திங்கள், 4 ஜூன், 2007

குழந்தைகள் மனிதத்தன்மையை இழந்து விடாமல் காக்க வேண்டியது மிகவும் அவசியம்

எழுதியவர் - இரா. காமராசு
இன்று குழந்தைகளுக்காக மிகச் சிலரே எழுதுகின்றனர். சில இதழ்களும் சில இணைப்பு இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் வருபவை பெரும்பாலும் பாடல்கள், படக்கதைகள், துணுக்குகள், விடுகதைகள், கதைகள் என்பதாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் `நீதிபோதனை' தவறாமல் இடம்பெறுகிறது.

தொலைக்காட்சி அலைவரிசைகள் குழந்தைகளின் வாசிப்புப் வழக்கத்தைப் பறித்துவிட்டன. எப்படிக் குழந்தைகள் நமது விளையாட்டுகளைக் கைவிட்டு விட்டு கிரிக்கெட் போட்டியைப் பார்த்துக் கைதட்டத் தொடங்கினார்களோ அப்படிப் புத்தகங்களையும் தூர நிறுத்திவிட்டார்கள். தொலைக்காட்சி பார்த்தலில் வெறும் பார்வையாளர்களாகச் சுருங்கிப் போய்விட்டார்கள்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அவர்களின் உலகம் கனவுகளால் நிரம்பியது. அவர்களின் உலகில் பெரியவர்களின் உலகச் சிக்கல்கள் இல்லை. எதையும் நிதர்சனமாக அணுகும் இயல்பு குழந்தைகளுடையது. குழந்தைகளுக்கான சிறு வெளியீடுகள் அதிகம் வெளிவர வேண்டும். வயதும் புரிந்து கொள்ளும் திறனும் அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வயதுக்கேற்ற நூல்கள் எழுதப்பட வேண்டும்.

அறிவியல், ஓவியம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என எல்லாவற்றுக்குமான தனித்தனியான எழுத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைகளுக்காக எழுதி வெளிவரும் அதிலும் பள்ளி நூலகங்களுக்கு வரும் நூல்களில் தொண்ணூறு விழுக்காடு பதிப்பகங்கள் நூலக ஆணை பெற்றுச் சில எழுத்தாளர்களை அமர்த்தி எழுதும் நூல்களாகவே இருக்கின்றன. இவற்றில் ஆழமோ கவர்ச்சியோ பன்முகத்தன்மையோ இருப்பதில்லை.

குழந்தைகள் மனநிலையில் வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அசலான எழுத்துகள் பிறக்கும். இல்லையென்றால் அறிவுரைக் கதைகளே வலம் வரும். குழந்தைகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வடிவ நேர்த்திகளில் வழங்கும்போது அவற்றின் தாக்கம் அளவிட முடியாத சாதனையாக அமையும்.

குழந்தைகள் தாங்கள் பார்த்த பூச்சிகள், பறவைகள், விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள், பேசிய- கேட்ட ஒலிகள், உரையாடல்கள் ஆகியவற்றை எழுத்தில் பார்த்து வாசிக்கும்போது பரவசமடைகின்றனர். குழந்தைகள் பற்றிய எழுத்துகளை குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது, குழந்தைகளுக்காகக் குழந்தைகளே எழுதுவது, குழந்தைகளைப் பற்றி எழுதுவது என வகைப்படுத்தலாம்.

குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் எழுதுவது மட்டுமே பெரும்பாலும் குழந்தை இலக்கியமாக அடையாளம் கொள்ளப்படுகிறது. தமிழில் சாதனைகள் செய்த பெரிய எழுத்தாளர்களில் எத்தனை பேர் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். குழந்தைகள் வரைகிற ஓவியங்கள், எழுதுகிற பாடல்கள், கதைகள் ஆகியவற்றை வெளியிட்டுச் சிறப்பிக்க வேண்டும். அவர்களுக்கான சந்திப்பு முகாம்களை ஏற்படுத்த வேண்டும். அந்த முகாம்களில் அனுபவமிக்க படைப்புக் கலைஞர்கள் மூலம் கலந்துரையாடி குழந்தைகளின் படைப்பாற்றலைச் செழுமைப்படுத்தலாம்.

பள்ளி இலக்கிய மன்றங்கள், நுண்கலை மன்றங்கள் பெயரளவிற்கு ஆகிவிட்டன. சாதனை படைத்த பல சான்றோர்கள் தங்களது பள்ளி வாழ்வில் இத்தகைய மன்றங்கள் தமக்கு அளித்த ஊக்கமும், அங்கீகாரமுமே தங்கள் உருவாக்கத்துக்கு அடித்தளமாக அமைந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், தற்போது தேர்வுகள்- மதிப்பெண்கள் மீது குவிக்கப்பட்டிருக்கிற கவனம், கவர்ச்சிகளால் இத்தகைய மன்றங்கள், நூலகச் செயற்பாடுகள் இன்று முடங்கிப் போய்விட்டன. குழந்தைகளிடம் குறுகுறுப்பும் குதூகலமும் கற்பனையும் நிரம்பிய படைப்பாற்றல் உணர்வு இயல்பிலேயே பொதிந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கி ஊக்கப்படுத்தினால் அவர்களின் தனித்திறன்கள் வளரும். அடுத்து குழந்தைகளின் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், பிரச்சினைகள் சார்ந்த படைப்புகளை உருவாக்குவது. இப்படியான குழந்தைகள் வாழ்வியல் குறித்த கதைகள், கவிதைகள், நாவல்கள், திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

குழந்தைகளின் பிரபஞ்சத்தை எல்லா வயதுவந்த ஆணும் பெண்ணும் புரிந்து கொள்கிறபோது குழந்தைகளைக் கொண்டாடும் மனப்பக்குவம் வரும்; வளரும். ஆதரவற்ற குழந்தைகள், ஒரு பெற்றோர் குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய புரிதல் இருந்தால்தான் இவர்களைப் பற்றிய பரிவுணர்வு ஏற்படும்.

பல்வேறு பிரிவு குழந்தைகள் கூடும் பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த காலை வணக்கக் கூட்டங்கள், பிரார்த்தனைகளைத் தவிர்த்து இயற்கை சார்ந்த அழகுகளை உணர்தல், போற்றுதல், நாடு, மொழி சார்ந்த சாதனைகள், தியாகங்களை உணர்தல், போற்றுதல், மனிதப் பண்புகள் சார்ந்த பாடல்களைச் சேர்த்துப் பாடச் செய்தல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

சாதி, மதம், பால் சார்ந்த வேறுபாடுகளைக் களைய முதலில் இவற்றின் `தன் உணர்வை' தகர்த்தாக வேண்டும். குழந்தைகள் நிலையில் இதை உருவாக்க வேண்டும். "நாட்டின் நாளைய தந்தையராக உரிமை கொண்டாடும் இன்றைய மாணவர்கள் நல்லவர்களாக வாழ வேண்டும்.

உப்பு தனது உப்புத்தன்மையை இழந்துவிட்டால் அதைவேறு எங்கிருந்து பெறுவதற்கு இயலும்?" என்பார் மகாத்மா காந்தி. ஆம், நம் குழந்தைகள் மனிதத்தன்மையை இழந்துவிடாமல் எழுத்து மூலம் காக்க வேண்டியது அவசியம்.

நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----