ஐக்கிய நாடுகள் சபையால் வருடாந்தம் டிசம்பர் 10 ஆம் திகதி அனுட்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் நியாயம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஶ்ரீ லங்கா படைத் தரப்பு தாக்குதல் நடாத்தியுள்ளது.
ஶ்ரீ லங்காவில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மாத்திரமல்லாமல் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் மீறப்படுவது சாதாரண விடயமாகும். அரசாங்கம் காணாமல் போனோர் விடயத்தில் அக்கறை கொண்டு தீர்வினைக் காண வேண்டும், அத்துடன் காணாமல் போவோர் பட்டியல் தொடராமல் முற்றுப் புள்ளி காண வேண்டியதும் அவசியமாகும்.
2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்த பல பொது மக்களும், போராளிகளும் பலத்த சிரமத்தின் மத்தியில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர், சிலரைப் பற்றிய தகவல்கள் காணாமல் போனோர் பட்டியலில் இணைக்கக் கூடிய நிலையை எட்டியுள்ளது.
ஆயுத ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஈழப் போராட்ட அமைப்புக்களாலேயே அதிகமானோர் காணாமல் போனார்கள், அதிலும் குறிப்பாக தமிழீழ் விடுதலைப் புலிகளாலேயே அதிகமான பொதுமக்களும் மாற்றுக் கருத்துக் கொண்டோரும் கடத்தப்பட்டு, அல்லது கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுக் காணாமல் போனார்கள்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (2011.12.09) நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான பாலகுமாரன் மற்றும் எழிலன் போன்றவர்கள்
இருக்கின்றனரா? இல்லையா? எனும் வினாவைத் தொடுத்தார்.
இந்திய அமைதி காக்கும் படைக்குப் பக்க பலமாக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அங்கம் வகித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரே "மண்டையன் குழு" எனும் பெயரில் விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கைது செய்து காணாமற் போக வைத்தவர்கள் ஆகும், இவர்களின் கதி என்னவென்று இன்றும் உறவினர்கட்குத் தெரியாமல் இருப்பதனை இவர் அறியவில்லை போலும்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் சார்ந்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைதாகி கொண்டு செல்லப்பட்டார்கள், ஆனால் அவர்கள் இன்று வரை உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என அவர்களின் உறவினர்களுக்கே தெரியாத நிலையே தொடர்ந்துள்ளது, பாராளுமன்ற ஆசனத்துக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒட்டிக் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட தனது அமைப்பு சார்ந்த தோழர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்கத் திராணியற்று மௌனித்து விடுதலைப் புலிகளுக்கு அடிவருடியானார், இப்படியானவர் இன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கான தேடலுக்கு முன்னுரிமை கொடுத்து நீலிக்கண்ணீர் வடிப்பது நகைப்புக்கிடமானது.
ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது.
யாழ்ப்பாணத்தில் சொந்தத்தைத் தொலைத்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்:
பகிர்வுக்கு நன்றி நண்பா!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தனபாலன்.
பதிலளிநீக்கு