ஆழ்மனத்தூறல்
கட்டுரையாளர் - இளைய அப்துல்லாஹ்
இலங்கையும் ஊடக சுதந்திரமும் ஜனாதிபதி இலங்கையில் ஊடகவியலாளர்களை அழைத்து "என்னைத்தான் எல்லோரையும் விமர்சிக்க விட்டிருக்கிறேனே. பிறகு என்ன ஊடக சுதந்திரம் இல்லை என்கிறீர்கள்" என்று கோபப்பட்டிருக்கிறார். இதனைத்தான் நாம் சொல்கிறோம் எமக்கு சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை என்று. ஊடகவியலாளர்களைக் கண்டு பயப்படுபவர்கள் எல்லாம் அவர்களைக் கொலை செய்துவிட்டால் சரி என்று நினைத்து விட்டனர் இலங்கையில்.
துவக்குத் தூக்கியவன் எவனாக இருப்பினும் கொலை செய்து விடுவோம் என்கின்ற எண்ணத்தில் தான் அலைகின்றான். துவக்குகள் இப்பொழுது கறுப்புச் சந்தையிலும் ஆமிக்காரர் இடமிருந்தும் எல்லோரும் இலகுவாக வாங்கக்கூடிய நிலைமையில் இருக்கிறது. ஒருவர் சொன்னார் கையெறி குண்டு ஒன்று மூவாயிரம் ரூபாவுக்குக் கிடைக்கிறதாம்.
மனித உரிமை மீறல்கள் அதிகரித்த தேசத்தில் தணிக்கை இல்லாமல் எழுதினால் சுடுவோம் என்கின்ற ஒரு நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தணிக்கை உத்தியோகபூர்வமாக இருந்தால் தானே சர்வதேசம் கேட்கும் என்ன ஏது என்று.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு றிச்சட் பௌச்சர் போய்விட்டு வந்த அடுத்த நாள் 320 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்போவதாக ஒவ்வொரு ஃபக்லிட்டி யிலும் இவ்வளவு பேர் என்று சொல்லி கொலைப் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது. இதனைப் பத்திரிகையில் எழுதுவதா? கூடாதா? கூடாது என்று தான் துப்பாக்கிதாரிகள் சொல்கின்றனர்.
ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும், கைது செய்யப்படுவதும், எழுதினால் சுடுவோம் என்பதும், மிரட்டுவதும், இப்பொழுது சாதாரணமாகவே இருக்கிறது இலங்கையில். அண்மையில் உதயன் செய்தியாளர் ரஜிவர்மன், வவுனியாவில் நல்ல கவிஞன் `எஸ் போஸ்' போன்றவர்களை சுட்டுப்போட்டார்கள்.
ஒரு கணம் ஒரு கொலையாளி நினைத்தால் ஒரு உயிர் சர்வ சாதாரணமாக பறிக்கப்பட்டுப் போய்விடுகிறது. ஊடக அமைப்புகள் கண்டனம் விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றன இலங்கையில்.
பத்திரிகை மெசினில் வேலை செய்கின்றவரில் இருந்து ஆசிரியபீடம் வரைக்கும் பயம் பயம். என்ன செய்வது அண்மையில் தான் தனது நூறாவது `இடி' பத்திரிகையை வெளியிடுவதற்கு முழு முயற்சியோடு ஈடுபட்டிருந்த எஸ்.எச். நிஃமத் என்ற பத்திரிகையாளருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் காரணமாக அவர் உயிர்ப் பயத்தின் காரணமாக நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டேன்.
அடுத்தது இந்த இணையத்தளங்கள். பல முட்டாள் தனமானவர்கள் சுயமாக ஆரம்பிக்கும் இணையத்தளங்கள் மூலமாக தனிப்பட்ட மனிதர்களை குறி வைக்கிறார்கள். இலங்கை அரசுக்கு பொய்த் தகவல்களைக் கூறும் ஆங்கில இணையத்தளங்களில் இல்லாதவர்களை எல்லாம் `புலி' என்றும் அவரின் ஆதரவாளர்கள் என்றும் எழுதி விடுகின்றார்கள்.
அதனை எடுத்துப் பின்னர் ஹெல உறுமய, சிங்கள இனவாதிகள் நடத்தும் வெப்சைட்டுகளும் போடுகின்றன. போதாதற்கு செய்திகளை ஆராயாமல் அரசாங்க வெப்சைட்டுகளில் கூட போட்டு விடுகின்ற அதி புத்திசாலிகள் இருக்கின்றனர். இப்பொழுது நான், நீங்கள் யார் வேண்டுமானாலும் காசு கட்டியோ அல்லது இலவசமாகவோ வெப்சைட்டோ அல்லது BLOGE புளொக்கோ திறக்கலாம். அதில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
ஒருவரை `புலி' என்று சொல்லலாம். இல்லை என்று சொல்லலாம். எப்படியும் எழுதலாம் ஏசலம். என்னவும் செய்யலாம். அதனால், எந்த நோக்கமும் இல்லாமல் திறக்கப்படும் வெப்சைட்டுகள் மூலமாக ஒரு சமூகத்துக்கே அவலத்தை ஏற்படுத்தலாம். அந்தக் கைங்கரியத்தை சில தமிழர்கள் லண்டனிலும் செய்து வருகின்றனர். ஊடக சுதந்திரம் என்றால் என்ன என்று முன்னாள் மனித உரிமை ஆர்வலரான மகிந்த ராஜபக்ஷவுக்கு நாம் தான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கோடன் பிறவுணும் அகதிகளும் கடந்த வாரம் பேர்மிங்ஹாமில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ஹோம் ஒஃபிஸஸில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைத்திருக்கிறது.
இலங்கையில் இவ்வளவு குத்துப்பாடு நடக்கும் பொழுதும் அகதிகளின் அந்தஸ்து கொடுப்பது மறுக்கப்பட்டு வருகிறது. இங்கே பிரிட்டனில்.
இலங்கையில் என்ன நடந்தாலும் அவர்கள் கேட்பது "உங்களுக்கு சொந்தமாக என்ன பிரச்சினை" என்பது தான். அதனை நிரூபிக்கத் தவறினால் அவர்களின் அகதி கோரலை நிராகரித்து திருப்பி அனுப்பி விடுவார்கள். பலருக்கு இது விளங்குவதில்லை. ஏதோ இலங்கையில் குண்டு வெடித்தால் இங்கு அகதி அந்தஸ்து கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கின்ற அறிவோடும் பலர் இருக்கிறார்கள்.
அத்தோடு, இலங்கையில் சண்டை என்று இங்கு வாங்கோ அகதி அந்தஸ்து பெற்றுத் தருகிறோம் என்று லண்டனுக்குக் கூப்பிடும் பல சட்டத்தரணிகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இது பொய். காசு புடுங்குவதற்காக அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். உண்மையில் அகதி அந்தஸ்து பெறுவது என்பது மிகவும் கஷ்டம்.
ஈராக்கில் இருந்து ஜூன் மாத இறுதியில் படை விலகல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பரில் முழு பிரிட்டிஷ் படைகளும் திரும்பிவிடும் என்று தான் இராணுவ விமர்சகர்கள் சொல்கின்றனர்.
அப்பொழுது தான் கோடன் பிறவுண் தேர்தலில் வெற்றிபெறுவார். இந்த சந்தர்ப்பத்தை அவர் விட்டுக் கொடுக்க மாட்டார்.
ஆனால், படைகளை ஈராக்கில் இருந்து கொண்டுவருவது சுலபம்.
அகதிகள் விசனம் பெரும் சிக்கல். பல்லின, பல்கலாசார, பல்மத இணைப்புக் கொண்ட சகிப்புத் தன்மை நிறைந்த பிரிட்டனில் இந்த விடயத்தை முள்ளில் விழுந்த சேலை போல மெதுவாகத் தான் எடுக்க வேண்டும். அல்லாது போனால் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிடும்.
அதனால், தான் காதும் காதும் வைத்தது மாதிரி காரியங்கள் நடைபெறுகின்றன. நாட்டைவிட்டு அனுப்புகின்றனர். அகதிகளின் அதிகரிப்பு சுதேசிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது ஐரோப்பிய நாடுகளில் இருந்து இங்கு வருகின்றவர்களாலும் பெரும் தொல்லை என்று பிரிட்டிஷ்காரர் நினைக்கின்றனர்.
அதனால் தான் அகதிகள் மீதான சட்டங்களும் இறுகிக் கொண்டே போகின்றன.
இதில் உடனே நிராகரிக்கக்கூடிய `கேஸ்' களை உடனே விசாரித்து உடனே திருப்பி அனுப்புகின்றனர். கொஞ்சம் அங்கீகரிக்கக் கூடிய `கேஸ்' களை `லீகஸிகேஸ்' (LEGACY CASE) என்று ஒரு புதிய முறையின் கீழ் 5 வருடங்களுக்கு சும்மா இருக்க விட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு 5 வருடங்களின் பின்பு தான் விசாரணை என்று கடிதம் கொடுக்கிறார்கள்.
இப்பொழுது எவ்வளவு வெளிநாட்டுக்காரர் மேல் இறுக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் ஒரு மாணவர் விசாவில் வந்தவர் 18 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்தால் அவரைப் பிடித்து விசாவைக் கான்ஸல் பண்ணித் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
வேக் பேமிற்றில் வந்தவர் சரியாக வேலை செய்கின்றாரா என்று செக் பண்ணுகின்றனர். அடுத்து "கார்" வைத்திருக்கும் ஒருவர் என்ன விசாவில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து அவர் அகதியா? என்ன விசாவில் இருக்கிறார். விசா இல்லையா என்பதை எல்லாம் ஆராய்ந்து விசா இல்லாமல் இருந்தால் இரவோடு இரவாக போய்க் கோழி அமுக்குவதைப் போல் அமுக்கித் தூக்கி ஏத்தி விடுகின்றனர்.
எல்லாவற்றையும் முழு நெற்வேக்கில் கனக்ட் பண்ணி வைத்து அங்கு இங்கு அசைய முடியாதபடி அகதிகளை இறுக்கி வைத்திருக்கின்றனர். எல்லாம் தேர்தலை முன்னிட்டு.
அடுத்தது இன்னொரு நன்மை 23.05.2007 அன்று இங்கு (பிரிட்டனில்) நிகழ்ந்திருக்கிறது. அது அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு விசா இருப்பவர்கள் திருமணப் பதிவு செய்து கொள்ளலாம் என்பது தான். முன்பு அப்படிச் செய்ய முடியாது. அப்படியென்றால் அகதியாக இங்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆண் லண்டன் மாப்பிள்ளை. ஆம் இலங்கையில் இருந்து பெண்ணை ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிட்டுக் கலியாணம் முடிக்கலாம். இனி பல பேருக்கு வரன் பிரசாதமாக அமையப் போகிறது.
ஹோம் ஒஃபிஸ் சொல்கிறது இது பெரிய தலை வலியாக வரப் போகிறதாம். ஏனெனில், அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டவர்கள் கூட இனி ஸ்பொன்ஸர் செய்யப் போகிறார்கள். இன்னும் ஆட்கள் இங்கு கூடப்போகிறார்கள் என்கிறது ஹோம் ஒஃபிஸ். ஆனால், அழுத்திச் சொல்லலாம் அகதி விசா இருந்தால் அவரும் லண்டன் மாப்பிளைதான்.
முதுகெலும்பு உடைந்த சிவாஜிலிங்கம் (எம்.பி.)
இங்கே லண்டனில் போனவாரம் சிவாஜிலிங்கம் எம்.பி.யை சந்தித்தேன்.
கோட் போட முடியாது, பல்லுத்தீட்ட முடியாது, கதிரையில் உட்கார முடியாது. நடக்க முடியாது, எல்லாவற்றுக்கும் இன்னொரு ஆள் வேண்டும் என்று மிகவும் கஷ்டப்படுகிறார் அவர். "என்ன என்று கேட்டேன்".
போன எலக்ஷன் நேரம் ஈ.பி.டி.பி. யினர் நெடுந்தீவில் வைத்து அடித்ததில் முதுகெலும்பில் முக்கிய பாகம் உடைந்துவிட்டது. அதன் தாக்கம் தான் என்றார்.
எலக்ஷன் கம்பயினுக்குப் போன ஒரு மனிசனை இப்படியா நாயடி பேயடி அடிப்பார்கள்?
ஜனநாயக வழியில் எலக்ஷன் கேட்கவும் விடமாட்டார்கள். ஆயுதம் தூக்கிப் போராடவும் விடமாட்டார்கள். எடுத்ததற்கெல்லாம் அடி, உதை, சூடுதானா?
ஏன் இந்தத் தமிழர்கள் யோசிக்கிறார்கள் இல்லை.
ஏன் கருத்துகளை கருத்துகளால் மோத இன்னும் திராணியில்லாமல் போய்விட்டது. ஒரு எதிரியை அது அரசியல், கருத்து ரீதியானதாக இருந்தாலும் வாயை அடைத்துப் போட ஒரே வழி அடித்து முறிப்பது தானா?
இறந்து போனால் ஒரு தமிழன் தானே இருக்கிறான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் எழாமல் வக்கிரமான உணர்வுகளோடு அலைகிறோம் நாம். இப்படியே புடுங்குப்பட்டு கொலை செய்து எத்தனை அறிவாளிகளை இழந்துவிட்டோம்.
இங்கு லண்டன் வந்தும் இன்னும் எமது தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. எல்லாவற்றுக்கும் பிரச்சினை தான் என்று ப.வை. ஜெயபாலன் எனது செவ்வி ஒன்றில் தெரிவித்தார்.
கோவில் திறந்தால் எதிர்க் கோவில், பாடசாலை திறந்தால் எதிர்ப் பாடசாலை, முதியோர் இல்லம் திறந்தால் எதிர் முதியோர் இல்லம், கடை திறந்தால், எதிர்க் கடை, அவர் மலிவு விலை விற்றால் அதனை விட மலிவு விலை என்று எதிர்த்தே பழகிவிட்டார்கள் தமிழர்கள். இப்படி இப்படியே எல்லாவற்றுக்கும் எதிர்த்து- சகிப்புத் தன்மையே இல்லாமல் ஆகிவிட்ட ஒரு சமுதாயமாகவும் உள் சமூகத்துக்குள்ளேயே பொறாமை மிக்க சமுதாயமாகவும் எமது மக்கள் ஆகிவிட்டார்கள். அதுதான் பெருங்கவலை எனக்கு. இது சாகும் வரை மாற மாட்டாதாக்கும்.
நன்றி தினக்குரல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.