2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச இலக்கிய விருதுகள் மும்மொழிகளையும் சேர்ந்த 35 நூல்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் வைத்து 2010.09.30 ஆம் திகதி வழங்கப்பட்டன, இவ்விருதுகளை 11 தமிழ்மொழி நூல்களும், 18 சிங்கள மொழி நூல்களும், 06 ஆங்கில மொழி நூல்களும் பெற்றுக் கொள்ள நீண்ட காலமாகப் இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்த கலாபூஷணம் ஏ. முஹம்மது சமீம், பேராசிரியர் டப்ளியு.எஸ். கருணாதிலக்க மற்றும் கலாநிதி லக்ஷ்மி டி சில்வா ஆகிய மூவருக்கும் “சாஹித்தியரத்ன” விருதுகள் வழங்கப்பட்டன.
2009 ஆம் ஆண்டு வெளியீடு செய்யப்பட்ட 1332 நூல்களில் மும்மொழிகளையும் சேர்ந்த 77 நூல்கள் அரச இலக்கிய விருதுக்காக சிபாரிசு செய்யப்பட்டிருந்தும், 35 நூல்களே அரச இலக்கிய விருதுகளை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றன.
தமிழ் மொழியில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விருதை ஒ.கே. குணநாதன் எழுதிய "குறும்புக்கார ஆமையார்", சிறந்த சிறுவர் மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை சரோஜினி அருணாசலம் எழுதிய "என்றும் உங்கள்", சிறந்த நாடக இலக்கியத்திற்கான விருதை கலையார்வன் எழுதிய "கூத்துக்கள் ஐந்து" போன்ற நூல்கள் பெற்றுக் கொண்டன.
மொழி பெயர்ப்பு இலக்கியத்திற்கான விருதை, மடுல்கிரியே விஜேரத்ன எழுதிய "தீச்சுடர்", திக்குவல்லை கமால் எழுதிய "தொடரும் உறவுகள்", கெக்கிராவ சுலைஹா எழுதிய "பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும்", ஆய்வு இலக்கியத்திற்கான விருதை கலாநிதி எஸ். ஜெபநேசன் எழுதிய “இலங்கைத் தமிழர் சிந்தனை வளர்ச்சியில் அமெரிக்க மிஷன்”, கவிதை இலக்கியத்திற்கான விருதை மு.பொ. எழுதிய "கவிதையில் துடிக்கும் காலம்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.
அறிவியல் இலக்கியத்திற்கான விருதை ச. அருளானந்தம் எழுதிய "அற்புதமான வானம்", சிறுகதை இலக்கியத்திற்கான விருதை சுதாராஜ் எழுதிய "மனைவி மகாத்மியம்", சிறந்த நாவல் இலக்கியத்திற்கான விருதை நீ.பி. அருளானந்தம் எழுதிய "துயரம் சுமப்பவர்கள்" போன்ற நூல்களும் பெற்றுக்கொண்டன.
விருதுக்குத் தகுதியான நூல்களைப் படைத்த ஆசான்களுக்கு களத்துமேட்டின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.