தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காணும் சந்தர்ப்பங்கள் பலவும் கடந்த காலங்களில் கனிந்து வந்திருந்த போதும்,அவைகளை உரிய முறையில் பயன்படுத்தும் மதிநுட்ப சாணக்கிய தந்திரங்களை அவ்வப்போது பொறுப்பில் இருந்த சக தமிழ் தலைமைகள் கையாண்டிருக்கவில்லை.
கடந்த கால தவறுகளை உணர்ந்து சக தமிழ் தலைமைகள் இன்று கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தையாவது தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தீர்வுக்காக சரிவரப் பயன்படுத்த முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சக தமிழ் கட்சிகளை நோக்கி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
நாம் தோற்றுப் போனதொரு சமூகம் அல்ல. எம்மிடையே அவ்வப்போது பலம் பெற்றிருந்த சக தமிழ் தலைமைகளின் மதிநுட்பம் மறந்த நடை முறைக்கு ஒவ்வாத வழி முறைகளே தோற்றுப்போயுள்ளன. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் தவறவிடப்பட்ட போது, இங்கு மனித அவலங்களே நிகழ்ந்து முடிந்திருக்கின்றன.
எமது மக்கள் அழிவுகளை சந்திக்க வேண்டிய துயரங்களே நடந்து முடிந்தன. கடந்த கால இழப்புக்களையும் நாம் இழந்து போனவர்களின் கனவுகளையும் ஈடேற்ற வேண்டுமேயானால் இனி வரும் சந்தர்ப்பங்களையாவது சக தமிழ் தலைமைகள் சரிவரப்பயன்படுத்த முன்வரவேண்டும்.
எமக்கென்றொரு கனவு உண்டு! அது தமிழ் பேசும் மக்கள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது வரலாற்று வாழ்விடங்களில் வாழும் சூழலை உருவாக்குவதேயாகும்.
எமது கனவுகளை அடைவதற்கு நாம் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது குறித்து சகல தமிழ் தலைமைகளும் யதார்த்த பூர்வமாக சிந்திக்க வேண்டும். வீரப்பேச்சுக்களும், வெறும் வார்த்தை ஜாலங்களும் எமது மக்களுக்கு ஏமாற்றங்களைத் தவிர வேறு எதையும் பெற்றுத்தராது. எதையும் நம்பிக்கையோடு கூர்ந்து அவதானித்து நாம் விவேகத்துடன் செயற்பட வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை அப்போது சந்தர்ப்பம் கிடைத்த இரு வேறு தரப்பினர்களில் ஒரு தரப்பினர் ஏற்றுக் கொண்டிருக்கவும் இல்லை. மறு தரப்பினர் அதனை சரிவரப் பயன்படுத்தவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அழிவுகள் பெருகியிருக்காது. மாறாக இன்று தமிழ் பேசும் மக்கள் நடை முறையில் சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க முடிந்திருக்கும்.
அதற்கு பின்னரான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ அவர்களுடனான பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களுடனான பேச்சுவார்த்தை அதற்கு பின்னர் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனான பேச்சுவார்த்தை இறுதியாக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அவர்களுடான பேச்சுவார்த்தை என சகல சந்தர்ப்பங்களிலும் எமது தமிழ் தலைமைகள் விவேகத்துடன் செயற்பட்டிருக்கவில்லை.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய வரலாற்றில் மாறி மாறி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்திருந்த அரசுகளே தமிழ் மக்களின் அரசியலுரிமை தீர்வு குறித்து விருப்பமின்றி செயற்பட்டிருந்தன.
ஆனால் அதற்கு பிந்திய சூழலில் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைத் தீர்வு குறித்து சக தமிழ் தலைமைகளே பொறுப்புணர்ச்சியின்றி செயற்பட்டு வந்துள்ளன. பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்து கட்டியுள்ள கோவணமும் களவாடப்படும் சூழ்நிலைக்கு இட்டுச்சென்றதுதான் மிச்சம்.
இதை நான் போட்டி அரசியலுக்காகவோ அன்றி சக தமிழ் தலைமைகளை குறை கூறுவதற்காகவோ சொல்லவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சகல தமிழ் கட்சிகளும் கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு செயற்பட முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இதில் ஈ.பி.டி.பி யினராகிய நாம் தவறு விட்டிருந்தாலும் அதை நியாயப்பூர்வமாக யாரும் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருந்தி நடக்கவும் தயாராக இருக்கின்றோம்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் நானும் ஒருவன் என்ற வகையிலும் எமது கட்சி உறுப்பினர்களும் அந்த போராட்டத்தில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையிலும் எமது நீதியான உரிமைப் போராட்டமானது சக தமிழ்த் தலைமையால் அழிவு யுத்தமாக மாற்றப்பட்டு எமது மக்களை வகை தொகையின்றி பலியெடுத்திருந்த நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்றிருந்தாலும் ஆரம்ப கால முன்னோடிகளில் நானும் ஒருவன் என்பதால் அந்த அழிவுகளுக்கான தார்மீக பொறுப்பை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் கொள்கையளவில் மட்டும் ஏற்றுக்கொண்டிருந்தவர்கள். அதன் நடைமுறைகளில் நாம் பங்கெடுப்பதற்கான ஜனநாயக உரிமை எமக்கு மறுக்கப்பட்டிருந்தாலும். அதற்கு பின்னரான மாறி வந்த அரசியல் சூழலில் ஆயுதப்போராட்டம் எமக்கு தேவையில்லை என்றும் அழிவு யுத்தம் எமது மக்களை கொன்று பலியாக்கும் என்றும் அரசியல் பேச்சுவார்த்தையின் ஊடாக எமது மக்களை சுதந்திர பிரஜைகளாக வாழ வைக்க முடியும் என்றும் நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.
நாம் சொன்னவைகளே இங்கு நடந்து முடிந்திருக்கின்றன. இனி நடக்கப்போவதும் நாம் சொன்னவைகளே. கிடைத்த சந்தர்ப்பங்கள் யாவற்றையும் தாமே தவறவிட்டு சிங்களம் எமக்கு ஒரு போதும் தீர்வு வழங்காது என்ற ஏட்டிக்கு போட்டியான இனவாத சிந்தனைகளும்,
தீர்வை அடைவதற்கான எந்தவொரு நடைமுறை சார்ந்த வழிமுறையினையும் கொண்டிருக்காமல் உரிமை குறித்த வெற்றுக் கோசங்களை மட்டும் எழுப்புவதால் எந்தப்பயனும் இல்லை. நாம் எமது மக்களின் உரிமை குறித்து தொடர்ந்தும் வெறுமனே கோஷமிட்டுக் கொண்டிருக்கப் போகின்றோமா?... அல்லது, அடைய வேண்டிய எமது மக்களின் அரசியலுரிமையை மதிநுட்பத்தோடு அணுகி பெற்றுக் கொள்ளப் போகிறோமா?... இதை சகலரும் சிந்திக்க வேண்டும். அதற்காக எவரும் யாரிடமும் சரணாகதி அடையவேண்டும் என்று அர்த்தமல்ல.
அரச உயர் மட்ட பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருவதை நாம் வரவேற்கின்றோம். நாமும் தொடர்ந்தும் பேசி வருகின்றோம், நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி, மேலும் அதை வளர்த்தெடுப்பதற்கான அரசியல் தீர்வு முயற்சி இன்று தொடங்கியுள்ளது.
இது யுத்தத்திற்கு பிந்திய புதியதொரு முயற்சி. கடந்த கால தடைகள் இதற்கு இருக்காது. குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்தே இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்படவுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் பலவும் தத்தமது பிரதேசங்களில் மாகாணசபைகளில் பங்கெடுத்து வருகின்றன. ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என சகல தரப்பும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்கின்றன. ஆகவே இந்த ஆலோசனைகளின் மூலம் கிடைக்கும் அரசியல் தீர்வானது பலமானதாக அமையும். எனவே கிடைத்திருக்கும் இந்த சந்தர்ப்பம் அரியதொரு வாய்ப்பாகும்.
ஆகவே சகல தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் அர்த்தமின்றி முரண்படாமல் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுப்பதன் மூலம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்களை ஒரே குரலில் வலியுறுத்தி கூற வேண்டிய தருணம் இது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத ஏனைய தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக தமது யோசனைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் நாமே உருவாக்கி கொடுப்போம்.
எமது மதிநுட்ப சாணக்கிய சிந்தனைகளை பயன்படுத்தி நடை முறைச் சாத்தியமான இவ்வழிமுறையில் நாம் செயற்பட மறுப்போமேயானால் எமது மக்களுக்கான அரசியலுரிமைகளை அடைவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தையும் நாம் இழந்தவர்கள் ஆகிவிடுவோம். ஆகவே கட்சி சார்ந்த கௌரவப்பிரச்சினைகளை கைவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்களுக்கு வரலாற்றுத்துரோகம் இழைத்தவர்களாக இருந்து விடாமல் எமது மக்களின் கௌரவமான அரசியல் தீர்வை மட்டும் முதன்மைப்படுத்தி சகல தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும்.
எனவே நம்பிக்கையுடனும் அக்கறையுடனும் உண்மைத்தன்மையுடனும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வர வேண்டும்.
மேலதிக தேடலுக்கு: ஈபிடிபி நியூஸ்
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குசிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"