ஒற்றை, சமஷ்டி என்ற ஆட்சிமுறைப்பதங்களை நீக்கிவிட்டு புதிய `சொல்' தேடுவதற்கு தீவிர முயற்சி
ஆக்கம் - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இன நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகளின் மற்றுமொரு கூட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி பதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புதியதொரு முறையிலான தீர்வுத் திட்டத்தை தயாரிக்க சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முயற்சிக்குமென தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இது பற்றிக் கூறுகையில்;
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகள் தீர்வு யோசனைகளை சமர்ப்பித்துள்ளன. இறுதித் தீர்வை காண்பதற்கான தீர்வுத் திட்டம் விரைவில் வெளிவருவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் தோன்றியுள்ளது என்றார்.
இதேவேளை, நாளை கூடவிருக்கும் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அரசாங்கத்தின் தன்மை, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆட்சி முறை என்பன குறித்து பிரதானமாக ஆராயப்படவுள்ளது.
இலங்கை எத்தகைய ஆட்சி முறை தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டுமென கடந்த காலங்களில் நிலவிய சர்ச்சைகளை கவனத்திற்கொண்டு இறுதித் தீர்வு யோசனைகளில் சமஷ்டி மற்றும் ஒற்றை எனும் பதங்களை நீக்கி புதியதொரு சொற்பிரயோகத்தைப் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மாகாணங்கள் மத்திய அரசின் அழுத்தங்களின்றி சுயமாக செயற்படவும் கூடிய அதிகாரங்களை வழங்குவது பற்றியும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக குழு முன்னர் சமர்ப்பித்திருந்த யோசனைகளில் உள்ளடங்கியுள்ள சில விடயங்களையும் தீர்வு யோசனைகளில் சேர்த்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் பெறும் 13 அரசியல் கட்சிகளில் அநேகமானவை சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் என்பதால் இச்சிறுபான்மை கட்சிகள் தமக்கிடையே பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி செயற்படுவது பற்றிய கலந்துரையாடல்கள் தற்போது உத்தியோகப்பற்றற்ற மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை சிறுபான்மை சமூகங்களுக்கு சாதகமானதாக அமையுமென்ற அச்சம் காரணமாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலுள்ள ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட மற்றும் சில கட்சிகள் இறுதித் தீர்வை எட்டுவதற்கான காலப்பகுதியை இழுத்தடிக்கும் நோக்குடன் செயற்படுவதாக சிறுபான்மை கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மைக் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு ஆதரவான போக்கை ஐ.தே.க. சார்பில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் பங்கேற்கும் கே.என்.சொக்ஷி கொண்டிருப்பதாகவும் சிறுபான்மை கட்சிகள் சார்பில் கருத்துக் கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.