வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த அனைவரையும் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கொழும்பு விடுதிகளில்(லொட்ஜ்) இருந்து வெளியேற்றி விட வேண்டுமென பொலிஸார் அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை மாலை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட விடுதிகளினதும் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொழும்பின் பாதுகாப்பு காரணமாக கொழும்பு நகரிலுள்ள அனைத்து விடுதிகளிலுமிருந்து வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறும், இன்று அதிகாலை எவ் விடுதிகளிலும் வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இருக்கக் கூடாதெனவும் எச்சரித்துள்ளனர்.
தங்களது இந்த உத்தரவையும் மீறி யாராவது தங்கியிருப்பின் இன்று காலை பஸ்களைக் கொண்டு வந்து அனைவரையும் அப்புறப்படுத்தி விடுவோமெனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில், விடுதிகளிலிருந்து எவரையும் வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், இது திரித்துக் கூறப்படும் செய்தியெனவும், விடுதிகளிலிருந்து எவரையும் உடனடியாக வெளியேறுமாறு கூறும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக விடுதிகளில் நடத்தப்படும் சோதனைகளைத் தீவிரப்படுத்தவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட அனைத்து மக்களதும் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் மனிதத்துவத்துக்கு இருக்கும் மகத்துவம் இவ்வாறுதான் உள்ளது, மாற்றான் தாய் மக்களாக தமிழர்களைப் பார்ப்பது அரசாங்க படையினருக்கும் சிங்கள இனவெறியர்களுக்கும் இருக்கும் வரை தமிழர் பிரச்சனைக்கு ஜனநாயக அடிப்படையில் தீர்வு காணபது முயற் கொம்பாகவே அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.