ஞாயிறு, 3 ஜூன், 2007

இந்திய அமைதிகாக்கும் படையுடன் தப்பியோடிய வரதராஜப்பெருமாள்

ஈழ விடுதலையை வென்றெடுக்கவென புறப்பட்ட இயக்கங்கள் காலவோட்டத்தை எதிர்த்து நிற்க முடியாமல் சேடமிழுக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளால் கே.பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈழ மண்ணில் தடை செய்யப்பட்ட பின்னர் இந்திய இலங்கை உடன்படிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தினரின் உதவியுடன் வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் மீண்டும் காலூன்ற முயற்சித்தனர். எதுவுமறியாத அப்பாவி விவசாயிகளையும், பாடசாலை மாணவர்களையும் ஆயுத முனையில் கடத்திச் சென்று தமிழ் தேசிய இராணுவம்(T.N.A)எனும் பெயரில் இராணுவப் பயிற்சி கொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட முயற்சி செய்தனர், தமிழ் தேசிய இராணுத்தை அமைக்க ஈழ விடுதலை இயக்கங்களான TELO, ENDLD, PLOT,EPRLF போன்றன இதே பாணியில் செயற்பட்டன. அவ்வேளையில் இந்திய அமைதி காக்கும் படையினரின் உதவியுடன் மாகாணசபைத் தேர்தலில் பங்கேற்று வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை இயக்கத்தினரும் கைப்பற்றினர்.

ஜனாதிபதி பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையினரை வெளியேறுமாறு கோரிய போது, தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருடன் இணைந்து மேற்கூறப்பட்ட தமிழ் தேசிய இராணுவத்தையும் ஏனைய இயக்கத்தினரையும் வேட்டையாடினர். இந்திய அரசாங்கம் தனது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக அழைத்தது, நிற்கதியாகிய அவ்வியக்கங்கள் இந்திய இராணுவத்தினருடனேயே இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் போது வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் தன்னிச்சையாக "ஈழப் பிரகடனம்" செய்து விட்டு தங்கள் குழுவினருடன் தப்பிச் சென்றார்.

இந்தியாவுக்குத் தப்பிச் சென்று சில காலங்களில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் செயலாளர் நாயகமாகம் பத்மநாபா தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டார், அதன் பின் அவ்வியக்கத்தின் தலைமை பொறுப்பைப் பெறுவதற்கு வரதராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோர் இயலுமான குறுக்கு வழிகளையெல்லாம் பயன்படுத்தினர், இரு சாரியாகப் பிரிந்து செயற்படலாயினர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனும் நாமத்துக்குச் சொந்தக்காரன் யாரெனும் போட்டி தொடர்ந்ததால் நீதிமன்றத்தின் உதவியை நாடினர், பத்மநாபாவால் உருவாகிய இயக்கம் வரதராஜப்பெருமாளுக்கு உரியதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது, உதிரியாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தனக்கு உதவியளித்த உறுப்பினர்களுடன் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணியென இயங்க ஆரம்பித்தார், அரசியலில் நுழைய பெரும் பிரயத்தனம் மேற்கொண்டார், பாராளுமன்ற ஆசனம் கிடைப்பது கானல்நீர் போன்று தெரிந்ததால் எதிரியென்றே கூறிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மண்டியிட்டார், அவர்களின் தியாகத்தில் கிடைத்த பரிசாக இறுதி நேரத்தில் சுரேஷ்பிரேமச்சந்திரனுக்கும் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்துடன் துண்டைக் காணோம் துணியைக் காணோமென தப்பியோடிய வரதராஜப்பெருமாள் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா அம்மையாரின் உதவியுடன் தனது இயக்கத்துக்கு உயிரூட்ட முனைந்தார், ராஸிக் எனப்படும் முத்துலிங்கம் கணேசமூர்த்தி என்பவரை முன்னிலைப்படுத்தி ஸ்ரீலங்கா இராணுவ துணைப்படையில் இணைந்தார், பிரிகேடியர் ராஸிக் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கில் இருந்து தப்ப முடியாமல் போகவே சுபத்திரனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது அவரும் கொல்லப்பட இறுதியில் ஸ்ரீதரன் பொதுச் செயலாளராக்கப்பட்டார்.

இவ்வளவுக்கும் மத்தியில் தலைமைப் பொறுப்பை பெற்றுக்கொண்ட வரதராஜப்பெருமாள் எங்கு இருக்கின்றார் எனப் பலருக்கும் தெரியாமல் இருந்து, பெங்களூரில் தனது குடும்பத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மாட்டு பண்ணையுடனும் அரச பாதுகாப்பில் இருப்பதாக அப்போதைக்கப்போது தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியால் வெளியிடப்படும் "கண்ணோட்டம்" பத்திரிகையில் வரதராஜப்பெருமாள் எழுதும் கடிதம் பிரசுரமாகி வருகின்றது, கடைசியாக வந்த கண்ணோட்டம் பத்திரிகையில் வந்த வரதராஜப்பெருமாளின் கடிதம் பின்வருமாறு உள்ளது.


தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும். அளவுக்கு மிஞ்சிய பேராசை அழிவைத் தவிர வேறெதனையும் தராது

அன்பார்ந்த நண்பர்களே!

உங்கள் அனைவருக்கும் எனது இந்த பன்னிரண்டாவது கடிதத்தின் முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் வாழும் சூழ்நிலை மிகவும் ஆபத்துக்கள் நிறைந்தது என்பதில் புதினமொன்றுமில்லை. ஆனால், இங்குள்ள அரசியற் சூழலோ முன்னெப்போதையும்விட மிகவும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் உள்ளது. இங்குள்ள நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. அப்படித்தான் சிரமப்பட்டுப் புரிந்து கொண்டாலும் அதனை மற்றவர்களுக்குப் புரிய வைப்பதென்பது கல்லை உருக்கி வார்க்க முனைவது போன்றதாகும்.

ஏனெனில் இங்கு அன்றாட நிகழ்ச்சிகளே மக்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் யுத்த அரசியலை மொத்தமாகத் தொகுத்து, பகுத்துப்பார்ககும் நிலையிலோ அவர்கள் இல்லை. இலங்கையின் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இனவாத அரசியலின் தன்மைகளையும் போக்குகளையும் வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே மக்கள் உள்ளனர்; உள்ளாக்கப் பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இருமுனை மூலோபாயத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஒன்று புலிகளின் எதிhப்பைச் சம்பாதிக்கக்கூடாது. இன்னொன்று மக்களின் அன்றாட துன்பங்களை அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அரசியலாக்கிக் கொள்வது. இங்கு நேர்மையாக நடந்து கொள்ள முற்படுவதோ, உண்மைகளை ஒழிவு மறைவின்றிப் பேசுவதோ அத்துடன் எதிலும் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை தர்க்க ரீதியாகவும், பகுத்தறிவு பூர்வமாகவும் சிந்தித்து அதன்படி நடக்க முற்படுவதோ இங்கு தோல்வியைத் தழுவுவதற்கான அணுகு முறைகளாகவே உள்ளன. அதுமட்டுமல்ல பெரும்பாலானோரின் வெறுப்புக்கும், கோபத்துக்கும் உள்ளாக வேண்டியும் ஏற்படுகின்றது. மலினமான அரசியல் நடத்துபவர்கள் வெகு இலகுவாக சேற்றைவாரி இறைப்பதற்கும் உள்ளாக வேண்டியுள்ளது.

பேச்சில் உண்மையும், நடத்தையில் நேர்மையும், சமூகத்தைப் பற்றி பொறுப்புணர்வுடன் சிந்திப்பவர்களாகவும் இருப்பவர்கள்; பெரும்பாலானோர் இங்குள்ள ஆபத்தான சூழ்நிலையினால் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள். நாட்டிலே இருப்பவர்கள் தமது குரல்களை உள்ளே இழுத்துக் கொண்டு மௌனமாகிக் கொண்டார்கள். வெளிநாடுகளிலும் அதுதான் நிலை.

ஒரு சமூகம் ஆரோக்கியமாக வளர்ச்சியடைய வேண்டுமானால் பேசவும, எழுதவும், கூட்டம் கூடவும் சுதந்திரம் வேண்டும். நவீன சமூகங்களின் வளர்ச்சியின் அடிப்படையே இதுதான். குறைந்தபட்சம் அந்த சுதந்திரத்திற்காகப் போராடும் சந்தர்ப்பங்களாவது வேண்டும். மாற்றுக் கருத்துக்களின் மோதல்கள், விவாதங்கள் இல்லாமல் ஒரு சமுதாயத்தில் அறிவு வளர்ச்சி ஏற்படமுடியாது. சரி எவை பிழை எவை என்பது பகுத்தறியப்படமாட்டா. ஒரு சமூகத்தின் அறிஞர்களே முதுகு வளைந்து தலையைக் குனிந்து தமது பேனைகளையும் சுருட்டி வைத்துவிட்டு மௌனிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டால் அந்த சமூகத்தின் அழிவை யாராலும் காப்பாற்ற முடியாது. இதுதான் இன்றைய இலங்கைத்தமிழர் சமூகத்தின் நிலை.

இலங்கைத் தமிழர்களாகப் பிறந்தவர்கள் பெருமைப்பட இன்று எது மிச்சம் வைக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் இன்று மிக மோசமான அளவுக்கு சந்தேகங்களுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்படுவதைக் கண்டு பெருமைப்படவா? உலகில் நண்பர்களே இல்லாத ஒதுக்கப்பட்ட, தீண்டத்தகாத சமூகமாக ஆகிவிட்ட தனித்துவத்தைக் கண்டு பெருமைப்படவா? சொந்த சமூகத்தில் ஆயிரக்கணக்கில் அரசியல் தலைவர்களும்;, கல்விமான்களும், நிர்வாகிகளும், இளைஞர்களும் படுகொலை செய்யப்பட்டு முதகெலும்பில்லாத ஊனச் சமூகமாக ஆக்கப்பட்டு விட்டதைக் கண்டு பெருமைப்படவா? அல்லது சர்வதேச வல்லரசுகள் சிறீலங்கா அரசோடு தமது கணக்கைச் சமப்படுத்திக் கொள்வதற்கான கருவியாக தமிழர்களின் சாவுகள்; ஆகிப் போய்விட்டதைக் கண்டு பெருமைப்படவா?

இன உணர்வையும், எல்லை ரீதியான அடிப்படையையும்; கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் அதன் முற்போக்கான பாதையில் இருந்து சிறிது விலகினாலோ அல்லது பிழையான தலைமைகளின் செல்வாக்கின் கீழ் வந்துவிட்டாலோ அப்போராட்டம் மிகவும் பிற்போக்கானதாகவும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றமெதனையும் தராததாகவும் அமைந்துவிடும் என்பது பற்றிய புரிதல், இந்தப் போராட்டம் ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே எம்மிடையே ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்காகவே சமூக பொருளாதார சமத்துவம், எகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச புரட்சிகர முற்போக்கு சக்திகளுடன் ஒன்றுபடல் போன்ற கருத்துக்களை ஈழ விடுதலை இலட்சியத்தோடு இணைத்தோம். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வர்க்க உணர்வுகளை வளர்த்து அவர்களை அணிதிரட்ட வேண்டும் என முயற்சித்தோம்.

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஸ்தாபன ரீதியான கட்சி அரசியல் தலைமையைப் போராட்டத்துக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடுகள் செய்தோம். போராட்டத்தில் வேறு அணிகள் ஈடுபடும் போது ஏதோ ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் முரண்பாடுகள் விலக்கப்பட்ட ஒற்றுமை வேண்டும் என்பதற்கான ஐக்கிய முன்னணி ஏற்படுவதற்காக தொடர்ந்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். என்றாலும் குறுகிய கால ஓட்டத்திலேயே எமது விடுதலைப் போராட்டம் மீளமுடியாத அழிவுப் பாதைகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

தமிழர்கள் மத்தியிலுள்ள உயர்சாதி செல்வாக்கு
வெளிநாடுகளில்; பிற்போக்குத்தனங்களோடும் குறுகிய சுயநலன்களோடும் வாழுகின்ற தமிழர்களின் செல்வாக்கு.
பிற்போக்குத்தனமான அரசியல் அதிகாரங்களின் செல்வாக்குக்கு உட்பட்ட தமிழ்நாடு எமது போராட்டத்தின் பின்தளமாக அமைந்தமை.
சுதந்திர ஈழம் அமைவதை ஏற்றுக் கொள்ளாத இந்திய அரசின் உதவிகளை எல்லையற்ற ரீதியில் எதிர்பார்த்து தமிழர்களின் போராட்ட அணிகள்; திடீர் விரிவாக்கத்துக்கு உள்ளானமை.
மொசாட் உளவுப்படை உட்பட ஏகாதிபத்திய உளவு ஸ்தாபனங்கள் எமது போராட்ட அமைப்புக்களுக்குள் தமது செல்வாக்குகளை வளர்த்துக் கொண்டமை.
ஆகிய காரணிகள் ஒட்டு மொத்தத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை அணிகளுக்கிடையில் மோதல் என்ற வடிவத்தில் தோற்கடித்துவிட்டன.

1986ம் ஆண்டு புலிகள், ரெலோ மீது யுத்தம் ஆரம்பித்து அதன் 300க்கு மேற்பட்ட உறுப்பினர்களை படுகொலை செய்த அன்றே ஈழ விடுதலைக்கான யுத்தத்தில் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இன்றைக்குத் தமிழர்களின்நிலை மிகவும் விசனத்துக்குரியதாகும். மூட்டையிலிருந்து அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்கனிகள் போல, மேய்ப்பனில்லாத ஆடுகள் போல ஆகிவிட்டார்கள். இப்போதும் தமிழர்களின் அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட ஓர் அணியை உருவாக்கி ஒரு தலைமையை வழங்க முடியும். அது சாத்தியமில்லை. தமிழர் கூட்டணி;, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ ஆகியவற்றின் கூட்டணி ஒரு சுயாதீனமற்ற ஒன்றாக புலிகளுடன் பேசித்தான் அரசாங்கம் ஓர் அரசியற் தீர்வுக்கு வர வேண்டும் எனக் கூறுகின்றன. இவர்களைப் புலிகள் தங்களின் அரசியற் பிரதிநிதிகள் என்று அங்கீகரிக்கவில்லை. அதுமட்டுமல்ல, புலிகளின் தேசத்துரோகிகள், சமூக விரோதிகள் மற்றும் மரண தண்டனைப் பட்டியலில் இருந்து இன்னமும் இந்தக் கட்சிக்காரர்கள் நீக்கப்படவில்லை. இவ்வளவு பாட்டுப்பாடியும் காவடி தூக்கியும் இவர்களின் ஜனநாயக உரிமைகளைக் கூட அங்கீகரிக்காத புலிகள் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவார்கள் என்று கூறுவது புரியாத தனமா? போலித்தனமா?

இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் இப்போதும் உள்நாட்டிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அகதிகளாகத்தான் இருக்கிறார்கள். அகதிகள் என்று பெயர் பெறாதவர்கள் கூட திறந்தவெளி அகதி முகாம்களில் வாழ்வது போலத்தான் அவர்களின் சீவியம் அமைந்திருக்கின்றது.

இன்று இலங்கைத் தமிழர்கள் உலகம் பூராவும் பரந்து விட்டதனால் உலகின் பல பாகங்களில் பல யாழ்ப்பாணங்களும், பல மட்டக்களப்புக்களும் உருவாகியிருக்கலாம். ஏன்? பல வெள்ளவத்தை , பம்பலப்பிட்டிகளும் கூட உருவாகலாம். பல்வேறு நாடுகளிலும் நல்லூர் திருவிழாவையும் மிஞ்சிய தேர்த்திருவிழாக்கள் நடக்கலாம். சுடச்சுட அரியாலைத் தோசை, கரையூர் பால் அப்பம், புங்குடுதீவு சோறு கறி, கொட்டடி இடியப்பம், ஆனைக்கோட்டை நல்லெண்ணெய், மட்டுவில் கத்தரிக்காய், மண்டைதீவுக் கீரை, உரும்பிராய் வடி, பலாலிக் கிழங்கு, பருத்தித்துறை வடை, ஓட்டமாவடி சட்டித்தயிர், காரைத்தீவு சம்பா அரிசி எனத் தமிழர்களின் கடைகள் கனடாவின் ஒட்டவா தொடக்கம் லண்டனின் தேம்ஸ் நதியையும் தாண்டி ஐரோப்பாவின் அல்ப்ஸ் மலை அடிவாரம் வரை பரந்து விரிந்து இலங்கைத் தமிழர்களின் ஊர்ப் பெருமைகளைப் பறைச் சாற்றக்கூடும். அதெல்லாம் மண்ணை விட்டுப் போனவர்களின் ஆதங்கத்துக்குத் தீனி போடுவதற்கான வியாபார வடிவங்களே. அங்கு அடுத்த தலைமுறை அப்படியில்லை. அவர்களை இணைப்பது ஒரு மொழியென இருக்காது, ஒரு பண்பாடென இருக்காது. அடுத்த தலைமுறை, உலகில் 'எனது தேசமே சிறந்தது" என இந்தியர்கள் பாடுவது போலப் பாடிப் பெருமைப்பட அவர்களின் தேசத்தின் நிலைமையும் இல்லை. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமது மூதாதையரின் தாய் நாட்டை நினைத்துப் பார்ப்பதற்கு இஸ்ரேலியருக்கு இருந்தது போல தமிழருக்கு ஒரு பைபிளும் கிடையாது.

எனவே சுதந்திர ஈழம் என்பது காலம்கடந்த விடயம். அதற்காகத் தான் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம். அதைப் புலிகள் எனும் கோடரிக் காம்புகள் வெட்டிச் சாய்த்து விட்டன. கூரையைக்கூட வேயமாட்டாத இவர்கள்; வானத்திலே கோட்டை கட்டுவார்கள் என்று ஒரு சமுதாயத்தையே அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் நிலைதான் இங்கு செல்வாக்குச் செலுத்துகிறது. இதிலிருந்து பெரும்பான்மையான தமிழர்கள் விடுபடவில்லையாயின் - விடுவிக்கப்படவில்லையாயின் இலங்கைத் தமிழர்கள் என்னும் தேசிய இனம் அழிந்து போகும்.

அன்பு நண்பர்களே!

ஒன்றை மட்டும் மனந் திறந்து சொல்ல விரும்புகிறேன். இங்கு துணிச்சலான சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களின் ஒப்புதலைப் பெற்று தமிழர்களின் அரசியல் உரிமைகளைக்; காப்பாற்றினால் சரி மற்றபடி வேறு யாரும் காப்பாற்ற முடியாது என்ற நிலைமைதான் காணப்படுகின்றது. அப்படியான நிலைமைக்கே இன்று தமிழர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்படிச் செயற்பட சிங்களத் தலைவர்கள் முன்வந்தாலும்; இரண்டு விடயங்கள் சாத்தியமில்லை. ஒன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் அதிதீவிரமான அபிலாஷைகளைத் திருப்திப்படுத்த முடியாது. இரண்டாவது தமிழ் மக்களின் அரசியற் பிரதிநிதிகளினதும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே அது நடக்க வேண்டும்.

இதெல்லாம் சாத்தியமா? அப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிகளை எந்த சிங்கள அரசியவாதிகளும், தலைவரும் எதற்காகத் தனக்குத் தானே தேடிக் கொள்ள வேண்டும். அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்படும்போது மனிதாபிமான அடிப்படையில்; அதனை கண்டனம் செய்யும் தமிழர்களை தமிழ்த் துரோகிகள் என்று பட்டம் சூட்டும்போது, தமிழர்களுக்காகக் குரல் எழுப்பும் சிங்களத் தலைவர்களுக்கும் அவர்களின் சமூகத்தில் அதுதானே கதி. சிங்களத் தலைவர்கள் மட்டும் தமது சமூகத்தில் துரோகிகள்; பட்டத்தைப் பொருட்படுத்தாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக செயற்படவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வாறு சரியானதாகும். அவ்வாறு எதிர்பார்ப்பதற்கு எங்களுக்கு என்ன தார்மீக உரிமை உண்டு.

தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும். அளவுக்கு மிஞ்சிய பேராசை அழிவைத் தவிர வேறெதனையும் தராது

என்பவற்றை நான் உங்களுக்கு விரிவாகக் கூறவேண்டியதில்லை. எமது மக்கள் மத்தியில் உண்மையும், நேர்மையும் நிலைபெற, யதார்த்தபூர்வமான சமூகச்சிந்தனை வளர்ச்சியடைய, நல்லவர்கள் நம்பிக்கைபெற நாம் மேலும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

இப்படிக்கு

உங்கள் அன்பு நண்பன்

அ.வரதராஜப்பெருமாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----