தேடல் அவசியமாகின்றது, தற்போதைய ஜனாதிபதியும் சிறுபான்மையென ஒரு இனம் இல்லையென குறிப்பிடும் இக் கால கட்டத்தில் எதற்காக "கம நெகும" எனும் சிங்களத்தில் அமைந்த கிராம எழுச்சி எனும் வாசகம்.

தமிழில் "கிராம எழுச்சி" எனும் சொல்லாட்சி இருக்கும் போது, கம நெகும எனும் வாசகம் தேவையானதல்ல, கிராம எழுச்சி எனும் சொல்லாட்சிக்கு முன்னுரிமை கொடுப்பது சிறந்தது.

சிங்களப் பகுதிகளில் செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு சிங்களத்தில் கம நெகும எனும் வாசகத்துக்கு முன்னுரிமை கொடுத்து தமிழில் கிராம எழுச்சி என்பதை இணை வாசகமாகக் கொடுக்கலாம், இதேபோல் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் தமிழில் கிராம எழுச்சியெனவும், இணை வாசகமாக சிங்களத்தில் கமநெகும எனவும் வடிவமைத்தால் பிரச்சனைகளை சுலபமாகத் தீர்த்துக் கொள்ள வழிகோலும்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

18 வது அரசியலமைப்புத் திருத்தமும் பியசேனாவும்!

18வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பியசேனா தமிழ் ஊடகங்களின் அண்மைய தேடு பொருளாக மாற்றம் கண்டுள்ளார்.

பியசேனா மீது இவ்வளவு மோகம் ஏற்படக் காரணம் என்ன என்பதை உற்று நோக்கினால் சிங்களப் பெயரில் தமிழருக்காகக் குரல் கொடுக்க வந்ததே ஆகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவெறியைத் தூண்டி தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மூளைச்சலவை செய்து வருவதை எவரும் மறுதலிக்க மாட்டார்கள், இவர்களின் இந்தக் கூட்டுச் செயற்பாட்டுக்கு படித்த பல புத்திஜீவிகளும் துணை போகத் தான் செய்கின்றார்கள், ஏனெனில் தமிழர்களுடன் நீண்ட காலமாக பிணைந்திருந்த பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதனால் மாத்திரமே.

நீண்ட காலமாக தமிழ் மக்களுக்கு பிரிவினை வாதத்தை ஊட்டி வளர்த்து கொலைக் களத்துக்க்குக் கொண்டு சென்ற முக்கிய கதாபாத்திரத்தை வகித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் அதனை மனம் திறந்து வெளியில் சொல்ல மனம் கூசுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தூரநோக்கின்றி இருந்தமையால் தான் இருந்ததையும் இழந்து முள்ளிவாய்க்காலுடன் மௌனித்துப் போனது ஈழ விடுதலைப் போராட்டம். விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வெகுஜன தளமாக பரிணமித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது சுயநல நோக்கத்துக்காகச் செயற்பட்டதுவே இந்த மௌனிப்புக்கு மூல காரணமாகும். கடந்த காலங்களின் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளைக் கண்டும் காணாதது போல் இருந்து வந்தமை விடுதலைப் புலிகளின் சேட்டைகளுக்கு அங்கீகாரம் கொடுத்ததற்கு சான்றாகும்.

இப்போதும் கூட கடந்த காலங்களில் செய்த தவறுகளை பெருமனதுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்னும் ஏற்படவில்லை, இந்தப் போராட்டம் மரணித்துப் போனதற்குக் காரணம் தேட எவரும் முன் வரவில்லை, எதிர்காலத்தில் சரித்திரத்தினைப் புரட்டிப் பார்க்கும் அரசியல் மாணாக்கர் பிழையான வழியில் போக இந்த மூடி மறைப்பு காரணமாக அமைந்து விடாதா?

விடுதலைப் புலிகள் செய்த தவறுகளை வெளிப்படையாகக் கூறி புனிதமான விடுதலைப் போராட்டம் சிதைந்து போனமைக்கான காரணியைக் கண்டு பிடிக்க வேண்டும், இதையெல்லாம் விடுத்து பியசேனா மீது கரி பூச நினைப்பது வெட்கக் கேடு.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றுக்கு காலாகாலமாக இருந்து வந்த நிரந்தர வாக்குவங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது, ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதிருந்த நேசத்தின் நிமித்தமே கூட்டமைப்புக்கு வாக்குகள் விழுந்தன.
திஹாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாக இருந்த காரணத்தினால் ஆட் தேடும் படலம் அதிகரித்தது, இதற்குக் கிடைத்த துரும்பே பியசேனாவாகும்.

பியசேனா பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரல்ல, அக்கரைப்பற்றுக் கிராமத்திலுள்ள தமிழிச்சிக்குப் பிறந்த சிங்களவரின் மகனே இவராவர், இவரின் கற்றல் தொடக்கம் நட்பு வரை அனைத்தும் தமிழர்களுடன் பிணைந்திருந்தது, தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் நேசனான இவர் அவரின் பாணியில் மக்களுக்கு தன்னாலான சில சேவைகளைச் செய்து வந்தார், மறக்காமல் அப் பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து மரண வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவதுடன் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருவார், இதுவே இவரது மக்களுடனான அரசியல் பிரவேசமாகும்.

இவருக்கும் இப்பகுதி மக்களுக்கும் இடையே இருக்கும் பிணைப்பை சரியாக இனங்கண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவரை அபேட்சகராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதை நிர்ணயித்து களத்தில் இறக்கியது, ஆனால் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால அங்கத்துவரல்ல என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும், தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமெனும் நோக்கம் கொண்ட பியசேனா இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார், வெற்றி கிட்டியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அரசியல்வாதிகளான இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றோர் எந்தக் காலத்திலும் அரசாங்கத்தின் எந்தப் பிரேரணைகளையும் ஏற்றுக் கொண்டதாக வரலாறே இல்லை, எதிப்பு அரசியல் நடாத்துவதே இவர்களில் பிழைப்பு, ஆனால்ஆளும் கட்சியிடம் பின் கதவால் சென்று தங்கள் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை பெறத் தயங்குவதில்லை.

மக்களின் வாக்குப் பலத்தினால் பாராளுமன்றம் செல்வதுடன் எல்லாம் முடிந்து விட்டது, இனிமேல் மக்கள் தேவையில்லையென நடந்து கொள்ள பியசேனாவால் முடியவில்லை, மக்களுக்கு முடியுமானவரை சேவை செய்வதே அவரின் நோக்கம்.

தமிழர்களின் வரலாற்றில் எதிர்ப்பு அரசியல் நடாத்தி கண்ட பலன் எதுவும் இல்லை, இதனால் எந்த அபிவிருத்தியும் தமிழர் பிரதேசம் கண்டதில்லை, அழிவு தான் எஞ்சியது, இப்படியே தொடந்தால் தமிழ் மக்களுக்கு செய்ய நினைத்த எந்த காரியமும் முடியாமல் போய் விடும் என்பதனை நன்கு உணர்ந்த பியசேனா 18வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார், இதே போன்றே மலையகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீரங்காவும் இணக்க அரசியலினால் மாத்திரமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யலாமென நினைத்து அத் திருத்தச் சட்டமூலத்துக்கு வாக்களித்தார்.

இதேபோல் அடுத்து வரும் காலங்களில் லங்கா இணையத்தின் சோதரர் ஸ்ரீயும் பியசேனாவின் பாதையை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது, இவ்வாறே ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் மனங்களில் நிச்சயம் மாறுதல் ஏற்படும்.

பின்னிணைப்பு:

வியாழன், 9 செப்டம்பர், 2010

இளம் கர்நாடக இசைப் பாடகர் காஷ்யாப் மகேஷ்

தமிழகத்தில் பாடகர்களென விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் ஒரு சிலரே நிலைத்திருந்த காலம் போய் இப்போது பல பாடகர்கள் இசை ஞானம் உள்ளவர்களாய் உருவெடுத்து வரும் இக்கால கட்டத்தில் அநேகமான புதிய பாடகர்கள் சினிமாத் துறையைச் சார்ந்து செல்வதையே அவதானிக்க முடிகின்றது.

கர்நாடக இசையுலகின் மாமேதைகளெனக் கூறப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் போன்றோர் கொடிகட்டிப் பறந்த இத் தேசத்தில் இன்று கர்நாடக இசைப் பாடகர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக இசையைப் கற்றுத் தேறும் பாடகர்கள் அரிதெனக் கூறும் அளவுக்கே தமிழகம் இன்றுள்ளது, இந்தக் கூற்றை மறுதலிக்கும் வகையில் சீர்காழி கோவிந்தராஜன், ரி.எம். சௌந்தரராஜன், யேசுதாஸ் போன்றோர் வரிசையில் உன்னி கிருஷ்ணன், ஹரிகரன், நித்தியஸ்ரீ மகாதேவன் போன்றோரும் வரத்தான் செய்கின்றார்கள், இவர்களின் தடத்தினைப் பின்பற்றி இப்போது வந்திருக்கும் இளையவர் காஷ்யாப் மகேஷ் என்றால் அதில் மிகையில்லை.

கர்நாடக சங்கீதத்தில் நாட்டங் கொண்ட 19 அகவையுடைய காஷ்யாப் மகேஷ் சிறிய வயதிலே பல விருதுகளைப் பெற்று முன்னணிக்கு வந்து கொண்டிருக்கின்றார்,
2000 ஆண்டு முதல் கர்நாடக சங்கீத பால பூஷன், இளம் இசைச் சுடர், இளந்தளிர் இசைஞானி, உயர் சாதனையாளர் விருது, வாணி கலைமணி, சேவா ரத்னா, லயஞான அரசு, கலை இளம்மணி, இன்னிசை வேந்தன், யுககலா பாரதி, தமிழ் இசைத் தென்றல், மணிவாசக மணி, தேசிய சிறுவர் விருது இவைகளுக்கும் அப்பால் கணினி வர்ணத்தினைப் பயன்படுத்தி வரைந்த ஓவியங்களுக்காக மக்றோசொப்ட் நிறுவனர் திரு.பில்கேட்ஸ்ஸிடமிருந்து பெற்ற விருது போன்றவற்றுடன் திகழ்கின்றார் பாடகர் காஷ்யாப் மகேஷ்.

இளம் பாடகர் காஷ்யாப் மகேஷின் சாதனைகள் அடங்கிய பொதியாக www.kashyapmahesh.com எனும் இணையம் பல தகவல்களைத் தருகின்றது.

தமிழகத்தில் பல பாடகர்களின் முன்னே நீச்சலடித்து முன்னேறி வருவதென்பது இமாலய சாதனை தான், இருந்தும் இதனையும் தாண்டி முன்னேற்றம் கண்டு வரும் இளைய தலைமுறை கர்நாடக இசைப் பாடகர் காஷ்யாப் மகேஷை களத்துமேடும் வாழ்த்துகின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----