தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அப்பாவி மக்களிடம் விடுதலைப் புலிகள் அமைப்பு புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போதும் பலமாக இருப்பதாகவும், அதனால் தமிழீழத்தை விரைவில் பெற்று விடுவோமென்று போலியான வாக்குறுதிகளை பரப்பி விட்டு, பண வசூலிப்பை மேற்கொள்ளுகின்றனர். பணத்தை கையகப்படுத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக பல குழுக்களாகப் பிளவுபட்டுள்ளதுடன் மோதல்களும் மேலைத்தேய நாடுகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலி குரல் கொடுத்து வந்தது, ஈழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு பரப்புரை செய்வதே இந்த வானொலியில் நோக்கமாக இருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் உருவாகியுள்ள குழுக்களின் பிளவுகளை இப்போது விமர்சனம் செய்து வருகின்றது, இந்த விமர்சனத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வாழும் நெடியவன் குழு, விநாயகம் குழு போன்றோரை அடையாளம் காட்டுகின்றது இவ் வானொலி.
மக்களைத் தெளிவு படுத்துவதற்காக இவ்வகையான நிகழ்ச்சிகளை நடாத்துவதாக குறிப்பிடும் இந்த வானொலியினர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஶ்ரீலங்கா படையினரால் கொல்லப்பட்டதனை இற்றைவரை மறைத்து செய்தி பகர்கின்றார்கள், ஏன் இந்த மௌனம், மக்களை முட்டாள்களாக்க எவரும் முனையக் கூடாது என பிரச்சாரம் செய்யும் வானொலி இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எதிர்வரும் 2012.01.01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் அரசியல் சமூகமேடையில் இந்திய வாசிப்பு தொகுப்பாளரும், வாசிப்பாளரும், உணர்வாளருமான திரு.தமிழ்வேல் அவர்கள், "புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள், ஈழத்தமிழர்களுக்காகப் போராடுகின்றோமெனக் கூறிக்கொண்ட அனைத்து அமைப்பினரும் துரோகிகள்" எனும் வாதத்தை முன் வைத்து உரையாடவுள்ளார், இவருடன் வாதம் புரிய நேயர்கள் மாத்திரமின்றி நாடுகடந்த தமிழீழ அரசின் பொறுப்பாளர்கள், பிரித்தானிய தமிழ் போரம், ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் போராடுகின்றோமென கூறிக் கொள்ளும் நெடியவன் குழுவினர், மற்றும் ஏனைய அமைப்பினர்களை விவாதத்துக்கு அழைக்கின்றார்.
♡இந்த விவாதத்தின் மூலமாக பல விடயங்களை வெளிக்கொணர முடியுமென காலம் கடந்து ஞானம் பிறந்து உரத்துக் கூற முற்படும் வானொலியினர் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்காக வக்காளத்து வாங்கியதுடன் மற்றைய மாற்றுக் கருத்துக் கொண்ட அமைப்பினரைப் பற்றிய கீழ்த்தரமான விமர்சனங்களை நடாத்தி புலம்பெயர் தேசத்தில் விடுதலைப் புலிகளை புனிதர்களாக உயர்த்த முனைந்தனர், ஆனால் உதிரியாக உள்ள இப்போதைய விடுதலைப் புலிகள் இங்கு நடாத்தும் அயோக்கியத்தனம் எல்லோருக்கும் தெரிந்ததனால் இவர்களை மாத்திரம் விமர்சனத்துக்கு உட்படுத்தாமல் ஏனைய அமைப்பினரையும் விமர்சனத்துக்கு உட்படுத்துவது வேடிக்கையாக உள்ளது.
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்பதில் இந்த வானொலியினர் உறுதியாக உள்ளது தெளிவாகின்றது.
மேலதிக தேடலுக்கு: ☞ தமிழ் ஒலி வானொலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.