1988ஆம் ஆண்டு அன்பாலில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது நச்சுப் புகையைச் செலுத்தி 180000 குர்திஷ் இனத்தவர்களை படுகொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூஸைனின் மைத்துனரான "கெமிக்கல் அலி" எனப்படும் அலி ஹஸன் அல் மஜீத்திற்கு ஈராக்கிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் கெமிக்கல் அலியின் இரு ஆதரவாளர்களுக்கும் மரண தண்டனையும், வேறு இருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட இந்த நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் யுத்த குற்றம் மற்றும் மனித நேயத்திற்கு புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சுல்தான் ஹாஸிம் அஹ்மட், முன்னாள் ஜனநாயக கட்சி பாதுகாப்பு தலைவர் ஹூஸைன் ரஷீட் அல் டிக்ரிதி ஆகியோருக்கும் மரண தண்டனையும் முன்னாள் இராணுவக் கட்டளை தளபதி பர்ஹான் அல் ஜிபோரி, முன்னாள் புலனாய்வு தலைவர் சாபெர் அப்துல் அஸீஸ் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனை தீர்ப்பு குறித்து மேன்முறையீடு செய்ய அனுமதியுள்ளது, ஆனால் அம்மேன்முறையீடு தோல்வியடையும் பட்சத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அலி ஹஸன் அல் மஜீத் தூக்கிலிடப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
"அன்பால்" பிரதேச இராணுவ நடவடிக்கையில் குர்திஷ் இனத்தவர்களை படுகொலை செய்த குற்றத்துக்காக ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூஸைனுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.