புதன், 22 செப்டம்பர், 2010

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!

உலகளாவிய ரீதியில் வீதி விபத்துக்கள் குறைந்து கொண்டு வருகின்றன, ஆனால் ஆசிய நாட்டில் வீதி விபத்துக்கள் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, அதிலும் இலங்கையில் இப்போது வீதி விபத்துக்கள் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.

இவ் வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணங்களை எடுத்துக் கூறலாம், அவற்றில் பிரதானமானது வீதிப் பிரயாண ஒழுங்குக் கட்டுப்பாட்டை ஏற்று நடக்காமையாகும்.

சாரதிப் பயிற்சியை முறைப்படி பெற்றுக் கொள்ளாமல் ஓட்டுநர் சான்றிதழ் பெற்றவர்களினால் எட்டப்படும் வீதி விபத்துக்களே பலவென ஆய்வுகள் கூறுகின்றன, அதிலும் இலஞ்சம் கொடுத்து ஓட்டுநர் சான்றிதழ் பெற்று வாகனம் ஓட்டுபவர்களினாலேயே அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

வேகமாக வாகனம் ஓட்டுதலினால் ஏற்படும் விளைவுகளை ஓட்டுநர்கள் சிந்தித்துப் பார்க்கத் தவறுவதும் வீதி விபத்துக்குக் காரணமாகும். இலங்கையில் வாகனம் ஓடக்கூடிய அதி கூடிய வேகம் என்னவெனும் சைகைப் பலகை அனேகமான வீதிகளில் காணப்படாமையும் ஒரு குறையாகும்.

வீதிச் சட்ட திட்டங்களை தவறாகப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் விபத்துக்களை பெருமளவு குறைக்கலாம்.

இவை அனைத்துக்கும் மேலாக பாதசாரிகள் தெருவை அவதானித்தும், வீதிக் கட்டுப்பாட்டுச் சட்ட திட்டங்களை மதித்து நடந்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிக்கலாம்.

பின் இணைப்பு:

நாட்டின் பல பாகங்களிலும் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளினால் 15 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையில் அதிகரித்த வாகன எண்ணிக்கையும் வீதி விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகளுமே விபத்துகளுக்குக் காரணமெனக் குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரதிகளில் பலர் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதே விபத்துகள் அதிகரிப்பதற்குக் காரணமெனக் கூறப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை நகர அபிவிருத்தி அமைச்சரும் அரச தரப்பு பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் அளித்த வாகன விபத்துகள் தொடர்பான விளக்கத்திலும் இதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற 33,339 வாகன விபத்துகளில் 2,065 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற 32,458 வாகன விபத்துகளில் 2,176 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற 30,420 வாகன விபத்துகளில் 2,157 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 20090930 ஆம் திகதி வரை இடம்பெற்ற 23,903 விபத்துகளில் 1,661 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துகளில் 1,205 விபத்துகள் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2007 இல் 1,461 விபத்துகளும் 2008 இல் 1,522 விபத்துகளும் 20090930 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,047 விபத்துகளும் சாரதிகள் மதுபோதையில் இருந்தமையால் ஏற்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் குணவர்தனவின் கூற்றுப்படி கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற 1,20,120 வாகன விபத்துகளில் 8,059 விபத்துகள் மரணங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சாரதிகளின் மதுபாவனையால் 5,235 விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் நாள் ஒன்றுக்கு 150 வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன. இவ்விபத்துகளினால் ஒரு நாளைக்கு 6 வீதி விபத்து மரணங்கள் நிகழ்வதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். 2 கோடியே 11 இலட்சம் மக்கள் தொகை கொண்ட எமது நாட்டில் இத் தொகை மிக அதிகமென்றே கூற வேண்டும். இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத சாரதிகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கான சரியான திட்டமிடல் இன்மைபோன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் உள்ள சாரதிகளில் இரண்டு இலட்சம் பேருக்குச் சாரதி ஆசனத்திற்குப் பின்னால் நிற்கக் கூடத் தகுதியில்லையெனப் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஒரு தடவை பகிரங்கமாகவே கூறிச் சாரதிகளின் லட்சணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது சாரதிகள் பலர் மதுபோதையிலேயே வாகனங்களைச் செலுத்தி வருவது அமைச்சர் குணவர்த்தனவின் பதில் மூலம் வெளிப்பட்டுள்ளது.

மது அருந்திய பின் வாகனம் செலுத்திய சாரதிகளினால் 2006 ஆம் ஆண்டு 99 பேர் உயிரிழந்ததுடன் 183 பேர் ஊனமுற்றனர். 2007 ஆம் ஆண்டு 110 பேர் உயிரிழந்ததுடன் 299 பேர் ஊனமுற்றனர். 2008 ஆம் ஆண்டு 153 பேர் உயிரிழந்ததுடன் 308 பேர் ஊனமுற்றனர். 2009 ஆம் ஆண்டு (20090930 வரை) 79 பேர் உயிரிழந்ததுடன் 368 பேர் ஊனமுற்றனர். அரசாங்கம் "மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 (மத்தட்டதித்த) என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே மது போதையால் ஏற்படும் விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"மதுவுக்கு முற்றுப்புள்ளி%27 திட்டத்தினால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறி வருகின்ற நிலையிலேயே இந்தளவு தொகையான மக்கள் மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளினால் பலியெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் மதுவுக்கு முற்றுப்புள்ளி எந்தளவுக்கு வெற்றியடைந்துள்ளது என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. எனவே அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் முதலில் மது அருந்தி விட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும். அத்துடன் சிறைத்தண்டனையும் பெருமளவான தண்டப்பணமும் விதிக்கப்படவேண்டும். இவ்வாறான கடும் நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் விபத்துகளும் உயிரிழப்புகளும் இலங்கையில் அன்றாட நிகழ்வுகளாகி விடும்.

நன்றி. தினக்குரல்

3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோதரம்... தங்களின் தெடலுக்காக என்னால் வாக்குப் பரிசு மட்டுமே தரமுடியும்...
    தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி, தங்களின் ஆதங்கத்துடன் கூடிய பதிவினை கண்ணுற்றேன்.

    நொந்து போயுள்ள தமிழ் மக்களுக்கு உதவுங்கள் என உலகமே கோரிக்கை விட்டுக் கொண்டிருக்கும் போது, யாரப்பா உதவி கேட்டது என பதிவர் ஒருவர் உங்களுக்கு இடுகையிட்டது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

    சமூகப் பணியென கிடைக்கும் உதவிகள் அனைத்தும் எம்மவருக்கு கட்டாயம் தேவையானவையே, கண் சிகிச்சைக்கான செலவைத் தான் நடிகை அசின் ஏற்றுள்ளார், இதில் அவருக்கு எந்த விதமான வருமானமும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை, இலங்கைக்கு வந்ததால் தமிழக திரைப்படத்துறையே நடிகையுடன் பகைத்துக் கொண்டது, இதில் விளம்பரம் எம்மாத்திரம்.

    இப் பிழை ஏற்படக் காரணம் அந்த அறுவையை நடாத்திய வைத்தியரையே சாரும், ஆகவே வைத்தியரை நொந்து கொள்ளாமல் "எய்தவன் இருக்க அம்பை நோவானேன்".

    அருமையான பதிவு, இப்படிப்பட்ட பதிவுகளைத் தொடருங்கள்.

    வாழ்த்துக்கள் மதி.

    பதிலளிநீக்கு
  3. யார் கடைந்தால் என்ன எமக்கு இப்போ மோர் வேண்டுமெ... சகோதரம்.. முடிந்தால் இதை உரியவர் பார்வைக்க செல்ல வையுங்கள் பாவம் அவர்கள்.. எம்மால் முடிந்த இதையாவது செய்வோம்..

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----